எல்லாம் அவன் செயலே! | தினகரன் வாரமஞ்சரி

எல்லாம் அவன் செயலே!

வசந்தத்தின் தொடக்கமென வையகத்தோர் வாழ்த்துரைக்கும் ரபீயுல் அவ்வல் திங்கள் பன்னிரெண்டாம் நாள். ஆமாம் இது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினம். இந்த திருநாளை பெரு விழாவாய் கொண்டாடிக் கொண்டிருந்தனர் அந்த ஊர் மக்கள். தெருவெங்கும் ஜோடனைகள், பட்டொளி வீசும் பசுங் கொடிகள் என அவ்வூரே விழாக் கோலம் பூண்டிருந்தது. அவ்வெழில் கிராமத்தின் மத்தியிலே அமைந்திருக்கும் பரந்த வெளியிலே ஆண்களும்,பெண்களும் எந்த விதமான வேறுபாடுகளும் இன்றி முண்டியடித்துக் கொண்டிருந்தனர். இந்த மக்கள் கூட்டத்திற்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தோரணமாய் காட்சியளிக்கும் மேடை. டாம்பீகமான அந்த மேடையிலே பெரும் புள்ளிகள் சிலர் அகங்காரமாய் வீட்டிருந்தனர். ஒரு சுன்னத்துக்காய் பல பர்ளுகளை தியாகம் செய்து விட்ட அவ்வூர் தியாகிகள் மீலாத் விழா என்ற பெயரில் அனாச்சாரங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர்.

அங்கும் இங்கும் சலசலத்து கொண்டிருந்த கூட்டத்திற்கு மத்தியிலே அறிவிப்பாளரின் குரல் கம்பீரமாய் ஒலிக்கிறது. 'அடுத்ததாக இவ்விழாவின் பிரதம அதிதியும், எங்கள் கிராமத்தின் முதலாவது வைத்தியருமான டாக்டர் ரமீஸ் உங்கள் முன் உரை நிகழ்த்துவார்."

இவ்வறிப்பு ஒலித்ததும் சபையில் ஓரே அமைதி. அக்கிராமத்தின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான காசீம் முதலாளியின் ஓரே மகன் டாக்டர் ரமீஸ் என்ன பேசப் போகிறார்? என்ற ஆர்வத்தில் மக்களின் பார்வைகள் ரமீஸின் வதனத்தை ஆக்ரமித்தன. ஒரு டாக்டரின் பாணியில் மேற்கத்திய ஸ்டைலில் எழுந்து வந்த டாக்டர் ரமீஸ் ஒலிவாங்கிக்கு முன் தன் உரையை தொடங்குகிறார்.

'பெரியோர்களே! தாய்மார்களே! சகோதர, சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் என் இனிய ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும். செம்மல் நபி பிறந்த இந்நாளில் சிறப்பு விழாக் காணும் இத்தருணத்தில் இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள உரிமைகள் பற்றி பேசலாம் என நினைக்கிறேன்.

எனதன்புக்குரியவர்களே! இற்றைக்கு பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்னே அரேபிய தீபகற்பத்திலே அறியாமை என்னும் அரக்கன் அரியணை ஏறி அட்டகாசம் புரிந்து கொண்டிருந்தான். அன்று பெண்கள் பேய்களாகக் கருதப்பட்டார்கள். அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. பெண் சிசுக்கள் உயிருடன் புதைக்கப்பட்டன. விரும்பிய போது விரும்பிய பெண்ணை மணந்தார்கள். விரும்பாத போது அவர்களை ஒதுக்கி வைத்தார்கள். ஓரே நேரத்தில் பல பெண்களை ஆசை நாயகிகளாக வைத்து கொண்டு அட்டகாசம் புரிந்தார்கள்.

