அம்மா | தினகரன் வாரமஞ்சரி

அம்மா


கருவினிலே எனை சுமந்து
கைகளினால் சட்டை தைத்து- நான்
வரும் நேரம் எதிர்பார்த்து
காத்திருந்த என் ஆத்தா
வயிற்றில் எட்டி நான் உதைக்க
பன்னீர்க்குடம் உடைந்தொழுக
எந்த சாமியை நீ வேண்டினாயோ
என்ன வலிகள் தாங்கினாயோ
பிஞ்சுப் பாதம் தொட்டணைத்து
உச்சி முகர்ந்து முத்தமிட
பெற்ற ரணம் பறந்ததென்று
பாலூட்டி வளர்த்தவளே- எனை
பக்குவமாய் பார்த்தவளே
தோள் தாண்டி வளர்ந்த பின்னும்
தோல்வி என்று நான் வந்தால்
ஆறுதலாய் எனக்கிருந்து
உன் மடிமீது தூங்க வைத்தே
வழிந்தோடும் அழுகையினை
சேலை நுனி கொண்டு துடைத்தவளே
நாலெழுத்து நான் படிக்க
ராவெல்லாம் முழிச்சிருந்து
நாட்டுக்கோழி வதக்கி வைச்சு
வரும் பாதையிலே தவம் கிடப்பாய்
பட்டிக்காடு என்று திட்டி
உனை பலவாறு சபிக்கையிலும்
பட்டினியா நீயிருந்து
எனக்காக பாடுபட்டாய்
நீ எண்ணெய் தேய்த்து விடுகையிலே
என் கண்ணு ரெண்டும் எரிஞ்சிருக்கு
எண்ணி இப்போ பார்த்தால் தான்
எரிஞ்ச கண்ணு குளிர்ந்திருக்கு
பிள்ளை என்று நீ அழைக்க
பெற்றிடலாம் எத்தனையும் -ஆனால்
அம்மா என்று நான் தேட
நீ ஒருத்தி தானே எனக்கிருக்காய்.

சோதிகா.ரெ (ஆகிஷா)
கொக்குவில்

Comments