ஜேர்மனியின் ஆட்சி மாற்றம் சீன, ஜேர்மன் புவிசார் பொருளாதார உறவினை நெருக்கடிக்குள்ளாக்குமா? | தினகரன் வாரமஞ்சரி

ஜேர்மனியின் ஆட்சி மாற்றம் சீன, ஜேர்மன் புவிசார் பொருளாதார உறவினை நெருக்கடிக்குள்ளாக்குமா?

அரசியல் என்பது அதிகாரத்திற்கான போட்டியாகும். அதிகார போட்டிகளும் அதிகார தலைமைகளும் மாறிக்கொண்டே உள்ளன. அதிகார தலைமைகளின் மாற்றங்களோடு உள்நாட்டு அரசியல் மட்டுமல்ல உலக அரசியலும் அதன் கொள்கைகளும் மாற்றமுறுகின்றன. ஜேர்மனியில் 16ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டிய சான்சலர் ஏஞ்சலா மெர்கல் இவ்வருடம்(2021) தனது ஓய்வை அறிவித்துள்ளார். இந்நிலையில் மெர்கலின் ஆட்சி சிறப்பை புதிய ஆட்சியாளர்களால் ஜேர்மனியில் தொடர முடியுமா என்பது சர்வதேச அரசியல் பரப்பில் பிரதான கேள்வியாகவும் தேடலாகவும் உள்ளது. இக்கட்டுரை ஐரோப்பிய ஒன்றிய – சீனா உறவில் மேர்கலின் பங்களிப்பையும் ஜேர்மனியின் புதிய ஆட்சியாளர்களால் அவரது கொள்கைகளை தொடர இயலுமா என்பதையும் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர்- 26இல் நடைபெற்ற ஜேர்மனியின் பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளின்படி பாராம்பரியமான தேர்தல் அரசியல் கலாசாரம் மாற்றமுற்றுள்ளது. இதுவரை சிறிய பங்காளி கட்சிகளாக கூட்டணிகளில் இணைந்து கொண்டிருந்த கட்சிகள் ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் நிலைக்கு வளர்ச்சியுற்றுள்ளன. குறிப்பாக சமூக ஜனநாயக கட்சி மற்றும் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் ஆகிய இரண்டு ஜேர்மனின் பெரிய கட்சிகளும் பல தசாப்தங்களாக மக்கள் வாக்குகளில் 40 சதவிகிதத்தைப் பெற்றுள்ளன. மற்றும் அவற்றுக்கிடையே வாய்ப்புகளை மாற்றியமைத்துள்ளன. 2017ஆம் ஆண்டு முதல் இரு கட்சிகளும் இணைந்தே ஆட்சியமைத்துள்ளன. எனினும் விகிதாசாரமாக சிறிய பங்காளிக் கட்சிகளாக பாரம்பரியமாக பசுமை கட்சி அல்லது சுதந்திர ஜனநாயக கட்சி ஆகியன கூட்டணிக்குள் இணைந்து கொள்வன ஆகும். செப்டம்பர் (2021) தேர்தல் இப்போது ஜேர்மனியின் பாராளுமன்றத்தின் பாரம்பரிய அமைப்பை மாற்றி விட்டது. மற்றும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நடுத்தர அளவிலான கட்சிகள் மற்றும் இரண்டு தீவிர உணர்வுடைய கட்சிகளின் துண்டு துண்டான தொகுதி நிலைகளை மாற்றியுள்ளன. இது பாரம்பரிய கூட்டணியை உருவாக்கும் எண் கணிதத்தை மாற்றியுள்ளது. கணிசமான வாக்குகளை சமூக ஜனநாயக கட்சி பெற்ற போதிலும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில் மூன்று கட்சி அரசாங்கத்தை உருவாக்கும் நிலைப்பாட்டில் உள்ளனர். புதிய மூன்று கட்சி அரசாங்கத்தில் பசுமை கட்சி மற்றும் சுதந்திர ஜனநாயக கட்சி ஆகிய இரண்டுக்கும் பலமான நிலைப்பாட்டு உத்தரவாதம் அளிக்கின்றன. ஜேர்மன் அரசியலில் ஒரு புதுமையாக முன்னர் சிறிய கட்சிகளாய் இருந்தவை தற்போது 10 -முதல் 15 சதவிகித வாக்குப் பங்கை எட்டியுள்ளன. ஜேர்மனியின் வரலாற்றில் சிறிய கட்சிகள் வலிமை நிலையில் கூட்டணி அரசியலுக்குள் நுழைகின்றன.