இந்நிலையிலேதான் பெருமானார் (ஸல்) அவர்கள் பெண்ணினத்தின் பரிதாப நிலைகண்டு வருந்தியதோடு, பெண் உரிமைக்காக குரல் கொடுத்தார்கள். அத்தோடு பலதரப்பட்ட உரிமைகளை அவர்களுக்கு பெற்றும் கொடுத்தார்கள். 'தாயின் பாதத்தடியிலேதான் பிள்ளையின் சுவர்க்கம் இருக்கிறது" எனச் சொல்லி பெண்ணினத்தின் பெருமைகளை உலகறியச் செய்தார்கள். கல்வி கற்கும் உரிமை, விரும்பியவரை மணக்கும் உரிமை, தனக்கு ஒவ்வாத கணவனை விட்டு விலகும் உரிமை இன்னும் பேச்சுரிமை, எழுத்துரிமை. சொத்துரிமை, வாக்குரிமை, மஹர் பெறும் உரிமை என அனைத்து உரிமைகளையும் பெண்களுக்கு வழங்கினார்கள்.

ஆனால் இன்று நம்மிடையே நடப்பதென்ன? பெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய உரிமைகள் எல்லாம் சூறையாடப்படுகின்றன. பெண்கள் மிகவும் மோசமாக நடாத்தப் படுகிறார்கள். மஹர் கொடுத்து மணம் முடிக்க வேண்டிய மங்கையரிடம் இலட்சங்கள் என்றும் வீடு என்றும், காணி என்றும், வாகனம் என்றும் கேட்டு வதைக்கிறார்கள். இதனால் எத்தனையோ ஏழைப் பெண்கள் வழி தவறி போகிறார்கள். இதற்கெல்லாம் நாமனைவரும் பதில் சொல்லியாக வேண்டும். இஸ்லாம் சீதனம் வாங்குவதை எதிர்க்கிறது. ஆனால் எமது வாலிபர்களும், அவர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களும் சீதனத்துக்காக அலைகிறார்கள். இதனால் பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது.

இந்நிலை இனியும் நீடிக்கக் கூடாது. இதற்கு இன்றே நாம் சாவுமணி அடிக்க வேண்டும். நாம் அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் கட்டுப்பட்டு வாழ வேண்டும். பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளை வழங்கி அவர்களை கண் போன்று பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் எமது சமூகம் தலை நிமிர்ந்து வாழும். வாழ்க இஸ்லாம், வளர்க இஸ்லாம் அனைவருக்கும் நன்றி வஸ்ஸலாம்."

டாக்டர் ரமீஸின் உரை நிறைவு பெறுகிறது. சபையில் பலத்த கரகோசம். 'இந்த காலத்தில் இப்படி ஒரு டாக்டரா?" என பலரும் தமக்குள் வியந்து கொண்டனர். ரமீஸ் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தமுள்ளதாகவே இருந்தது. இதனால் மக்கள் திரண்டிருந்த அக்கூட்டத்தில் ஒரு இனம் புரியாத அமைதி. அந்த அமைதிக்குள்ளும் இரு கண்கள் மாத்திரம் ரமீஸையே உற்று நோக்கிக் கொண்டிருந்தன.

'என்ன மச்சான்ர பேச்சில அப்பிடியே மயங்கிட்டியோ" தன் தோழியின் குரல் கேட்டு பார்வையை திருப்பிய ரஸானா 'ச்சீ போடி" என்று செல்லமாக முகத்தை தாழ்த்திக் கொள்கிறாள்.

'உனக்கென்னடி நீ கொடுத்து வச்சவள். இந்த காலத்துல இப்பிடியொரு மாப்புள கிடைக்கிறதுன்னா சும்மாவா?" இது இன்னொருத்தியின் குரல். இப்படி ஒருவர் மாறி ஒருவராக ரஸானாவை வாட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். வெளியில் இதையெல்லாம் விரும்பாதவளைப் போல் காட்டிக் கொண்டாலும் மனதுக்குள் பெருமைப்பட்டுக் கொண்டாள் ரஸானா. தனது எதிர்கால கணவனின் பேச்சும்,மார்க்கப்பற்றும், பெண்களுக்காக குரல் கொடுத்த விதமும் அவளை வெகுவாக பாதித்திருந்தது. விழா முடிந்து செல்லும் ஒவ்வொருவரும் ரமீஸின் பேச்சைப் பற்றியே கதைத்துக் கொண்டு செல்வதைக் கேட்கும் போது ரஸானாவுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவளின் உள்ளம் இன்பத்தில் திளைத்தது. ரமீஸின் உரைதான் அவள் செவிகளில் எதிரொலித்து கொண்டிருந்தது.

இவ்வளவு சந்தோசத்தில் தன்னையே மறந்திருக்கும் இந்த ரஸானாவுக்கும், ரமீஸூக்கும் என்ன உறவு? ஆமாம் இவள்தான் ரமீஸ் டாக்டரின் ஓரே மதினி. அதாவது காசீம் முதலாளியின் ஓரே தங்கையான சாபிலாவின் செல்வப் புதல்விதான் இந்த ரஸானா. இவள் நன்றாகப் படித்தவள், பண்பானவள், அழகானவள் எல்லாவற்றையும் விட மார்க்கப் பற்றுடையவள். இவ்வளவு பாக்கியங்களை எல்லாம் ரஸானாவுக்கு அள்ளி வழங்கிய இறைவன் பணத்தை மாத்திரம் கொடுக்கவில்லை. அவளின் தந்தை பழீல் கூலிவேலை செய்யும் ஒரு சாதாரண தொழிலாளி. அவன் பெறும் சொற்ப வருமானத்திலேயே அந்த குடும்ப வண்டி ஓடிக் கொண்டிருந்தது. வறுமைக்குள் வாழ்ந்தாலும் வீட்டுக்குள் கல்யாண வயதில் ஒரு பெண் இருக்கிறாளே என்ற வருத்தம் பழீலுக்கோ, சாபிலாவுக்கோ இருக்கவில்லை.

ஏனெனில் ரஸானா பிறந்த போதே அவளை தன் மகன் ரமீஸூக்கே திருமணம் முடித்து வைப்பதாக காசீம் முதலாளி வாக்களித்திருந்தார். ரமீஸூக்கு பொருத்தமாக ரஸானா என்று அவளுக்கு பெயர் சூட்டியவரே இந்த காசீம் முதலாளிதான். இது இந்த இரு குடும்பங்களுக்கு மாத்திரமல்ல முழு ஊருக்குமே தெரியும். அதனால் ஊரிலுள்ள அனைவரும் ரமீஸ் - ரஸானா இருவரையும் கணவன் மனைவியாகவே பார்ப்பதுண்டு. வேருன்றிப் போன இந்த உறவும், ரமீஸின் புரட்சிகரமான பேச்சும் கூடவே கலந்திருந்த மார்க்கப்பற்றும் ரஸானாவின் கனவுகளை அதிகரித்துக் கொண்டே சென்றன.

அதுவரை சலசலத்துக் கொண்டிருந்த அந்த சின்ன கிராமம் அப்படியே ஓய்ந்து போனது.மேடை போட்டு இஸ்லாம் பேசிய மக்கள் பாங்கொலி கேட்டும் எழும்பாதவர்களாய் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். ஆனால் இரவு முழுக்க உறக்கமின்றி தவித்துக் கொண்டிருந்த ரஸானா அதிகாலையிலே விழித்துக் கொள்கிறாள். சுபஹ் தொழுகையை முடித்து விட்டு, சமயலறை பக்கம் போனவளை தனது தாயின் குரல் அப்படியே தடுத்து நிறுத்தியது. சுவரோடு காதுகளை வைத்து ஒற்று கேட்கிறாள்.

'இஞ்ச பாருங்க நம்ம ரஸானாக்கும் வயசாகிட்டே போகுது. அதனால நானாவோட பேசி ரமீஸ்,-ரஸானா கல்யாணத்த சுருக்கா முடிச்சு போடனும்."

'எப்பிடி சாபிலா இப்ப கையில ஒரு சதம் காசில்ல. எதுவுமே இல்லாம உங்க நானாக்கிட்ட கல்யாணத்தப் பத்தி எப்பிடி பேசுறது?"

