லக்ஷ்மி; மொழிபெயர்ப்பின் தாரகை | தினகரன் வாரமஞ்சரி

லக்ஷ்மி; மொழிபெயர்ப்பின் தாரகை

ஆங்கில செவ்வியல் இலக்கியத்திலிருந்து, இந்திய ஆங்கில எழுத்துகளை நோக்கி நகர்ந்து, பின் தமிழ் சிருஷ்டிகளை ஆங்கிலத்திற்குக் கொண்டு சேர்க்கும் பிராந்தியத்தில் லக்ஷ்மி கால் பதித்தபோது, அவர் ஐம்பது வயதைத் தாண்டியிருந்தார். அவர் தமிழ் -ஆங்கில மொழிபெயர்ப்புப் பணிக்காகத் தனது ஆசிரியப் பணியைத் துறந்தபோது, தனது இலட்சியம் பற்றிய பூரண தெளிவு அவரிடமிருந்தது.

'நூலாசிரியையாக, மொழிபெயர்ப்பாளராக, ஆய்வறிவாளராகத் திகழ்ந்த லக்ஷ்மி, தமிழ் எழுத்தாளர்களை எங்களின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர் என்ற வகையில், தனது மொழிபெயர்ப்புப் பணியால் கண்டங்கள் கடந்தும் கெளரவம் பெற்றவராகிறார். பொதுவில் எழுத்தாளர்கள் என்று மட்டுமல்ல, சக பெண்களுடன் தன்னை இனங்காண்பதில் ஒரு பொதுத்தளத்தைச் சிருஷ்டித்திருந்தார். மிகத் துணிச்சலோடும், அவரது கலாசாரத்தின் உறுதிப்பாட்டோடும் அவர் அதனைச் சாதித்தார். இங்கிலாந்தின் அடிமட்டப் பெண்கள் மத்தியில் அவர் காட்டிய ஐக்கியத்தில், இந்த தாபம் வெளிப்பட்டது. South Asian Diaspora Literature, Arts Archive போன்ற அமைப்புகளில் அவர் காட்டிய ஈடுபாடு இத்தகையதுதான்' என்கிறார், அவருடன் நெருங்கிப் பணியாற்றிய அமெண்டா ஹொப்கின்சன் அம்மையார்.

'என் வாழ்வின் தொழில் சார்ந்து நான் எதிர்கொள்ள நேர்ந்த மோசமான அனுபவங்களின்போது, உயரிய நட்புணர்வோடும், தோழமை ஐக்கியத்துடனும் எனக்குத் துணையாக நின்றார். பால் சார்ந்த பாகுபாடுகள், பெண்களை இளக்காரமாகப் பார்த்தல் போன்ற விவகாரங்களில், அவர் எதிலும் விட்டுக்கொடுக்காத மன உறுதியைக் காட்டினார்' என்கிறார் அமெண்டா.

லக்ஷ்மி வியப்பூட்டும் அளவிற்கு, சுதந்திர உணர்வு கொண்டவராகத் திகழ்ந்தார். சிருஷ்டிகரமான சிந்தனையாளர். அவர் எப்போதும் கிளர்ச்சிக்காரியாகவே இருந்திருக்கிறார்.

புலமை நாட்டம் மிக்க அவர் விரும்பியிருந்தால், academic துறையில் பிரகாசித்திருக்க முடியும். அவர் அதிலிருந்து தூர விலகி நின்றார். 'ஆண்கள் அச்ச உணர்வோடும், சற்று சீரியஸாகவுமே புலமைசார் துறைகளைத் தம் கையகப்படுத்திக் கொண்டுவிட்டனர்' என்று லக்ஷ்மி ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்தப் போலிக்கூட்டத்திலிருந்து வெளியேறிய அவர், நலிந்து போனவர்களின் படைப்புகளை; பிரதான நீரோட்டத்தில் கொலுவீற்றிருக்கும் சிருஷ்டிகளுக்கு நிகரான படைப்புகளை, தன் சொந்த மொழியில் தேடித் திரிந்தார்; இந்திய மொழிகளிலே தேடினார்.

