வெள்ளைத்துரை காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோமா?; தனிக்காட்டு ராஜாவாக கம்பனி தரப்பு கசக்கி பிழியப்படும் தொழிலாளர் தரப்பு | தினகரன் வாரமஞ்சரி

வெள்ளைத்துரை காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோமா?; தனிக்காட்டு ராஜாவாக கம்பனி தரப்பு கசக்கி பிழியப்படும் தொழிலாளர் தரப்பு

பெருந்தோட்டங்களை இராணுவமயப்படுத்துவதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைக் குரல்களை ஒடுக்க முடியும் என்று கம்பனி தரப்பு எதிர்பார்க்குமானால் அது அபத்தமாகவே அமைந்து விடும்.பெருந்தோட்டங்களை இராணுவ மயப்படுத்தும் எந்தவொரு யோசனையும் அரசாங்கத்திடம் இல்லை என்று இராஜாங்க அமைச்சர்ரமேஷ் பத்திரண மறுப்புத் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்கும் இடையிலான முறுகல் நிலைமை முற்றிச் செல்வதாக கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரம் ரூபா சம்பளம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று சம்பள நிர்ணய சபை முடிவெடுத்திருந்தது. இது கம்பனி தரப்புக்கு கசப்பை ஏற்படுத்தியது. இதனால் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் நீதிமன்றத்தை அணுகியது. இடைக்கால தடை கோரியது. எனினும் நீதிமன்றம் அக்கோரிக்கையை நிராகரித்தமையால் வேறு வழியின்றி ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கியாக வேண்டிய கட்டாயம் வந்தது கம்பனி தரப்புக்கு.

இதனால் சினம் கொண்ட தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கூட்டு ஒப்பந்தத்துக்கு அப்பால் போய் சம்பள அதிகரிப்பை மேற்கொண்டதால் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுகிறது என்று ஒரு தலைப் பட்சமாக அறிவிப்பு செய்தது.

ஆனால் இதனை மலையக தொழிற்சங்கங்கள் வரவேற்கவில்லை. மாறாக கூட்டு ஒப்பந்தம் தொடர வேண்டும் என்று அவை வலியுறுத்தின. எனினும் கம்பனி தரப்பு அதைக் கணக்கில் எடுக்கவில்லை. இதேவேளை தொழிற்சங்கங்களின் போக்கால் அதிருப்தியுற்ற முதலாளிமார் சம்மேளனம் வெறுப்பை தொழிலாளர் பால் காட்ட ஆரம்பித்தது. இதுவரை அதுதான் நடந்து கொண்டிருக்கின்றது.

எந்தெந்த வகையில் எல்லாம் தோட்டத் தொழிலாளர்களுக்கு நெருக்கடிகள் கொடுக்க முடியுமோ அத்தனை முயற்சிகளிலும் அது இறங்கியுள்ளது. இதனால் பல தோட்டங்களில் முறுகள் நிலைமை தோன்றியுள்ளது. பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவு அதிகரிக்கப்பட்ட நிலையில் மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவு கவ்வாத்து செய்யப்படுகின்றது.

தவிர பல தோட்டங்களில் அதிகரிக்கப்பட்ட ஆயிரம் ரூபா சம்பளம் உரியமுறையில் வழங்கப்படுவது இல்லை என்ற செய்தி பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதைச் சொன்னவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார. இவரது தலைமையில் பெருந்தோட்ட மக்கள் சார்பில் தொழிற்சங்கம் ஒன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அவர் சொல்கிறார்... அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆயிரம் ரூபா நாட் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுத்தார். எனினும் சகல தோட்டங்களிலும் இது நடைமுறைப் படுத்தப்படவில்லை. இதற்காக சகல தொழிற்சங்கங்களும் இணைந்து போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால் எந்தவொரு மலையக தொழிற்சங்கமும் இணக்கம் காட்டுவதாக இல்லை. தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் இறங்கினால் ஏற்றுமதி பொருளாதாரம் தாக்கத்துக்கு உள்ளாகும். எனினும் வேறு வழி கிடையாது.

வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தியுள்ள விவகாரத்தை மட்டுமா மலையக தொழிற்சங்கங்கள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன?