'என்ன நீங்க சுத்த பைத்தியக் காரத்தனமா பேசுறீங்க. நானா அப்பிடி எங்கள்ட எதயும் எதிர் பார்க்க மாட்டாரு. அப்படி அவர்தான் கேட்டாலும் ரமீஸ் மகன் அதுக்கு ஒருக்காலும் சம்மதிக்க மாட்டாரு. நேத்து மேடையில அவரு பேசினத கேட்டீங்கதானே?"

'என்னதான் இருந்தாலும் நாங்க பொண்ண பெத்தவங்க பெத்த பொண்ண ஒண்டும் இல்லாம கொடுக்குறத நான் விரும்பயில்ல. இந்த வீட்டயும் காணியையும் தவிர எங்ககிட்ட எதுவுமே இல்ல. அங்கால இங்கால புரட்டி கொஞ்சம் நகையாச்சும் கொடுக்கணும். அதனால கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்க சாபிலா"

பழீலின் கன்னத்தில் விழுந்த கண்ணீரை தோளில் போட்டிருந்த துண்டினால் துடைத்துக் கொள்கிறார். சாபிலாவும் எதையும் பேச முடியாமல் தனக்குள்ளேயே விம்முகிறாள். இனியும் தனது பெற்றோரை வேதனைப் படுத்தக் கூடாது என நினைத்த ரஸானா ஒன்றும் தெரியாதவளைப் போல் சமயலறைக்குள் நுழைகிறாள். எதையுமே மகளிடம் காட்டிக் கொள்ளக் கூடாது என நினைத்த பழீலும் 'ஆ மகள் இன்னிக்கி உங்க கையால கொஞ்சம் தேத்தண்ணி ஊத்துங்க" என்கிறார். சற்று நேரத்தில் அங்கு எதுவுமே நடக்கவில்லை என்பதைப் போல் அவர்களை சிரிப்பும், பேச்சும் ஆட்கொண்டு விட்டது. தமது குட்டி குடும்பத்தை எண்ணி ஒவ்வொருவரும் மனதால் பெருமைப்பட்டு கொண்டனர்.

மாதங்கள் பல உருண்டோடின. பழீல் பிரயாசைப்பட்டு தனது மகளுக்காக இரவு பகலாக உழைத்துக் கொண்டிருந்தார். சாபிலாவும் கணவனின் உழைப்பில் சிக்கனமாக வாழ்ந்து ஒரு தொகைப் பணத்தை சேர்த்துக் கொண்டாள். இப்போது கல்யாண பேச்சை எடுக்கலாம் என்ற நிலை உருவாகிறது. பழீலும், சாபிலாவும் இன்பக் களிப்பில் தம்மையே மறந்திருந்தனர்.

மகிழ்ச்சியோடு சில நாட்கள் கழிந்தன. அன்றொரு நாள் ஞாயிற்றுக் கிழமை. மூவரும் சந்தோசமாக உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டு முற்றத்தில் அழகான புதிய கார் ஒன்று வந்து நிற்கிறது. அனைவரும் ஆச்சரியத்தோடு நோக்கிக் கொண்டிருக்க காசீம் முதலாளியும். டாக்டர் ரமீஸூம் வந்து இறங்குகிறார்கள். ரஸானா ஓடி வந்து கதவுக்கு பின்னால் ஒழிந்து கொள்கிறாள். பழீலக்கு என்ன பேசுவதென்றே புரிய வில்லை. சாபிலாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கல்யாண பேச்சுக்காகத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பது அவளுக்குத் தெரியும். அதனால்தான் அவளுக்கு காலும் ஓட வில்லை,கையும் ஓடவில்லை. என்றாலும் தன்னை ஒருவாறாக சுதாகரித்துக் கொண்டவளாய்

'வாங்க நானா வாங்க. இப்பிடி இருங்க நானா. இங்கால வாங்க மகன்"

'என்ன தங்கச்சி சுகமா இருக்கிறயா? ஓன்ன அந்த பக்கம் காணவே இல்ல. எங்க மச்சான், மகள் ரஸானா ஒருத்தரயும் காணல்ல"

'எல்லாரும் உள்ள இருக்காங்க நானா. நாங்க ரெண்டு பேரும் அங்க வரத்தான் இருந்தம். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க. யே நானா மதினிய கூட்டிட்டு வரல்ல"

'அவக்கு எங்கமா நேரம். லேசில அவ வூட்டவுட்டு வெளிய எரங்க மாட்டா அதனாலதான் நாங்க ரெண்டு பேரும் வந்தம்."

