யாவரும் கேளீர் | தினகரன் வாரமஞ்சரி

யாவரும் கேளீர்

('யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது கணியன் பூங்குன்றனது வரிகள். இதில் கேளிர் என்பது உறவினர் எனப் பொருள்படும். இந்த உறவினருக்கு நான் தரும் பத்தி யாவரும் கேளீர்|)

மரபும் நவீனமும் இணைந்த இலக்கிய ஆளுமை சொக்கன்

பிரபல எழுத்தாளராக விளங்கிய சொக்கன் ஒக்டோபர் மாதத்தில் அமரத்துவம் அடைந்தவர். அவரது நினைவுகளை மீட்டி அஞ்சலி செலுத்துவதாக இப்பத்தி அமைகிறது.

சொக்கலிங்கம் என்னும் இயற்பெயர் கொண்ட சொக்கன் யாழ்ப்பாணம் ஆவரங்காலில் கந்தசாமிச்செட்டி, மீனாட்சி தம்பதிக்கு 02.06.1930இல் மகனாகப் பிறந்தவர். இவர், சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, கட்டுரை, விமர்சனம், சமயம், வானொலிச்சித்திரங்கள், பாடநூல்கள், பாடநூல் வழிகாட்டிகள், மொழிபெயர்ப்புகள் எனப் பல்துறைகளிலும் தடம்பதித்தவர்.

சொக்கன் தனது வாழ்நாளில் 200 சிறுகதைகள்வரை எழுதியுள்ளார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான கடல் 1972ஆம் ஆண்டிற்கான இலங்கை சாகித்தியமண்டலப் பரிசினைப் பெற்றது. இவரது 10 சிறுகதைகள் அடங்கிய தொகுதி கிழவரும் கிழவியும் என்பதாகும்.

நாடகம் எழுதும் முயற்சியிலும் சொக்கன் ஈடுபட்டார். சொக்கனின் நாடக நூல்களாக சிலம்பு பிறந்தது, சிங்ககிரிக்காவலன், தெய்வப்பாவை மாருதப்புரவிகவல்லி, மானத் தமிழ்மறவன் ஆகியவை வெளிவந்துள்ளன. இவருடைய நாடகங்களில் பல இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டன. 1960இல் சிலம்பு பிறந்தது| என்ற நாடகப் பிரதியும் 1961இல் சிங்ககிரிக் காவலன்| என்ற நாடகப் பிரதியும் இலங்கை கலைக்கழகத் தமிழ் நாடகக் குழுவின் பரிசினைப் பெற்றன.

ஆராய்ச்சிலும் ஈடுபாடுகாட்டியவர் சொக்கன். ஷஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சி| என்னும் தலைப்பில் இவர் சமர்ப்பித்த ஆய்வேடு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முதுமாணிப் பட்டத்தை இவருக்குப் பெற்றுக்கொடுத்தது. இந்த நூல் 1978இல் சாகித்திய விருதினைப் பெற்றது.

இவரது கவிதைகள் மரபுவழிக் கவித்துவ ஆற்றலும் ஓசைச்சிறப்பும் கற்பனையும் நிறைந்தவை. வீரத்தாய்|, நசிகேதன்|, முன்னீச்சர வடிவாம்பிகை அந்தாதி, நல்லூர் நான்மணிமாலை, அப்பரின் அன்புள்ளம் நெடுப்பா-3, ஷநல்லூர்க்கந்தன் திருப்புகழ், சைவப் பெரியாரின் சால்பை உரைத்திடுவோம் என்பன இவரது கவிதை நூல்களாகும்.

ஈழத்து நவீன நாவல் இலக்கிய வரலாற்றில் சுதந்திரத்திற்குப்பின் சாதியத்தினைக் கருவாகக் கொண்டு முதன்முதலாக நாவல் படைத்த பெருமை சொக்கனுக்கு உரியது. அவர் எழுதிய ஷசீதா| அத்தகைய சிறப்பினைப்பெற்ற நாவலாகும். மலர்ப்பலி, செல்லும்வழி இருட்டு, ஞானக்கவிஞன் சலதி என்பன சொக்கன் படைத்தளித்த ஏனைய நாவல்களாகும்.

சொக்கனது மொழிபெயர்ப்பு முயற்சியாக அமையும் பத்திக்சந்த் ஈழத்துச் சிறுவர் இலக்கியத்துக்கு அவர் செய்த முக்கிய பங்களிப்பாகும்.

சொக்கன் எழுதிய கட்டுரைத் தொகுப்புக்களாகப் பத்துத் தொகுதிகள் வரையில் வெளிவந்துள்ளன. இவரது இலக்கணத் தெளிவு மாணவர்கள் தமிழ் இலக்கண விதிகளை இலகுவான முறையிலே கற்பதற்கு உதவக்கூடிய நூல்.

சொக்கனது இலக்கியப் பணிகளைப் பாராட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலக்கியக்கலாநிதி என்ற பட்டத்தையும், இலங்கை அரசு 2003இல் சாஹித்தியரத்னா விருதினையும் வழங்கிக் கௌரவித்தன. சொக்கன் 02-.10-.2004 அன்று அமரரானார்.

மலையக றப்பர் தோட்டப்

பின்னணியில் முதலாவது நாவல்

மலையக நாவல்கள் வரிசையில் இதுவரை பேசப்படாத றப்பர் தோட்டங்கள் பற்றியும் அங்கு வாழும் மக்களைப்பற்றியும் பேசுபொருளாகக் கொண்டது பால்வனங்களில் என்ற நாவல்.

இந்த நாவலை எழுதிய மலரன்பன் ஈழத்து முன்னணிப் படைப்பாளிகளில் ஒருவர். தனது படைப்புகளுக்காக மூன்று தடவை அரச சாகித்திய விருதுகள் பெற்றவர்.

மாத்தளையில் உள்ள செண்பகமலைத் தோட்டப் பாடசாலை ஆசிரியர் பதவித் தேர்வுக்காகச் செல்லும் மனேகரன் என்ற இளைஞனின் அறிமுகத்துடன் தொடங்குகிறது இந்தநாவல். அவனே இந்த நாவலின் கதாநாயகன். மாத்தளை மாவட்டத்தில் மலையகத் பெருந்தோட்டங்கள் சில அறுபதுகளின் பிற்பகுதியில் வெள்ளையர்களால் உள்ளுர் தனவந்தர்களுக்கு விற்கப்பட்டன. அவ்வாறு விற்கப்பட்டபோது அங்கு வெலைசெய்த தோட்ட உத்தியோகத்தர்களும் புதிய உரிமையாளரின் நிர்வாகத்தின்கீழ் வந்தனர். இந்த உத்தியோகத்தர்கள் தொழிலாளர்களைக் கடுமையாக ஒடுக்கினர். அந்த வேளையில் அங்குள்ள படித்த இளைஞர்கள் சிலர் அந்த ஒடுக்கு முறைக்கு எதிராகத் கிளர்ந்தெழுந்தனர். கதாநாயகன் மனேகரன் இத்தகைய இளைஞர்களில் ஒருவனாகப் படைக்கப்பட்டிருக்கிறான். அதற்காகத் தோட்டத்துரையால் எச்சரிக்கப்படுகிறான். இந்த நாவலில் தோட்ட உத்தியோகத்தர்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படுகின்றன. அதேவேளை சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் எத்தகைய அன்னியோன்னிமாக அங்கு வாழ்ந்தார்கள் என்பதையும் இந்த நாவல் விபரித்துச் செல்கிறது. குறிப்பாக 60களில் தோட்டத்து நடைமுறைகள் எவ்வாறு இருந்தன என்பதை ஆசிரியர் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். றப்பர் தோட்டத்தில் பெண்கள் வெட்டுப்பால் எடுக்கும் லாவகம், அரிசிக்காம்பராவில் ரேசன் அரிசி போடுதல், காமன் திருவிழா, தோட்டத்தில் நாடகம் போடுதல், றப்பர் தோட்டங்கள் முறையான கவனிப்பின்றி நட்டமடைதல், அவை விறகுக்காக வெட்டி விற்கப்படல், கமிஷன் பெறுதல், வேலைநாட் குறைப்பு, தொழிற்சங்கப் போராட்டம், நிலங்கள் துண்டாடப்பட்டு விற்கப்படல், வேண்டப்படாத கண்டக்டர் சாவுத்தப்பு அடித்து விரட்டப்படல் இவைபோன்ற பல்வேறு சம்பவங்களை நாவலினூடே ஊடுபாவாகச் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். தோட்டத்தின் பெரிய கிளாக்கர் மகள் ரேவதிக்கும் மனோகரனுக்கும் இடையிலான காதல் சல்லாபங்கள் நாவலின் கதையோட்டத்திற்குச் சுவையூட்டுகின்றன. அறுபதுகளின் பின்னிறுதியில் மாத்தளை நகரம் - அதன் பெருந்தோட்டங்கள் எவ்வாறு இருந்தன என்பதை சரளமான மொழிநடையில் ஆவணமாக்கியிருக்கிறார் மலரன்பன். ஆசிரியருக்கு இது வெற்றிப் படைப்பு. 2019இல் கொடகே நிறுவன வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்த நூலின் விலை 650ஃ-

இந்தியா கேட்

டெல்கி நகரின் மத்தியில் ‘இந்தியா கேட்’ எனப்படும் ஒரு நினைவுத் தூபி காணப்படுகிறது. வெள்ளைக்காரர்களின் ஆட்சியில், முதலாவது உலக மகாயுத்தத்தின்போது போராடி உயிர்நீத்த 70,000 இந்திய இராணுவத்தினரை நினைவுகூரும் முகமாக இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டது. 42 மீற்றர் உயரமான இந்த நினைவுத் தூபியை சேர் எட்வின் லுற்றியன்ஸ் என்பவர் வடிவமைத்தார்.

