கட்டுப்பாட்டு தளர்வுகள் அனைத்தும் மக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டவையே | தினகரன் வாரமஞ்சரி

கட்டுப்பாட்டு தளர்வுகள் அனைத்தும் மக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டவையே

தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்வு, கொவிட் 19 தொற்று கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி வழங்குதலின் முன்னேற்றம், மக்கள் முன்பாக உள்ள பொறுப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் ரஞ்ஜித் பட்டுவந்துடாவ 'தினகரன் வார மஞ்சரி'க்கு அளித்த விஷேட பேட்டி.

கேள்வி: நாட்டில் கொவிட் 19 தொற்றின் தீவிரத்தன்மையக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் தளர்த்தப்பட்டு புதிய கட்டுபாடுகளும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வாறான சூழல்நிலையில் தற்போதைய நிலைமை குறித்து சுருக்கமாகக் குறிப்பிட முடியுமா?

பதில்: ஆம். நாட்டில் கொவிட் 19 தொற்றின் டெல்டா திரிபு தீவிரமடைந்ததைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு 43 நாட்களின் பின்னர் தளர்த்தப்பட்டிருக்கின்றது. அத்தோடு இக்காலப்பகுதியில் அமுலில் இருந்த ஏனைய கட்டுப்பாடுகளிலும் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தியே மேற்பட்டிருக்கின்றனவேயொழிய இத்தொற்று பரவுதல் பிரச்சினை 100 வீதம் கட்டுப்பாட்டு நிலைக்கு வந்துவிட்டது என்பதற்காக அல்ல. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது இத்தொற்று கட்டுப்பாட்டுக்கான தடுப்பூசி வழங்குதலில் நாம் சிறந்த மட்டத்தில் உள்ளோம். நாட்டின் சனத்தொகையில் சுமார் 55 வீதத்தினர் இத்தடுப்பூசியின் இரண்டு சொட்டுக்களையும் பெற்றவர்களாக விளங்குகின்றனர். அதேநேரம் இத்தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இத்தொற்று தொடர்பிலான உயிரிழப்புகளும் குறைவடைந்து வருகின்றன.

ஆனாலும் இத்தொற்றுக்கு இன்னும் 100 வீதம் தீர்வு காணப்படவில்லை. அதனால் தனிமைப்படுத்தல் ஊடரங்கிலும் ஏனைய கட்டுப்பாடுகளிலும் தளர்வுகள் ஏற்பட்டுத்தப்பட்டிருந்தாலும் நாம் தொடர்ந்தும் மிகுந்த முன்னவதானத்துடனும் விழிப்புணர்வுடனுமே செயற்பட வேண்டும்.

அதேநேரம் சனத்தொகையில் 55 வீதத்தினர் இத்தடுப்பூசியைப் பெற்றுள்ள போதிலும் இன்னும் குறிப்பிடத்தக்களவிலானோர் அதனைப் பெறவில்லை. அவர்கள் ஊடாகவும் இத்தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அத்தோடு இத்தடுப்பூசியின் இரண்டு சொட்டுக்களைப் பெற்றவர்களுக்கும் இத்தொற்று ஏற்படவும் முடியும். அவர் ஊடாக ஏனையவர்களுக்கு பரவவும் முடியும்.

அதனால் இத்தொற்றின் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், கைகளை சவர்க்காரமிட்டு கழுவுதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார பழக்கவழக்கங்களைத் தொடர்ந்தும் பேணிக்கொள்ள வேண்டும்.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள தளர்வுகளின் படி, அத்தியாவசியத் தேவைகளின் நிமித்தமும் பொருட்களைக் கொள்வனவு செய்யவும் வீட்டிலிருந்து ஒருவர் தான் வெளியே செல்லலாம். அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களும் ஏனைய துறைகளைச் சேர்ந்தவர்களும் கடமைக்கு செல்ல இடமளிக்கப்பட்டுள்ளனர். மற்றப்படி அநாவசியமான பயணங்களையும் நடமாட்டங்களையும் தவிர்த்து வீடுகளில் இருப்பதில் ஒவ்வொருவரும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த அனைத்து ஏற்பாடுகளும் நாம் இன்னும் இத்தொற்று கட்டுப்பாட்டுக்கான 100 வீதப் பாதுகாப்பில் இல்லை என்பதற்காகவே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

கேள்வி: அப்படியென்றால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் இன்னும் இத்தொற்று அச்சுறுத்தல் நீடிக்கின்றதா?

பதில்: நிச்சயமாக. எந்தச் சந்தர்ப்பத்திலும் இத்தொற்று மீண்டும் தலைதூக்கித் தீவிரமாகப் பரவ முடியும். அதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன. அதனால் தான் தற்போதைய தளர்வுகளை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கண்காணித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கையரான நாம் ஏற்கனவே இரண்டு தடவைகள் தவறிழைத்துள்ளோம். அவற்றில் ஒன்று கடந்த டிசம்பராகும் போது இத்தொற்றையும் அதன் பரவுதலையும் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தாது, நாம் பொருட்கள் கொள்வனவு உள்ளிட்ட எல்லா செயற்பாடுகளிலும் ஈடுபட்டோம். அதன் விளைவாக இத்தொற்று தீவிரமடைந்தது. அதன் பின்னர் இவ்வருடம் ஏப்ரல் புத்தாண்டு காலப்பகுதியிலும் நாம் இவ்வாறு செயற்பட்டோம். இதன் விளைவாகவும் இத்தொற்று மீண்டும் தீவிரமடைந்தது. அதனால் அவ்வாறான நிலைமை இம்முறை ஏற்படக்கூடிய வகையில் செயற்பட வேண்டாமென நாட்டு மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

எமது நாட்டில் இரண்டு வருடங்களாகப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த வருடம் முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட பிள்ளை நேரடியாக மூன்றாம் வகுப்புக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்தப் பிள்ளைகள் இரண்டு வருடங்களாக வீட்டிலேயே இருந்தன.

ஆனால் அப்பிள்ளைகள் முதலாம், இரண்டாம் வகுப்புக்களில் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் அனைத்தும் வீணாகிவிட்டன. அதனால் பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டிய தேவையைக் கருத்தில் கொண்டாவது வளர்ந்த ஒவ்வொருவரும் இத்தொற்று தவிர்ப்புக்கான முன்னவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அத்தோடு தடுப்பூசியின் இரண்டு சொட்டுக்களையும் பெற்றுக்கொள்ளவும் தவறக்கூடாது.

கேள்வி: நாட்டில் இத்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி வழங்குதலின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் குறிப்பிடுவதாயின்?

பதில்: இந்நாட்டு சனத்தொகையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 100 வீதமானோருக்கு இத்தடுப்பூசியின் இரண்டு சொட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் ஒரு சிலர் இன்னும் தடுப்பூசி பெறாமல் இருக்கவே செய்கின்றனர். அவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் உள்ளனர். அதனால் இத்தடுப்பூசியை இற்றைவரையும் பெற்றுக்கொள்ளாதிருப்பவர்கள் தாமதியாது அதனைப் பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.

மேலும் 20 முதல் 29 வயதுக்கு இடைப்பவர்களுக்கு இத்தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இரு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அச்சமயம் சில சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட பிழையான பிரசாரங்களால் இவ்வயது மட்டத்தினர் ஆரம்பத்தில் இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வமற்றவர்களாக இருந்தனர். தற்போது அந்த நிலைமை இல்லை.

இவ்வயது மட்டத்தினருக்கு இத்தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முதலில் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டதோடு தற்போது முழு நாட்டுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இற்றை வரையும் இவ்வயது மட்டத்தைச் சேர்ந்த 52 வீதமானோர் இத்தடுப்பூசியின் முதலாவது சொட்டைப் பெற்றுள்ளனர். குறிப்பாக மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களிலும் கூட 50 வீதத்தினருக்கும் மேற்பட்டோர் இத்தடுப்பூசியைப் பெற்றிருப்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும். அதனால் ஏனையவர்களும் இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் பாடசாலைகளை ஆரம்பிக்கும் போது நாட்டில் 70 முதல் -75 வீதத்தினர் இத்தடுப்பூசியைப் பெற்றவர்களாக இருப்பர். இவ்வாறு இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு இத்தொற்று பரவுவதைக் குறைத்துக்கொள்ள முடியும். அதனால் 20 வயதுக்கு மேற்பட்ட சகலரும் இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளத் தவறக்கூடாது.

இதேவேளை 12 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட விஷேட தேவையுடைய பிள்ளைகளுக்கும் நாட்பட்ட நோய்களுக்கும் குறிப்பாக சிறுநீரக பாதிப்பு, தலசீமியா, புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு உள்ளாகியுள்ள பிள்ளைகளுக்கும் இத்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பைஸர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையும் ஆரம்பமாகியுள்ளது.

கேள்வி: இத்தொற்று காரணமாக கர்ப்பிணிப் பெண்களும் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கும் இத்தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளனவே?

பதில்: நாட்டில் இற்றை வரையும் 97 வீதமான கர்ப்பிணிப் பெண்களுக்கு இத்தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக கர்ப்பிணி பெண்கள் இத்தொற்று காரணமாக உயிரிழப்பது குறைவடைந்து வருகின்றது. ஆனாலும் இத்தொற்றின் விளைவாக இற்றை வரையும் சுமார் 52 கரப்பிணி பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இத்தடுப்பூசியைப் பெற்றிராதவர்களாவர். இத்தடுப்பூசியின் இரண்டு சொட்டுக்களையும் பெற்று இரண்டு வாரங்கள் கடந்த பின்னர் எந்தவொரு கர்ப்பிணி பெண்ணும் உயிரிழக்கவில்லை.

கேள்வி: இத்தடுப்பூசியின் மூன்றாவது சொட்டு வழங்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறதே?

பதில்: மூன்றாது சொட்டு வழங்குவது தொடர்பில் கொள்கைத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை எப்போது வழங்குவது என்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. அவசியம் ஏற்படும் போது வழங்குவோம். குறிப்பாக இத்தடுப்பூசியின் இரண்டாவது சொட்டு வழங்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த பின்னர் தான் தேவைக்கு ஏற்ப மூன்றாவது சொட்டு வழங்கப்படும். இத்தொற்றுக்கு உள்ளாகின்றவர்கள் சமூகத்தில் தற்போது பெரிதும் குறைவடைந்துள்ளனர். அதனால் சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்கள், பொலிஸார், இராணுவத்தினர் போன்ற மக்களோடு நெருங்கி சேவை செய்பவர்களுக்கு இந்த மூன்றாவுது சொட்டு வழங்கப்படும். அவர்கள் நோயாளர்களுடன் நெருங்கிப் பணியாற்றக் கூடியவர்களாவர்.

கேள்வி: இத்தடுப்பூசியின் செயற்பாட்டு காலம் தொடர்பில் குறிப்பிடுவதாயின்?

பதில்: கொவிட் 19 தொற்று தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து சுமார் ஒரு வருடமாகின்றது. இவற்றில் ஒரிரு தடுப்பூசி ஒரு வருடமாகியும் நல்ல செயற்றிறனுடன் செயற்படுகின்றது.

ஆனாலும் இஸ்ரேல் போன்ற சில நாடுகள் ஆறு மாதங்கள் கடந்த பின்னர் இத்தடுப்பூசியின் மூன்றாவது சொட்டை வழங்குகின்றன. ஏனெனில் இஸ்ரேல் போன்ற ஒரு சில நாடுகள் இவ்வருடத்தின் நடுப்பகுதியாகும் போது தம் நாட்டு சனத்தொகையில் 60 -70 வீதமானோருக்கு இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொடுத்திருந்தன. ஆனாலும் அதன் பின்னர் தான் அந்நாடுகளில் டெல்டா திரிபின் பரவுதல் ஆரம்பமாகியது. அதனால் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் விளைவாகவே அவர்கள் மேலும் ஒரு சொட்டு வழங்கத் தீர்மானித்துள்ளனர். ஆனால் எமக்கு அவ்வாறான ஏற்படவில்லை

இங்கு டெல்டா திரிபுடன் தான் இத்தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. அச்சமயமாகும் போது இந்நாட்டில் பெரும்பாலானோருக்கு இத்தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கவில்லை. தற்போது நாட்டின் சனத்தொகையில் பெரும்பகுதியினருக்கு தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி: நிறைவாக மக்களுக்கு நீங்கள் கூற விரும்புவதென்ன?

பதில்: மக்கள் முடிந்தளவு முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக கே 95 அல்லது சத்திர சிகிச்சையின் போது பாவிக்கும் முகக்கவசமாவது பாவிக்க வேண்டும்.

ஆனால் இம்முகக்கவசத்தை ஒரு தடவை தான் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் துணியிலான முகக்கவசமாவது அணிந்து கொள்ள வேண்டும். இம்முகக்கவசத்தைத் தினமும் கழுவி காயவைத்து ஒரு மாதம் வரையிலாவது பாவிக்கலாம். சாதாரண துணியிலான முகக்கவசத்தை அணிவதன் மூலம் கொவிட் 19 தொற்றிலிருந்து 35 முதல் - 40 வீதம் பாதுகாப்பு கிடைக்கப்பெறும்.

அதேநேரம் இத்தொற்றுக்கு உள்ளானவர்கள் காணப்படும் இடங்களுக்கு எல்லோரும் செல்லக்கூடியவர்கள் அல்லர். தொற்றாளர்களைச் சந்திப்பதுமில்லை. மக்கள் செறிந்து காணப்படும் இடங்களுக்கும் இவர்கள் செல்வதுமில்லை.

இவ்வாறானவர்கள் முகக்கவசம் அணியாது செல்வதைவிடுத்து துணியிலான முகக்கவசத்தையாவது அணிந்து செல்வதே சிறந்தது.

ஆனால் முகக்கவசத்தின் தூய்மையிலும் சுத்தத்திலும் ஒவ்வொருவரும் உச்சபட்ச கவனம் செலுத்த வேண்டும். அது இன்றியமையாதாகும். அத்தோடு இத்தொற்று தவிர்ப்புக்கான அடிப்படை சுகாதாரப் பழக்கவழக்கங்களையும் உச்சளவில் கடைபிடிக்கவும் வேண்டும். அதாவது இத்தொற்று முழு உலகிலும் பிரச்சினை இல்லாத நிலையை அடைந்து குறைவடையும் வரை இத்தொற்று தவிர்ப்புக்கான வழிகாட்டல்களைக் கடைபிடித்தாக வேண்டும்.

மர்லின் மரிக்கார்

Comments