காசீம் முதலாளியும், சாபிலாவும் தன்னை மறந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். பழீல் தனது சேர்ட்டின் பொத்தான்களை போட்ட வண்ணம் கூனிக்குறுகியபடி ரூமுக்குள் இருந்து வெளியே வருகிறார்.

'ஆ என்ன மச்சான் ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னிக்கித்தான் தங்கச்சிய பார்க்க தோணிச்சா?"

'என்ன மச்சான் செய்ய தலைக்கு மேல வேல. இன்னைக்காச்சும் வரக் கிடச்சது பெரிய விஷயம்"

இப்படியாக ஒவ்வொருவரும் சந்தோசத்தோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். ரஸானா சமயலறைக்குள் சென்று தேநீர் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தாள். ஒருகணம் அமைதி நிலவுகிறது. அடுத்து யாரு பேசுவது, எதை பேசுவது என்று யாருக்கும் புரியவில்லை.

காசீம் முதலாளியே மீண்டும் தொடங்கினார். 'ஆ ! தங்கச்சி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்மா. அதாவது நம்ம ரமீஸ் இன்னும் ரெண்டு வாரத்துல மேற்படிப்புக்காக லண்டன் போகப் போறான்"

'அப்படியா நானா ரொம்ப சந்தோசமா இருக்கு. இத ஏன் முன்கூட்டியே சொல்ல இல்ல"

'அதோட இன்னொரு விஷயமும் இருக்கு. அது வந்து, போரதுக்கு முன்னாடி ரமீஸோட நிக்காஹ முடிச்சிப் போட்டா நல்லம்னு நெனச்சன்"

'அதுக்கென்ன நானா எப்ப வச்சிக்கலாம்னு நீங்களே சொல்லுங்க"

'ஆ..நான் ஒரு வாரம் கழிச்சு வச்சுக்கலாம்னுதான் நெனச்சன். ஆனா பொண் வீட்டுக் காரங்கதான் உடனே வைக்கனும்னு அடம் புடிக்கிறாங்க"

'என்ன பொண் வீட்டுக் காரங்களா? நீ..நீ..நீங்க என்ன நானா சொல்றீங்க?"

'ஆமா தங்கச்சி கொழும்புல கார் சேல் வச்சிருக்காரே கரீம் ஹாஜியார் அவரோட ஓரே மகள் பாத்திமாதான் பொண்ணு. ரொம்ப நல்ல வசதியான குடும்பம்மா"

'நானா இத வந்து என்கிட்ட சொல்ல உங்களுக்கு எப்பிடி மனசு வந்திச்சி? காலா காலமா என்ட புள்ளக்கிதான் ரமீஸ கட்டி வைப்பேன்னு சொல்லிட்டு இப்ப இப்பிடி ஒரு குண்ட தூக்கி போடுறீங்களே. அப்ப என்ட புள்ளக்கி என்ன பதில் சொல்லப் போறீங்க?"

'அப்ப என்னமோ சொன்னன்தான். அத இப்பவும் நான் மறுக்கயில்ல. ஆனா அப்ப என் மவன் டாக்டராவான்னு யாருக்குத் தெரியும். அப்ப சொன்னத மனசுல வச்சுட்டு இப்ப மாப்புள கேட்குறதுல என்னம்மா நியாயம்? இப்ப ஒன்ட அந்தஸ்து என்ன? எங்கட அந்தஸ்து என்ன? ஏணி வச்சாலும் எட்டாது. என்ட புள்ளக்கி உன்னால கார் கொடுக்கவும் ஏலா,பங்களா கொடுக்கவும் ஏலா. அதனால இத மாதிரி ஆச எல்லாம் உனக்கு வரக் கூடாது தங்கச்சி"

'நானா நீங்க செய்றது உங்களுக்கே நல்லா இருக்கா என்ட புள்ளேட மனசுல ஆசய வளர்த்துட்டு இப்ப வந்து நெருப்ப அள்ளி கொட்றீங்களே. தம்பி ரமீஸ்.. நீங்களாவது கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க என்ட புள்ளேட வாழ்க்க என்னாகுறது?"

