மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து களத்தில் இறங்கிய கூட்டமைப்பு! | தினகரன் வாரமஞ்சரி

மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து களத்தில் இறங்கிய கூட்டமைப்பு!

இழுவைப் படகுத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரியும், விவசாயிகளுக்கு இரசாயன உரம் இல்லாமையைக் கண்டித்தும் கடந்த 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரையில் கடல்வழியாக ஒரு போராட்டமும், மறுதினம் வடக்கு, கிழக்கில் உள்ள கமலந சேவைகள் திணைக்களங்களுக்கு முன்னால் எதிர்ப்புப் போராட்டங்களும் என்றவாறு இரு வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

விவசாயிகள் மற்றும் மீனவர்கள் ஆகிய இரு தரப்பினரும் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளை எவரும் மறுப்பதற்கு இல்லை. இருந்த போதிலும், இவர்களைக் காரணம் காட்டி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட விதம் குறித்த மாறுபட்ட கருத்துக்கள் அரசியல்வாதிகள் மத்தியில் காணப்படுகின்றன.

குறிப்பாக மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவில் நடத்தப்படுமென அரசாங்கத்தின் சார்பில் கூறப்பட்டுள்ள நிலையில், திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டங்கள் குறித்து தமிழ் அரசியல்வாதிகள் பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தப் போராட்டங்களுக்குத் தனிப்பட்ட அழைப்பை விடுத்திருந்த நிலையில், தமிழ்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்களோ அல்லது அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களோ போராட்டங்களில் பங்கேற்காமை குறித்த விமர்சனப் பார்வைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டாவளையில் உள்ள தனது விவசாயக் காணிக்குச் சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அங்கு நெல் விதைப்பில் ஈடுபடுவது மற்றும் நிலத்தை ஏர் பூட்டி இழுவது போன்ற புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இவ்வாறு வெளியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும், சில ஊடகங்களிலும் விமர்சிக்கப்பட்டிருந்தன.

தென்னிலங்கை அரசியல்வாதிகள் போன்று அரசியல்தனம் மிக்க வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என விமர்சனங்கள் வெளியாகியிருந்தன. இருந்த போதும் தனது சொந்த விவசாய நிலத்தில் தான் நெல் விதைப்பில் ஈடுபட்டிருப்பதாக குறித்த உறுப்பினரின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர் அங்குள்ள விவசாயிகளையும் மற்றும் மீனவர்களையும் சந்தித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், போராட்டங்களை முன்னெடுப்பதற்கான அழைப்பினை விடுத்திருந்தார். இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையிலான சட்டமூலம் தனிநபர் சட்டமூலமாக எம்.ஏ.சுமந்திரன் அவர்களால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இது பின்னர் அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அப்போதைய மீன்பிடி அமைச்சரினால் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டம் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாமையால் சட்டவிரோதமான முறையில் இன்னமும் உள்நாட்டில் இழுவைப் படகுகள் பயன்படுத்தப்பட்டு மீன்பிடித் தொழில் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக தற்போதைய மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனக் குற்றஞ்சாட்டியே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தப் போராட்டம் குறித்து தமிழரசுக் கட்சியின் தலைமையிடமோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுடனோ கலந்துரையாடப்படவில்லையெனத் தெரியவருகிறது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இந்தப் போராட்டத்துக்கு தாம் அழைக்கப்படவில்லையென்றும், அதனால் பங்கெடுக்கப் போராட்டத்தில் போவதில்லையென்றும் பகிரங்கமாக அறிவித்திருந்தனர். அதேபோல தமிழரசுக் கட்சியின் தலைவருக்கும் பின்னரே அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மாத்திரமே போராட்டத்தில் பங்கெடுத்திருந்தார். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கெடுக்கவில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆதரவாளர்களுடன் ஏற்பாடு செய்த போராட்டங்கள் என்ற தோற்றப்பாட்டையே இப்போராட்டங்கள் ஏற்படுத்தியிருந்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ரவிகரன் போன்ற ஒருசில அரசியல் பிரமுகர்களே கடல் வழியான படகுப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இழுவைப் படகுகளைப் பொறுத்த வரையில் உள்நாட்டு இழுவைப் படகினால் மீனவர்கள் பாதிக்கப்படுவதை விட, தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக உள்நுழையும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியே எமது கடல் வளத்தைச் சுரண்டும் வகையில் அமைந்துள்ளது. இதற்கு எதிராக எந்த அரசியல்வாதிகளும் போராட்டங்களை முன்னெடுத்திருக்காத நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சரை இலக்கு வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்ைககளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த காலத்தில் பல்வேறு நடவடிக்ைககளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவர் இந்திய மத்திய அரசுடன் தொடர்பு கொண்டும் நடவடிக்ைககளை முன்னெடுத்திருந்தார். சமீபத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளியுறவு செயலாளரிடமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்தியிருந்தார். இந்திய மீனவர்களின் ஊடுருவல் நிறுத்தப்பட வேண்டுமென்பதே டக்ளஸ் தேவானந்தாவின் உறுதியான நிலைப்பாடாக இருந்து வருகின்றது.

