தேச பக்தியை புரிந்து கொள்ளுதல் | தினகரன் வாரமஞ்சரி

தேச பக்தியை புரிந்து கொள்ளுதல்

தேச பக்தி என்பது பலராலும் பல வகையாக புரிந்து கொள்ளப்டும் சொல். சில சமயம் அது மேலாதிக்கத்தைப் புலப்படுத்துவதாகவும், அடக்கி வைக்கப்படுவதற்கான ஆயுதமாகவும், பயங்கரவாத தன்மை கொண்டதாகவும் பயன்படுத்தப்படுகிறது. கடுமையான நடைமுறைகளைக் கொண்ட ஒரு மதத்தைப்போல பிரயோகிக்கப்படுவதும் உண்டு. தேச பக்தியில் இருந்தே தேசத்துரோகி, தேசத் துரோகம் என்பன பிறக்கின்றன. மென்மையான பொருளில் பயன்படுத்தப்படும் போது தென்றலாகத் தவழக் கூடிய தேசபக்தி தவறாகப் பயன்படுத்தப்படும் போது சூறாவளியாகிறது.

பக்தி, நம்பிக்கை, விசுவாசம் என்பனவற்றின் அர்த்தத்தை பகுத்து பார்த்தோமானால் ஒருவருக்கு ஒரு விஷயத்தை நூறு சதவீதம் உறுதிப்படுத்த முடியாத நிலையில், அதன்மேல் தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் பக்தி பூண்டிருப்பதாகவும் சொல்வார். நாம் இந்த மட்டத்துக் போகத் தேவையில்லை. தேச பக்தியை எளிமையான வகையில் புரிந்து கொள்வதன் மூலம் மட்டுமே அதனை போலித்தனம் அகற்றி ஏன் அது அவசியம் என்பதை அறிய முடியும்.

தேச பக்தியை ஒரு குடும்பத்தோடு ஒப்பிட முடியும். ஒரு குடும்ப அங்கத்தவர்களை அக் குடும்பத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் பற்றும், அந்த அமைப்பைத் தொடர்வதன் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு உணர்வும் அந்த அமைப்பு அவர்களுக்கு வழங்கக் கூடிய வசதிகளுமே ஒன்றிணைக்கிறது. காலையில் வெளியே செல்லும் ஒரு குடும்ப அங்கத்தவர் மாலையில் வீடு திரும்புவது, அமைதியையும் பாதுகாப்பு உணர்வையும் அந்த வீடு அவருக்குத் தரும் என்பதால்தான். இது அப்படியே ஒரு நாட்டுக்கும் பொருந்தும். நாட்டை விட்டு வெளியேறும் ஒருவர் அந்நியனாகிறார். அவர் நாடு திரும்பும் போதே 'அந்நியன்' என்ற பட்டத்தை அவர் இழக்கிறார். சொந்த நாடு, பிறந்த நாடு என்ற எண்ணமே ஒருவருக்கு நிம்மதியையும் பெருமையையும் அளிக்கிறது. வீடு என்ற அமைப்பு தரும் அதே திருப்தியை நாடும் தருகிறது. இந்தப் பெருமைக்குரிய நிறைவு தரும் விஷயமே அந்நாட்டின் மீது அந்நாட்டவர் வைக்கும் அன்பாக மாறுகிறது. இத்தன்னலமற்ற அன்பு – அன்னையை நேசிக்கும் அன்பு – தேச பக்தியாக உணரப்படுகிறது.

தேசத்தை நேசித்தல் என்பது வெகு இயல்பானது. பிரத்தியேகமானதல்ல. ஒரு நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்குமானது. நாட்டின் குறிப்பிட்ட ஒரு சாராருக்கு மட்டுமானதல்ல. ஆனால் தேச பக்தியை அரசியல்வாதிகள் சில நாடுகளில் அது இனம் அல்லது மதம் சார்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் ஒரு பகுதி பிரிக்கப்பட்டு பாகிஸ்தானாகிய போது இரு விதமான தேசபக்தி துளிர்விட்டு பெருந்தீயாக வளர்ந்ததில் பல்லாயிரக் கணக்கான அப்பாவிகள் இந்துக்களும் இஸ்லாமியரும் -மடிந்தனர். தற்போதும் பாகிஸ்தானில் தேசபக்தி மதம் சார்ந்ததாகக் கருதப்படுவதால் இந்தியாவின் தேசபக்தி உணர்வும் இந்து மதம் சார்ந்ததாக பா.ஜ.க., சிவசேனா போன்ற இந்துக் கட்சிகளினால் வட இந்தியாவில் கட்டமைக்கப்படுகிறது.

ஆனால் தேசத்தை நேசித்தல் இயல்பான பற்றுதலே தவிர அது வெளிப்படுத்த முடியாதது. தேசத்தை நேசித்தல் என்பது தேசிய கீதத்தை இசைத்தலும் தேசிய கொடிக்கு தலை வணங்குவதும் மட்டுமல்ல. அறுபதுகளில் இலங்கை திரையரங்குகளில் திரைப்படம் ஆரம்பமாவதற்கு முன்னர் திரையில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டு கீதம் இசைக்கப்படும். படம் பார்க்க வந்த ரசிகர்கள் எழுந்து நிற்பார்கள். காலப்போக்கில் சிலர் எழுந்து நிற்பதைத் தவிர்க்க ஆரம்பித்தனர். சிலர் சிகரெட் பிடித்தபடியும் எதையாவது மென்றபடியும் அல்லது தொடர்ந்து நிறுத்தாமல் பேசிக் கொண்டும் இருந்தனர். இதை ஒரு இம்சையாகக் கருதிய சிலர் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னரேயே அரங்கினுள் பிரவேசித்தனர். அதன் பின்னர் தான் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு கேளிக்கை உணர்வுடன் வருபவர்களிடம் தேசிய உணர்வை எதிர்பார்ப்பது தவறு என்பது புரிபடவே திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கும் வழக்கம் நிறுத்தப்பட்டது.

எனவே தேச பக்தி என்பதை தலை வணங்குதல் என்பதாக வரையறை செய்யக் கூடாது. ஆனால் அப்படித்தான் பார்க்கப்படுகிறது. தேசத்தை நேசித்தல் என்பது, நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்காமல் இருப்பது, தேச செல்வத்தை சுரண்டாமல் இருப்பது, நாட்டின் வளங்களைப் பயன்படுத்தி முன்னேறிவிட்டு பின்னர் வேறொரு நாட்டில் குடியேறுவதைத் தவிர்ப்பது, நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக செயல்படுவது, நாட்டின் வளங்களை சூறையாடாதிருப்பது, நாட்டின் இறைமைக்கு கேடு விளைவிக்காதிருப்பது என்பனவும் இதற்குள் அடங்கும்.

ஒரு நாட்டில் தேச நேசர்கள் மட்டுமே இருக்க முடியுமே தவிர முதன்மை தேச பற்றாளர்கள், இரண்டாம் நிலைப் பற்றாளர்கள் என இரு வகையான தேச நேசர்கள் இருக்க முடியாது. இந்தியாவில் இந்துக்கள் அல்லாதோர் குறைவான தேசபக்தி கொண்டவர்கள் அல்லது சந்தேகத்துக்கு உரியவர்கள் என்ற இன, மத ரீதியான பார்வை உண்டு. அது போலவே இலங்கையிலும் தலை சிறந்த தேசபக்தி கொண்டவர்கள் சிங்களவர்களும் பௌத்தர்களும் என்ற ஒரு தவறான மனப்பான்மை அரசியல் ரீதியாகக் கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. யுத்த காலத்தின் போது இந்த உணர்வு மிகையாகக் காணப்பட்டது.

தேசபக்தி என்பது உருவாக்கப்படக் கூடிய, வெளியில் இருந்து புகப்படக் கூடிய ஒன்றல்ல, மத, இன, வர்க்க ரீதியானதுமல்ல. சில வருடங்களுக்கு முன்னர் பனாமா பேப்பர்ஸ் மூலமும் தற்போது பண்டோரா பேப்பர்ஸ் மூலமும் தத்தமது நாடுகளில் தாம் சுரண்டிய, மக்களுக்கு சேர வேண்டிய, ஏழ்மையை ஒழிக்க பயன்பட்டிருக்கக் கூடிய செல்வங்களை கோடீஸ்வரர்களும் உயர்மட்ட அரசியல்வாதிகளும் நாட்டுக்கு வெளியே எடுத்துச் சென்று பதுக்கி வைத்திருப்பது பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவர்கள் அனைவருமே தம்மை தேசபக்தர்களாகக் காட்டிக் கொள்பவர்கள் தான். எனவே தேச பக்தி என்பது நாட்டுக்கு ஊறு விளைவிக்காமல் நடந்து கொள்வதே தவிர, அதை வெளிப்பகட்டாகக் காட்டிக் கொள்வதல்ல.

தேச நேர உணர்வை பாடசாலைக் கல்வி வழியாகவோ, தலை வணங்குவதாலோ ஊட்ட முடியாது. ஒரு நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் சம வாய்ப்பு, சம உரிமை, சம செல்வ பங்கீடு வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்படுவதன் மூலமே ஒருவருக்கு தமது நாட்டின் மீது அபிமானமும் பெருமையும் ஏற்படும். நாட்டில் காணப்படும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதன் மூலமும், பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் சாதாரண மனிதர்களை எட்டும் போதும் நாட்டின் மீதான அபிமானம் பரந்த அளவில் மக்கள் மத்தியில் உருவாகும்.

Comments