அவசியமான ஊழியர்களை மட்டுமே அழைக்க வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

அவசியமான ஊழியர்களை மட்டுமே அழைக்க வேண்டும்

தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு நாடு மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் அரச சேவையைமுன்னெடுத்துச் செல்வதற்காக அத்தியாவசியமான ஊழியர்களை மாத்திரமே சேவைக்கு அழைக்குமாறு சுற்று நிருபத்தின் மூலம் நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

விசேட வழிகாட்டல்களை உள்ளடக்கிய சுற்று நிருபம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.

முக்கியமான 15 விடயங்களை அடிப்படையாகக் கொண்ட மேற்படி சுற்றுநிருபம் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறியினால் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் சேவைக்கு அழைக்கப்படும் உத்தியோகத்தர்கள் தவிர்ந்த ஏனைய உத்தியோகத்தர்கள் வீட்டிலிருந்து ஒன்லைன் மூலமாக தமது கடமையை முன்னெடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அரச சேவைக்கு மீண்டும் ஊழியர்களை அழைக்கும்போது கர்ப்பிணித் தாய்மார்,குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள், விசேட நோய்களுக்கு உள்ளாகிள்ளோர் ஆகியோரை சேவைக்கு அழைக்க வேண்டாம் என்றும் அந்த சுற்றுநிருபம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கட்டாயமாக சேவைக்கு அழைக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு தேவையான வசதிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத் தலைவர்களுக்கு வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது.அதேவேளை ஊழியர்களின் வரவு மற்றும் அவர்கள் கடமையின் பின் வெளியேறுவது தொடர்பில் பதிவு இடாப்பை மட்டுமே முன்னெடுத்துச் செல்தல் போதுமானது என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாத அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் காணப்பட்டால் அவர்களை தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கு ஊக்குவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் தடுப்பூசிக்கான அட்டையை கோரும் போது அதனை காட்டுவதற்கு ஊழியர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைகள், கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்கள் ஆகியவற்றின் போது அனைத்து சந்தர்ப்பங்களிலும் சமூக இடைவெளியைப் பேணவும் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Comments