லயத்துக்கு வந்த எமன் | தினகரன் வாரமஞ்சரி

லயத்துக்கு வந்த எமன்

சுமார் முப்பத்தாறு நூல்களுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி சிங்கள இலக்கியத்தை வளம் பெறச் செய்தவர் எழுத்தாளர் பி.எம்.சேனரத்தின. மலையக இந்திய வம்சாவளி மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி அவர் ‘லயிமக்க அந்தரய’ என்ற நூலை எழுதினார். அதில் உள்ள இருபத்தொரு படைப்புகளில் ஒன்றாகிய ‘லெய்மட்ட ஆ மருவா’ (லயத்துக்கு வந்த எமன்) என்ற கதையின் மொழி பெயர்ப்பு இங்கே வாசகர்களுக்கு தரப்படுகிறது.

சிதம்பரம் கங்காணியை காலன் கவர்ந்த கதை இந்த சிறுகதை. வாசித்துப் பாருங்கள்.

தாம் இதுவரை செய்தவை, கூறியவை, சாதித்தவை அனைத்தையும் அசை போட்டவாறு தனது லயத்தின் முன்னால் அமர்ந்து வெற்றிலை குதப்பிக் கொண்டிருந்தார் பழனி மாமா. சிதம்பரம் கங்காணியின் லயத்திலிருந்து கீழே இறங்கி வரும் தோட்டத்து டொக்டர் அவர் கண்ணில் பட்டார்.

வைத்தியரின் முகத்தின் இறுக்கத்தையும், கவலை படர்ந்த தோற்றத்தையும் அவதானித்த பழனி மாமா, ‘சலாங்க ஐயா!’ என்று வலது கையை நெற்றியில் வைத்து மரியாதை செய்தார்.

“இந்த தடவை எப்படியாவது கங்காணியை கரை சேர்த்துடனும் துரை” என்றார்.

“இலங்கையில் உள்ள எல்லா டொக்டர்மார்களையும் அழைத்து வந்தாலும் இப்போது அவரை கரை சேர்க்க முடியாது பழனி!” என்றார் டொக்டர்.

“ஐயோ, அப்படி சொல்லாதீங்க டொக்டர் ஐயா, அவரும் என்னைப் போல வயது போன மனுசன். அதோட கல்யாணம் ஆகாத ஒரு மகளும் அவருக்கு இருக்குறா.”

“எனக்கு தெரியும் பழனி! இப்படிப்பட்ட நேரத்துல யாராலயும் உதவி செய்ய முடியாது” கூறிக்கொண்டே டொக்டர் கீழே படி இறங்கினார். பழனிமாமா சிதம்பரத்தின் லயத்துக்கு அவரை அறியாமலேயே நடக்கலானார்.

தலைவிரிகோலமாக காணப்பட்ட சிந்தாமணி சிதம்பரம் கங்காணியின் மகள். அவள் தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அழுது புலம்பினாள்.

“ஐயோ என்னோட அப்பா! இந்த உலகத்துல எனக்கு நீங்க மட்டும் தானே இருந்தீங்க! என்னெ தனியா வுட்டுட்டு போகவா போறீங்க அப்பா! ஐயோ அப்பா! நீங்க இல்லாம நான் யார இனி அப்பான்னு கூப்பிடப் போறேன்? ஐயோ கடவுளே! இனி நா(ன்) யார் கிட்ட போறது!”

இந்த காட்சியை மேலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாதவராக பழனிமாமா காம்பிறாவின் உள்ளே போய் விட்டார். இறப்பர் சீட்டொன்றின் மீது படுக்க வைக்கப்பட்டிருந்த சிதம்பரம் கங்காணியின் கழுத்து முதல் பாதங்கள் வரை கம்பளியால் மூடப்பட்டிருந்தது. கம்பளியின் உள்ளே அவரது விலா எலும்புகளின் நிழல் தெரிந்தது. முகம் வாட்டமுற்று கண்கள் குழிவிழுந்து காணப்பட்டன. மிகக் கஷ்டப்பட்டு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தார். தாடை எலும்புகளிலிருந்து தாடை விலகி விட்டது போன்று காட்சி தந்தது.

