கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு

சரியாக பதினான்கு நாட்களுக்கு முன்பு, அக்டோபர் 03ல் ‘கொரோனா’ என்பதையும் தாண்டிக்கொண்டு ஒரு பெயர் உலகெங்கும் உரத்துக் கேட்டது.

அது, ‘பண்டோரா’!

பெரிய பூதமொன்று பூலோகத்திற்குள் நுழைந்த மாதிரி! ஆரவாரத்திற்குக் குறைச்சலில்லை.

என்னைப் பொறுத்தவரையில் “பட்டணத்தில் பூதம்” படமே நினைவுக்கு வந்தது. காட்சிகள் கண்களில்!

அதில் ஜாவர் சீதாராமன், “சீபூம்பா” என்று கரகரத்த குரலில் கட்டளையிட, ஒரு புளிமூட்டை ஆசாமி கூஜா ஒன்றுக்குள்ளிருந்து பூதமாகவே வெளிவருவான்! ஒரு கட்சியில் மட்டுமன்று, பல காட்சிகள்!

இந்தப் பண்டோராவும் அந்த மாதிரி ஒரு பூதந்தான்!

“பட்டணத்தில் பூதத்தில் ஒரே ஒரு ஜாவர் தான்! இந்தப் பண்டோராவில் 600 ஜாம்பவான் ஊடகவியலாளர்கள் உலகெங்கும் உள்ளோர்! (117 நாடுகள் 02 ஆண்டுகள் முயற்சி!) அவர்களது அமைப்பு"ICIJ" எனப்படுகிறது. என் தமிழில் அனைத்துலகப் புலனாய்வு ஊடகவியலாளர் கூட்டமைப்பு” என்பேன்.

“பண்டோரா” “பண்டோரா” என்று வாய்வலிக்கச் சொல்லி பீடா சப்பிக் கொண்டிருக்கிறோமே, இந்தப் ‘பண்டோரா’ வின் அர்த்தத்தை அறிய ஆசைப்பட்டீர்களா? அதைத் தெரிய ஆர்வம் காட்டினீர்களா?

கிரேக்க நாட்டுப் புராணக்கதைகளை, இதிகாசங்களை அறிந்திருந்தால் இந்தப் ‘பண்டோரா’வை எளிதில் தெரிந்திருப்பீர்கள்.

“உலகின் முதல் பெண் தெய்வம் பண்டோரா” என்று சொல்வது கிரேக்கப் புராணம்! அவர்களது ஐதீகக்கதை.

“கடவுளர்களின் கடவுள்’ எனக்கிரேக்கர்கள் வர்ணித்த ‘சியூஸ்’ என்ற கடவுள், ‘பண்ரோரா! என்றவளுக்கு ஒரு ஜாடியைப் பரிசாகக் கொடுத்து “இதை நீ எப்போதுமே திறக்கக் கூடாது” என்று உத்தரவிட்டாராம்!

அர்த்தம் ‘கிர்த்தம்’ ஒன்றுமே இல்லாத உத்தரவு!

ஜாடியைக் கொடுத்து விட்டு “திறக்காதே” என்றால்...? சிரிக்கவே வேண்டும்.

அந்தப் பண்டோராப் பெண்ணோ ஆவலை அடக்க முடியாதவளாய் திறந்தாள்! அடைப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்த அனைத்துத் “தீமைகளும்” தப்பினோம், பிழைத்தோம் என்று ஒவ்வொரு திக்குகளிலும் பரவி உலகை வியாபித்துக் கொண்டனவாம்!

எனக்கு மறுபடியும் ஜாவர் சீதாராமனின் “சீ பூம்பா”வும் ‘பட்டணத்தில் பூதம்’ படமுமே நினைவில் நிழலாட்டம்!

117 நாடுகளின் 600க்கும் மேற்பட்ட ஊடக ஜாம்பவான்களும் ஒரு கோடியே இருபது லட்சம் ஆவணங்களையும் சேகரித்து.

“பண்டோரா பேப்பர்ஸ்” எனச் சரியாகவே பெயரிட்டிருப்பதாகவே தோன்றுகிறது.

அந்தப் ‘பண்டோரா’ 91 நாடுகளைச் சேர்ந்த பலரின் சொத்து விவரங்கள், முறைகேடான நிதி முதலீடுகள் முதலியவற்றை உலகமக்களுக்கு வழங்கி இருக்கிறாள்.

அவற்றை அலசுவது இந்தப் பேனைக்கு ஆகாது.

உண்மை, பொய் என்பதைக் கால மகளே கண்டறிந்து தீர்ப்பளிப்பாள். நாம் கசப்பை விழுங்கிவிட்டு கம்மென்று இருப்போமே!

இனிப்பு

இலக்கியம்சார் ஆர்வலர்களுக்கு நல்ல இனிப்பு! அதே நேரத்தில் இன்ப அதிர்ச்சி!

யார் அய்யா இந்த அப்துல் ரசாக்?