The Inner Courtyard: Stories by Indian Women என்ற தலைப்பில் Virgo என்ற ஆங்கிலப் பதிப்பகத்தின் மூலம், 1990ஆம் ஆண்டு லக்ஷ்மி உருது, வங்காளம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளில் இந்தியப் பெண் எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்துப் பதிப்பித்து வெளியிட்டபோது, சல்மான் ருஷ்டியையும் விக்ரம் சேத்தையுமே இந்திய இலக்கியமாகப் படித்துக்கொண்டிருந்த சூழலில், இந்தத் தொகுப்பு மந்தமாருதமாய், புதிய சாளரங்களைத் திறந்துவிட்டது.

இந்த வெற்றிகரமான அறுவடைக்குப் பின், Writing from India (Figures in a landscape) (1994) என்ற தொகுதியை அடுத்து, அம்பையின் சிறுகதைகளை A Purple Sea (1992) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற செவ்வியல் இலக்கியங் களை ஆங்கில உரைநடையில் - Silappadikaram and Manimekalai (Illustrated Classics) - 1996ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

அசோகமித்திரனின் 'அப்பாவின் சிநேகிதர்' என்ற சிறுகதைத் தொகுப்பு My Father's Friend என்ற தலைப்பில் லக்ஷ்மியின் மொழிபெயர்ப்பு 2002 இல் வெளியாகியது. நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த சுந்தர ராமசாமியின் படைப்புகளின் ஆங்கில வெளியீடாக Waves: An Anthology of Fiction and Poetry (Chennai: East-West Press, 2001) என்ற நூல் வெளியான போது, அது உலக அரங்கின் கவனத்தை ஈர்த்தது. பாமாவின் 'கருக்கு' (Karukku – Macmillan India, 2000), இமயத்தின் 'கோவேறு கழுதைகள்' (Beasts of burden Chennai: East-West Press, 2001) ஆகிய நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு, தமிழில் எழுந்த தலித் இலக்கியங்களை வெளி உலகிற்கு எடுத்துச்சென்றன.

புதுமைப்பித்தன், மெளனி, மாதவையா, ந.முத்துசாமி, சல்மா போன்றோரின் சிருஷ்டிகள் உலக வெளியில் பேசப்படுவதற்கு லக்ஷ்மியின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் பெரிதும் துணைபுரிந்தன. பேராசிரியர் க.கைலாசபதி அமெரிக்காவின் பல பல்கலைக் கழங்களில் 1980 காலப்பகுதியில் நவீன தமிழ் இலக்கியம் பற்றி உரையாற்றியபோது, அங்கு வாசிப்பதற்காக ஆங்கில மொழியில் தமிழின் நவீன இலக்கியங்கள் குறித்து வெளியான எந்த நூலையும் காணமுடியாத நிலையே இருந்தது.

நாங்கள் லக்ஷ்மியைச் சென்று சந்தித்த பொழுதுகளில் அவருக்கு ஈழத்து இலக்கியம் பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. பத்மநாப ஐயர், ஈழத்துக் கவிதை நூல்களை லக்ஷ்மியிடம் குவித்துவிட்டார். லக்ஷ்மிக்கு ஈழத்து இலக்கியத்தை முழுவதும் அறிமுகம் செய்தவர் பத்மநாப ஐயரே ஆவார்.நாங்கள் அவருக்கு எந்த கவிதைத் தொகுப்பையோ எந்தக்கவிஞரையோ குறிப்பிட்டுச் சொல்லவில்லை.பின்னர் சாமர்த்தியம் நிறைந்த கவிஞர்கள் அவரை அணுகித் தமது கவிதைகளை மொழிபெயர்த்துக்கொண்டது வேறு கதை.

அவர் மொழிபெயர்த்த சில கவிதைகள் Hype பண்ணப்பட்ட கவிதைகள்.

ஒரு கவிதை:

'சமாந்திரமாய்ச் செல்லும்
கரிய தார் றோட்டில்,
நடந்து செல்கிறேன்.

கண்களில்,
பிரமாண்டமாய் நிலைகொண்டு
கறுத் திருண்ட
டச்சுக் கற் கோட்டை;
மூலையில்,
முன்னோரைப் பய முறுத்திய
தூக்குமரமும் தெளிவாய்.'

'சமாந்திரமாய்' என்பது தவறு.
'சமாந்தரமாய்' என்பதுதான் சரியான வழக்கு.

