சமூக ஊடக செல்வாக்கை உலகுக்கு உணர்த்திய அந்த 6 மணித்தியாலங்கள் ! | தினகரன் வாரமஞ்சரி

சமூக ஊடக செல்வாக்கை உலகுக்கு உணர்த்திய அந்த 6 மணித்தியாலங்கள் !

மலேசிய நாட்டின் முன்னாள் பிரதமரான கலாநிதி மஹாதீர் முஹம்மட் 1990களில் ஒரு தடவை இவ்வாறு குறிப்பிட்டார்.

'19 ஆம் நூற்றாண்டில் எவரிடம் கடற்படை இருந்ததோ அவர்கள் தான் அந்நூற்றாண்டின் பலசாலிகள். 20 ஆம் நூற்றாண்டில் எவரிடம் விமானங்கள் இருந்தனவோ அவர்கள் அந்நூற்றாண்டின் பலசாலிகளாக விளங்கினர். அந்த வகையில் 21 ஆம் நூற்றாண்டில் எவரிடம் ஊடகம் இருக்கின்றதோ அவர்கள் தான் அந்த நூற்றாண்டின் பலசாலிகளாவர்'

முன்னாள் பிரதமரான மஹாதீர் முஹம்மட் ஊடகத்தின் பலத்தையும் முக்கியத்துவத்தையும் அன்றே அடையாளம் கண்டிருந்தார் என்பதற்கு இவ்வாசகங்கள் நல்ல எடுத்துக்காட்டாகும். அதாவது இந்த 21 ஆம் நூற்றாண்டு ஆரம்பமாவதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்னரே அவர் இந்த உண்மையை அறிந்திருந்தார். அந்தளவுக்கு சக்தி மிக்கது தான் ஊடகம். அவரது எதிர்வுகூறல்படி, உலகில் பலம் மிக்க சக்தியாக வெகுஜன ஊடகங்கள் விளங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த வெகுஜன ஊடகப் பரப்பில் 'சமூக ஊடகம்' என்றொரு புதிய வடிவம் 2000 களில் தோற்றம் பெற்றதோடு முழு உலகையும் ஒரு குக்கிராமமாகவும் உருவாக்கிவிட்டது. அதுவும் மனித வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்றாக மாறியுள்ளது. பெரும்பாலானவர்களின் நேர காலம் அதில் தான் கழிகின்றன. நாளொன்றுக்கு ஒரு தடவையாவது சமூக ஊடகங்களில் உலாவாதவர்களை விரல்விட்டெண்ணி விடக்கூடியளவுக்கு நிலைமை காணப்படுகின்றது. பெரும்பாலானவர்கள் சமூக ஊடகங்களின் அடிமைகளாக இருக்கின்றனர். அந்தளவுக்கு மனிதனை​ ஆகர்ஷித்திருக்கின்றன இந்த சமூக ஊடகங்கள்.

இவ்வாறு இச்சமூக ஊடகங்கள் முக்கியத்துவம் பெற்று விளங்க, அவற்றில் என்ன தான் இருக்கின்றது என்பதை அதன் தாக்கத்தையும் செல்வாக்கையும் அறியாதவர் தான் வினவுவர்.

இன்றைய நவீன யுகத்தில் 'தகவல்' என்ற சொல் வேறு எந்தவொரு சொல்லும் பெற்றிராத முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. மனித வாழ்வுக்கு தேவையான எந்தவொரு விடயத்தையும் அறிந்து கொள்ள தகவல் என்பது இன்றியமையாத ஒன்றாக திகழுகின்றது. அந்த வகையில் தகவல்களை வழங்கும் பிரதான மார்க்கமாக வெகுஜன ஊடகங்கள் விளங்குகின்ற போதிலும் இந்த ஊடகங்களை விடவும் விரைவாகவும் வேகமாகவும் மனித வாழ்வுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ளக்கூடிய தளமாக சமூக ஊடகங்கள் காணப்படுகின்றன. அதாவது செய்திகள், ஆவணங்கள், தகவல்கள், விளம்பரங்கள், நாடகங்கள், சினிமாப் படங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் சமூக ஊடகங்கள், நேரடி ஒளி ஒலி பரப்பு செய்யப்படக்கூடிய வசதிகளை மாத்திரமல்லாமல் வெகுஜன ஊடகங்களை ஒருங்கிணைக்கும் தளங்களாகவும் உள்ளன.

அதாவது இணைய வலைத்தளங்களின் வழியாகத் தகவல்கள், கருத்துக்கள், தொழில்சார் நலன்கள் மற்றும் வெளிப்பாட்டின் பிற வடிவங்களை உருவாக்கவும் பகிரவும் உதவுவனவாக சமூக ஊடகங்கள் இருக்கின்றன. ஆனால் இச்சமூக ஊடகங்களின் தோற்றத்திற்கு முன்னர் வெகுஜன ஊடகங்கள் குறிப்பிட்ட ஒரு சிலரின் கட்டுப்பாட்டிலும் நிர்வாகத்திலும் இருந்தன. ஆன போதிலும் அக்கட்டுப்பாட்டை தகர்தெறிந்துள்ளன இந்த சமூக ஊடகங்கள். கையடக்கத் தொலைபேசி வைத்திருப்பவர் அனைவரும் ஊடகவியலாளர், தகவல் பரிமாற்றாளர், கருத்துக்களை உருவாக்குபவர், பகிர்பவர் என்ற நிலையைத் தோற்றுவித்திருக்கின்றன.