அவரது மனைவி ரதி தரையில் விழுந்து அழுது புலம்புகிறார். பழனிமாமாவைக் கண்டவுடனே விம்மி விம்மி அழுதவாறே மூக்கைச் சிந்திக் கொண்டு சேலைத் தலைப்பில் கண்களை துடைத்துக் கொள்வது இரட்டிப்பாகியது.

குளிர்ச்சியான பொழுதில் நீண்ட நித்திரை போன்று அல்லாமல் மரணம் இடி மின்னல் வேகத்துடன் வருவது போன்றதென பழனி மாமா அறிவார். அவர் சிதம்பரத்தின் மகனை பின்புறமாக அழைத்து,

“ஆறுமுகம்! ஒனக்கு சொல்ல வேண்டியது இல்லையே”

“ஆமாங்க மாமா! எனக்கு தெரியுது. அப்பாவுக்கு அவ்ளோ வயசும் இல்லியே”

“எதிர்பார்க்க முடியாதுன்னு தெரியுது தானே. நான் என்னா சொல்றேன்னு ஒனக்கு புரியும்னு நெனைக்கிறேன்!”

“ஆமாங்க மாமா! எனக்கு புரியுது!”

“தைரியமா இரு! பொம்புள புள்ளைகளப் போல ஆம்பிளைங்க நமக்கு அழ முடியாது. மத்தவங்களுக்கு எடுத்துக்காட்டா நீ இருக்கனும்! நீ இந்த குடும்பத்துல மூத்தவன். அதனால் குடும்ப பாரத்த நீ சுமக்கத்தான் வேணும்” இவ்வாறு கூறி பழனிமாமா அடுத்து செய்ய வேண்டியவை பற்றி விளக்கினார். மூன்று தேங்காய்களை உடைத்து தலைமாட்டில் வை. விளக்குள மூன்று திரிகளை நல்லா எரியவிடு! கால் மாட்டுல தேய்காயெண்ணெய் விளக்கு இரவு விடியும் வரை எரியனும். வைகுந்த அம்மானை பாடுறதுக்கு முத்து சாமிய கூட்டி வரனும்”

சில நிமிட நேரத்துக்குள் இவை அனைத்தும் நிறைவேறின. வைகுந்த அம்மானையிலிருந்து சில சுலோகங்கள் பாடும் போதே ரதி தனது மார்பில் அடித்துக் கொண்டு இங்கும் அங்குமாக ஓடி அழுது புலம்பத் தொடங்கினாள்.

ஏனைய உறவினர்களுடன் ஆறுமுகத்தைக் கண்ட ரதி அவனை கட்டித் தழுவி வீட்டுக்குள் அழைத்துக் கொண்டாள்.

“ஐயோ மகனே! அப்பாவுக்கு என்னடா நடக்கப் போவுது? பாருடா மகனே!” ரதி கதறுகிறாள்.

“அம்மா! அழ வோணாம்மா! அப்பாவோட கடைசி நேரத்துல இந்த அழுக சத்தம் எல்லாம் அவர் காதுல கேக்க கூடாதும்மா!”

“ஐயோ மகனே! அழுறதுன்னா தோட்டத்துல உள்ள எல்லாரும் இங்க வர்றமாதிரி அழ முடியும்” ரதி அழுதுகொண்டே உலறுகிறாள்.

“பழனிமாமா! இங்க வாங்க கொஞ்சம்” வீட்டுக்குள்ளிருந்த வந்த அழைப்பு காரணமாக அவர் அப்பக்கமாக போனார்.

சிதம்பரம் கங்காணியின் உயிர் ஊசலாடும் கடைசி தறுவாயில் பழனி சோகமாக அதனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“ஐயோ! நீங்க எவ்வளவு நல்ல மனுஷன். எவ்வளவோ நல்ல வேலைகள் செய்தீங்க. நாம எல்லோருமே அந்த பயணத்தை போய்த்தானாகனும். ஆனா நீங்க முந்திட்டீங்க. அதுவும் நல்லது தான்”

பழனிமாமா கூறியவை சிதம்பரத்துக்குக் கேட்டிருக்கும்.

“புள்ளைகளே! ஆறுமுகம், சிந்தாமணி, ரதி இங்க வாங்க. அப்பா கடைசி மூச்சு உடுறதுக்கு முந்தி கொஞ்சம் பால் ஊத்துங்க!”

ஆறுமுகம் சிந்தாமணியும் சில பால் துளிகளை உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சிதம்பரத்தின் வாய்க்குள் ஊற்றினர்.

சிதம்பரம் புத்துயிர் பெற்றது போன்று இரண்டு கண்களையும் அகல திறந்து விழிகளை அங்குமிங்கும் திருப்பிப் பார்த்தார். மிகவும் சிரமப்பட்டு ஒரு கையைச் சற்று உயர்த்திய சிதம்பரம், சிந்தாமணியின் கையைப் பிடித்து ஆறுமுகத்தின் கைக்குள் வைத்தார். அப்போது ஊமைப் பெண்ணாக தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் ரதியையும் விழிகளால் கவனித்தார். ஏதோ கூற முயற்சிப்பது போலிருந்தது அந்த பார்வை.

‘ரதி ஒன்னையும் புள்ளைகளையும் கடவுள் பார்ப்பாரு. பழனி என்னோட புள்ளைக ” என்று சிரமப்பட்டு கூறும்போது பேச்சு தடைப்பட்டது. திடீரென ஒளி குன்றிய அந்த விழிகள் மூடிக் கொண்டன. மூடிய கண் இமைகளுக்குள் இவ்வளவு நேரமாக தேங்கியிருந்த கண்ணீர்த் துளிகள் சில கண்ணங்கள் இரண்டின் வழியே கீழ்நோக்கி வடிந்தன.

அங்கு குழுமியிருந்த பெண்கள் பிரேதத்தைச் சுற்றி நின்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தனர். பழனிமாமாவின் கட்டளை பிரகாரம் நெருங்கிய உறவினர்கள் சிலர் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு என தாம்பூலத்தை இடித்து அதனுடன் மஞ்சள் கலந்து வாய்க்குள் இட்டு வெள்ளைத் துணியைக் கிழித்து உதடுகளை இணைத்து இறுகக் கட்டி வைத்தனர்.

அத்தோடு, தலைப்பாகையணியாத ஒருவர் உற்றார் உறவினர் சுற்றத்தாருக்கு மரண தகவல்களை அறிவிப்பதற்காக (கேதம் சொல்வதற்கு) தோட்டம் முழுதும் கால்நடையாக செல்லத் தொடங்கினார். விடியும் வரை தப்பு ஓசை தோட்டத்தையே ஒரு கலக்கு கலக்கியது. தப்புக் கலைஞர்கள் பாடும் ஒப்பாரி கேட்போர் மனதில் துயரத்தை ஏற்படுத்தியது.

சமையல் முதலிய அடுப்பங்கரைப் பணிகள் அனைத்தும் இந்த வீட்டிலும் பக்கத்து வீடுகளிலும் முற்றாக நிறுத்தப்பட்டுவிட்டன. மரண வீட்டுக்கு வருவோருக்கு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை மூலமே உபசரணை நிகழ்ந்தது. மரண வீட்டுக்கு வருவோரை வரவேற்பதற்காக பழனிமாமா உட்பட முக்கிய நபர்கள் வெளியே நின்று கொண்டிருந்தனர். துக்கம் விசாரிப்பதற்கு வருவோர் கைகளைப்பிடித்து விட்டு அறைக்குள் செல்லாயினர். பெண்கள் பித்தளைத் தட்டுகளில் அரிசி, எண்ணெய் என்பனவற்றுடன் ‘கோடி’ எனப்படும் கூரைப்புடவையுடன் வந்து கொண்டிருந்தனர்.