சமாந்தரமாய்ச் செல்லும் பாதை என்றால், எதனோடு அந்த பாதை சமாந்தரமாய் செல்கிறது என்று தெரிய வேண்டும். சும்மா ஒரு பாதை சமாந்தரமாகப் போகாது. அந்த பாதைக்கு சமாந்தரமாக ஒரு ரயில் பாதையோ அல்லது இன்னுமொரு சாலையோ சென்றாக வேண்டும்.

கவிஞருக்கு கறுத்திருண்ட டச்சுக் கோட்டை பிரமாண்டமாய் நிலை கொண்டு தெரிகிறது. இது தூரத்துப் பார்வையில் தெரிவது.

அடுத்து, மூலையில் முன்னோரைப் பயமுறுத்திய தூக்குமரமும் தெளிவாய்த் தெரிகிறதாம். கோட்டைக்குள் போய்ப் பார்த்தால்தான் மூலையில் தூக்குமரம் இருப்பது தெரிய வரும். அதுவும் கவிஞருக்கு அந்த தூக்கு மரம் 'தெளிவாய்'த் தெரிகிறது. உண்மையில் அங்கு தூக்குமரம் இருக்கிறதா? என்பதே சந்தேகம். இவர் எப்போதாவது கோட்டைக்கு உள்ளே போய் அங்கு தூக்குமரம் இருந்ததைப் பார்த்தாரா? என்றும் தெரியவில்லை. ஒருவேளை இருந்தாலும் இருக்கக்கூடும். எல்லாம் ஒரு ஊகம்தான். அது பெரிய கோட்டை. அங்கே எந்த மூலையில் அந்த தூக்குமரம் இருக்கிறது என்று யாருக்குத் தெரியும். நான் இருந்த வெலிக்கடை சிறைச்சாலையில் நாங்கள் இருந்த சிறைக்கூடத்திற்கு அருகில்தான் தூக்குத் தண்டனை வழங்கும் இடம் இருக்கிறது என்பார்கள். ஆனால், எனது ஓராண்டு காலத்தில் எனக்கு ஒருபோதும் அருகிலேயே இருந்ததாகக் கூறப்படும் தூக்குமரத்தை நான் ஒருநாளும் மங்கலாகக்கூடப் பார்த்ததில்லை. இவருக்கு அந்தத் தூக்குமரம் தெளிவாய்த் தெரிந்துவிடுகிறது. கோட்டையில் உள்ள சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இது தெரிய வந்தால் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆகிவிடும்.

ஆனால், இந்தக் கவிதையில் கோட்டை, தூக்குமரம், துவக்கு, காக்கி வீரர்கள், திடீர் சத்தம், சப்பாத்து, தெருவில் செத்து வீழ்தல் போன்ற இத்தியாதி அம்சங்கள் இதனை போர்ச் சூழலை பிரதிபலிக்கும் கவிதையாக ஆக்கியிருக்கிறது.

சென்னையில் பதிப்புத்துறை சார்ந்த ஒருவர் என்னிடம் 'துவக்கு' என்றால் என்ன என்று கேட்டார்.

இதனை மொழிபெயர்க்கும்போது லக்ஷ்மிக்கு இங்கு ஒரு பிரச்சினை எழுந்திருக்கிறது.

எப்படி ஒரு பாதை சும்மா தானே சமாந்தரமாகப் போகும் என்று அவருக்குப் பிரச்சினை எழுந்திருக்க வேண்டும். ஒரிஜினல் கவிதை யில் உள்ள மாதிரி அப்படியே மொழிபெயர்க்கலாகுமா?

I walk along

The darkened tar road

Running straight ahead of me

என்று லக்ஷ்மி அந்த பாதை தனக்கு முன்னால் விரியும் பாதை என்று அர்த்தப்பட மொழிபெயர்த்திருக்கிறார். இந்த றோடு running parallel என்று எப்படி மொழிபெயர்க்கக் கூடும்?

இம்மாதிரி அசட்டுத்தனமான கவிதைகளை மொழிபெயர்க்கும் நிலையில், பொதுப்புத்திக்கு பங்கம் வராத மாதிரி அவதானத்தோடு லக்ஷ்மி செயற்பட்டிருப்பதை நாம் இங்கு காண முடிகிறது.

The Rapids of a Great River: The Penguin Book of Tamil Poetry (2009) என்ற நூல் லக்ஷ்மியின் மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் வெற்றிப்பயணத்தை உறுதி செய்தது.

மு.நித்தியானந்தன்
இலண்டன்

Comments