பாடசாலை ஆரம்பமும் நெருக்கடிகளும் | தினகரன் வாரமஞ்சரி

பாடசாலை ஆரம்பமும் நெருக்கடிகளும்

ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் நாளை நாடெங்கும் உள்ள ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் திறக்கப்படுகின்றன. இப்பாடசாலைகள் ஆசிரியர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 21ம் திகதி திறக்கப்பட்டாலும் நாளை முதலே இணக்கப்பாட்டுடன் பாடசாலைகள் திறக்கப்படுகின்றன. கம்பஹா அலைக்கு முன்னர் சுமார் இரண்டு மாதங்கள்வரை பாடசாலைகள் திறக்கப்பட்டு மீண்டும் மூடப்பட்டதால் ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் இப்போதுதான் பாடசாலைகள் திறக்கப்படுவதாக நாம் குறிப்பிடுவதும் ஒரு நம்பிக்கை அடிப்படையில்தான்.

இன்று நாட்டு சனத்தொகையில் மிகப் பெரும்பாலானோர் ஒரு தடுப்பூசியையாவது ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அறுபது வயதுக்கும் மேற்பட்டோரில் 90 சதவீதமானோர் இரண்டு ஊசிகளையும் ஏற்றிக் கொண்டுள்ளனர். 30முதல் -60 வயதானோரிலும் 60 சதவீதமானோர் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொண்டுள்ளனர். தற்போது பள்ளி மாணவர்களுக்கு கட்டம் கட்டமாகவும், விரைவாகவும் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி, தடுப்புகளையும் தாண்டிப் பரவக் கூடியது என்பது உண்மையானாலும் பாதிப்பின் வேகம் அதுவும் வளரிளம் பருவத்தினர் மத்தியில் குறைவாகவே இருக்கும். ஆனால் மாணவர் சமூகம் தொடர்ந்தும் காவிகளாக இருக்க முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது.

எனவே நாளை திறக்கப்படும் பாடசாலைகள் தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் அடுத்தடுத்த நான்கு கட்டங்களில் பல்கலைக்கழகங்கள் உட்பட சகல கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு விடும் என்றும் நாம் எதிர்பார்க்க முடியும். தடுப்பூசி நாடு தழுவியதாக ஏற்றப்பட்டுள்ளதால் பெற்றோரும் கல்வி, சுகாதார அதிகாரிகளும் இவ்வாறே சாதகமான சமிக்ஞைகளை வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த எழுபது ஆண்டுகளில் தேசிய பாடசாலைக் கல்வி இவ்வாறான ஒரு நெருக்கடியை சந்தித்ததே இல்லை. ஜே.வி.பி. கிளர்ச்சி, சுனாமி போன்றவை தற்காலிக பின்னடையை ஏற்படுத்தி பின்னர் சரி செய்யப்பட்டன. வடக்கு கிழக்கில் கிளர்ச்சி நிலையின் போது கூட அப்பகுதியில் பாடசாலைகள் இயங்கவே செய்தது.

இலங்கை மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகளாக தமக்கு பழக்கப்பட்டிருந்த பாடசாலை வாழ்க்கை முறையை விட்டு விலகி இருந்துள்ளனர். இணைய வழிக் கல்வி போதிக்கப்பட்டாலும் அது அனைத்து மாணவர்களையும் சென்றடைவதில் காணப்பட்ட முட்டுக் கட்டைகள் முற்றாகக் களையப்படவில்லை. ஸ்மார்ட் கைபேசிகளை விலை கொடுத்து வாங்கக் கூடிய நிலையில் பல பெற்றோர், குறிப்பாக இக் கொவிட் காலப்பகுதியில், இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே இணைய வழிக் கற்பித்தலை கணக்கில் எடுத்துக் கொண்டு அதில் இருந்து தொடர்வதா அல்லது முதலில் இருந்தே ஆரம்பிப்பதா அல்லது மாணவர்கள் அனைவரையும் வகுப்பேற்றம் செய்துவிட்டு புதிய பாடங்களில் இருந்து ஆரம்பிப்பதா என்பதை கல்வித்துறையே தீர்மானிக்க வேண்டும். தனியார் -பாடசாலைகள், பெரிய பாடசாலைகளில் கற்கும் வசதியான மாணவர்கள் இணைய வழிக் கல்வியை முறையாகப் பயின்று வந்துள்ளார்கள். இவர்களுக்கும் சாதாரண அரசு பாடசாலை மாணவர்களின் கல்வித் தரத்துக்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டிருப்பதாகவே கருதுகிறோம். பொதுத் தராதர தேர்வுகளில் இந்த வித்தியாசம் வெளிப்படும் என்பதால் அதிகாரிகள் இது குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதன் நோக்கம், வெளியே சமூகங்கள் மத்தியில் ஏற்றத் தாழ்வுகளும், வெவ்வேறான நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் காணப்பட்டாலும் அவை எவற்றையும் கவனத்தில் கொள்ளாது எல்லா மாணவ மாணவியரையும் பொதுவான சட்ட திட்டங்களின் கீழ், பாகுபாடற்ற கல்வியையும், சமூக ஒழுக்கத்தையும் அவர்கள் மத்தியில் ஏற்படுத்தி ஓங்கச் செய்ய வேண்டும் என்ற தத்துவத்தை அடையச் செய்வது தான். ஒரே மாதிரியான சீருடை அணியச் செய்வதன் நோக்கமும் அனைவரும் சரிசமம் என்பதை அவர்களிடம் ஏற்படுத்துவதுதான். கல்வி மாணவர்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதன் முக்கியத்துவத்தை ஒழுக்கமும் பெறுகிறது. சில பாடசாலைகளில் தமது சக்தியையும் மீறி செலவு செய்து தமது பிள்ளைகளை சேர்ப்பதில் பெற்றோர் ஏன் முண்டியடிக்கிறார்கள் என்றால், கல்வியை விட ஒழுக்கமே பெரிது என அவர்கள் கருதுவதுதான். பாடசாலை வாழ்க்கையில் ஒழுக்கம் மிக முக்கியமானது. கடந்த ஒன்றரையாண்டு கட்டாய விடுமுறை காலத்தில் தொடர்ச்சியாகப் பயின்று வந்த இந்த பொது ஒழுக்கத்துக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. பெற்றோர் இக் கவலையை வெளியிட்டுள்ளனர்.

