அத்துரலியே ரத்ன தேரரின் எம்.பி. பதவி பறிபோகுமா? | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

அத்துரலியே ரத்ன தேரரின் எம்.பி. பதவி பறிபோகுமா?

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல்களின் முடிவுகளின் படி சுமார் 67,758 (58 சதவீத) வாக்குகளைப் பெற்ற அபே ஜன பல கட்சிக்கு தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்தில் ஓர் அங்கத்துவம் கிடைத்தது. இந்த அங்கத்துவத்துக்கு யாரை நியமிப்பது என்பதில் நீண்ட காலமாக நிலவிய சர்ச்சையை அடுத்து தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அத்துரலியே ரத்ன தேரர் நியமிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன் அபே ஜன பல கட்சி ரத்ன தேரரை கட்சியிலிருந்து நீக்கியதாக அறிவித்ததையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பாக மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ரத்ன தேரர் தனது பதவி நீக்கம் குறித்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி நீக்கினால் அவர் உடனடியாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பாரா? இல்லை. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பின்படி குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு அவருக்கு பிரதிநிதியாக இருக்க முடியும். குறிப்பிட்ட கட்சியின் செயலாளர் தமது கட்சி உறுப்பினரை நீக்கியிருப்பதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகத்துக்கு அறிவித்து ஒரு மாதம் முடிவதற்குள் தமது நீக்கத்தை ஆட்சேபித்து குறிப்பிட்ட உறுப்பினருக்கு உயர் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியும். உயர் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கினை விசாரித்து இரு மாதங்களுக்குள் அதன் தீர்ப்பினை அறிவிக்க வேண்டும். அரசியல் யாப்பின் 99/13 ஷரத்து இது தொடர்பாக இவ்வாறு கூறுகிறது. (13) பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்துக்கு வந்த நேரத்தில் அவரது பெயர் எந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் அல்லது சுயேட்சைக் குழுவின் நியமனப் பத்திரத்தில் காணப்பட்டதோ, அந்தக் கட்சியிலிருந்து அல்லது குழுவிலிருந்து விலகுவதன் மூலம் அல்லது விலக்கப்படுவதன் மூலம் அல்லது வேறு வகையில் அக்கட்சியின் அல்லது குழுவின் அங்கத்தவராக இல்லாதொழியுமிடத்து, அவர் அத்தகைய உறுப்பினராக இல்லாதொழியும் திகதியிலிருந்து ஒரு மாத காலப் பகுதி முடிவுற்றதன் பின்னர் அவரது ஆசனம் வறிதாதல் வேண்டும். ஆயின், பாராளுமன்ற உறுப்பினரொருவரை விலக்கும் சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்ட ஒரு மாத காலப் பகுதி முடிவுறு முன்னர் அவர் எழுத்து மூலமான மனுவின் மூலம் உயர் நீதிமன்றத்துக்கு விண்ணப்பித்து அத்தகைய விலக்கல் செல்லுபடியற்றதென அத்தகைய விண்ணப்பத்தின் மேல் உயர் நீதிமன்றம் தீர்மானிக்குமாயின் அவரது ஆசனம் வறிதானதாக ஆகாத அத்தகைய மனு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளால் விசாரிக்கப்பட வேண்டும். அத்தகைய மனுத் தாக்கல் செய்யப்பட்ட திகதியிலிருந்து இரு மாத காலத்துக்குள் அவர்கள் தமது தீர்மானத்தைச் செய்தல் வேண்டும். அத்தகைய விலக்கல் செல்லுபடியானது என உயர் நீதிமன்றம் தீர்மானிக்கின்ற விடத்து அந்தத் தீர்மானிப்புத் திகதியிலிருந்து அந்த வெற்றிடம் உண்டாகும். அத்துரலியே ரத்ன தேரர் உயர் நீதிமன்றத்தை நாடினால் அவரது எம்.பி. பதவி பற்றிய இறுதி முடிவு இரு மாதங்களுக்குள் எடுக்கப்படும். 2020 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் அபே ஜனபல என்ற புதிய கட்சியில் கூடுதலாக பௌத்தபிக்குகளே போட்டியிட்டனர். அக் கட்சிக்கு தேசியப்பட்டியலில் கிடைத்த ஒரே உறுப்பினர் பதவிக்குத் தெரிவு செய்வதில் நிலவிய சர்ச்சையையடுத்து 2020 டிசம்பர் 18ஆம் திகதி அத்துரலியே ரத்ன தேரர் நியமிக்கப்பட்டார். இம்மாதம் 15ஆம் திகதி அத்துரலியே ரத்ன தேரர் கட்சியிலிருந்து நீக்கி விட்டதாக அபே ஜன பல கட்சியின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்ததாக கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசந்த கொடிதுவக்கு தெரிவித்தார். தன்னை நீக்கியது தவறானது என ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இதேநேரம், ரத்ன தேரரின் பதவி நீக்கம் உறுதிப்படுத்தப்பட்டால் அவரது இடத்துக்கு பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட உள்ளதாக அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்ற ஒரு சர்ச்சை ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளும் ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் டயனா கமகேயை அக்கட்சி நீக்கியுள்ளது. அவர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக அறிவித்துள்ளார்.

என்.எம். அமீன்

Comments