சட்டென்று ‘மேமன்கவி’ யார் நினைவில் வந்து நிழலாடுகிறார்! அவர் இயற்பெயர் அப்துல் ரசாக் தான்!

எங்கேயோ ஓர் ஆபிரிக்கப் பிரதேசத்தில் தான் சானியாவில் பிறந்த மனிதர் இப்போது பட்டொளி வீசி பறக்கிறார் படைப்புப்பங்களிப்புக்காக.

இருபத்தொரு வயதிலிருந்து எழுதி வருகிறாராம். பல நாவல்களை எழுதி இருக்கிறாராம். வளைகுடா நாடுகளில் அகதிகளாக அல்லல்படுவோம் துயரங்களை நாவலாக வழங்கியதற்கு இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு. கொலனி ஆதிக்கம் குறித்து சமரசமற்ற வகையில் பேனை பிடித்ததற்காகவும் விருது பெற்றிருக்கிறாராம்.

மேலே உள்ள பந்தியில் “ராம்”. “ராம்” என்று பல ‘ராம்’கள் போட்டியிருப்பதற்கான காரணம் இத்தனை வயது கடந்தும் என் போன்றவர்கள் ஒரு சிறு துளியேனும் அப்துல் ரசாக் என்ற படைப்பாளியைத் தெரியாமல் போயிருக்கிறோம். வெட்கப்பட வேண்டிய விசயம்.

“அகதிகள்” என்ற வார்த்தைக்கும் நம்மவர்களுக்கும் அந்நியோன்யம் அளவு கடந்தது. அப்படியும் கூட இவர் படைப்பை அறிந்து எம் அன்னை மொழியல் அளிக்கத் தவறிப்போனோம். குறைந்த பட்சம் பெயரைத் தெரியாமலும் போனோம்.

எவ்வாறாயினும் சரியே, அயலகத் தமிழகத்திலும், அலைகடலுக்கு அப்பால் பல நாடுகளிலும் உள்ள எமது சொந்தங்கள் இந்த முஸ்லிம் எழுத்தாளரை இறுகத் தழுவி பாராட்டுகளை அள்ளிக் கொட்டவேண்டும்.

தற்சமயம் இவர் பிரிட்டனில் (லண்டன்) வாழ்க்கை. எங்கள் வீட்டு மருத்துவ நிபுண மகளாருக்கும் அங்கேயே வசிப்பு. அவரோ நானோ இலங்கை இலக்கிய ஆர்வலர்களின் பிரதிநிதியாக நேர்கண்டு பூச்செண்டு வழங்கி வாழ்த்தும் நாள் தூரத்திலில்லை.

அனைத்தும் அவன் எண்ணப்படியும் திட்டப்படியும்...

கசப்பு

பாருங்கள் இதை கடந்த ஆகஸ்ட் 01 ந்திகதி ‘க...பும் இனி....பும்’ பக்கம் பத்திரப்படுத்தி வைத்திருந்தால் புரட்டுங்கள். பரவாயில்லை நானே சில பந்திகளை மறுபிரசுரம் செய்கின்றேன்.

ஒரு பந்தியில் இப்படி:

“நமதருமை தேசத்தின் கண்’ (இப்போது சாகித்ய ரத்னா’) அதி உன்னத திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் பலகாலங்கள் புரிந்த பணியை இவர் கிண்ணியாப் பிரதேசத்திலிருந்து தொடர்கிறார்.

முதலில் அவரை மனதாரப் பாராட்டி விடுகிறேன் தயங்காமல் ஏற்றிடுங்கள் பி.ரீ. அஸீஸ்!

இந்த மனிதர், படைப்பாளிகளின் நூல்களைத்தானே வலுக்கட்டாயமாகப் பெற்று வார வெளியீடுகளில் இடம் பிடித்து ஒரு நல்ல திறனாய்வைச் செய்கிறார். அப்பணியின் வழியே, வாசிக்கும் பழக்கம் உடையோர் அந்த நூலைப் பெற ஆர்வப்பட்டு விடுவர்.

இதற்குப் பிறகே இருக்கிறது சங்கதி! நூலை எப்படிப் பெறுவது? விலை என்ன? வெளியீட்டகம் எது? விலாசம் என்ன? தொ.பே எண்?

“அஸீஸின் திறனாய்வுப்பகுதியில் இவையெல்லாம் எதிர்பார்க்க இயலாது. கட்டாயமாக இவர் போன்றோர், பொறுப்புணர்வுடன் முழு விவரங்களையும் நிறைவேற்றல் அவசியம்”

இப்படி, சரியாக இரண்டரை மாதங்களுக்கு முன் இதே பத்தியில் பதித்து வேண்டுகோள் விடுக்க,

அந்தக் காலபூஷணம் அஸீஸ் கடந்த வாரத்தில் செய்திருக்கிற காரியம் மிகவும் கவலையைத் தருகிறது.

சிற்றிதமிழ் ஒன்றைத் திறனாய்வு செய்து உங்கள் அபிமான வாரமஞ்சரி 27ஆம் பக்கத்தில் ஆஹா ஓஹோவெனப் புகழ்மாலை சூட்டி படிக்க படு படு ஆர்வத்தைத் தூண்டி விட்டு, இறுதிப் பந்தியில், “நல்ல படிப்பினை தரக் கூடிய கவிதைகள், பொது விடயங்கள் பலவற்றையும் தாங்கி வெளியாகியிருக்கும் "நீங்களும் எழுதலாம்' கவிதை இதழ் வாசகர்களின் ஆதரவை மென்மேலும் பெற்று மேலோங்க வேண்டும்” என முடித்தும் உள்ளார்.

ரொம்பச் சிறப்பான எழுத்து ஆனால், சிற்றிதழைப் பெற்றுக் கொள்ளும் விவரத்தை (அதாவது, தொடர்பு முகவரி, பதிப்பகத் தகவல் விலை விவரம் எதுவுமே தெரியாமல் இலக்கிய ஆர்வலர்கள் ஆதரவு வழங்குவது எப்படி? எப்படி?

அவர் தன் திறனாய்வுப் பகுதியில் வழக்கமாகச் செய்யும் இருட்டடிப்பையே இப்பொழுதும் செய்திருக்கிறார்.

ஒருவேளை, நான் விடுத்த வேண்டுகோளை மனதில் புதைத்து வைத்துக் கொண்டு “நீ என்ன எனக்கு வேண்டுகோள் விடுப்பது” நான் என்ன செய்வது?” என்று குரோதம் காட்டி இந்தச் சிற்றிதழுக்கும் வழங்கவில்லையோ என ஊகிக்கிறேன்.

நல்லது நல்லது நானே அந்நற்காரியத்தைச் செய்து விடுகிறேனே!

எஸ். ஆர். தனபாலசிங்கம், ஆசிரியர், நீங்களும் எழுதலாம் இருமாதக் கவிதை ஏடு,

43/4, சணல் லேன், திருகோணமலை, e.mail:[email protected] 0778812912

இனிப்பு

மரணித்த ஒருவரது உடலை எரித்திடும் பணியைச் செய்பவர் நூறு விழுக்காடு ஆண் தான்! “வெட்டியான்” என்று பெயர். பெண்பால் வார்த்தை இல்லை.

இதிகாச காலந்தொட்டு இடுகாடுகளில், அல்லது சுடுகாடுகளில் பெண்களுக்கு அனுமதியை தமிழரோ முஸ்லிம்களோ வழங்கவில்லை. ஆகவே ‘வெட்டியான்’ ஆணுக்குரிய தனிப்பெயர்! எதிர் கிடையாது.

இப்போ காலம் மாறிப்போச்சு!

தமிழக மண்ணை மிதித்தவர்களுக்கு திருச்சி தண்ணீர் பட்டபாடு! திருச்சி ஜங்சனில் தொடருந்து பேருந்து நிலையம் எல்லாம் உண்டு. கண்ணை மூடிக் கொண்டு “எடமலைப்பட்டிப் புதூர்” பெயர்ப்பலகை கொண்டிருக்கும் வாகனத்தில் ஏறினால் கோரை ஆற்றங்கரை மயானபூமி அருகே நிறுத்துவார்கள்.

அங்கே முதலில் கண்ணில்படும் ஆசாமி ஒரு மாரியாயி! அகவை அறுபது

“என்னாங்க அய்யா... நான் தான் இங்கே வெட்டியான்! எங்க வீட்டு ஆளை எரிக்க நான்தான் இங்கே இருக்கேனுங்க. சட்டுபுட்டுன்னு காரியத்தை முடிச்சிடுவேனுங்க” என்பார்.

பயங்கர அதிர்ச்சி அலைகளுடன் மேலும் பேச்சு கொடுத்தால்.

“என் புருசன் வேலையைத் தான் அவர் மாண்ட பொறகு பதினேழு வருசமா செஞ்சிட்டு வர்றேன். எங்க குடும்ப வயித்தைக் கழுக வேற வழி கிடைக்கல்லேங்க! எப்போ இந்த வேலையிலையும் போட்டியாப் போச்சுங்க. திருச்சி முனிசிப்பாலிட்டி என்னை வச்சிருக்கிறதே பெரிய காரியங்க!”

கேட்பவர்கள் நிச்சயம் கண் கலங்குவார்கள்.

இந்த மூதாட்டி குறித்து பிரபல ‘தினத்தந்தி்’ பெட்டிச் செய்தியாக ஒன்றைத் தந்திருக்கிறது. அதை அப்படியே வெட்டி ஓட்டி அபிமானிகளுக்கு வழங்குகிறேன்.!

எனது தனி அடிக்குறிப்பு ஒன்று, இந்த மூதாட்டியை திருச்சி வட்டார மக்கள் அழகிய பெயரொன்றால் அழைக்கிறார்கள் “பிதாமகள் என்று! வெட்டியான், வெட்டியான் என்றெல்லாம் சொல்லமாட்டார்கள்.

Comments