ஆப்கானிஸ்தானின்- இந்திய உறவுக்கான முனைப்பும் பிராந்திய அரசியலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும் | தினகரன் வாரமஞ்சரி

ஆப்கானிஸ்தானின்- இந்திய உறவுக்கான முனைப்பும் பிராந்திய அரசியலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும்

பிராந்திய அரசியலில் ஒப்பீட்டளவில் ஏனைய பிராந்தியங்களை விட அதிக குழப்பங்கள் நிறைந்த பகுதியாக தென்னாசியா மாறிவருகிறது. செப்டெம்பரில் (2021) அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதிலிருந்து ஆப்கானிஸ்தான் அரசியலை மையப்படுத்தி பிராந்தியம் புதிய குழப்பத்தை எதிர்கொண்டது.

குறிப்பாக ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்துள்ள தலிபான்கள் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் அதிக நெருக்கத்தை பேணுவதனால் இந்தியா தலிபான்களால் அதிக நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்ற அபாயங்கள் காணப்பட்டது. இந்நிலையில் தலிபான்களுடன் இராஜதந்திர ரீதியிலான பேச்சுக்களை இந்தியா முன்னகர்த்தி வருகிறது. அண்மையில் ரஷ்யாவில் நிகழ்ந்துள்ள ஆப்கானிஸ்தானின் புதிய யதார்த்தத்தை அங்கீகரித்தல் எனும் நிகழ்வில் ரஷ்யாவின் பங்காளி நாடுகள் பத்துக்கு மேற்பட்டவற்றுடன் இணைந்து இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. இக்கட்டுரையும் ஆப்கானிஸ்தானின் புதிய யதார்த்தத்தையும் இந்தியாவின் இராஜீக நகர்வையும் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருக்கும் தலிபான்களின் 'புதிய யதார்த்தத்தை' அங்கீகரிப்பதாக ஒக்டோபர்- 20அன்று மாஸ்கோ வடிவ (The Moscow Format) நிகழ்வில் கலந்து கொண்ட பத்து நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. சீனா, ஈரான், ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றின் பிரதிநிதிகளால் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் இந்தியாவும் கையெழுத்திட்டது. இந்திய அதிகாரிகள் தலிபான் துணைப் பிரதமர் அப்துல் சலாம் ஹனாபியை சந்தித்து காபூலில் ஆட்சிக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க இணக்கம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தலிபான் தூதுக்குழு மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பாகிஸ்தான்-, ஆப்கானிஸ்தான்-, ஈரான் இணைச் செயலாளர் ஜே.பி.சிங் சந்திப்பு பற்றிய செய்தி, தலிபான் துணை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சரும் செய்தித் தொடர்பாளருமான ஜபியுல்லா முஜாஹித்தினின் ட்விட்டர் மூலம் அறிவிக்கப்பட்டது. இந்திய வெளியுறவு அமைச்சகம் உடனடியாக எந்த கருத்தையும் தெரிவிக்காத போதும் அரசாங்க வட்டாரங்கள் மற்றும் இந்து பத்திரிகை என்பன இந்த சந்திப்பு நடந்ததை உறுதிப்படுத்தின. மேலும், ஆப்கானிஸ்தானுக்கு பாரிய உணவுத் தேவைக்கான உதவிகளையும் மற்றும் பிற உதவிகளையும் இந்தியா நன்கொடையாக வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்களின் புதிய யதார்த்தம் என்பதனுள், 'சர்வதேச சமூகத்தால் புதிய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வம் அங்கீகரிக்கப்பட முயல்வதை அவதானிக்க முடிகிறது. அதனடிப்படையில் தலிபான்கள் அரசாங்கத்தை அமைப்பதில் தங்கள் உறுதிப்பாட்டை வைத்திருக்க அந்நாடுகள் விரும்புகின்றன. அது மட்டுமல்லாது மற்றைய நாடுகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும் செயற்பாடுகளை தலிபான்கள் நிறுத்தவும், நாடுகடந்த போதைப்பொருள் வழிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் ரஷ்யா தலைமையிலான அணி திட்டமிடுகிறது. மேலும் அண்டை நாடுகளுடன் நட்புறவை தொடர்தல், தங்கள் பகுதிகளை பயங்கரவாதக் குழுக்கள் பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய' அழைப்பு அந்த அணியினால் விடுக்கப்பட்டது.

