ஐங்குறுநூறு வரிசையில் 'பாலைவனம் ' | தினகரன் வாரமஞ்சரி

ஐங்குறுநூறு வரிசையில் 'பாலைவனம் '

பல்லாயிரம் ஆண்டு கால பழமையான இலக்கிய, இலக்கணங்களைக் கொண்ட மொழியாக தமிழ் மொழி விளங்குகிறது. அதனால் அம்மொழி நீண்ட கால இலக்கிய வரலாற்றினைக் கொண்டிருக்கிறது. இதில் முதன்மையான இலக்கிய வரலாற்றுக் காலம் சங்க காலமாகும்.

குறிஞ்சி முதல் நெய்தல் வரையான நிலங்களின் வாழ்க்கை முறையை நோக்கும் போது அவை மனித நாகரிக வளர்ச்சியில் வெவ்வேறு படிமுறைகளைக் காட்டுவதாகவே அமைகின்றன. சங்க இலக்கியங்களைக் கொண்டு பார்க்கும் போது இக்கூற்று பொருந்துகிறது. சங்க கால மக்களது வாழ்க்கையில் காணப்பட்ட போர் ஒழுக்கங்களும் காதல் ஒழுக்கங்களும் சங்க இலக்கியங்களில் தெளிவாகத் தெரிகிறது.

சங்க இலக்கிய நூற்களில் எட்டுத் தொகை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நூலாகக் கணிக்கப்படுகிறது. இதனைத் தொகுத்தவர் கூடலூர் கிழார் எனும் புலவராகும். குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என முறையே கபிலர், பேயனார், ஓதலாந் தையலர், ஓரம் போகியார், அம்மூவனார் ஆகிய புலவர்களால் எழுதப்பட்ட ஐந்திணை நூல்களும் எட்டுத் தொகையில் உள்ளடக்கம் பெறுகிறது.

இவ் ஐந்து நூல்களில் ஒன்றான குறிஞ்சி சுவைக்கு ஏற்கனவே உரைநடை விளக்கம் எழுதி வெளியீடு செய்த பன்னூலாசிரியர் ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா தற்போது ஐங்குறுநூறு வரிசையில் 'பாலைக்கு' பாலைவனம் எனும் பெயரில் உரைநடை எழுதியுள்ளார்.

பாடல்களின் விளக்கம் மிகத் தெளிவாக வாசகரைச் சென்றடையும் நோக்கிலும், ஐந்திணை நூல்களினதும் சிறப்பியல்புகளை வெளிப்படுத்துவதற்குமாக ஆரம்பத்தில் இலக்கணம் எழுதி, பின்னர் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. இது இலக்கண சொற்களை இலகுவில் அறிந்துகொள்வதற்காகவும் மொழிப் பயன்பாட்டில் அவை வருவதற்கும் துணை புரிகின்றன.

இத்தகைய இலக்கியங்களின் சிறப்பியல்புகளையும் வாழும் தன்மையையும் உரைநடை மூலம் வெளியுலகுக்கு கொண்டுவந்துள்ளார் பன்னூலாசிரியர் மௌலானா. இவரது இலக்கியத் தேடலும் முயற்சியும் பாலைவன உரைநடையாக வெளிவந்துள்ளது.

பன்னூலாசிரியர் மௌலானா அவர்களால் முதற் பதிப்பாக 2020 இல் அச்சிடப்பட்ட பாலைவனம் நூலானது 2021 ஆகஸ்ட் இல், 112 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நூலின் பாலைத்திணைப் பாடல்களைப் பாடியவர் ஓதலாந்தையார். இதில் உள்ள பத்துகள் பின்வருமாறு:-

01. செலவழுங்கிவித்த பத்து
02. செலவுப் பத்து
03. இடைச்சுரப் பத்து
04. தலைவியிரங்கு பத்து
05. இளவேனிற் பத்து
06. வரவுரைத்த பத்து
07. முன்னிலைப் பத்து
08. மகட் போக்கிய வழித் தாயிரங்கு பத்து
09. உடன் போக்கின் இடைச் சுரத்துரைத்த பத்து
10. மறுதரவுப் பத்து

என பத்து பகுதிகளிலும் உள்ள பாடல்கள் தொகுக்கப்பட்டு விளக்கத்துடன் கூடிய உரைநடை, இலகுநடையில் எழுதப்பட்டிருப்பது சிறப்பாக அமைந்துள்ளதுடன் சங்க இலக்கியத்தின்பால் ஓர் ஈர்ப்பினையும் ஏற்படுத்தியிருக்கிறது.