ஏஞ்சலா மெர்க்கலின் தலைமையிலான அரசாங்கத்தின் நிதியமைச்சராக காணப்படும் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ஜேர்மனியின் புதிய அரசாங்கத்தின் தலைவராகின்ற போதிலும், இதுவரை கூட்டணிக் கட்சியாக காணப்பட்ட மெர்கலின் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியனை விலத்திச் செல்ல உள்ளார். தேர்தல் முடிவுகளுக்கு பின் ஊடகங்களின் முன் தோன்றிய ஸ்கோல்ஸ், பசுமை மற்றும் தாராளவாதிகள் இணைந்த ஆட்சியை உருவாக்கப்போவதாகவும், கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் பின்வாங்க வேண்டிய நேரம் இதுவென்றும் ஜேர்மனியில் உள்ள மக்கள் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியனை எதிர்க்கிறார்கள் என்றும் கூறினார்.

வெற்றி பெற்ற சமூக ஜனநாயக கட்சி ஓலாஃப் ஸ்கோல்ஸ் தலைமையில், பசுமை கட்சி மற்றும் சுதந்திர ஜனநாயக கட்சி ஆகிய இரண்டு கிங்மேக்கர் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. 2017இல், ஏஞ்சலா மெர்க்கல் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் மற்றும் சமூக ஜனநாயக கட்சி இடையே பரந்துபட்ட கூட்டணியை உருவாக்க ஆறு மாதகாலங்கள் தேவைப்பட்டது. ஆயினும் தற்போது ஒரு விரைவான முடிவு விரும்பத்தக்கதாக காணப்படுகிறது. ஏனெனில் ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவின் மற்ற பகுதிகள் தொற்று நோயிலிருந்து விடுபட்டு காலநிலை இலக்குகளை சந்திப்பதில் அவசர சவாலை எதிர்கொள்கின்றன. வாக்கெடுப்புக்கு முன்னரே, சுதந்திர ஜனநாயக கட்சியின் தலைவரான கிறிஸ்டியன் லிண்ட்னர், சமூக ஜனநாயக கட்சி - சுதந்திர ஜனநாயக கட்சி – பசுமை கூட்டணிக்கு விருப்பம் தெரிவித்தார்.

ஆதலால் இக்கூட்டணி விரைவில் உருவாக்கப்படும் சாத்தியங்களே காணப்படுகின்றது. 2022ஆம் ஆண்டு ஜி-7 மாநாட்டுக்கு ஜேர்மனி தலைமை தாங்க உள்ள நிலையில் ஜேர்மனியின் புதிய தலைவர் அக்கூட்டத்தில் கலந்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இப்புதிய கூட்டணி ஜேர்மனியின் கொள்கை அணுகுமுறைகளை மீட்டமைக்க மற்றும் நிகழ்ச்சி நிரல்களை மீண்டும் உருவாக்க புதிய அரசியல் கலாசாரத்துக்கு நகர்த்தக்கூடிய வாய்ப்பை அடையாளப்படுத்துகிறது.

ஏஞ்சலா மெர்க்கல் 16 வருட பதவிக்குப் பிறகு ஓய்வு பெறுவது ஜேர்மன் அரசியலுக்கு ஒரு சகாப்த தருணம் ஆகும். உலக அரசியல் போக்கினை துல்லியமாக மதிப்பீடு செய்த மெர்கல் வளர்ந்து வரும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைத்து பயணிக்க செய்வதில் பிரதான ஐரோப்பிய ஒன்றிய தலைவராக காணப்பட்டார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஒக்டோபர்- 13 அன்று வெளிச்செல்லும் ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கலுடன் பேசினார். தலைவர்கள் தங்கள் மெய்நிகர் சந்திப்பில் 'நட்பு சூழ்நிலையில்' சீனா, ஜேர்மன் உறவுகளின் வளர்ச்சியை மதிப்பாய்வு செய்தனர். மேலும் 16 வருடங்களுக்குப் பிறகு பதவியில் இருந்து விலகுவதால் 'பழைய நண்பர் என்று கூறினார். சீனா அரசினால் பழைய நண்பர் எனும் கௌரவம் இதுவரை கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ரோ மற்றும் சீனாவிற்கு முதல் தடவையாக பயணம் செய்த அமெரிக்க ஜனாதிபதி நிக்சனுக்கு மற்றும் அவரது அரசியல் ஆலோசகர் ஹென்றி கிசிங்கருக்கும் வழங்கியிருந்தது. தற்போது அவ்வுயர் கௌரவத்தை மெர்கலுக்கு சீன அரசு வழங்கி உள்ளது. இது சீன,-ஜேர்மன் உறவில் மெர்கலின் பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மேலும், திடமான நேட்டோ கூட்டாளி ஐரோப்பா அல்லாத பயண இடங்களின் பட்டியலில் வாசிங்டன் முதலிடத்தில் இருப்பதில் ஆச்சரியமில்லை. மெர்க்கல் 14 அதிகாரபூர்வ விஜயத்தை வாசிங்டனுக்கு மேற்கொண்டுள்ள அதேவேளை சற்றே எதிர்நிலை என்னவென்றால் பெர்ஜிங்கிற்கான மெர்க்கலின் அரச உத்தியோக விஜயம் இரண்டாவது நிலையில்(11தடவை) உள்ளது. சீனாவில் தனது தனிப்பட்ட நலன்களுக்கு அப்பால், செயல்படக்கூடிய உறவுகளைப் பேணுவதில் உள்ளார்ந்த தேசிய அக்கறை கொண்ட ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை மெர்க்கல் வழிநடத்துகிறார். பெரும்பாலும் ஜேர்மனி மிகவும் மதிக்கும் அனைத்து விதிமுறைகளையும் கோட்பாடுகளையும் புறக்கணித்து செயல்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா தலைமையிலான தாராளமய ஒழுங்குக்கும் இன்னும் வரையறுக்கப்படாத சீன மாற்றுக்கும் இடையே புதிய புவிசார் பொருளாதார பிழைகள் தோன்றியுள்ளன. இந்த இக்கட்டான நிலை சீனா மற்றும் அட்லாண்டிக் மற்றும் ஐரோப்பிய பங்காளிகளுக்கு இடையேயான தெளிவற்ற சமநிலைச் சட்டமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மெர்க்கல் பொதுவாக மோதலை விட ஜேர்மனியின் பொருளாதார கட்டாயத்திற்கு முன்னுரிமை அளிக்க முனைகிறார். அவர் நடுநிலையாக இருக்க முயன்றார். குறிப்பாக அவருடைய இரண்டாவது பதவிக்காலத்தில் சிலசமயங்களில் அலட்சியமாக கூட தோன்றினார். அமைப்பு முறை மற்றும் உறுதியான சவால்கள் இரண்டின் மீதான இந்த அசாதாரண மற்றும் மௌனமான அணுகுமுறை சீனாவால் உள்நாட்டிலும் ஜேர்மனியின் கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளிடையேயும் குறிப்பாக வாசிங்டனில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

பல வெளிநாட்டு விமர்சகர்கள் பெரும்பாலும் ஜேர்மனியின் சீனக் கொள்கையின் இரண்டு அடிப்படை கூறுகளைக் கணக்கிடத் தவறிவிட்டனர்.

ஒன்று, ஏஞ்சலா மெர்கல் தனிப்பட்ட முறையில் பனிப்போர் கால சோவியத் ஒன்றிய எதிர்ப்பு அரசியல் அனுபவத்தால் பாதிக்கப்பட்டவர். முன்னாள் ஜேர்மனி சான்சலர் வில்லி பிராண்ட்டின் வெற்றிகரமான பனிப்போர் கோட்பாடு கம்யூனிஸ்ட் கிழக்கோடு நெருக்கமாக ஈடுபடுவதைக் குறிக்கிறது. மோதலை விட உடன்பாடு மற்றும் வர்த்தகம் மூலம் மாற்றத்தை பரிந்துரைக்கிறது. இந்த பாரம்பரியத்தில், மெர்க்கல் எப்போதும் சர்வதேச அழுத்தத்தை எதிர்த்தார். வர்த்தகம் மற்றும் ஈடுபாட்டின் மூலமான மாற்றத்திற்கு ஆதரவான கட்டுப்பாட்டை நிராகரித்தார்.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments