தமிழ்த் தலைமைகள் மனம் திறக்க வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

தமிழ்த் தலைமைகள் மனம் திறக்க வேண்டும்

முப்பெரும் தேவியரையும் சேவித்து அனுக்கிரகம் வேண்டும் நவராத்திரி விழா கடந்த வாரம் விஜயதசமியுடன் நிறைவு பெற்றது. இது தமிழர்களின் பாரம்பரிய சமய நிகழ்வு என்பதோடு பாடசாலைகள், ஊடக நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் என சகல மட்டங்களிலும் பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும் சமய விழாவுமாகும். கொவிட் தொற்று உலகெங்கும் மத அனுஷ்டானங்களும், திருவிழா, பண்டிகைகளும் இரண்டு ஆண்டுகளாக நடத்தவிடவில்லை என்பதால் இரண்டு ஆண்டுகளாக தமிழ்ப் பாடசாலைகளில் நவராத்திரி விழா கொண்டாடப்படவில்லை.

நவராத்திரி, கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் வளமான வாழ்வுக்கான, விழாவாக இருப்பதால் இந்துக்கள் மட்டுமன்றி சிங்கள மக்களும் குறிப்பாக பாரம்பரியத்தைப் பேணுகின்றவர்களும் அரசியல்வாதிகளும் இக்காலத்தில் முப்பெரும் தேவியரையும் சேவித்து வருகிறார்கள். சரஸ்வதி என்ற சொல் சிங்களத்தில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். கல்வி, அறிவு என்ற அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. செல்வத்தின் அடையாளமாக சிங்கள மக்களால் லஷ்மி பரவலாக வணங்கப்படுகிறாள். சிங்கள வர்த்தக நிறுவனங்களிலும், பயணிகள் போக்குவரத்து பேருந்துகளிலும் ஊதுவத்தி சார்த்தி வழிபடும் திருமகளாக லஷ்மி தேவியைக் காண்கிறோம்.

சமயம் என்பது எவ்வளவு விஞ்ஞானபூர்வமானது என்ற விவாதப் பொருளுக்கு அப்பால், அந் நம்பிக்கை எவ்வளவு காலமாக எவ்வளவு தூரத்துக்கு சமூகங்கள் மத்தியில் ஊடுபாவி இருக்கிறது, செழுமையானதும் பாரம்பரியம் மிக்கதுமான ஒரு இடைவிடாத தொடர்ச்சியை பேணி வருகிறது என்பதே முக்கியம் என்பதோடு, இலங்கை - இந்திய நாடுகளில் ஒரு சமூக ஒருங்கிணைப்பு சங்கிலியாகவும் நிலைத்து நிற்கிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியா பல்வேறு கலாசாரங்களையும், மொழிகளையும் கொண்ட ஒரு நாடாக விளங்குகிறது. ஆனால் இந்தியாவை ஒரு நாடாக பிணைத்து வைத்திருக்கும் முக்கியமான சில சங்கிலிகளில் இந்து மதம் முக்கியமானதாக விளங்குகிறது. இமாசலத்தில் இருந்து கன்னியாகுமரி வரை இணைப்புச் சங்கிலியாக விளங்குகிறது. இந்து மதமும் அதன் அடிநாதமான விசாலித்த கலாசார பண்புகளும் இந்த இணைப்பை இடையறாது செய்து வருகின்றன.