இந்திய தரப்புடனான தலிபான்களின் சந்திப்பு விபரங்களை ட்விட்டர் தளத்தில் வெளியிட்ட முஹாஜித், 'இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் முரண்பாடுகளை கணக்கில் எடுத்துக்கொள்வது மற்றும் இராஜதந்திர பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது அவசியம் என்று கருதினர்.

ஆப்கானிஸ்தானுக்கு பரந்த அளவிலான மனிதாபிமான உதவிகளை வழங்க இந்தியத் தரப்பு இறுதியாகத் தயாராக இருப்பதாகக் கூறியது.' எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்ட் 15 காபூலை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அதிகார பூர்வமாக உதவி அறிவித்தது இதுவே முதல் முறையாகும்.

தலிபான்களுடன் உடன்படுவதில் இந்தியாவின் முந்தைய கடுமையான நிலைப்பாட்டில் ஒரு தீர்மானமான மாற்றத்தை ஆப்கானிஸ்தானின் புதிய யதார்த்த ஒப்பந்தம் குறிக்கிறது. கடந்த சில மாதங்களில், டோஹாவில் உள்ள இந்தியத் தூதர் தலிபான் பிரதிநிதிகளைச் சந்தித்தார் மற்றும் இந்திய குழுவினர் டோஹாவில் தலிபான் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய மற்றொரு பன்னாட்டு கூட்டத்தில் பங்கேற்றனர். எவ்வாறாயினும், காபூலில் புதிய ஆட்சியின் ஒரு பகுதியாக இருக்கும் தலிபான் அதிகாரிகளுடன் யூரேசியாவுக்கான இந்திய வெளிவிவகார இணைச் செயலாளர் ஆதர்ஷ் ஸ்வைகாவையும் உள்ளடக்கிய தூதுக்குழு நேரடியாக சந்தித்தது. இந்தியாவைச் சேர்ந்த முதல் அதிகாரபூர்வ பங்கேற்பாக இது அவதானிக்கப்படுகிறது. இந்தியாவின் ஈடுபாட்டு அரசியல் நகர்வை கவனமாக அவதானிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

ஒன்று, தென்னாசிய பிராந்திய அரசியலில் நழுவும் பிடிகளை இந்தியா மீள அரவணைக்க முயலுகிற தோற்றப்பாட்டை வெளிப்படுத்துகிறது. தென்னாசிய பிராந்தியத்தில் அண்மைக் காலத்தில் சீனாவின் ஆதிக்கமானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சீனாவின் 'ஒரே பாதை ஒரே பட்டி முன்முயற்சி' மூலோபாய திட்டத்தின் மூலம் உட்கட்டமைப்பு அபிவிருத்தியை மையப்படுத்தி தென்னாசிய நாடுகளுடன் உறவை பிணைத்த சீனா கொரோனாவிற்கு பின்னரான அரசியல் நகர்வுகளில் தடுப்பூசி மூலம் உறவை இறுக்கப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்னாசிய நாடுகளுடனான உறவை மீள்கட்டுமாணம் செய்வதற்கான நடவடிக்கைகளை இந்தியா தற்போது விரைவுபடுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே ஆப்கானிஸ்தானின் புதிய யதார்த்த உடன்பாடும் அமையப் பெறுகிறது.

இரண்டு, அமெரிக்காவை தவிர்த்து சுயாதீனமாக தென்னாசிய அரசியல் நகர்வுகளை தீர்மானிக்க இந்தியா முற்பட்டுள்ளமையை ஆப்கானிஸ்தானின் புதிய யதார்த்த உடன்பாட்டில் அவதானிக்க கூடியதாக உள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க இராணுவத்தின் வெளியேற்றம் மற்றும் ஆக்கஸ் ஒப்பந்தத்தில் இந்தியாவை தவிர்த்து அமெரிக்கா அவுஸ்ரேலியாவுடன் ஒப்பந்தங்கள் மேற்கொண்டமை என அமெரிக்கா சார்ந்த வெளியுறவுக்கொள்கை தொடர்பில் கடுமையான விமர்சனத்தை இந்திய ஆய்வாளர்கள் உருவாக்கியிருந்தனர். இந்நிலையிலேயே அமெரிக்கா புறக்கணித்த உடன்பாட்டிற்கு இந்தியா ரஷ்யா, சீனாவுடன் இணைந்து கையெழுத்திட்டுள்ளது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கூட்டத்தின் ஆரம்பத்தில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், 'இந்த முறை எங்கள் அமெரிக்க சகாக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கு நாங்கள் வருந்து கிறோம். தொடர்ச்சியான இரண்டாவது முறையாக அமெரிக்கர்கள் விரிவாக்கப்பட்ட ட்ரொய்கா (ரஷ்யா- , அமெரிக்கா, -சீனா, -பாகிஸ்தான்) கட்டமைப்பிற்குள் ஒரு சந்திப்பைத் தவிர்த்தனர். சில முக்கிய பிரச்சினைகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நான் நம்புகிறேன்' என்று தெரிவித்திருந்தார்.