ஒரு குறுக்குத் தெருவின் மத்தியில் அமைந்திருக்கும் இந்த ‘இந்தியா கேட்’ ஒரு நினைவுத் தூபி எனக் கூறப்பட்டாலும் இதனைச் சூழவுள்ள பகுதி ஒரு களியாட்டத்திடல் போலக் காட்சி தந்தது. வர்ணஜால மின்விளக்குகள் திரும்பும் இடமெல்லாம் ஒளியுமிழ்ந்து கொண்டிருந்தன. மகிழ்ச்சி நிறைந்த சனக்கூட்டம் நிறைந்திருந்தது. பெருவாரியான வெளிநாட்டவர்களும் இங்கு காணப்பட்டனர்.

இந்த நினைவுத் தூபியின் முன்னால் ஒரு சிறிய விதானம் காணப்படுகிறது. இந்த விதானத்தின் உள்ளே ஐந்தாவது ஜோர்ஜ் மன்னரின் சிலை முன்னர் வைக்கப்பட்டிருந்ததாம். இப்போது அந்தச் சிலையை வேறோர் இடத்துக்கு மாற்றியிருக்கிறார்கள். இந்த விதானத்தில் சுதந்திர இந்தியாவின் தந்தை எனப் போற்றப்படும் மகாத்மா காந்தியின் சிலையை வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிந்தது.

இந்தத் தூபியின் வளைவுப் பகுதியின் கீழே ஒரு சிறிய கோயில் போன்ற அமைப்பு உள்ளது. கறுப்பு மாபிள் கற்களால் அமைக்கப்பட்ட இந்தச் சிறிய கோயிலில் அமரஜோதி ஒன்று என்றும் அணையாது எரிந்துகொண்டிருக்கிறது. அமரத்துவம் அடைந்த போர் வீரர்களின் ஜோதி இது. இந்தச் சிறிய கோயிலில் ஓர் உருளை வடிவான மேடை இருக்கிறது. அந்த மேடையில் இராணுவத்தினர் அணியும் ‘ஹெல்மெட்’ உருவமும் அதனருகே ஒரு சிறிய கைத்துப்பாக்கியும் காணப்படுகின்றன. இந்தச் சிறிய கோயிலும் ஜோதியும் இந்திய பாகிஸ்தான் போரில் உயிர் நீத்த இராணுவ வீரர்களின் நினைவாகப் புதிதாக அமைக்கப்பட்டு இந்தியா கேட்டுடன் இணைக்கப்பட்டதாம். 1971 டிசம்பரிலிருந்து இங்குள்ள ஜோதி அணையாது எரிந்து கொண்டிருக்கிறது.

இந்தத் தூபியின் வளைவுப் பகுதியிலும் அடித்தளத்திலும் 13,516 அமரத்துவம் அடைந்த இந்திய இராணுவத்தினரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்திய சுதந்திர தினத்தன்றும் இந்திய நாட்டுடன் தொடர்புடைய ஏனைய முக்கிய நாட்களிலும் இந்திய ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இங்கு வந்து வழிபாடு செய்தல் சம்பிரதாயமாகவுள்ளது. வெளிநாட்டு இராஜதந்திரிகள் செல்லும்போதும் இந்தத் தூபிக்கு மரியாதை செலுத்துவது வழக்கத்தில் உள்ளது. இந்தத் தூபியின் வளைவினூடாகத் தூரத்தே தெரியும் இந்திய ஜனாதிபதி மாளிகையான ‘இராஷ்டிரபதி பவன்’ கண்களுக்குப் பெருவிருந்தாக அமைகிறது.

பாண்டவர்கள் முன்னர் அரசு புரிந்த இந்திரப் பிரஸ்தத்தின் அமைவிடம் இதுவாகத்தான் இருந்தது எனச் சிலர் கூறுகிறார்கள். இங்கு ஒரு பெரிய நீரோடையும் இருக்கிறது. இந்த நீரோடையைத் தழுவி வரும் காற்று உடலுக்கு இதமாக இருக்கிறது.(இனி அடுத்த இதழில்)

Comments