பெருந்தோட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி

கொவிட் 19இன் தாக்கம் டெல்டா அலையின் ஆதிக்கம் தளர்வடைந்து வருவதாக அரசு தரப்புச் செய்திகள் திருப்தி தெரிவிக்கின்றன. நாளாந்த தொற்றாளர்கள் தொகை, மரணிப்பவர்களின் எண்ணிக்கையில் காணப்படும் வீழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டே இத் தகவல்கள் உறுதி செய்யப்படுகின்றன. இதேநேரம் பி.சி.ஆர் பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எனினும் நாட்டின் முடக்கத்துக்கு முடிவு காணப்படுமானால் கொவிட் தொற்றின் ஐந்தாவது அலை வலைவீச வாய்ப்புண்டு என்று எச்சரிக்கின்றது விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம். எது எப்படியாயினும் பொதுமக்களிடம் நோய்த்தொற்றி விடுமே என்னும் அச்சம் படிப்படியாக குறைந்து கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. முடக்கக் காலத்திலும் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டதோ என்று ஆச்சரியப்படும் வகையில் பொதுமக்கள் அலட்சியமாக நடமாடித் திரிந்த காட்சியும் காணமுடிந்தது.

முகக்கவசம் போட்டு விட்டால் முழு பாதுகாப்பு என்னும் மனோபாவத்தில் மக்கள் இருக்கின்றார்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால் தடுப்பூசி மட்டுமே தக்க பாதுகாப்பு என்பதே சுகாதார நிபுணர்களின் கருத்து. அரசாங்கம் முழு வீச்சுடன் பகுதி பகுதியாக தடுப்பூசி வழங்கி வருக்கின்றது. எனினும் இதுவரை 50 சதவீதமானவர்களே தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருப்பதாக தரவுகள் சுட்டுகின்றன. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஆரம்பித்து பின்னர் 20 இலிருந்து 30 வயது வரை என்று விசாரித்து இன்று 12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை பிள்ளைகளை இலக்காக கொண்டு தடுப்பூசியேற்றும் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இளம் வயதினர் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டால் மலட்டுத் தன்மை உண்டாகும் என்று கூறப்படுவது அப்பட்டமான பொய். இதுவரை எந்தவொரு நாடும் இதனை அறிவிக்கவில்லை என்பதில் இருந்தே இது தவறான தகவல் என்று உணர முடியும். எனவே யூகங்களாலும் வதந்திகளாலும் மக்கள் ஏமாந்து போய் தற்பாதுகாப்புக்கான தடுப்பூசியை தவிர்க்க நினைப்பது புத்திசாலித்தனமானது அல்ல.

பெருந்தோட்டத்துறை மக்களிடம் போதியளவு தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியே. 60 வயதானவர்களுக்கும் கர்ப்பிணித் தாய்மாருக்கும் முன்னுரிமை என்னும் அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டபோது பெருந்தோட்ட மக்கள் அவற்றைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்நோக்கியிருந்தமையை மறுப்பதற்கு இல்லை. எனவே இன்றைய காலகட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் வயது முறைப்படி தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன என்பதற்குச் சரியான சான்றுகள் இல்லை. இதில் தோட்ட மக்களின் அலட்சியப் போக்கு அதிகமாகவே ஆட்சி செய்கின்றது.

குறிப்பாக முதற்கட்ட தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றிக்கொள்வதில் உரிய அறிவுத்தல்கள் இல்லாதவர்களாகவே காணப்படுகின்றார்கள். குறிப்பாக முதலாவது தடுப்பூசி போடும்போது இரண்டாவது தடுப்பூசிக்கான காலம் எதுவும் குறித்து தரப்படுவது கிடையாது. இதனால் நகரங்களை அண்மித்த தோட்டப் பகுதியில் வாழும் தோட்ட மக்கள் நகரங்களுக்கு வந்து வீணாக அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு உதவும் வகையில் பொது வைத்தியசாலைகளில் எந்தவொரு தகவல்களும் பெறமுடிவது இல்லை. பொது சுகதார பரிசோதகர்களும் கூட சில சமயங்களில் விபரம் சொல்ல முடியாமல் கையை பிசைந்து கொள்கிறார்கள்.