செலவழுங்கிவித்த பத்திலுள்ள முதலாவது பாடல் காதலையும் வீரத்தையும் சுட்டுவதாய் அமைந்துள்ளதுடன், மெல்லிடையாளான நீண்ட கருங்கூந்தலையுடைய தலைவியானவள் தலைவனது பிரிவு நினைத்து ஏங்குவதையும் மிக அற்புதமாக சித்தரிக்கிறது.

கல்லாக் கோவலர் கோலிற் றோண்டிய
ஆணிரைப் பந்தல் யானை வெளவும்
கல்லதர்க் கவலை செல்லின் மெல்லியல்
புயனெடுங் கூந்தல் புலம்பும்
வயமான் றோன்றல் வல்லா தீமே.

கோவலர் பெரும் வலிமையும் வீரமும் கொண்டவர் என்பதை வலியுறுத்தும் இப் பாடல் கடற்பாறை கொண்டு தோண்டும் நீர்ப்பந்தலை (கிணறு) கோவலர் கோல் கொண்டு தோன்டினர் எனக் குறிப்பிடுகிறது. அதிலிருந்து வெளியாகும் நீரை பசுக்கள் அருந்திச் செல்கின்றன. பக்கத்து யானைகளும் தமது தாகத்தை அதில் இலகுவில் தீர்த்துக் கொள்வதாகவும் குறிப்பிடப்படுகிறது. சங்ககால மக்களின் உடல், உளவலிமை இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது ஒரு விசேட அம்சமாகும்.

செலவுப் பத்துப் பிரிவில் உள்ள பின்வரும் பாடல் தீச்சுவாலையால் அனல் தெறிக்கும் பாலைநிலம் பகல் பொழுதில் அதிக உஷ்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்.

அதனால் யாரும் அதனருகில் செல்ல அஞ்சுவர். இப்பாலை நிலத்தினத்தருகே ஓர் இலவமரம் இருக்கிறது. இதில் எழில் மிக்க பூக்களும் மலர்ந்துள்ளன. கடும் வெயிலின் கோரத்தால் வீசும் காற்று வெப்பமடைந்து சூடாகிறது. இத்தகைய கொடிய கானலின் அகோரம்தான் என்ன?

கடுமையான சுவாலை நிறைந்த பாலையை தனது தலைவன் எவ்வாறு கடந்து சென்றானோ என ஏங்குகிறாள் தலைவி. தலைவிக்கு மிகக் கவலையாக இருந்தாலும் தலைவன் கொடிய சுரத்தைக் கடந்து போயினன். பாலையின் சுரத்தைவிட அவனின் பிரிவே அவளுக்கு பெரிதாகப்படுகிறது. ஆளுமை, வீரம், விவேகம் கொண்ட தனது தலைவனுக்கு பாலையை கடந்து செல்வது ஒன்றும் பெரிய சிரமமல்ல என்பது அவளுக்குத் தெரியும்.

தோழியே கேட்பாயாக! பிணந்திண்ணி பருந்தானது கல் மலைகள் சூழ்ந்திருக்கும் இப்பகுதியில் உயர்ந்து வட்டமிடும் அதுவோ மிகக் கொடிய தன்மையுடையது. இத்தகைய சூழலினூடாகச் சென்ற எனது தலைவன் திரும்பி வர நாளாகிறது. வழியில் அவனுக்கு யாதொரு துன்பம் நடந்ததோ தெரியவில்லை எனக் கலக்கமடைந்தார் தலைவி.

