புலிகளின் சொத்துக்கள் எதுவும் என்னிடமில்லை | தினகரன் வாரமஞ்சரி

புலிகளின் சொத்துக்கள் எதுவும் என்னிடமில்லை

விடுதலைப் புலிகள் அமைப்பின் சொத்துகள் எதுவும் தன்னிடம் இல்லை எனவும் இறுதிப்போரின்போது தான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்ததாகவும் புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பின் பிரதானியாக கருதப்பட்ட கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள செஞ்சோலையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், இறுதி யுத்தத்துக்கு பிறகு புலிகளின்சொத்துகள் உங்கள் வசமானது என தகவல்கள் வெளியாகின. அந்த சொத்துகளுக்கு என்ன நடந்தது என ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கே.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். இறுதிப்போரின்போது நான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்தேன். எனக்கு எந்தவொரு சொத்தும் வழங்கப்படவில்லை. நாளாந்த செலவுக்கே பணம் வழங்கப்பட்டது.

அவ்வாறு சொத்துகள் இருந்திருந்தால் எமது மக்களை அழிவில் இருந்து மீட்டிருக்கலாம். அவர்கள் (புலிகள்) எவ்வாறான சொத்துக்களை விட்டுச்சென்றனர் என்பது எவருக்கும் தெரியாது. எனவே, இப்பிரச்சினைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

அத்துடன் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பு தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். ஜனாதிபதியின் தூர நோக்கு தான் இது. அதனை வரவேற்பது தமிழர்களாகிய தமது பொறுப்பு எனவும் படிப்படியாக கைகோர்த்து பயணிக்க வேண்டும் எனவும் கூறிய அவர், இந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்றார்.

Comments