ஆனால் இந்திய மீனவர்களின் ஊடுருவல் தொடர்பாக வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகள் பொருட்படுத்தியதில்லையென்பதை வடக்கு மீனவர்கள் நன்கறிவர். இந்நிலையில் தற்போது மீனவர் விவகாரத்தில் தமிழ்க் கட்சிகள் குரலெழுப்புவது சந்தேகங்களையே தோற்றுவித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, தாம் முன்னெடுத்த படகுப் போராட்டம் இந்திய அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் அல்ல என்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஊடகங்களுக்குக் கூறியிருந்தார். இதன் அடிப்படையில் பார்க்கும் போது விரைவில் நடைபெறவிருக்கும் மாகாணசபைத் தேர்தலை இலக்கு வைத்தும், பல்வேறு காரணங்களால் சரிந்துள்ள வாக்கு வங்கியை சீர்செய்யும் நோக்கிலும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களாகவே அரசியல் அவதானிகள் இதனை நோக்குகின்றனர்.

அதேவேளை, பசளைப் பிரச்சினை விவசாயிகளுக்கு நீண்ட நாட்களாகக் காணப்படும் பிரச்சினையாகவுள்ளது. எதிர்க்கட்சிகள் இதற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களை ஆரம்பித்துள்ள நிலையில் வடக்கு, கிழக்கிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. உண்மையில் விவசாயிகளின் உரப் பிரச்சினை மீது அக்கறை கொண்டிருந்தால் இதற்கான ஆர்ப்பாட்டங்களே முற்கூட்டியே முன்னெடுத்திருக்க முடியும். தென்னிலங்கை பெரும்பான்மைக் கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை ஆரம்பிக்கும் வரை தமிழ்த் தரப்பு பொறுத்திருந்திருக்க வேண்டிய தேவை இல்லை.

அது மாத்திரமன்றி உண்மையில் அரசாங்கத்துக்குத் தமது எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருந்திருந்தால் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து விவசாய அமைப்புக்களையும் இணைத்துப் பாரியதொரு போராட்டத்தை முன்னெடுத்திருக்க முடியும். அவசர அவசரமாக ஒரு சிலரின் அழைப்பில் இவ்வாறான போராட்டங்கள் நடத்துவதால் பாரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படப் போவதில்லை.

இது இவ்விதமிருக்க வடக்கு, கிழக்கில் நீண்ட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் பலவற்றுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். தொழில்வாய்ப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் இன்னமும் அவர்கள் மத்தியில் காணப்படும் நிலையில், அவற்றை நிவர்த்தி செய்வதற்கு வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகள் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. தேர்தல்களை இலக்கு வைத்து இதுபோன்ற பிரசார ரீதியிலான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதை விட அங்குள்ள மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதே காலத்தின் தேவையாகவுள்ளது.

பி.ஹர்ஷன்

Comments