பொருள் தேடிச் சென்ற தலைவன் நீண்ட நாட்களாகியும் திரும்பிவரவில்லை. பாலையின் கொடுமை மற்றும் அதன் சூழலின் தாக்கம் என்பவற்றை நினைத்து அச்சமடையும் தலைவியானவள் தலைவனுக்கு ஏதேனும் நடந்துவிடக் கூடாதென ஆதங்கப்படுகிறாள். தோழியிடம் முறையிட்டும் மன அமைதியின்றித் தவிக்கிறாள்.

தலைவனும் தலைவியும் தமது பயணத்தில் ஒரு நெல்லி மரத்தின் கீழ் இளைப்பாறி உணவு உண்ணத் தொடங்குகின்றனர். வழிப்போக்கர்களுக்கு இம் மர நிழல் பெரும் ஆறுதலாக இருக்கும். வரி வரியான நிழலிலிருந்து நெல்லியைப் பறித்து மற்ற உணவுகளுடன் சேர்த்து பிசைந்துண்பர். அங்கிருப்போர் அடுத்தவருக்குக் கொடுத்துண்ணும் பண்புகள் நிறையப் பெற்றவர்கள்.

பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து
செங்கான் மராஅத்த வரிநிழ விருந்தோர்
யார்கோ லளியர் தாமே வார்சிறைக்
குறுங்கான் மகன்றி லன்ன
உடன்புணர் கொள்கைதக் காத லோரே.

செம்மையான நிறமுடைய மரத்தின் அடியிலுள்ள நிழலில் களிப்புடன் உட்கார்ந்து உணவு உண்ணும் பலரும் நெல்லியைப் பிசைந்துண்பதில் இன்பம் காணுகின்றனர். நீண்ட சிறகுகளையும் கட்டையான கால்களையும் உடைய மகன்றிப் புட்கள் அடுத்தவைகளோடு சேர்ந்து வாழும் தன்மை கொண்டவை. அதனைப் போலவே அங்கிருப்போரும் அன்பால் இணைந்து சேர்ந்திருப்போராய் விளங்கினர்.

இங்கு வீரரை மரவம் என்று கூறப்பட்டிருக்கிறது. பெண்ணோ இடை நுடங்கும் மாறு கொடிக்கு உவமிக்கப்பட்டுள்ளார். பெண்ணுக்கு உதவி ஆண் என்பது இங்கு குறிப்பிடப்படுகிறது. மரத்தைச் சார்வது கொடி. இங்கு இடை நுடங்கும் மாறு கொடி மரத்தைத் தழுவுகிறது. வேனிற் காலத்தில் அருமையான உணவு கிடைக்கும். இக்காலத்தில்தான் தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணமும் நடைபெற இருக்கிறது என்ற செய்தியும் வந்திருப்பது மகிழ்ச்சி தரக் கூடியதாய் அமைகிறது.

இவ்வாறு சங்ககால மக்களின் வாழ்வியலை பாலை நிலம் சார் வாழ்வோரின் நடைமுறைகளை அவர்களின் காதல் வீரம், ஏக்கம், பிரிவு, சோகம், பண்பியல்புகள் மற்றும் மகிழ்வு என்பவற்றை மிக அழகாகக் கூறி நிற்கிறது ஐங்குறுநூறு வரிசையில் பாலைவனம் என்கின்ற இந்த நூல்.

பாலைதிணை மக்களின் வாழ்வியலை அப்படியோ நம் கண் முன் கொண்டுவந்து இலக்கிய விருந்தளித்த புலவர் ஓதலாம் தையருக்கும் பாலை நூலுக்கு இலக்கிய நயத்தோடு உரைநடை எழுதி அதனை மீண்டும் உயிரோட்டம் பெறச் செய்த பன்னூலாசிரியர் மௌலானா அவர்களுக்கும் இதயபூர்வமான நன்றிகளும் வாழ்த்துகளும். இத்தகைய அரிய முயற்சிகள் தொடர்கின்ற போது தமிழ் இலக்கியத்தின் செழுமையும் வளர்ச்சியும் மேலும் அதிகரித்துச் செல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றெண்ணி புளகாங்கிதம் கொள்கின்றேன். தமிழ் அன்னையின் புகழ் இதனால் மேலும் மேலோங்கி சிறப்புற மனது விரும்பி சந்தோஷமடைகிறது.

பீ.ரீ.அஸீஸ்

Comments