மூன்று, ஆப்கானிஸ்தான்-, சீனா உறவில் இந்தியா கவனத்தை செலுத்த ஆரம்பித்துள்ளதா என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் பிராந்திய அரசியலில் சீனாவின் நெருக்கீடு அதிகரித்த காலப்பகுதியில் இந்தியாவின் முன்னாள் ஜனநாயக தலைவர் அஸ்ரப் கானி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கமே இந்தியாவிற்கு பிராந்தியத்தில் மிக நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக காணப்பட்டது. எனினும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர் நிலைமை மாற்றமுற்றது. தலிபான்களுக்கான ஆதரவை சீனா முதன்முதலில் அறிவித்ததுடன் சீனா-, ஆப்கானிஸ்தான் உறவு நெருக்கமானது. மாறாக இந்திய- ஆப்கானிஸ்தான் உறவு அதிக நெருக்கடிக்குள் உள்ளானது. இந்நிலையிலேயே தற்போது ரஷ்யா தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் புதிய யதார்த்தத்துக்கான உடன்பாட்டில் ஆப்கானிஸ்தானுடனான உறவை சீர்செய்வதில் இந்தியா இணங்கிச் செல்வது சீன, -ஆப்கானிஸ்தான் உறவை கவனத்தில் எடுத்துள்ளமையையே வெளிப்படுத்துகிறது.

நான்கு, இந்தியா ரஷ்யாவுடன் கொண்டுள்ள நட்புறவை தொடர்ச்சியாக பேணும் இயல்பு அவதானிக்கப்படுகிறது. பனிப்போர் காலத்தில் ரஷ்யாவுடன் இந்தியா அதிக நெருக்கத்தை வெளிப்படுத்தி இருந்தது. எனினும் தற்போது அமெரிக்கா தலைமையிலான அரசியல் காலப்பகுதியில் அமெரிக்காவுடன் மிக நெருக்கமான உறவை வளர்த்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் இந்தோ-, பசுபிக் தந்திரோபாயத்தில் இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் முகவராகவும் இந்தியாவே செயற்பட்டு வருகிறது. எனினும் பாரிய ஆயுத ஒப்பந்தங்களில் ரஷ்யாவுடன் இணக்கமான உறவையே இந்தியா பேணி வருகிறது. இந்நிலையில் ரஷ்யா முன்னெடுத்துள்ள தலிபான்களின் நிலைப்பாட்டில் இந்தியா இணங்கி செல்வது இந்தியா முற்றாக அமெரிக்க என்ற நிலை சாராது ரஷ்யாவுடன் நட்புறவை பேண விரும்பும் நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி நிற்கிறது.

ஐந்து, ஆப்கானிஸ்தானை கைவிட்ட அமெரிக்கா இந்தியாவுடனான உறவை பதிலீடாக கருதுவதுடன் இந்தோ-பசுபிக் மூலோபாயத்தினூடாக அத்தகைய இழப்பீட்டை சரிசெய்ய முயலுகிறது. ஆனால் இந்தியாவோ இப்பிராந்திய நாடுகளுடன் ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டு அமெரிக்காவுடனும் மேற்குடனும் உறவை பேணுவதில் அதிக கரிசனை கொண்டு இயங்குகின்றது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையில் பிராந்திய ரீதியில் விரிசல்கள் காணப்பட்டாலும், அர்த்த சாஸ்திரத்தில் கௌடில்யர் குறிப்பிட்டது போல் அயலவர் இயற்கையான எதிரி என்ற மனோநிலையிலிருந்து விலகாது செயற்பட முனைகிறது.

இதனால் சீனாவிற்கு எதிரான போக்கினை இந்தியா பின்பற்றுவதோடு அமெரிக்கா உட்பட்ட மேற்குடனும் ரஷ்யாவுடனும் ஒத்துழைப்பதில் கவனம் கொண்டு செயற்படுகிறது. எனவேதான் இந்தியா இந்தோ- பசுபிக் உபாயத்திற்கு இதனூடாக மறைமுகமாக சேவையாற்ற முயலுகின்றது என்று கருத முடியும். அதுவே இந்திய இருப்புக்கான அடிப்படைவாதம்.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments