மக்களை தூண்டி விடும் மறைமுக முயற்சிகள்! | தினகரன் வாரமஞ்சரி

மக்களை தூண்டி விடும் மறைமுக முயற்சிகள்!

சம்பள விவகாரம் தொடர்பாக அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சிலவற்றால முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்டப் போராட்டங்கள் மற்றும் இரசாயனப் பசளை வழங்குமாறு கோரி விவசாய அமைப்புக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் ஆகிய இரண்டு விடயங்களிலும் தீர்வை எட்டுவதற்காக அரசாங்கம் சமீப நாட்களாகப் போராடி வருகின்றது.

இதனால் நாட்டில் ஏற்பட்டுள்ள பரபரப்பையும் பதற்றத்தையும் தணிப்பதற்கு அரசாங்கம் உச்ச அளவில் தனது ஈடுபாடுகளை வெளிப்படுத்தியுள்ள போதும், எதிர்க்கட்சியில் உள்ளவர்களோ ‘எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும்’ வகையிலேயே மறைமுக செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தரப்பினருக்கு திரைமறைவில் ஆதரவளித்து நிலைமைகளை மேலும் சிக்கலடையச் செய்து வருகின்றனர்.

சம்பள முரண்பாட்டு விடயத்துக்குத் தீர்வு காணுமாறு கோரி அதிபர், ஆசிரியர்கள் அங்கம் வகிக்கும் சில தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த போராட்டம் 100 நாட்களை எட்டியுள்ள நிலையில், அவர்கள் இன்னும் தங்களது போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவிக்கவில்லை. ஆனால் தமிழர் ஆசிரியர் சங்கமானது மாணவர் நலனே முக்கியமென்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது.

கொவிட்-19 தொற்று பரவல் தீவிரமடைந்ததால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பாடசாலைகள் இயங்க முடியாத நிலைமை ஏற்பட்டது. ஒன்றரை வருட காலம் கடந்த பின்னர் தற்போது கொவிட் தொற்று ஓரளவுக்கு தணிவு நிலைமைக்கு வந்திருப்பதனால், கடந்த 21 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 200 இற்கும் குறைவான மாணவர் எண்ணிக்கை கொண்ட பாடசாலைகளை மாத்திரம் முதற் கட்டமாக ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. அதன்படி அவ்வாறான பாடசாலைகள் கடந்த 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகி விட்டன. ஏனைய பாடசாலைகளை படிப்படியாக ஆரம்பிப்பதே அரசாங்கத்தின் திட்டமாக இருந்தது.

அதன் பின்னர் அடுத்த கட்டமாக தரம்-1 தொடக்கம் தரம்- 05 வரையான ஆரம்ப வகுப்புகளை நாளை 25 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ஆரம்ப வகுப்பு மாணவர்கள் நீண்ட காலத்துக்குப் பிறகு நாளை பாடசாலைக்குச் செல்லவிருக்கின்றனர்.

அதேநேரம் இவ்வாறு திறக்கப்படும் பாடசாலைகளுக்கு அதிபர், ஆசிரியர்கள் சமுகமளிக்கக் கூடாது என்று தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினர் அறிவித்திருந்தனர். ஆனால், பணிபுரியச் செல்லும் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருந்தார். சில பாடசாலைகளுக்குப் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

அதிபர்கள் கடமைக்கு வராவிட்டால் அவர்கள் தமது பாடசாலையின் சாவிகளை வலயக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் கல்வியில் தடங்கல் ஏற்படுத்த இடமளிக்க முடியாதென்பதே அரசாங்கத்தில் உறுதியான நிலைப்பாடாக உள்ளது.

இவ்வாறான நிலையில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் கண்டிப்பான அறிவித்தலையும், அச்சுறுத்தலையும் மீறி சில பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கடமைக்குச் சென்றிருந்தனர். அதேநேரம், தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் மாணவர்களின் கல்வியைக் குழப்புவதற்கு முயற்சித்தால் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களைப் பயன்படுத்தி கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் திட்டமொன்றையும் அரசாங்கம் வகுத்துள்ளது.

ஏட்டிக்குப் போட்டியான இவ்வாறான முரண்பாடுகளுக்கிடையே, தாதியர் தொழிற்சங்கத்தின் தலைவர் சங்கைக்குரிய முருத்தட்டுவே ஆனந்த தேரர் தலைமையில் சமரசம் செய்யும் முயற்சியொன்றும் முன்னெடுக்கப்பட்டது. அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்றை அவர் ஏற்பாடு செய்திருந்தார். தொழிற்சங்கத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நெகிழ்வுத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என சங்கைக்குரிய முருத்தட்டுவே ஆனந்த தேரர் அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும், இந்தச் சந்திப்பிலும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் நாளை (25) முதல் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்குத் திரும்புவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர்கள் போராட்டத்தை ஆரம்பித்ததன் பின்னணியையும் இவ்விடத்தில் பின்னோக்கிப் பார்ப்பது அவசியமாகின்றது. அரசாங்கத்தினால் கொண்டு வரப்படவிருந்த ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிரான போராட்டமாகவே இது முதலில் ஆரம்பமானது.

குறித்த சட்டமூலத்துக்கு எதிராக பத்தரமுல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் பின்னர் சம்பள விவகாரத்துக்கு தீர்வு காணுமாறு கோரிய ஆர்ப்பாட்டமாக உருவெடுத்தது. இப்போராட்டத்தின் பின்னணியில் எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் சக்திகளும் உள்ளன என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு 57 வீத சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். இது தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும் இன்னமும் தொழிற்சங்கங்கள் இணங்காத நிலைமையே காணப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பள உயர்வுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கத்தின் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்ட போதும், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதனை ஏற்றுக் கொள்ளாது போராட்டத்தைத் தொடரப் போவதாகவே கூறி வருகின்றனர்.

ஜனநாயக நாட்டில் தமது கோரிக்கைகளை முன்வைத்து அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்களுக்கு உரிமை உள்ளது. இதனை யாரும் மறுக்க முடியாது. இருந்த போதும் நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழல் குறித்தும் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.

கொவிட்-19 உலகத் தொற்று நோயானது எமது நாட்டுக்கும் பல்வேறு துறைகளிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தியிருப்பதுடன், கல்வித்துறை அதிக பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது. இவ்வாறான சூழலில் ஆசிரியர்கள் நடத்தும் போராட்டம் எந்தளவுக்கு நியாயமானது என்ற கேள்வி காணப்படுகிறது.

மாணவர்களுக்குக் கற்பிக்கும் செயற்பாடுகள் ஒன்லைன் மூலமாகவும் தொலைக்காட்சி போன்ற நேரடித் தொடர்பற்ற முறைகளின் ஊடாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாடசாலைகள் பௌதீக ரீதியில் செயற்படாமையால் மாணவர்களின் கல்வி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆசிரியர்களின் போராட்டமானது மேலும் நிலைமையை மோசமடையச் செய்கின்றது என்றே கூற வேண்டும்.

எனினும், மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட பல ஆசிரியர்கள் எவ்வித சிரமத்தையும் பார்க்காது ஒன்லைன் ஊடாக கல்வி கற்பிப்பதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர் என்பதும் மறுப்பதற்கில்லை. அதேசமயம் மற்றொரு தொகுதி ஆசிரியர்கள் தமது மாணவர்களுக்கு ஒன்லைன் ஊடாக ஒரு வகுப்பைக் கூட நடத்தாது வீட்டில் உள்ளனர். அவர்கள் எதுவித தடையுமின்றி சம்பளத்தைப் பெற்று விட்டு தற்பொழுது சம்பள உயர்வு கோரிப் போராடுவது நியாயமானதா என்று பெற்றோர் வெளிப்படையாகவே பேசத் தொடங்கி விட்டனர்.

மற்றொரு புறத்தில் அரசாங்கப் பாடசாலை ஆசிரியர்கள் தங்களது டியூசன் வகுப்புகளை கொரோனா முடக்க நிலையிலும் வெற்றிகரமாகவே நடத்தி வருகின்றனர். அவர்களது ஒன்லைன் ஊடான வகுப்புகளின் கட்டணங்கள் மிகவும் அதிகமாக உள்ளதால், வறிய மாணவர்களுக்கு டியூசன் கல்வி கிடைக்காத பரிதாபம் உள்ளது.

ஆர்ப்பாட்டங்களில் முன்னின்று செயற்படும் தொழிற்சங்கங்களின் பொறுப்புக்களில் உள்ள சிலர் கூட இவ்வாறு மாணவர்களின் ஒன்லைன் கல்வியில் சற்றேனும் பங்களிக்காதவர்களாக இருக்கின்றமையும் வேதனைக்குரிய விடயமாகும். மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் கடந்த ஒன்றரை வருட காலத்துக்கு மேலாக ஸ்தம்பித்துப் போயிருக்கும் நிலையில் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சிலவற்றின் இந்தப் போராட்டம் மாணவர்களின் எதிர்காலத்தையே மென்மேலும் பாதிக்கச் செய்யும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

மறுபக்கத்தில், சேதனப் பசளை பாவனை தொடர்பில் விவசாயிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டமும் அரசின் மீது அழுத்தத்தைக் கொடுப்பதாகவே அமைந்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைப் பிரகடனத்தில் இரசாயன உரங்களின் பயன்பாடு நிறுத்தப்பட்டு, சேதன உரங்களின் பயன்பாடு அதிகரிக்கப்படும் என்ற விடயம் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

இதனை நடைமுறைக்குக் கொண்டு வரும் வகையில் இரசாயனப் பசளைகளை இடைநிறுத்தி சேதனப் பசளைகளை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இரசாயனப் பசளை இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்காததுடன், விவசாயிகள் தமக்கான சேதனப் பசளைகளை தயாரிப்பதையும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்தது.

இலங்கையைப் பொறுத்த வரையில் விவசாயத் துறையானது இரசாயன உரத்தில் தங்கியிருக்கும் நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றது. பொலனறுவை, அனுராதபுரம் போன்ற பகுதிகளில் இரசாயன உரங்கள் நிலத்தடி நீரை மாசுபடுத்தியிருப்பதால் ஏராளமானோர் சிறுநீரகப் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களின் மருத்துவ செலவுகளுக்கு அரசாங்கம் பல மில்லியன் ரூபா செலவு செய்ய வேண்டியிருப்பதுடன், எதிர்கால சந்ததியினரை இந்த இரசாயனப் பாதிப்புக்களிலிருந்து மீட்கும் நோக்கிலேயே அரசாங்கம் சேதனப் பசளை பாவனைத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது.

சம்யுக்தன்

Comments