மீண்டும் வலுவடைந்து வரும் இலங்கை - இந்திய நல்லுறவு | தினகரன் வாரமஞ்சரி

மீண்டும் வலுவடைந்து வரும் இலங்கை - இந்திய நல்லுறவு

இந்து சமுத்திர பிராந்தியத்தில் கேந்திர நிலையமாக அமைந்துள்ளமையால், இலங்கை மீது ஏனைய நாடுகளின் அக்கறைக்கு எப்பொழுதும் குறைவு இருந்ததில்லை. பூகோள அமைவிடம் காரணமாக இலங்கையுடனான உறவுகளைப் பலப்படுத்துவதற்குப் பெரும்பாலான நாடுகள் எப்பொழுதும் விரும்பம் காண்பித்தே வந்துள்ளன. குறிப்பாக அயல்நாடான இந்தியா இலங்கையுடன் நெருக்கமான நட்புப் பாராட்டியே வந்துள்ளது.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் கேந்திர நிலையமாக அமைந்துள்ளமையால், இலங்கை மீது ஏனைய நாடுகளின் அக்கறைக்கு எப்பொழுதும் குறைவு இருந்ததில்லை. பூகோள அமைவிடம் காரணமாக இலங்கையுடனான உறவுகளைப் பலப்படுத்துவதற்குப் பெரும்பாலான நாடுகள் எப்பொழுதும் விரும்பம் காண்பித்தே வந்துள்ளன. குறிப்பாக அயல்நாடான இந்தியா இலங்கையுடன் நெருக்கமான நட்புப் பாராட்டியே வந்துள்ளது.

இலங்கைக்கு எப்பொழுது உதவி தேவைப்பட்டாலும் உடனடியாக அதனை வழங்குவதற்கு இந்தியா எப்பொழுதும் தயங்கியதில்லை. இரு நாடுகளிலும் மத்திய அரசாங்கத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர உறவு தொடர்ந்துகொண்டே வருகிறது. இந்த வரிசையில் இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா அவர்களின் அண்மைய இலங்கை விஜயம் இரு நாட்டு உறவுகளில் மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூற வேண்டும்.

கொழும்புத் துறைமுகத்தின் முனைய விடயத்தில் இரு நாட்டுக்கும் இடையில் ஒரு சில மனக்குறைகள் ஏற்பட்டிருந்தாலும், தற்பொழுது மேற்கு முனையத்தின் அபிவிருத்திப் பணிகள் இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னணியிலேயே இந்திய வெளியுறவு செயலாளரின் சமீபத்திய இலங்கை விஜயம் அமைந்திருந்தது.

கடந்த 02ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்த இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன்ஷ்ரிங்லா பல்வேறு உயர்மட்டச் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்ததுடன், பல்வேறு துறைகளில் இரு நாட்டுக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் பற்றிய கலந்துரையாடல்களையும் மேற்கொண்டிருந்தார்.

கொவிட்-19 உலகத் தொற்றுநோய் காரணமாக நாடு சமூக மற்றும் பொருளாதார சவால்களைச் சந்தித்திருக்கும் நிலையில், இந்திய உயர்மட்ட அதிகாரி ஒருவரின் விஜயத்தின் போது பல்வேறு துறைகளில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான உறுதிமொழிகள் இந்திய தரப்பினால் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பல்வேறு திட்டங்களும் அவருடைய விஜயத்தின் போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும். இவற்றுக்கும் அப்பால் அவர் மேற்கொண்டிருந்த சந்திப்புக்களின் போது குறிப்பாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது அரசியல் விடயங்கள் குறித்த கலந்துரையாடல்களும் முக்கியத்துவம் பெற்றிருந்தன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கடந்த 05ஆம் திகதி சந்தித்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர், இரு நாட்டுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை விஸ்தரிப்பதன் முக்கியத்துவம் குறித்து விரிவாகக் கலந்துரையாடியிருந்தார். மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்த வேண்டியதன் அவசியத்தையும், 13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் சரத்துக்கள் அனைத்தையும் முழுமையாக அமுல்படுத்துவது பற்றிய இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பலவீனங்களைப் போன்றே அதில் காணப்படும் பலம் தொடர்பிலும் கண்டறிந்து செயற்படுவதன் தேவை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ எடுத்துரைத்திருந்தார். நன்மை, தீமைகளை எடுத்துரைத்து, பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துடன் செயலாற்றுவது அத்தியாவசியமென்றும், தற்போது காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரைவாக அடையாளம் காண்பதுடன், மீனவச் சமுதாயத்துக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகளைப் பெற்றுக் கொடுத்து, இரு நாடுகளினதும் மீனவர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்காகத் தமது அரசாங்கம் கடந்த காலங்களில் முன்னெடுத்திருந்த நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, யுத்த காலத்தின் போது பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகளில் 90 சதவீதத்துக்கும் மேலானவை, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்பதையும் தெரிவித்திருந்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்திய வெளியுறவுச் செயலாளர் நடத்திய சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளைப் பலப்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. பௌத்தமத மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 15 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை உதவி தொடர்பாக அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடுவதன் மூலம் இருநாட்டு மக்களிடையிலுமான உறுதியான தொடர்புகள் மேலும் வலுவாக்கப்படும்.

