மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் மாணவர்களுக்கு பாடசாலைகளிலே தடுப்பூசி | தினகரன் வாரமஞ்சரி

மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் மாணவர்களுக்கு பாடசாலைகளிலே தடுப்பூசி

ஜனாதிபதி கோட்டபாய சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கல்

பாடசாலை மாணவர்களுக்கு மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் பாடசாலை வளாகத்திலேயே தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது,

18 மற்றும் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையை - 21ஆம் திகதி வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு, அவர்கள் கல்வி கற்கும் அந்தந்தப் பாடசாலைகளிலேயே தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளேன். நேற்று முன்தினம் நடைபெற்ற கொவிட் ஒழிப்புக்கான விசேட செயலணியின் மெய்நிகர் கூட்டத்தின் போதே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதுடன் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது, அனைத்துப் பாடசாலைகளிலும்
முன்னெடுக்கப்படும் தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டமானது - வைத்தியர் ஒருவரின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும்.

பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ள மேற்படி வயதுப் பிரிவினருக்கான தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம் - சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள்
ஊடாக மேற்கொள்ளப்படும்.

இதுவரையில் - 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தல் 100 சதவீதமளவிலும் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தல், 98 சதவீதமளவிலும்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டோரில், இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தல் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன்.

12 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவர்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பதனையும் நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் காணப்படும் சிகிச்சை நிலையகங்களின் ஊடாக - இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதனையும் மாகாண
சுகாதாரப் பணிப்பாளர்கள் தெரிவித்தனர். இதேவேளை - தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை - இம்மாதம் 21ஆம் திகதி வரையில் நீடிக்கவும், கொவிட் ஒழிப்புச் செயலணி தீர்மானித்தது.

தடுப்பூசி செலுத்தலை வெற்றிகரமானதாக்க ஒத்துழைப்பு வழங்கிய சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் ஜனாதிபதி தனது
நன்றிகளையும் தெரிவித்தார்.

Comments