இப் பாடசாலை ஒழுக்க மரபுக்கு பாடசாலை அதிபர் - ஆசிரியர்களின் நூறு நாள் ஆக்ரோஷமான போராட்டத்தின் பின் விளைவுகள் அல்லது தொடர் விளைவுகள் பாதகம் ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆசிரியர் - மாணவர் மத்தியில் நிச்சயமாக ஒரு மரியாதையும் கௌரவிக்கும் மனப்பான்மையும் குரு – சிஷ்யன் அளவில் நிலவ வேண்டியது அவசியம்.எவ்வளவு மோசமான குழப்பக்கார மாணவனும் பின்னொரு காலத்தில் பாடசாலையில் தான் செய்த தவறுகளை நினைத்து வருந்தவே செய்வான். தனது ஆசிரியர்களை சந்திக்க நேர்ந்தால் அன்று வழங்கத் தவறிய கௌரவத்தை பன்மடங்குகளில் வழங்கவே முயற்சிப்பான். இது வெகு இயல்பானது. இந்த குரு – சிஷ்யன் மனப்பான்மை அதே மட்டத்தில் தொடர்ந்து பேணப்பட வேண்டும். அதற்கு உந்து சக்தியாக ஆசிரியர்களே விளங்க வேண்டும் என்பதால் ஆசிரிய – அதிபர் தரப்பானது கல்விச் சாலைகளுக்குள் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுத்துச் செல்லாதிருக்க வேண்டும்.பாடசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வது குரு – சிஷ்ய உறவில் நெருக்கடியைத் தோற்றுவிக்கக் கூடும் என்றும் இறுதியில் தாமும் இதற்குள் இழுத்துச் செல்லப்பட்டு விடலாம் என்றும் பெற்றோர் மத்தியில் ஒரு அச்சம் நிலவவே செய்கிறது.

எனவே அரசாங்கம் இங்கே ஆற்றக் கூடிய பங்களிப்பு மிக முக்கியமானது. ஏனெனில் ஆசிரிய – அதிபர்களின் மோதல் அரசுடனானது, தொழிற்சங்க ரீதியானது. தற்போது அரை மனதுடன் பாடசாலை வந்திருக்கும் ஆசிரியர்களை நெருக்கடிக்குள் தள்ளிவிடாமல் பிரச்சினையை பொலிஸ், சட்டத்தின் ஆட்சி, அலுவலக ஒழுக்க நெறி, நீயா நானா என்ற பலப்பரீட்சை போன்ற மட்டங்களில் கையாளாமல் லாவகமாகக் கையாண்டு தீர்த்து வைக்க அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.கொவிட் தொற்று பாடசாலைகளை மூடச் செய்யாது என்ற ஒரு நம்பிக்கை உள்ளது. அதே சமயம் ஆசிரிய – அதிபர் பிரச்சினையை லாவகமாக கையாளத் தவறி அவர்கள் வீதிகளுக்கு செல்வார்களாயின் பாடசாலைகள் மீளவும் மூடப்படலாம் என்ற அச்சமும் உள்ளது.

Comments