எனினும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தாமே முன் வந்து ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபடவே செய்கின்றார்கள். பணி புறக்கணிப்புகளும் நடக்கவே செய்கின்றன. ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் தோட்ட நிர்வாகங்கள் அடாவடித்தனங்களில் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக செய்திகள் வரவே செய்கின்றன. தோட்ட முகாமையாளர்கள் போரட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களை மூர்க்கத்தனமாக தாக்கும் சண்டித் தனங்களும் இடம் பெற்றுள்ளன. இத்துடன் பொலிஸாரின் தலையீட்டின் பேரில் பயமுறுத்தல்களும் நடக்கின்றன. கைது, விடுவிப்பு என்று அச்ச நிலைமையை உருவாக்கி தோட்டத் தொழிலாளர்களின் வர்க்க உணர்வை மழுங்கடிக்க முனைகின்றது கம்பனி தரப்பு.

தற்போது ஓருபடி மேலே போய் இராணுவத்தின் உதவியைக் கோரும் செயற்பாட்டில் கம்பனி தரப்பு இறங்கி வருவதாக வெளிவந்துள்ள செய்திகள் பல்வேறு தரப்புகளையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. பெருந்தோட்டங்களை இராணுவ மயப்படுத்துவதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைக் குரல்களை ஒடுக்க முடியும் என்று கம்பனி தரப்பு எதிர்பார்க்குமானால் அது அபத்தமாகவே அமைந்து விடும். பெருந்தோட்டங்களை இராணுவ மயப்படுத்தும் எந்தவொரு யோசனையும் அரசாங்கத்திடம் இல்லை என்று இராஜாங்க அமைச்சர் ரமேஷ் பத்திரண மறுப்புத் தெரிவித்துள்ளார். ஆனால் தொழிலாளர்களின் போராட்டங்ளை அடக்க இராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று சில தோட்ட முகாமையாளர்கள் வேண்டுகோள் விடுக்கவே செய்துள்ளார்கள். இது பெருந்தோட்ட மக்களுக்கும் அரசாங்கத்துக்கம் இடையிலான புரிந்துணர்வை பாதிக்கும் ஒரு மறைமுக சதித்திட்டமா என்று யோசிக்க ​ேவண்டியுள்ளது. இதே நேரம் ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக பெருந்தோட்ட வளர்ச்சிக்கும் தேசிய பொருளாதார மலர்ச்சிக்கும் உழைத்துக் களைத்து ஓய்ந்துபோய் வாழ்ந்து கொண்டிருக்கும் வயோதிப ஆண், பெண் தொழிலார்களை (முன்னாள்) சிரமப்படுத்தும் கைங்கரியங்களும் இடம் பெறுவதாக தெரிய வருகின்றது. 60 வருடங்கள் பூர்த்தியான நிலையில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு மாதாந்தம் அரை கிலோ தேயிலைத் தூள் வழங்கபட்டு வருகின்றது.

தொழிலாளர்களில் பலர் மூப்புக் காரணமாக நடமாடுவதில் கஷ்டப்படுபவர்கள். இதனால் இவர்களுக்குப் பதிலாக உறவினர்களோ அயலார்களோ சென்று தேயிலைத்தூளைப்பெற்று வந்து கொடுப்பது வழக்கம். ஆனால் தற்போது அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. குறிப்பிட்டவர்களே நேரில் வந்து அடையாள அட்டையைக் காட்டி ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தினால் மட்டுமே இனி தேயிலைத் தூள் வழங்கப்படும் என்று பசறைப் பிரதேச தோட்டங்களில் கூறப்படுவதாக செய்திகள் வந்துள்ளன. குறிப்பாக கோணக்கல மேற்பிரிவு தோட்ட நிர்வாகம் இப்படியோரு நிபந்தனையை விடுத்திருப்பதாக மூப்படைந்த பெண்மணியொருவர் முறைப்பாடு செய்துள்ளார். அரை கிலோ தேயிலைத் தூளைப் பெறுவதற்கு இரண்டு கிலோ மீற்றர் தூரம் வரை நடக்க வேண்டி இருக்கிறதாம். இது ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்குச் சிரமத்தைத் தரவே செய்யும். இதே அனுபவம் வேறு சில தோட்டங்களில் ஓய்வு பெற்று வாழும் தொழிலாளர்களுக்குக் கிடைக்கலாம்.