இவ்வாறு நவீன மனித வரலாற்றில் புரட்சிகர மாற்றங்களுக்கு வித்திட்டுள்ள சமூக ஊடகங்களில் நன்மைகள் இருப்பது போன்று தீமைகளும் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக தகவல் பரிமாற்றம், நிகழ்ப்படம் பதிவேற்றம், கருத்துக்கள் பரிமாற்றம், குழு உரையாடல், வேலைவாய்ப்புத் தகவல்கள், பொழுதுபோக்கு, உலக சமூகங்கள் அல்லது சர்வதேச நபர்களின் நட்புறவு, சிறந்த படைப்புகள் அனைத்தையும் சமூகத்தில் பரப்புதல் போன்றவாறான நன்மைகள் காணப்படுவது போன்று தனிநபர் தகவல் திருட்டு, சட்டவிரோதப் பதிவேற்றங்கள், தவறான பதிவுகள், அடிமையாதல், குணாதிசய மாற்றம், கலாசார கலப்பு தணிக்கை தொடர்பான பதிவுகள், இனவாத, மதவாத கருத்துக்கள், வெறுப்பு பேச்சுக்களை பரப்புதல் போன்றவாறான பல தீமைகளும் இடம்பெறவே செய்கின்றன.

ஆன போதிலும் கூட சமூக ஊடகங்களின் பயன்பாடு 2020 முதல் பெரிதும் அதிகரித்துள்ளன. அதற்கு கொவிட் 19 தொற்று பரவுதல் முக்கிய காரணமாகும்.

அந்த வகையில் இன்றைய உலக சனத்தொகையில் 57 வீதமானோர், அதாவது 4.48 பில்லியன் மக்கள் 2021 ஜுலையாகும் போது சமூக ஊடகப் பாவனையாளர்களாக இருந்தனர் என்று குறிப்பிட்டுள்ள 'டேட்டா ரீபோட்டல்' இணையதளம், இலங்கையில் 2021 ஜனவரியாகும் போது 7.90 மில்லியன் பேர் சமூக ஊடகப் பாவனையாளர்களாகக் காணப்பட்டதாகவும் இப்பாவனையாளர்களின் எண்ணிக்கை 2020-, 2021 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 1.5 மில்லியன்களால் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம் உலகிலுள்ள சமூக ஊடகங்களில் அதிகூடிய பாவனையாளர்களைக் கொண்ட சமூக ஊடகமாக 'முகநூல்' என்ற 'பேஸ்புக்' திகழ்வதாகச் சுட்டிக்காட்டியுள்ள இந்த இணையதளம், 2021 ஜூலையாகும் போது 2853 மில்லியன் பேரைப் பாவனையாளர்களைக் கொண்டிருந்த பேஸ்புக் முதலாமிடத்தையும் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ள 'யூரியூப்' என்ற சமூக ஊடகம் 2291 மில்லியன் பாவனையாளர்களையும் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ள 'வட்ஸ்அப்' என்ற சமூக ஊடகம் 2000 மில்லியன் பேரையும், நாலாமிடத்தைப் பிடித்துள்ள 'இன்ஸ்டகிராம்' என்ற சமூகம் ஊடகம் 1386 மில்லியன் பேரையும் பாவனையாளர்களாகக் கொண்டிருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இத்தரவுகளின் படி, உலகில் அதிகளவிலானோர் பயன்படுத்தும் சமூக ஊடகங்களாக பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டகிராம் என்பன விளங்குகின்றன. இந்த மூன்று சமூக ஊடகங்களும் பேஸ்புக் நிறுவன உரிமையாளரான மார்க் சுக்கர்பேர்க் (Mark Zuckerberg) என்பவருக்குரியதாகும்.

இவர் அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரைப் பிறப்பிடமாகக் கொண்டவராவார். 1984 ஆம் ஆண்டு மே மாதம்14 ஆம் திகதி பிறந்த இவர், ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருக்கும் போது இணையவழி சமூக ஊடக வலையமைப்பாக 2004 பெப்ரவரி 04 ஆம் திகதி பேஸ்புக்கை அறிமுகப்படுத்தினார். முதலில் தமது பல்கலைக்கழக நண்பர்களான எடுடாரோ சாவ்ரின், டஸ்ரின் மாஸ்கோவிட் போன்ற நண்பர்களுடன் இவ்வலையமைப்பை அவர் ஆரம்பித்தார். அதன் பின்னர் ஐவி லீக், ஸ்டேர்ன்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களும் அதனைத் தொடர்ந்து 'அப்பல்', 'மைக்ரோசொப்ட்' நிறுவனங்களின் ஊழியர்களும் இணைந்து பாவனையாளர்கள் வட்டம் விரிவடையத் தொடங்கியது. இந்தப் பின்புலத்தில் 2004 இல் 7 பேருடன் ஆரம்பமான இச்சமூக ஊடகம், 2006 இல் 150 ஊழியர்களைக் கொண்டிருந்ததோடு 2020 டிசம்பராகும் போது 58,604 பேரை முழு நேர ஊழியர்களாகக் கொண்டுள்ள பாரிய நிறுவனமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

இன்று முழு உலகிலும் ஆழ அகலமாகக் கால்பதித்துள்ள சமூக ஊடகமாக விளங்கும் பேஸ்புக், கடந்த 17 வருட காலப்பகுதிக்குள் உலகில் அதிகூடிய சமூக ஊடகப் பாவனையாளர்களை தம் பக்கம் ஈர்த்துள்ளது. அத்தோடு உலகில் அதிக செல்வாக்கு மிக்க சமூக ஊடகமாக விளங்கும் இந்த பேஸ்புக் இற்றை வரையும் 111 மொழிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தப் பின்னணியில் சமூக ஊடக வலைத்தளங்களின் முக்கியத்துவத்தை நன்குணர்ந்திருந்த பேஸ்புக் உரிமையாளரான மார்க், 2009 இல் அறிமுகமான 'வட்ஸ்அப்' சமூக வலைத்தளத்தை 2014 இலும், 2010 இல் அறிமுகமான 'இன்ஸ்டகிராம்' என்ற சமூக வலைத்தளத்தை 2012 இலும் வாங்கி தம் நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்தார்.

இவ்வாறு உலகின் விசாலமான சமூக ஊடக வலையமைப்பாக விளங்கும் பேஸ்புக் வலையமைப்பு (2021) ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி இலங்கை நேரப்படி இரவு 08.00 மணியளவில் திடீரென செயலிழந்தது. இதன் விளைவாக பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டகிராம் ஆகிய மூன்று சமூக ஊடகங்களும் முடக்கமடைந்தன. இதன் விளைவாக அவற்றின் பாவனையாளர்கள் செய்வதறியாது அங்கலாய்து திகைத்து நின்றனர். இதற்கு பாவனையாளர்களின் பதிவேற்றங்களும் கருத்துக்களும் நல்ல சான்றுகளாக உள்ளன. இச்சமூக ஊடகங்களின் செயலிழப்பு வெறும் ஆறு மணித்தியாலங்கள் தான் நீடித்தன. ஆனால் அக்காலப்குதிக்குள் மாத்திரம் 10.6 மில்லியன் பேர் இந்நிலைமை குறித்து தம் முறைப்பாடுகளைத் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் கடும் முயற்சியுடன் 06 மணித்தியாலங்களில் இவை வழமை போன்று செயற்பட தொடங்கின. 'இந்த செயலிழப்புக்கு ரவுட்டரில் ஏற்பட்ட முறைமாற்ற தொழில்நுட்ப கோளாறே காரணம்' எனக் குறிப்பிடப்பட்டதோடு பேஸ்புக் நிறுவன உரிமையார் மார்க் பாவனையாளர்களிடம் மன்னிப்பும் கோரினார்.

ஆனால் உலக பணக்காரர்களில் மூன்றாவது இடத்தில் இருந்த மார்க்கை, இச்செயலிழப்பு ஐந்தாவது இடத்திற்கு பின்தள்ளியது. அதேநேரம் அவருக்கு 06 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க பங்கு சந்தையில் பேஸ்புக்கின் மதிப்பு சரிந்ததால் அவருக்கு இந்நஷ்டம் ஏற்பட்டிருக்கின்றது. அத்தோடு விளம்பரம் மூலமான வருமானத்தை மணித்தியாலயத்திற்கு 7 கோடி ரூபா படி இழந்த இந்நிறுவனம், குறித்த 06 மணித்தியாலயங்களிலும் 42 கோடி ரூபா இழப்பையும் சந்தித்துள்ளது. ஆனால் 2019 இல் 14 மணித்தியாலயங்கள் செயலிப்பை இந்நிறுவனம் ஏற்கனவே சந்தித்திருப்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

ஆகவே சமூக ஊடகங்கள் மனித வாழ்வில் மேற்கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு, செல்வாக்கு என்பவற்றை பேஸ்புக் சமூக ஊடக வலையமைப்பின் திடீர் செயலிழப்பு தெளிவாகவே வெளிப்படுத்தின. அதனால் இன்றைய நவீன டிஜிட்டல் தகவல் தொழில்நுடப யுகத்தில் சமூக ஊடகங்கள் ஒரு பெருவெடிப்பு என்றால் அது மிகையாகாது. அதற்கு பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டகிராமின் பங்களிப்பு அளப்பரியதாகும்.

மர்லின் மரிக்கார்

Comments