அண்மையில் 20 வயதிலிருந்து 30 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டபோது 60 வயதினரும் வந்திருந்து எமாற்றத்துக்குள்ளான சம்பவமும் நடந்துள்ளது. இது தகவல்கள் சரியான முறையில் பரிமாறப்படாமையினால் ஏற்படும் விளைவுகள். இதேநேரம் பெருந்தோட்டப் பிரதேசங்களைச் சார்ந்து இயங்கும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் இதனால் தர்மசங்கடங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

ஏற்கனவே பெருந்தோட்டப் பிரதேசங்கள் பொது சுகாதார பொறிமுறைக்குள் கொண்டு வரப்படாமையால் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள். சுகாதார கட்டமைப்பு வசதிகள் பலவீனமுற்று காணப்படுகின்றன. தொற்று நோய்கள் காரணமாக போஷாக்கின்மை பாரிய அச்சுறுத்தலாகவே இருக்கின்றது. நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்த ஒரு சமூகமாக பெருந்தோட்ட மக்கள் நரக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள்.

குறிப்பாக முழு நாடும் முடக்கத்தில் மூழ்கிக் கிடக்கும்போது பெருந்தோட்ட மக்கள் மட்டும் வழமைபோல தொழில் செய்து நாட்டின் அந்நியச் செலாவணிக்கு பங்களிப்பு வழங்கி வந்துள்ளார்கள். இது இவர்களின் அர்ப்பணிப்புக்கான அடையாளம். இதனை முழுநாடும் புரிந்து செயல்பட வேண்டிய நேரம் இது.

எனவே உரிய முறையில் குறிப்பிட்ட காலத்துக்குள் பெருந்தோட்ட மக்கள் அனைவரும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வது உறுதி செய்யப்பட வேண்டியது அத்தியாவசியம். நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும் சாத்தியக் கூறுகள் உணரப்படுவதால் மக்கள் தமது பாதுகாப்பை தாமே நிச்சயப்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். குறிப்பாக பெருந்தோட்ட மக்கள்.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பு 12 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் முனைப்பாக இருக்கின்றது. இதனைப் பெருந்தோட்ட மாணவர்களும் பயன்படுத்திக் கொள்வது முக்கியம். இது குறித்து பெற்றோர் விழிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது. முதலில் அவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ளும் வாயப்பினைப் பெறவேண்டும் என்பதில் கரிசனையுடன் இருப்பது அவர்களின் தார்மீக கடமை.

எதிர்காலத்தில் காற்றின் மூலம் பரவக்கூடிய கொடிய உருமாறிய கொவிட் திரிபு பரவும் அபாயம் குறித்து விசேட வைத்திய நிபுணர் குழுவொன்று எச்சரித்துள்ளது. தற்போதைய நிலையில் நோய் தொற்றிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில் நாடு இன்று இயல்பு வாழ்கைக்குத் திரும்புவதற்காக முழுமையாக திறக்கப்பட்டுள்ளது. எனினும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகள் அப்படியே தான் தொடரப் போகின்றன. முகக் கவசம் அணிதல், தனி மனித இடை வெளியைப் பேணுதல், இரு தடுப்பூசிகளையும் போட்டுக் கொள்ளல் என்பன. இவற்றுள் முக்கியமானவை. எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளும் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படும் அறிகுறி தெரிகின்றது. புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த உயர்தரப் பரீட்சைகளும் காத்திருக்கின்றன.

இதே நேரம் சுகதேகியான மாணவர் சமூகம் ஒன்றினை உறுதிசெய்து கொள்வது அரசாங்கத்தின் கடமை என்பதை மறுக்க முடியாது. பாடசாலை பிள்ளைகளுக்கான நோய்த் தடுப்பு முன்னேற்பாடுகள் பாரபட்சம் இன்றியும் காலதாமதம் இன்றியும் செய்யப்படுவது நல்லது.

பன்.பாலா

Comments