நான் விவசாயிகளுக்கே முக்கியத்துவம் வழங்கி வருகிறேன்; தூண்டிவிடும் அரசியலுக்குள் அகப்பட்டு விடாதீர்கள் | தினகரன் வாரமஞ்சரி

நான் விவசாயிகளுக்கே முக்கியத்துவம் வழங்கி வருகிறேன்; தூண்டிவிடும் அரசியலுக்குள் அகப்பட்டு விடாதீர்கள்

நல்லது, கெட்டதை ஆராய்ந்து தீர்மானம் எடுங்கள்

மக்களைத் தூண்டிவிடும் அரசியலுக்கு அகப்பட வேண்டாம். எதிர்கால சந்ததிக்காக அணிதிரள்வோம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விவசாய சமூகத்தினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான் விவசாயிகளுக்கே முக்கியத்துவம் வழங்குகின்றேன். அந்த நம்பிக்கையை ஒரு போதும் சீர்குலைக்க மாட்டேன். அந்த வகையில் விவசாய மக்கள் நல்லது எது கெட்டது எது என ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் உடுபத்தாவ பகுதியில் இயற்கை பசளை தயாரிப்பு மத்திய நிலையம் ஒன்றை மேற்பார்வை செய்த நிகழ்வின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேற்படி மத்திய நிலையத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி உர உற்பத்தி முறைமை தொடர்பில் கண்காணித்ததுடன் உற்பத்திகளின் தரம் பேணுவதற்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் தொடர்பிலும் ஆராய்ந்தார்.

தொடர்ந்து அங்குள்ள விவசாய பண்ணையை மேற்பார்வை செய்த ஜனாதிபதி இயற்கை பசளையை உபயோகித்து மேற்கொண்டுள்ள பயிர்ச் செய்கையை பார்வையிட்டார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி,

விவசாய சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவது தமது எதிர்பார்ப்பு என்றும் அதற்கிணங்க இதுவரை அரசியல் தலைவர்கள் எடுத்திராத கஷ்டமான தீர்மானத்தை விவசாயிகளுக்காக தாம் மேற்கொள்ளத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின்போது யுத்தம் செய்ய வேண்டாமென பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்த போதும் முப்பது வருட யுத்தத்தை நிறைவு செய்ய முடிந்துள்ளது என்றும் அதேபோன்று எத்தகைய தடைகள் வந்தாலும் பசுமை விவசாயத்தை வெற்றி கொள்ளப் போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தமது தேவை வாக்குகள் அல்ல என்றும் மக்களுக்கு சரியானதை செய்ய வேண்டும் என்றும் அதற்காக துணிச்சலுடன் தீர்மானங்களை மேற்கொண்டு மக்களின் தேவைகள் தொடர்பில் மட்டும் கவனம் செலுத்துவதற்குத் தயார் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உலகின் பல்வேறு உர உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு அழுத்தங்களையும் தடைகளையும் மேற்கொண்டு வரும் நிலையில் எதற்கும் பயப்பட போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி, மக்கள் தம்மை தலைவராக தேர்ந்தெடுத்தமைக்கான சரியான தீர்மானத்தை தாம் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட அரசியல்வாதிகள் மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Comments