பெற்றோரின் அனுமதியுடனேயே இனி மாணவர்களுக்கான தடுப்பூசி | தினகரன் வாரமஞ்சரி

பெற்றோரின் அனுமதியுடனேயே இனி மாணவர்களுக்கான தடுப்பூசி

மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படும்போது, பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில், கல்வி அமைச்சின் பாடசாலை செயற்பாடுகள் தொடர்பான மேலதிக செயலாளர் எல்.எம்.பி. தர்மசேன தெரிவித்துள்ளார். பெற்றோர்களின் அனுமதிக்கான விண்ணப்பப்படிவம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் தொடர்பான தகவல்களை, சுகாதார வைத்திய அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகள் ஆகியோரிடம் பெற்றோர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன், கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வித் திணைக்களம் என்பனவற்றின் இணையத்தளங்களில், எதிர்காலத்தில் இந்தத் தகவல்கள் பதிவேற்றப்படும். நீண்ட காலமாக வீடுகளிலேயே இருந்தமையால், மாணவர்களின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்பதனால், தடுப்பூசி ஏற்றத்திற்காக சில சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு தங்களின் சீருடையை அணிந்துசெல்ல முடியாத நிலை ஏற்படலாம்.

எனவே தடுப்பூசி ஏற்றத்திற்கு சீருடை அத்தியாவசியமாக்கப்படவில்லை என்பதுடன், சீருடை உள்ளவர்கள் அதனை அணிந்து செல்ல முடியும். அவ்வாறின்றேல், தடுப்பூசி ஏற்றத்திற்கு பொருத்தமான ஆடையை மாணவர்கள் அணிந்து செல்ல முடியும். இதன்போது அடையாள அட்டை உள்ள மாணவர்கள் அதனை கொண்டுச் செல்ல வேண்டும்.

தங்களது மாணவர்கள் தொடர்பான விபரங்களை அதிபர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சின் பாடசாலை செயற்பாடுகள் தொடர்பான மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

Comments