'பன்டோரா பேப்பர்ஸ்' விவகாரத்தில் நடுநிலை தன்மையில் அரசாங்கம்! | தினகரன் வாரமஞ்சரி

'பன்டோரா பேப்பர்ஸ்' விவகாரத்தில் நடுநிலை தன்மையில் அரசாங்கம்!

உலக நாடுகள் பலவற்றின் இரகசிய செயற்பாடுகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் குறித்த இரகசிய ஆவணங்களின் பகிரங்க வெளியீடுகள் அவ்வப்போது உலகை பரபரப்பாக்கி வந்துள்ளன. விக்கிலீக்ஸ், பனாமா பேப்பர்ஸ் போன்றவை இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.

இந்த இரகசியத் தகவல்கள் வெளிவந்ததன் காரணமாக உலக நாடுகள் பலவற்றில் முக்கிய பிரமுகர்கள் பலரது அந்தரங்கங்கள் அம்பலத்துக்கு வந்ததுமுண்டு. சிலரது இரகசியங்கள் சில நாட்களில் அமுங்கிப் போனதுமுண்டு.

உலகில் இந்த பரபரப்பு வரிசையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான 'பன்டோரா பேப்பர்ஸ்' தகவல்கள் உலகில் உள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்களின் இரகசியத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் பெருந்தொகையான நிதியை இரகசியமான முறையில் கொடுக்கல் வாங்கல் செய்த மிக முக்கிய புள்ளிகள் பலருடைய பெயர்கள் இந்தப் பத்திரிகையின் மூலம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஊடாக 11.9 மில்லியன் இரகசிய ஆவணங்கள் வெளியுலகுக்கு கசிந்துள்ளன. புலனாய்வு ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு கடந்த ஒக்டோபர் 03 ஆம் திகதி இந்த ‘பன்டோரா’ பத்திரிகையை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள 117 நாடுகளில் அமைந்துள்ள 91 ஊடகங்களின் புலனாய்வு ஊடகவியலாளர்களுடன் இணைந்து இந்தப் பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது. இப்போது கசிந்துள்ள இந்த இரகசிய ஆவணங்களில் உலக நாடுகள் பலவற்றில் தற்பொழுது பதவியில் உள்ள சில ஜனாதிபதிகள், முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள், நாடுகளின் தலைவர்கள் உள்ளடங்கலான 35 உலகத் தலைவர்கள் அடங்குகின்றனர். அத்துடன் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 336 அரசியல்வாதிகள், 100 இற்கும் அதிகமான கோடீஸ்வரர்கள், முக்கிய பிரமுகர்கள், வணிகத் தலைவர்கள் எனப் பலருடைய பெயர்கள் அந்தத் தகவல்களில் வெளியாகியுள்ளன.

பனாமா, சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட வெளிநாடுகளில் உள்ள நிதி சேவை வழங்கும் 14 நிறுவனங்களின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இப்பத்திரிகை வெளியிடப்பட்டிருப்பதாக புலனாய்வு ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

2016ஆம் ஆண்டு 11.5 மில்லியன் இரகசிய ஆவணங்களுடன் ‘பனாமா பேப்பர்ஸ்’ வெளியிடப்பட்டிருந்தது. தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள ‘பன்டோரா பேப்பர்ஸ்’ தகவலின் அடிப்படையில் ஒவ்வொரு நாடுகளையும் சேர்ந்த பலருக்கு வெளிநாடுகளில் ஒட்டுமொத்தமாக 5.6 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் முதல் 32 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையான பணம் இருக்கலாம் என குறித்த கூட்டமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.

இரகசியத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இது பற்றிய செய்திகளே இப்போது அதிகம் பேசப்படுகின்றன. ‘பன்டோரா பேப்பர்ஸ்’ தகவல்களில் இலங்கையர்கள் இருவருடைய பெயரும் உள்ளடங்கியிருப்பதால், இந்நாட்டின் அரசியல் அரங்கத்தில் அதிகம் பேசப்படும் விடயமாக இது மாறியுள்ளது.

முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ மற்றும் அவருடைய கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோர் பற்றிய தகவல்களும் இதில் வெளியாகியுள்ளன. பன்டோரா பேப்பரில் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ, இலங்கையின் முக்கிய அரசியல் குடும்பத்தின் நெருங்கிய உறவினர் என்பதால் எதிர்க் கட்சியில் உள்ள அரசியல்வாதிகள் பலரும் இவ்விடயத்தை கையிலெடுத்து அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர்.

ஆனால் இந்த விவகாரத்தில் அரச தரப்பு எந்தவொரு பக்கமும் சாராமல் நடுநிலையிலேயே உள்ளது. ‘உறவுமுறை வேறு, அரசியல் வேறு’ என்று ஆளும் கட்சியில் அமைச்சர் ஒருவரே உறுதிபடத் தெரிவித்து விட்டார். அதாவது அரசு இந்த விவகாரத்தில் நடுநிலைமைப் போக்கையே கடைப்பிடிக்குமென்பது உறுதியாகி விட்டது.

இவ்வாறான நிலையிலேயே ‘பன்டோரா பேப்பர்ஸ்’ விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இலங்கையர்கள் குறித்து உடனடியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச ஊழல்மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய விசேட குழுவொன்று தயார்படுத்தப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், பன்டோரா பேப்பர்ஸ் உடன் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் திருக்குமார் நடேசன் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார்.

தானும், தனது மனைவியும் எவ்விதமான தவறான செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லையென்றும், தம் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் சுயாதீன விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறும் அவர் கோரியிருந்தார். சுயாதீன விசாரணைகள் மூலம் தம் மீது ஏற்படுத்தப்பட்டிருக்கும் களங்கத்தைப் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அதில் கோரிக்கை விடுத்திருந்தார்.

தானும் தனது மனைவியும் நாட்டை விட்டு வெளியேறியிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள திருக்குமார் நடேசன், இவ்வாறான பின்னணியில் கடந்த வெள்ளிக்கிழமை திருக்குமார் நடேசன் இலஞ்ச ஊழல்மோசடி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.

இது இவ்விதமிருக்க, இந்த விவகாரம் தற்போது அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. இவ்விவகாரம் குறித்து சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இன்டர்போலின் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என எதிர்க் கட்சியினர் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

ஆவணத்தில் கூறப்படுகின்ற விடயம், உண்மையாயின், அது பாரிய மோசடி என்பதுடன், அது வரலாற்று ரீதியிலான குற்றமும் ஆகும். இந்த மோசடியுடன் தொடர்புடைய அனைத்து நபர்களும், ஒரே தடவையில் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். இது இலங்கைக்கு கறுப்புப் புள்ளி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தரப்பினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ‘உறவு முறை வேறு, அரசியல் வேறு’ எனக் கூறியுள்ளார். திருமணம் செய்துள்ள திருக்குமார் நடேசன் ஊடாக கிடைக்கின்ற சொத்துக்கள் குறித்து தமக்கு எதுவும் செய்ய முடியாது என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக் காட்டியிருந்தார்.

திருக்குமார் நடேசன் நடத்தியதாகக் கூறப்படும் நிதி நிறுவனம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான ஆர்.பிரேமதாச மற்றும் சந்திரிகா பண்டார குமாரதுங்க ஆகியோரிடமே கேட்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இலங்கையின் நிலைமை இவ்வாறு இருக்க, உலகின் ஏனைய நாடுகளின் தலைவர்களும், சம்பந்தப்பட்ட தமது நாடுகளின் பிரஜைகள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணைகளை நடத்துவது பற்றி கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக பாகிஸ்தான் அரசியல்வாதிகள் சிலரின் பெயர்களும் இதில் உள்ளடங்கியிருப்பதால் அவர்கள் பற்றி விசாரணை நடத்தப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இதுபோன்று பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்துக் கவனம் செலுத்தியுள்ளனர்.

பி.ஹர்ஷன்

Comments