அதேநேரம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் பலப்படுத்தப்படும் என்பதும் இங்கு சுட்டிக் காட்டப்பட்டது. இது தவிரவும் இந்தியாவின் நன்கொடை உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்திய கலாசார நிலையத்தைப் பராமரிப்பதற்கு இந்தியா தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்ற உறுதிமொழியும் இங்கு வழங்கப்பட்டது.

இந்திய வெளியுறவுச் செயலாளருக்கும், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நன்கொடை அடிப்படையிலானதும் கடன் அடிப்படையிலானதுமான உதவித் திட்டங்கள் உட்பட சகல கூட்டு திட்டங்களையும் துரிதமாக முன்னெடுத்துச் செல்வதற்கு இணக்கம் காணப்பட்டது.

இதேபோல வெளிவிவகார அமைச்சர் மற்றும் வெளிவிவகார செயலாளர் ஆகியோருடனான சந்திப்புக்களின் போது, கொவிட் பெருந்தொற்றினால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார விளைவுகளை எதிர்கொள்வதற்கும் கொவிட்டினால் ஏற்பட்டிருக்கும் சவால்களை எதிர்கொள்ளுதல் உட்பட பரஸ்பர நலன்கள் அடிப்படையிலான சகல விடயங்கள் தொடர்பாகவும் பரந்தளவிலான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அத்துடன், இந்திய நன்கொடை உதவித் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட நான்கு அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டங்களும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வு அலரிமாளிகையில் நடைபெற்றதுடன், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மெய்நிகர் மார்க்கமாக இணைந்து திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். வடமாகாணத்திலுள்ள வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி, கண்டி- புசல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரி ஆகியவை கல்வி அமைச்சருடன் இணைந்தும், இந்திய வீடமைப்பு திட்டத்தின் மூன்றாம் கட்டமாக முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் ஒரு பகுதியான 1235 வீடுகளை தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமானுடன் இணைந்தும், வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மாதிரிக் கிராம அமைப்பு திட்டத்தின் கீழான வீடுகள் மெய்நிகர் மார்க்கமூடாக இணைந்திருந்த கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டடப் பொருட்கள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஹேரத்துடன் இணைந்தும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.

இலங்கையின் அயல்நாடு என்பது மாத்திரமன்றி இக்கட்டான சூழ்நிலைகளில் இந்தியா எப்பொழுதும் உதவியுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த ஒத்துழைப்புக்களைக் குறிப்பிட முடியும். இதற்கும் அப்பால் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார ஒற்றுமைகளைப் பலப்படுத்துவதிலும் இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு இந்த விஜயத்தின் மூலம் புலப்பட்டதையும் காண முடிந்தது. இந்திய வெளியுறவுச் செயலாளர், யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளுக்குச் சென்றிருந்தமை இதற்கு சிறந்த உதாரணமாக அமைந்தது.

யாழ்ப்பாணம் சென்றிருந்த அவர், இந்திய அரசின் நன்கொடையில் அமைக்கப்பட்டு வரும் இந்திய கலாசார நிலையத்தைப் பார்வையிட்டதுடன், கண்டியில் தலதாமாளிகைக்குச் சென்று வழிபாடுகளிலும் கலந்து கொண்டார். திருகோணமலையில் இந்தியாவின் ஐ,ஓ.சி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள எண்ணெய் குதங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்த அவர், அவற்றின் தற்போதைய நிலைமைகள் குறித்துக் கேட்டறிந்து கொண்டிருந்தார்;.

இது தவிரவும் இந்திய வெளியுறவுச் செயலாளரின் விஜயத்தின் போது, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் நடத்திய சந்திப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்தள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் இலங்கையின் பிந்திய அரசியல் நிலைவரம் உள்ளிட்ட பல விடயங்கள் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டன. வடக்கு, கிழக்கு தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக கூட்டமைப்பினர் வலியுறுத்தியிருந்தனர். 13வது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைய அதிகாரப் பகிர்வின் அவசியத்தை இலங்கை அரசாங்கத்திடம் தாம் வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கும் அப்பால், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகள் குழு, மற்றும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு ஆகியோருடன் இந்திய வெளியுறவுச் செயலாளர் சந்திப்புக்களை நடத்தியிருந்தார்.

13ஆவது திருத்தத்திற்கு அமைவாக ஐக்கிய இலங்கைக்குள் சமாதானம்,நீதி,சமத்துவம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் சமூகத்தின் சகல அபிலாசைகளையும் பூர்த்தி செய்கின்ற நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவு கிடைக்கும் என்ற விடயமும் இச்சந்திப்புக்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுச் செயலாளரின் வருகைக்கு சமாந்தரமாக இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புக் கூட்டு நடவடிக்கையொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் நெருக்கமடைந்து வருவது இந்தியாவுக்கு சிறியதொரு நெருடலைக் கொடுத்திருந்தாலும், இலங்கையின் நீண்ட கால நட்பு நாடு என்ற ரீதியில் இந்தியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments