நாளை முதல் அடையாள அட்டை அலுவலக சேவை | தினகரன் வாரமஞ்சரி

நாளை முதல் அடையாள அட்டை அலுவலக சேவை

கொரோனா பரவலால் இடைநிறுத்தப்பட்டிருந்த அடையாள அட்டை விநியோகிப்பதற்கான ஒரு நாள் சேவை நாளை திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என்று ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலகதெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,..

கொரோனா நிலைமையால் இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான ஒரு நாள் சேவை மற்றும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்த சேவை பெறுனர்களுக்காக நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஒரே சந்தர்ப்பத்தில் ஆட்பதிவு திணைக்களத்தின் முன்பாக பெருமளவான மக்கள் சேவையைப் பெறுவதற்காக ஒன்று கூடுவது அபாயம் மிக்கது என்பதால்,மட்டுப்படுத்தப்பட்டளவில் சேவை பெறுனர்களை பத்தரமுல்லை பிரதான அலுவலகத்திற்கும்,காலி தென் மாகாண அலுவலகத்திலும் இந்த ஒரு நாள் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே ஒரு நாள் சேவையைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ள சேவை பெறுனர்கள் கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தை குறித்த பிரதேசத்தில் உள்ள பிரதேச செயலக அடையாள அட்டை பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதன் போது தமக்கு வருகை தருவதற்கு உகந்த நாளையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

அதற்கமைய குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் திணைக்களத்திற்கு வருகை தர வேண்டும்.

அவ்வாறின்றி குறித்த தினத்தில் வருகை தர முடியாவிட்டால் மீண்டும் பிரதேச செயலகத்திற்குச் சென்று மீண்டுமொரு நாளையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

தற்போது சாதாரண சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கான இலக்கத்தை பெற்றுக் கொண்டுள்ள விண்ணப்பதாரிகள் பிரதான அலுவலகத்திற்கு வருகை தந்து சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments