ஊடக அடையாள அட்டை வைத்துள்ள ஊடகவியலாளர் எவராவது கைதானால் தகவல் திணைக்களத்திற்கு அறிவிக்கவும் | தினகரன் வாரமஞ்சரி

ஊடக அடையாள அட்டை வைத்துள்ள ஊடகவியலாளர் எவராவது கைதானால் தகவல் திணைக்களத்திற்கு அறிவிக்கவும்

ஊடக அடையாள அட்டையினை வைத்துள்ள ஊடக வியலாளரை ஏதேனுமொரு குற்றமொன்றுக்கு பொலிஸாரினால் கைது செய்யப்படும் போது அது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினை கட்டாயம் அறிவுறுத்த வேண்டும் என்பதை பொலிஸ் மாஅதிபரிடம் தான் தெரிவித்ததாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

வெகுசன ஊடக அமைச்சில் இலங்கை பத்திரிகை ஆசிரியர்களின் சங்க உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட ​போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகத் துறையின் அண்மைக்கால மேம்பாட்டினையும் முன்னேற்றத்தினையும் கவனத்திற் கொண்டு 1973ம் ஆண்டு 05ம் இலக்க பத்திரிகை பேரவை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு புதுப்பிப்பதன் முக்கியத்துவத்தினை அமைச்சர் சுட்டிக்காட்டினார். இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தினர், சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்காக பிறிதொரு பொறிமுறையினை உருவாக்குவது சிறந்தது என தெரிவித்தனர்.

பத்திரிகை பேரவை சட்டத்தினை திருத்துவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் சங்கத்தின் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்கும் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், ஊடகவியலாளர்களை இரகசிய பொலிஸார் விசாரணைக்காக அழைப்பு விடுத்தமை மற்றும் அதனால் குறித்த ஊடகவியலாளர்கள் பாதிப்படைந்த சம்பவமொன்று கடந்த தினமொன்றில் இடம்பெற்றதாகவும், இனி வரும் காலங்களில் அவ்வாறான எந்தவொரு சம்பவமும் இடம்பெற மாட்டாது எனவும் அமைச்சர் அதன் போது உறுதியளித்தார்.

வளமான ஊடக கலாசாரத்தினை கட்டியெழுப்புவதற்காக ஊடகவியலாளர்களை பலப்படுத்துவதற்கும், ஊடகத்துறையினை பலப்படுத்துவதற்கும் தம்மால் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக வெகுசன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.ஊடகவியலாளர்களின் தொழில் தகைமையினையும் நிபுணத்துவத்தினையும் விருத்தி செய்வதற்காக ஊடகவியலாளர் உயர் கல்வி நிறுவனமொன்றை நிர்மாணிப்பதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து, அதன் ஆரம்ப வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதி திட்டத்தினை முறைப்படுத்தி மூன்று மாதங்களிற்குள் சுமார் 3000 ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதியினை பெற்றுக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Comments