மாகாணசபைத் தேர்தல் அறிவிப்பு வெளியான நிமிடத்திலிருந்து வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் போட்டி ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

மாகாணசபைத் தேர்தல் அறிவிப்பு வெளியான நிமிடத்திலிருந்து வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் போட்டி ஆரம்பம்

மாகாணசபைத் தேர்தலை அடுத்த வருட முற்பகுதியில் நடத்த அரசாங்கம் விடுத்த அறிவிப்பினைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை மீண்டும் உருவாகத் தொடங்கியுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களே என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகிய சில நிமிடங்களிலேயே வெளிப்படையாக ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.இவரது அறிவிப்பைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சிக்குள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்குள்ளும் பாரிய சர்ச்சை உருவாகியுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த மாவை சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளருக்கு எவ்வகையிலும் பொருத்தமற்றவர் என தமிழரசு கட்சிக்குள் இருந்து குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.

அதேபோன்று தமிழர் விடுதலைக் கழகமான டெலோ கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தி வருகின்றது.

இல்லாவிடில் தனித்துப் போட்டியிடுவதாகவும் டெலோ முன்னர் அச்சுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறையும் தமது கட்சி ஏமாற்றப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்து தமது தலைவர் செல்வம் அடைக்கலநாதன் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவார் என கட்சியின் முக்கியஸ்தர் ஆவேசமாக தெரிவித்துள்ளமையும் சில ஊடகங்களில் பதிவாகியுள்ளது.

அதேபோன்று கடந்த மாநகரசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழரசுக் கட்சியின் சில உறுப்பினர்களது பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளன.

அதனை விடவும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஈஸ்வரபாதம் சரவணபவனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் எனவும் ஊடக பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

எது எவ்வாறு இருப்பினும் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் இவ்விடயம் தொடர்பாக மௌனம் சாதித்து வருகிறார். தாம் பங்காளிக் கட்சிகளாக இருந்து இத்தகைய கருத்துக்களை முன்வைத்தாலும் இறுதியில் அவரது முடிவின்படியே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இறுதி முடிவை எடுப்பார் என்று பங்காளி கட்சிகள் விசனம் தெரிவித்துள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட முன்வருமாறு தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பியை கூட்டமைப்பில் உள்ள சிலர் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் மேல் நீதிமன்ற நீதியரசர், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரனும் தனது பாராளுமன்ற பதவியை இராஜினாமாச் செய்து போட்டியிட இருப்பதாகவும் தெரியவருகிறது.

எனினும் அவர் தனது முதலமைச்சர் பதவி காலத்தில் எந்த விதமான ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனும் குற்றச்சாட்டு அவரது கட்சிக்குள் இருந்து எழுந்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அதேபோன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினரும் ஒரு பெண் வேட்பாளரை நிறுத்துவதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அறியக் கிடைக்கிறது.

இல்லாவிடில் பாராளுமன்ற பதவியை ராஜினாமா செய்து முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட முன்வருமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை அக்கட்சி வலியுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது . இது தவிர வட மாகாணத்தில் பல தேர்தல்களில் போட்டியிட்ட அனுபவசாலியான சமூக சேவகர் கணேஸ்வரன் வேலாயுதம் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவருக்கு ஆதரவு வழங்குவதற்கு பல அமைப்புகள் முன்வந்துள்ளதாக அவரது அணி தெரிவித்திருக்கிறது.

Comments