“இந்த பொம்புள புள்ளைக! அழுகைய நிறுத்துங்க சவத்தை தூக்குறப்போ யாரும் அழக் கூடாது” உரத்த குரலில் கட்டளை பிறப்பித்தார் பழனிமாமா.

“ஆறுமுகம்! நீ தலைப்பக்கமா புடிச்சுக்கோ. சொந்த பந்தங்கள் கால்களைப் பிடித்து பிரேதத்தை பெட்டியில் வையுங்கோ பெட்டி மூடுவதற்கு கடைசி பார்த்துக் கொள்ள வேண்டியவங்க எல்லாம் கங்காணியோட முகத்த பார்த்துக்கலாம்” பழனிமாமாவின் அறிவித்தலைத் தொடர்ந்து சிந்தாமணி பெட்டியை பிடித்துக் கொண்டு அழுதாள். ரதி அங்குமிங்குமாக ஓடி மகனைத் தேடினாள்.

“ஏம்பா நீங்க அப்பாவ கொண்டு போகவா பாக்குறீங்க. அதுக்கு எடம் குடுக்க முடியாது!” மகனைக் கண்டவுடன் கூக்குரலிட்டாள் ரதி. இந்த இடத்திலும் பழனிமாமாவின் தலையீடு அவசியமாகியது.

“ஓய், ஆறுமுகம் பெட்டிய மூடு! அம்மாவ வீட்டுக்குள்ள கூட்டிக்கிட்டு போங்க! பெட்டிய பாடையில வெச்சிக்கிட்டு சீக்கிரம் புறப்படுங்க!” பழனிமாமாவின் கட்டளை பிரகாரம் அனைத்தும் விரைவாக நடைபெற்றன.

பிரேதத்தை அடக்கம் செய்வதற்காக தோட்டத்தின் அடிவாரத்தில் உள்ள சமவெளியொன்றுக்கு கொண்டு செல்வதற்காக அனைவரும் புறப்பட்டனர்.

‘பாடை மாத்தி’ எனப்படும் சுடுகாட்டுக்கும் வீட்டுக்கும் இடையில் உள்ள முச்சந்தியில் பெண்களை திரும்பிச் செல்லுமாறு உத்தரவிட்ட பழனிமாமா பாடையை திசைமாற்றிக் கொண்டு மேலே நடக்கத் தொடங்கினார்கள்.

“சவத்துக்கு சொந்தகாரங்க முன்னால வாங்கப்பா! பெட்டிய பாடையில் இருந்து இறக்குங்க. பாபரும், டோபியும் அடுத்து செய்ய வேண்டிய வேலைகள சீக்கிரமா செய்யுங்கப்பா”

பிரேதத்தை வெளியில் எடுத்த சலவையாளர் அதன்மீது கோடித்துணிகளை போர்த்தியும், உடம்பில் இருந்த தங்கம் - வெள்ளி நகைகளையும், இடுப்பில் இருந்த வெள்ளி அர்ணாகொடியையும் கழற்றி எடுத்து விட்டு பெட்டியை மூடினார். பெட்டி குழிக்குள் இறக்கப்பட்டது. ஆறுமுகம் முதலாவது மண்ணை பெட்டியின் மீது தூவினான். அதன்பிறகு அனைவரும் தம் பங்குக்கு மண் தூவினர்.

“சரி. ஆறுமுகம் தலையை மொட்டையடிச்சுக்கோ! அதுக்கப்புறமாக உடைக்கிறதுக்கு தண்ணிக்குடத்தோட வா”

பாபர் ஆறுமுகத்தின் தலையை மொட்டையடித்தபிறகு நீர் நிரம்பிய மண்குடத்தை தோளில் தாங்கியபடி ஆறுமுகம் குழியின் அருகில் வந்தான். புதைக்குழியைச் சுற்று ஆறுமுகம் தண்ணீர்க் குடத்துடன் வலம் வந்தான். எளிமையான இறுதிக் கிரியைகள் யாவும் நிறைவுக்கு வந்தன.

சலவைத் தொழிலாளி வெள்ளை வேட்டியை பாதை ஓரத்தில் விரிக்க நடுநாயகமாக பழனிமாமாவும் முக்கிய நபர்களும் உறவினர்களும் அதன் மீது அமர்ந்தனர்.

“கட்டமொய் புடிக்கனும் எல்லாரும் இப்பிடி நெருங்கி வாங்கோ!” பழனிமாமாவின் அழைப்பின்படி அனைவரும் வந்து சில்லறையும், தாளுமாக மொய்ப் பணத்தை வேட்டிமீது போட்டனர்.

டோபி, பாபர், குழி வெட்டியவர்கள், தப்படித்தவர்கள், ஓடும் பிள்ளை ஆகிய அனைவருக்கும் செலுத்த வேண்டிய கூலி அங்கு செலுத்தப்பட்டது.

சிதம்பரம் கங்காணியின் வீட்டுக்குத் திரும்பியவர்கள் வீட்டு வாசலில் செம்பில் இருந்த நீரைத் தொட்டு தலையில் தடவியும் திருநீரை நெற்றியில் பூசிக் கொண்டும் வீட்டு விறாந்தை ஏறினர்.

மாலை சூரியன் மறையும் வேளையில் சிதம்பரம் கங்காணியின் வீட்டு தோப்பில் கூடிய உறவினர்கள் மத்தியில் நேரத்திற்கு வருகை தந்த பழனிமாமா மரியாதைகளோடு அமர்த்தப்பட்டார்.

பாஞ்சாலியோட, சம்மந்தி வீட்டுக்காரவுங்களோட குடும்பத்தாளுக எல்லாரும் உக்காருங்க. இப்போ எண்ணெய் தேய்க்கிற காரியத்தை ஆரம்பிக்கலாம்” பழனிமாமா அறிவித்தார்.

தாய்வழி தந்தைவழி மாமன்மார், மைத்துனர்மார், அமர்ந்திருந்த வரிசையில் முதலில் அமர்ந்திருந்தது ஆறுமுகம். கோவணம் தரித்து காட்சி தந்த அவன் அமர்ந்திருந்தவர்களை நாடிப் போய் உறவினர்களின் தலைகளில் எண்ணெய் தடவினான். பின்னர் அனைவரும் குளித்து முழுகி மறு ஆடைகளை அணிந்து படையல் போடப்பட்ட இடத்தை அடைந்தனர்.

சிதம்பரம் கடைசி மூச்சுவிட்ட இடத்தில் அவர் பாவித்த பொருட்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அங்கு சாதம், மீன், மரக்கறி, சாராய போத்தல் என்பன வைக்கப்பட்டிருந்தன. ரதியும், சிந்தாமணியும், ஆறுமுகமும் வெண்கல விளக்கை ஏற்றி சிதம்பரத்தை எண்ணி வணங்கினர்.

இரவு ஒன்பது மணியாகிவிட்டது. சாராயம், கோழி இறைச்சியுடனான சாப்பாடு மிக அமைதியாக பரிமாறப்பட்டது. அதன் பின்னர் தலைப்பாகை கட்டும் சம்பிரதாயம் நிகழ்ந்தது.

உறவினர்களும் மைத்துனர்மார்களும் சேர்ந்து ஆறுமுகத்தின் தலையில் தலைப்பாகைக் கட்டினர். சம்பந்திகளுக்கிடையில் இந்த தலைப்பாகைக் கட்டு நிகழ்ந்தது.

எல்லாம் முடிந்த பின்னர் பழனிமாமா பலத்த யோசனையில் ஆழ்ந்திருந்தார். வாழ்க்கையில் மரணத்தைத் தவிர்க்க முடியாது என அவரறிவார். ஆனால் கங்காணியார் விட்டு சென்றிருக்கும் சிந்தாமணியைப் பற்றிய கவலை எழுந்தது.

பி.எம்.சேனரத்ன
தமிழில்:சி.கே.முருகேசு

Comments