இதே காரியத்தை இலங்கையிலும் சைவமதம் ஆற்றக் கூடும் என்று சொல்வதை விட ஆற்றி வருகிறது என்பதே பொருத்தமானது. அதை மேலும் ஸ்திரப்படுத்த வேண்டும். மேலும் பயன்படுத்தவும் வேண்டும். ஏனெனில் பௌத்தத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையே கோட்பாட்டு ரீதியாக இமாலய வித்தியாசங்கள் இருப்பினும் கூட பௌத்தத்தின் வளர்ச்சிக்கு இந்துமதம் நிறையவே கொடையளித்திருக்கிறது என்பதோடு புத்த பெருமானை ஒரு அவதாரமாகவும் இந்துக்கள் கருதுகின்றனர். அதே சமயம் பெரும்பாலான பௌத்தர்கள் இந்து தெய்வங்களை வழிபட்டு வருகிறார்கள். சிவன், விஷ்ணு, விநாயகர், அனுமான், முருகன், முப்பெருந் தேவியர் என இந்துக் கடவுளர்களை அரசர் காலத்தில் இருந்து வழிபட்டு வருவதோடு, சத்ய சாயி பாபா, சீரடி பாபா போன்ற மகான் வழிபாட்டிலும் கணிசமானோர் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் ஒரு பகுதியை பிரித்துக் கேட்டு நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில் நிறையவே இன வெறுப்புவாதம் பேசப்பட்டதோடு ஆங்காங்கே செயற்பாட்டிலும் இருந்தது. ஆனாலும் கூட இந்த இன வெறுப்பு அல்லது ஒதுக்கல் மனப்பான்மை தமிழ் - சிங்கள மக்கள் மத்தியில் ஊடுபாவிருக்கும் இணைப்பையும் பிணைப்பையும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கவில்லை என்பதும், இறுதி யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்பார்த்து அச்சமடைந்திருந்த தமிழர் மீதான காடையர் தாக்குதல் நிகழவில்லை என்பதும் கவன ஈர்ப்புக்கானவை. 83 கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை விட சிங்களவர்களால் காப்பாற்றப்பட்ட தமிழர் தொகையே அதிகம் என்பதே உண்மை. யாழ்ப்பாணம் சென்றவர்கள் மீண்டும் தென்னிலங்கை திரும்பத் தான் செய்தார்கள், முகாம்களில் தஞ்சமடைந்தவர்கள் மீண்டும் தத்தமது தென்னிலங்கை வசிப்பிடங்களுக்கு திரும்பினார்கள். பிரபாகரன் கதை முடிந்துவிட்டது என்று தெரிந்ததும் பால்சோறு சமைத்து உண்டுவிட்டு தத்தமது வேலைகளை பார்க்க சிங்களவர்கள் கிளம்பிச் சென்று விட்டார்கள்.

இவை அனைத்தும் இலங்கையில், பிரிக்கப்படாத தாய்நாட்டில் தமிழ் மக்கள் தமக்கென ஒரு அரசியல் அதிகாரத்தை சிங்கள மக்களின் அங்கீகாரத்துடன் பெற்றுக் கொள்ளக் கூடும் என்பதற்கான வாய்ப்பான அம்சங்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த் தரப்பு தமக்கு உரிமைகள் வேண்டும் என்பதை அரசுகளிடம் தான் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அரசியல்வாதிகளினால் நடத்தப்படுவதே அரசுகள். அவர்கள் தமிழர்கள் அல்லது முஸ்லிம்களின் மீதான வெறுப்புணர்வை அல்லது இனவாதத்தை மக்கள் மத்தியில் கிளப்பி விடுவதன் மூலம் ஆட்சிகளை கைப்பற்றி வந்துள்ளார்கள். தமிழ்த் தரப்பும் சிங்களக் கட்சித் தலைவர்களுடன்தான் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்துள்ளனர். சிங்கள மக்களுடன் அல்ல.

சிங்கள மக்களுடன் தமிழ்த் தரப்பு தொடர்ச்சியான உரையாடல்களை நிகழ்த்தி வந்திருந்தால், சிங்களக் கட்சித் தலைவர்கள் செய்வது போல மகாநாயக்கர்களிடம் தமது பிரச்சினைகளை எடுத்துச் சென்றிருந்தால் அரசியல்வாதிகளின் இனவாத அரசியல் ஆயுதத்தின் கூர்மையை எப்போதோ மழுங்கடித்திருக்கலாம்.

கிளப்பி விடப்படும் ஆதாரமற்ற அச்சங்களே தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்கக் கூடாது, அவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர் என்ற எண்ணத்தை சிங்கள மக்கள் மத்தியில் விருட்சமாக வளர வைக்கிறது.

எனவே, இனியாவது தமிழ் தலைமைகள், அவை எந்தப் பக்கம் சார்ந்தோராக இருப்பினும் சரி, சாதாரண சிங்கள மக்களுடன் உரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும். முதலில் மண்ணைப் பதப்படுத்தினால்தான் விதைக்கப்படுபவை முளைவிட்டு வளரும். தமிழத் தலைமைகள் சிங்கள சிந்தனைப் பரப்பை உழுது பண்படுத்தும் உரையாடல் என்ற கலப்பையை கையிலெடுக்க வேண்டும். இதன் பேரில் தமிழ் தலைமைகள் மனம் திறக்க வேண்டும், விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்ளவும் வேண்டும்.

Comments