தற்போது கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை. இதன் காரணமாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தைத் தட்டிக்கேட்க எந்த ஏற்பாடும் நடைமுறையில் காணப்படாமையால் அது நினைத்தப்படி நடப்பதற்கு எத்தனிப்பாக தெரிகிறது. தற்போதைய நிலையில் அது தனிக்காட்டு ராஜா. எனவேதான் தான் தோன்றித் தனமாக தொழிலாளர்களை அசௌகரியப்படுத்தும் காரியங்களைக் கச்சிதமாக கையாள்கிறது. துணைக்கு தேவைப்பட்டால் பொலிஸாரையோ இராணுவத்தினரையோ கூப்பிடுகிறது. இந்த போக்கு நீடிக்குமானால் பெருந்தோட்டப் பிரதேசங்களில் அமைதி இன்மை ஏற்படுவது தவிர்க்க இயலாததாகிவிடும்.

மலையக தொழிற்சங்கங்கள் இதுபற்றியெல்லாம் கவலைப்படுவதாக தெரியவில்லை. இ.தொ.கா போன்ற தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தை மீண்டும் கொண்டுவரவே முயற்சிக்கின்றன. இவ்விடயத்தில் அரசாங்கத்தின் பக்கத்துணை கிடைக்க வாய்ப்பு இல்லையென்றே தெரிகிறது. ஏனெனில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்த முறைமைக்கு மீண்டும் செல்லுமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு தொழில் அமைச்சினால் அழுத்தம் கொடுக்க முடியாது என்று அடித்துச் சொல்கிறார் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா.

பெருந்தோட்டக் கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகள், தோட்ட முகாமையாளர்களை சிநேகபூர்வ இரவு விருந்துக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அழைத்ததாகவும் ஆனால் அவர்கள் அந்த அழைப்பை நிராகரித்து ஜீவன் தொண்டமானின் முகத்தில் கரியைப் பூசிவிட்டதாகவும் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இச்செய்தி சரியானால் பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிற்சங்கங்களை எவ்வளவு அற்பமாக எண்ணி செயற்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இதற்கு காரணம்தான் என்ன?

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அழகாக விளக்கம் தருகிறார். பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் ஓரணியில் நின்று செயற்படுகிறது. மலையக தொழிற்சங்கங்களோ பிளவுபட்டு நிற்கிறது. இது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஒரு தடையாகும். உரிமைகளை வென்றெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் பலமடைய வேண்டும். சரியான கணிப்பு. காத்திரமான கருத்து. மலையக தொழிற்சங்கங்களுக்கு உறைக்குமோ தெரியாது.

இது இப்படி இருக்க தோட்ட வளங்களை தொடர்ந்து சூறையாடும் நடவடிக்கைகளை கம்பனி தரப்பு கைவிடவில்லை என்பதற்குச் சான்றாக பட்டல்கல தோட்ட சம்பவம் அமைக்கின்றது. இத்தோட்டத்தில் காணப்பட்ட பெறுமதி வாய்ந்த மரங்களை தரித்து பார ஊர்திகளில் ஏற்றிச்செல்ல முற்பட்ட தோட்ட நிர்வாகத்தின் முயற்சி நோர்வூட் பிரதேச சபையின் தலையீட்டின் மூலம் தடுத்த நிறுத்தப்பட்டதாக பிரதேச சபை தவிசாளர் குழந்தை வேலு கூறியிருக்கிறார்.

கூடுதலான தொழிலாளர்களையும் அதிகமளவிலான அரசியல்வாதிகளையும் தன்னகத்தே தாங்கி நிற்கும் நுவரெலியா மாவட்டத்திலேயே இவ்வாறன சூறையாடல்கள் நடக்குமானால் எனைய மாவட்டங்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும். போகும் போக்கினைப் பார்த்தால் தந்தை செல்வாவின் வாக்குத்தான் ஞாபகத்திற்கு வருகிறது. தமிழ் மக்களை கடவுள்தான் காப்பற்ற வேண்டும் என்று ஒரு முறை அவர் சொன்னார். தற்போது பெருந்தோட்ட மக்களையும் அவர்கள் சார்ந்த நிலப்பரப்பினையும் கடவுள் வந்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று தோன்றுகிறது.

பன். பாலா

Comments