நிறைவாக வாழ்ந்து மறைந்த நாட்டுப்புற கலைஞன் | தினகரன் வாரமஞ்சரி

நிறைவாக வாழ்ந்து மறைந்த நாட்டுப்புற கலைஞன்

பெருந்தோட்டப் பின்புலமே இவரது வாழ்வியல் சூழலாகும். இதனால் கிராமிய கீர்த்தனைகளை சுவாசித்து மூச்சுவிட்டவர். நிகழ்கலை ஆட்டங்களான கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் இவைகளோடு நாடகங்களும் இவரை ஈர்க்கலாயிற்று. பெருந்தோட்ட கலாசாரத்துடன் வாழ்ந்த இவர், 1956 ஜுலை 6ஆம் திகதி யூரி குரூப் தோட்டத்தில் பிறந்து அதே தோட்டப் பாடசாலையில் கல்வியைத் தொடர்ந்தவர். (அன்றைய பசறை தமிழ் மகா வித்தியாலயம்) பசறை தமிழ் தேசிய கல்லூரியில் கல்வி பயின்றதுடன் பதுளை, சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் படிப்பை நிறைவு செய்தார்.

ஒரு சமூகம் தலைநிமிர வேண்டுமாயின் பாரம்பரியங்களின் பாதுகாப்பு அவசியமாகின்றது.

மலையகத்தை பொறுத்தளவில் துளிர்க்கின்றவர்களை விட உதிர்கின்றவர்களே அதிகம் என்பது இவரது ஆழ்மனதில் பதிந்துள்ளது. காரணம் முளைத்தெழும்போதே அடங்கலும் ஒதுக்கலும் அவர்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி விடுகின்றது. இன்றைய நிலையில் போலல்லாது 1970களில் மனங்குமுறிய இளைஞர்கள் மலையகத்தில் புதியதொரு தேடல் நாடி புறப்பட்டவர்கள் வரிசையில் இவரும் ஒருவராவார். இக் காலகட்டத்தில் ஹட்டன் பகுதியில் மலையக மக்கள் சார்பில் எழுந்த எழுச்சிக்குரல் இர. சிவலிங்கம், எஸ். திருச்செந்தூரன் ஆகியோருடையது. இவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் வேலாயுதம்.

பிரஜாவுரிமை என்ற அவலம் இவரையும் விட்டுவைக்காததால் தனியார் தொழில்துறையில் பயணத்தை தழுவிக் கொண்டவர். அமரர் ஏ.என். மணி எனும் தொழிற்சங்கப் போராளியின் தொடர்பினால் இடதுசாரி இயக்கமான இலங்கை கம்யூனிச கட்சியோடு இணைந்து அமரர் எஸ். நடேசனின் தலைமையில் இயங்கிய ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் இணைந்து தொழிற்சங்கப் பணியில் ஈடுபட்டவர்.

1960களின் இறுதியில் எழுதத் தொடங்கிய பசறையூர் க. வேலாயுதம் எனும் இயற்பெயரோடும், தாடிவளவன், இளமை உழவன் என்ற புனைபெயர்களோடும் கட்டுரை, கவிதை, துணுக்கு எழுதுவதில் கால்பதித்தவர். அத்தோடு முச்சந்தி முனியாண்டி என்ற பெயரில் முக்கிய சேதிகளையும் சொன்னவர். பசறையில் வாழ்ந்த காலத்தில் தனியார் பிரத்தியேக வகுப்புக்கள், இலக்கிய நிகழ்வுகள், ஆன்மீகப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என்பவற்றோடு பல்வேறுபட்ட சமூக நிகழ்வுகளில் இணைந்து கொண்டார். இக் காலத்தில் தனது மலையக இசைக்கொத்து என்ற சிறிய நூலையும் வெளியிட்டவர்.

1970களின் இறுதியில் ஹப்புத்தளைக்கு வந்த இவர், உஸ்கொட் (uscod) நிறுவனத்தில் மக்கள் பிரதிநிதியாக பணியாற்றத் தொடங்கினார். அக்காலத்தில் குன்றின் குரல், இளஞ்சுடர் போன்ற வானொலி நிகழ்ச்சிகளோடு நாடகம், கலைவிழா, கருத்தரங்கு, கவியரங்கு, ஆய்வரங்கு, பிரத்தியேக வகுப்புக்கள் என்று பல்வேறு நிகழ்வுகளை நடாத்தியவர்.

1978இல் ஆரம்பித்த கலைமகள் கல்வி நிலையம், ஹப்புத்தளை கலை இலக்கிய வட்டம் என்பன இவரை அடையாளப்படுத்திக் கொண்டிருந்ததோடு நூல் அறிமுகம், மனித உரிமை கருத்தரங்குகள், பாரம்பரிய கலை நிகழ்வுகள், சர்வதேச சிறுவர் தினம், சர்வதேச மகளிர் தினம், முதியோர் தினம், கலைஞர்கள் கெளரவிப்பு போன்ற நிகழ்வுகளை நடாத்திய பெருமைக்குரியவர்.

1983 இனக்கலவரம் எல்லோரையும் போல் இவரது தலைவிதியையும் மாற்றியது. இவர் சேகரித்து வைத்திருந்த ஆவணங்கள் யாவும் எரிந்து சாம்பலானது. மலையகத்தின் பல்வேறு கலைஞர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், மூத்த படைப்பாளிகள் பலரை சந்திக்க வைத்த நிகழ்வுகள் இவரது முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்தது.

ஊவா மாகாணத்தில் இடம்பெற்ற சாகித்திய விழாக்களிலும் கலந்துகொண்டு பல மட்டத்திலும் பங்களிப்பு செய்தவர். ஊவா மாகாணத்தில் வெளிவந்த சாகித்திய மலர்களில் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றது போலவே குறிஞ்சிக் கதம்பம் கவிதைத் தொகுப்பிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றன. மூட்டத்தில் முகிழ்ந்த, முத்துக்கள் என்ற இவரது நாட்டுப்புற ஆய்வு நூல் அச்சேறாமல் போய்விட்டது. இருந்தும் மீண்டும் அந்த தொகுப்பை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹல்துமுல்லை, அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரியம்மன் திருவூஞ்சல் பாடலை எழுதி சிறு நூலாகவும் வெளியிட்டவர். ஊவா மாகாண சாகித்திய விழாவில் கவிப்பரிதி மற்றும் நாட்டார் கலைக்காவளர் என்ற அதிஉயர் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டவர். தொடர்ந்து கலைமணி, கவிச்சுடர், பாட்டாளிகளின் பாவலன் இவையெல்லாம் இவர்பெற்ற விருதுகளாகும். இறுதி மூச்சுவரை இலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்டிருந்த கவிஞர் வேலாயுதம் தோட்டப்புற ஆலயங்களுக்குச் சென்று ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்தியவர். இந்நிலையில் இருதய நோய்க்கு ஆளானார்.

நாட்டுப்புற கலைகளுடன் தொடர்புடைய தமிழகத்தைச் சேர்ந்த நவநீதம் கிருஷ்ணன் தம்பதிகள், இலங்கையின் மெட்ராஸ் மெயில்,பேராசிரியர்களான சி.மெளனகுரு, செ.யோகராஜா, சட்டத்தரணியும் நாட்டுப்புற ஆய்வாளருமான முத்துமீரான் போன்ற பலரோடும் தொடர்பு கொண்டவர். சாரல்நாடன், மு. சிவலிங்கம், மாத்தளை வடிவேலன் போன்றவர்களது பதிவுகளிலும் இவர் இடம்பெற்றுள்ளார். தேயிலை தேசத்தில் தேவியின் தரிசனம், மலையக இசைக்கொத்து, மலைக்கனி, கலைமகள் போன்ற நூல்களின் ஆசிரியராகவும் தர்மோதயம், புதிய எழுச்சி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் அகச்சுடர், இதயத்தூரல் போன்ற சிறப்பு மலர்களின் தொகுப்பாசிரியராகவும் விளங்கியவர்.

இலங்கையில் வெளிவரும் தமிழ் ஊடகங்கள் பலவற்றில் பல்வேறு கட்டுரைகளையும், நாட்டுப்புற இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகளையும் தொடர்ச்சியாக எழுதியவர். ஊவா தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகவும், அப்புத்தளை கலை இலக்கிய வட்டத்தின் தலைவராகவும், ஊவா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவராகவும் (யுனி மீடியா) இன்னும் பல ஆன்மீக கலை அமைப்புக்களின் முக்கிய பங்காளராகவும் திகழ்ந்தவர். ஹட்டனில் நடைபெற்ற மலையக பாரம்பரிய கலைஞர்கள் பாராட்டு விழாவில் இவர் கெளரவிக்கப்பட்டதோடு ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்தார். அவ்வாறே பல ஆய்வரங்குகளில் தனது ஆய்வுகளை முன்வைத்துள்ளார். களனி பல்கலைக்கழகத்தின் மொழியியல் பேராசிரியரான விஜயரத்ன அவர்களோடு இணைந்து மலையகத்தின் மொழி வழக்காறுகளை தேடியவர். அழிந்துபோகும் ஆவணங்களைத் தேடித் தெரிந்து பாதுகாக்கும் ஒரு ஆவணக்காரராகவும் விளங்கியதுடன் மலையக இந்திய நுண்கலைப்பீடம், கண்டிகலை இலக்கிய ரசிகர் வட்டம் ஆகியவற்றுடன் சேர்ந்து மலையக இலக்கிய வளர்ச்சிக்கு ஒரு மூல விசையாகவும் விளங்கியவர்.

ஹப்புத்தளை நகரசபையின் வாடகை சபை உறுப்பினராகவும், தொழில் அமைச்சின் சம்பள நிர்ணய சபை உறுப்பினராகவும், பதுளை மாவட்டத்தின் பிரஜைகள் குழுவின் இணைப்பாளராகவும், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ்வரும் வரையறுக்கப்பட்ட ஊடகத்துறை கூட்டுறவு சங்கப் பணிப்பாளராகவும் விளங்கியவர். இவரது இலக்கியம், ஆன்மீகம் பற்றியதும் உயிர்ப்புள்ள நாட்டுப்புற கலைகள் பற்றியதுமான உரைகள், சிறப்பு நேர்காணல்கள் ஊவா சமூக வானொலி போன்ற உள்ளூர் ஊடகங்களில் ஒலித்துள்ளதோடு இவரது கட்டுரைகள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பாகின. மொத்தத்தில் மலையக நாட்டுப்புறவியல் தொடர்பாக இவரினது முழுமையான பங்களிப்பு இக்கலையை இன்றுவரையும் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது என்பது நிகழ்வுகளினதும் நிஜங்களினதும் உண்மையாகும்.

இவரது முடிவில்லாத கலைப்பயணம் மலையக பாரம்பரியத்தைப் பாதுகாப்பதும் மலையக மக்களின் அடையாளங்களுக்கு உயிர் கொடுப்பதும் தனது பணிஎன்று வாழ்ந்த இந்த நாட்டுப்புற கலைஞர் 2019ம் ஆண்டு நவம்பர் 16ம் திகதி தமது அன்புத் துணைவியார் ஜோதீஸ்வரி, குழந்தைச் செல்வங்களான மோகன வதனி, குணாதினி, ஜெனோஷன் ஆகிய அன்புச் செல்வங்களையும் நம்மையும் விட்டுப் பிரிந்தார். ஊவா மாகாணம் மட்டுமல்ல, மலையகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல்வாதிகள், ஆன்மீக பெரியார்கள், அறிஞர்கள், கலைஞர்கள், கவிஞர்கள்,எழுத்தாளர்கள் உட்பட நண்பர்கள் அனைவரும் ஒன்றினைந்து இவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

தொகுப்பு -:
எச்.எச். விக்ரமசிங்க

Comments