சாபிலா சரியாக முடிக்கவும் இல்லை தந்தையைப் போலவே மகனும் சீறிப் பாய்ந்தான். 'இதத்தான் வாப்பா நான் அப்பவே சொன்னன். இவங்கள போல பிச்சக் காரங்களோட சகவாசம் வச்சா இப்பிடித்தான் தேவயில்லாத கற்பனைகள வளர்த்துக்கு வாங்க. இவங்கட லெவலுக்கு டாக்டர் மாப்புள சரிபட்டு வராது. ஏதாவதொரு கூலிக்காரன் வருவான் கட்டி வக்கச் சொல்லுங்க. தேவன்னா ஒரு ஐந்தயோ, பத்தயோ கொடுத்துட்டு வாங்க வாப்பா"

இதை சற்றும் எதிர்பார்க்காத சாபிலாவும், பழீலும் ஆடிப் போனார்கள். அவர்கள் கட்டிய கனவு கோட்டை கண் முன்னே சரிந்து விழுகிறது. கண்களில் கண்ணீர்த் துளிகள் கொப்பளித்துப் பாய்கின்றன. பெற்றவர்களின் கண்கள் கலங்குவதை சகிக்க முடியாத ரஸானா எரிமலையாய் குமுறுகிறாள்.

' ச்சே நீங்களும் மனுசன்களா..? உங்களுக்கு வெக்கம், மானம், ரோசம் இருந்தா ஒடனே வெளிய போங்க. உங்க பேச்செல்லாம் மேடையில மட்டும்தான். உங்கள எல்லாம் முஸ்லிம்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு. இனிமேலும் எங்க மொகத்துல முளிக்காம போங்க வெளிய.. போங்க."

இதை எதிர்பார்க்காத ரமீஸ் கொஞ்சம் கதிகலங்கி போனான். மேலும் இங்கிருந்தால் பிரச்சினை பெரிதாகி விடும் என்பதை உணர்ந்த காசீம் முதலாளி மகனையும் அழைத்துக் கொண்டு செல்கின்றார். சாபிலாவும், பழீலும் குலுங்க குலுங்கி அழுது புலம்ப ஒரு கனம் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் ரஸானா. அவள் உள்ளம் உருகியது.

தனது வேதனைகள், சுமைகள், கனவுகள் அனைத்தையும் மனதில் போட்டு புதைத்துக் கொண்டவளாய் 'இப்ப என்ன நடந்து போச்சுன்னு ரெண்டு பேரும் அழுது புலம்புறீங்க. அல்லாஹ் யாருக்கும் அநியாயம் செய்ய மாட்டான் வாப்பா. ஒரு விதத்துல நாங்க அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தனும்.ஏன்னா இது மாதிரி பேராச புடிச்சவங்களோட வாழ்ந்து கஷ்டப்படறதுல இருந்து அல்லாஹ் என்னய காப்பாத்திட்டான்.எனக்குன்னு ஒரு வாழ்க்கய அந்த அல்லாஹ் அமச்சி தருவான் நீங்க ரெண்டு பேரும் கவலப்படாம இருங்க"

மகளின் உபதேசம் கேட்டு பழீலும், சாபிலாவும் உறைந்து போனார்கள். தனது மகளின் பொறுமை அவர்களை பெருமைப்பட வைத்தது. இப்படியொரு மகளை பெற்றதை எண்ணி உள்ளுர மகிழ்ந்தார்கள். இனியும் அவளை வேதனைப்பட வைக்கக் கூடாது என்று எண்ணியவர்களாக தங்களை சமாதானப்படுத்திக் கொண்டார்கள்.

என்னதான் ஆறுதல் பட்டுக் கொண்டாலும் ரஸானாவின் உள்மனம் ஊமை வலிகளால் துடித்தது. அவள் ரமீஸ் தனக்குக் கிடைக்கவில்லையே என்பதற்காக அழவில்லை மாறாக அளவுக்கதிமாக ஆசைப்பட்டு ஒரு அந்நிய ஆணை மனதில் நினைத்துக் கொண்டு வாழ்ந்ததை எண்ணி வருந்தினாள். அவ்வப்போது அல்லாஹ்விடம் இதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டாள்.

இந்த கதை ஊர் எங்கும் பரவுகிறது. தலை கால் வைத்து கதைப்பதில் எங்கள் சமூகம் எப்போதுமே முன்னிலையில்தான் இருக்கிறது. இது ரஸானாவின் விடயத்திலும் உண்மையாயிற்று. செல்வந்தர் என்பதால் காசீம் முதலாளிக்கே பெரும்பாலானோர் வக்காளத்து வாங்கினர். ரஸானாவை தெருக்களிலும், சந்திகளிலும் தரங்குறைவாக கதைத்தனர். இதனால் ரஸானா இப்போதெல்லாம் தேவைக்குகூட வெளியில் செல்வதில்லை. மகளின் நிலையை எண்ணி உள்ளுக்குள் வருந்தும் சாபிலாவும், பழீலும் ஏதோ வாழ வேண்டும் என்பதற்காக வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

இந்த வேதனைகளோடும், சுமைகளோடும் நாட்கள் நகர்ந்தன. அன்றொருநாள் ரஸானா வீட்டு முற்றத்தைக் கூட்டிப் பெருக்கிக் கொண்டிருந்தாள். தனது வளவை நோக்கி ஒரு வயதானவர் ஓட்டமும் நடையுமாக வருவதைக் கண்டாள்.

'நீங்க யாரு உங்களுக்கு என்ன வேணும்?"

'நான்.கா..கா..காசீம் முதலாளிட வீட்டுல வேல செய்றன்."

'நீங்க யே இங்க வரணும் உங்களுக்கு என்ன வேணும்?"

'மகள்.நம்ம ரமீஸ் தொர நேத்து காருல போறப்போ எக்ஸிடன்டாகி இப்ப ஹொஸ்பிடல்ற இருக்காரு. அவரு ரொம்ப சீறியஸா இருக்காரும்மா. உங்கள எல்லாம் பார்க்கணும்னு ஆசப்படுறாரு. காசீம் முதலாளிக்கு உங்ககிட்ட வாரதுக்கு வெக்கமா இருக்காம். எதயும் மனசுல வச்சிக்காம அவர ஒருக்கா வந்து பாருங்கம்மா"

இந்த செய்தியைக் கேட்டதும் ரஸானாவுக்கு தலைசுற்றுவது போல் இருந்தது. பழையவைகள் எதுவும் அவளுக்கு ஞாபகம் வரவில்லை. 'யா அல்லாஹ் ரமீஸ் மச்சானுக்கு எதுவும் ஆகிடாம நீதான் காப்பாத்தணும்" அவளை அறியாமல் வாய் முணு முணுத்தது. அதற்குள் பழீலும்,சாபிலாவும் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து விட்டார்கள். அவர்களுக்கும் செய்தி கிடைக்கிறது. சாபிலா கதறி கதறி அழத் தொடங்கி விட்டாள். அவளை ஆறுதல் படுத்திக் கொண்டே வைத்தியசாலைக்குப் போக தயாராகினான் பழீல். கையில் காசில்லாவிட்டாலும் மனது நிறைய பாசத்தை நிறைத்து வைத்திருக்கும் இந்த குடும்பத்தையும்,பெட்டி நிறைய காசை வைத்திருக்கும் சாசீம் முதலாளியின் குடும்பத்தையும் ஒரு கணம் ஒப்பிட்டு பார்த்தார் காசீம் முதலாளி வீட்டு வேலைக்காரர். ஏழைகளை நினைத்தால் அவருக்கு பெருமையாக இருந்தது. இந்த பெருமையோடு அவர்களை ரமீஸ் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்கிறார்.

அங்கே தனது கால்களில் ஒன்றை பறிகொடுத்த நிலையில் தலையிலும்,உடம்பிலும் பல கட்டுகளோடு படுத்திருந்தார் டாக்டர் ரமீஸ். அவரருகில் காசீம் முதலாளியும், அவரது மனைவியும் கலங்கிய கண்களோடு நின்றிருந்தனர்.

சாபிலா குடும்பத்தைக் கண்டதும் அவருக்கு வெட்கமாக இருந்தது. பணத்திமிர் கொண்டு அன்று ஆணவமாக பேசியவர் இன்று கூனிக்குறுகி தலையை தாழ்த்திக் கொண்டே தனது தங்கச்சியை நோக்குகிறார்.

'தங்கச்சி நீ வருவேன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலம்மா. அன்னக்கி ஒன்ட அன்ப, பாசத்த நான் புரிஞ்சக்கவே இல்ல. இன்டைக்கி என்ட புள்ளேட நிலைய பார்த்தயா? இனி அவன இந்த நிலமையில என்னால பார்க்கவே ஏலாம்மா"

காசீம் முதலாளி குலுங்கிக் குலுங்கி அழுகிறார். அவருக்கு எப்படி ஆறுதல் சொல்லுவதென்று யாருக்கும் புரியவில்லை. சாபிலாவின் இதயம் துடித்தது. அவளும் கண்ணீர் விட்டு கதறி அழுகிறாள். ஒருவாறு தன்னை சுதாகரித்துக் கொள்கிறாள்.

'இது என்ன நானா நீங்க சின்ன புள்ளமாரி அழுவுறீங்க.இந்த நேரத்துல ரமீஸுக்கும் மதினிக்கும் நீங்கதானே ஆறுதல் சொல்லனும்."

'ஓ மச்சான் இப்ப அழுவுறதால ஒன்னும் ஆகப்போறதில்ல. இவ்வளவுலயாவது போனத நெனச்சி அல்லாஹ்க்கு நன்றி சொல்லனும். காலப் போக்குல எல்லாம் சரியாகிடும் இன்டைக்கி எல்லாத்துக்கும் மருந்து இருக்கு மச்சான்" பதிலுக்கு பழீலும் தனது ஆறுதல் வார்த்தைகளை அள்ளி வீசினார். இவையனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ரமீஸின் கண்களில் கண்ணீர் முட்டுகிறது. தனது நாவினால் உதடுகளை ஈரமாக்கிக் கொண்டு தட்டுத்தடுமாறி பேசத் தொடங்குகிறான்.

'மாமி, மாமா பணத்தாலயும், பதவியாலயும் எதயும் செய்யலாம்னு நெனச்ச எனக்கு அல்லாஹ் தந்த தண்டனய பார்த்தீங்களா? உங்க நல்ல மனச ஊனப்படுத்தியதுக்காக அல்லாஹ் என்னய நிரந்தரமா ஊனமாக்கிட்டான். என்ட பட்டம், பதவியால இழந்த என்ட கால வாங்க ஏலுமா மாமி? இனி என்னைய ஒரு பிச்சக்காரி கூட கட்டிக்க மாட்டா. என்ட வாழ்க்க எல்லாருக்கும் ஒரு பாடமா இருக்கட்டும் மாமி"

சோகத்தோடு தன் சுமைகளை இறக்கி வைத்த ரமீஸை பரிதாபத்துடன் நோக்கிக் கொண்டிருந்தாள் ரஸானா. அனுதாபப்படுவதைத் தவிர அவளால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. அவளின் மனம் ஒரு கணம் அல்லாஹ்வின் செயலை எண்ணிப்பார்க்கிறது.

ஆமாம் மனிதனோ தனது பதவி, பட்டம், பணம் என்பவற்றால் எதையும் சாதித்து விடலாம் என்று பெருமை கொள்கிறான். ஆனால் அல்லாஹ்வோ தனது வல்லமையை மீறி சிறிய ஒரு விடயத்தையும் சாதித்துவிட முடியாது என நிரூபித்து விடுகிறான். ரமீஸ் விடயத்திலும் இது சரியாகி விட்டது என்பதை நினைக்கும் போது ரஸானாவின் உள்ளம் ஸ்த்தம்பித்துப் போனது.

வரக்காமுறையூர் ராசிக்

Comments