கனேடிய வானொலியில் ஒலிக்கும் இனிய குரலுக்குச் சொந்தக்காரர் மும்தாஜ் கலீல் | தினகரன் வாரமஞ்சரி

கனேடிய வானொலியில் ஒலிக்கும் இனிய குரலுக்குச் சொந்தக்காரர் மும்தாஜ் கலீல்

2007ஆம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 14 வருட காலமாக கனடாவில் வசித்து வரும் கண்டியைச் சேர்ந்த திருமதி மும்தாஜ் கலீல், கனேடிய வானொலிகளில் 13 வருடங்களாக கடமை புரிந்து வருகிறார். கனடா வானொலி சேவையில் கடமை புரியும் முதலாவது முஸ்லிம் பெண் என்ற பெருமை இவருக்குரியது. எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாத இவரது கனேடிய வானொலிச் சேவை மகிழ்ச்சியைத் தருகின்றது. நிகழ்ச்சித் தயாரிப்புகளுக்கான இவரது தேடல்கள் நேயர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன.

எழில் கொஞ்சும் மலையகத்தின் கண்டி மாநகரிலுள்ள கட்டுகஸ்தோட்டையில் மஹ்ரூப் மரைக்கார் - சித்தி பௌசியா ஆகியோரின் அன்பு மகளாகப் பிறந்து வளர்ந்தவர்தான் திருமதி மும்தாஜ் கலீல். இவர் தனது ஆரம்ப கல்வியை புனித அந்தோனியார் கல்லூரியிலும், உயர் தர கல்வியை கண்டி பெண்கள் உயர்தர பாடசாலையிலும் கற்றவர். படிக்கும் போதே கலைத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதற்கு ஆசிரியர்களும், பெற்றோரும் ஊக்கம் வழங்கினர்.

யாழ்ப்பாண பட்டதாரி ஆசிரியர்களால் நன்கு வழி நடத்தப்பட்டவர். தமிழ் மொழியை ஆர்வமாக கற்பித்த ஆசிரியர்களின் ஊக்கப்படுத்தலினால் தமிழ்த் தின விழாக்களில் பேச்சுப் போட்டி, பா ஓதல், கட்டுரைப் போட்டி போன்றவற்றில் பங்கு பற்றி பாடசாலை மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் பலமுறை முதல் பரிசுகளைப் பெற்றுள்ளார்.

இதே வேளை இவர் உயர் தரம் படிக்கும் போது இல்லங்களுக்கிடையில் நடந்த நாடகப் போட்டியில் காசியப்பன் சரித்திர நாடகத்தில் அல்லி பாத்திரத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான பரிசையும் பெற்றுள்ளார். எழுத்துத் துறையிலும் மிகுந்த ஈடுபாடுடைய இவர் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு கவிதைகள் எழுதியுள்ளார். இவரது பெற்றோர் வாசிப்பில் மிகவும் ஆர்வமுள்ளவர்கள். இதன் மூலமே இவருக்கு எழுத்தில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை தனது எழுத்துக்கு தூண்டுகோலாக அமைந்ததாக குறிப்பிடும் இவர் திருமதி புர்கான் பீ இப்திகார் தனது எழுத்துக்கான மானசீக குரு என நன்றியுடன் நினைவு கூருகிறார்.

இந்திய எழுத்தாளர்களான லஷ்மி, அம்பை, கவிஞர் ஸல்மா ஆகியோர் தலைமையில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் 2002 ஆம் ஆண்டு கொழும்பில் மூன்று நாள் வதிவிட கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது

பெண் எழுத்தாளர்கள் பலர் பங்குபற்றிய இக்கருத்தரங்கில் கலந்து கொண்டதை தன்னால் மறக்க முடியாது என்று கூறும் இவர், இலங்கையின் பிரபல எழுத்தாளர்களான காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீன், அஷ்ரப் சிஹாப்தீன், இளையதம்பி தயானந்தா போன்றவர்களை இங்கு சந்திக்கக் கிடைத்தமை பசுமை நினைவுகள் என்றும் குறிப்பிடுகிறார்.

அதே ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டிலும் கலந்து கொண்டு இலங்கை எழுத்தாளர்களை மட்டுமல்ல இந்திய, சிங்கப்பூர், மலேசிய எழுத்தாளர்களையும் சந்தித்தமையையும் மறக்க முடியாத நிகழ்வாக குறிப்பிடுகிறார்.

2007 ஆம் ஆண்டு தனது சிறிய தாயாரின் ஒத்துழைப்புடன் குடும்பம் சகிதம் கனடாவில் குடியேறிய இவர் 2008 ஆம் ஆண்டில் கனடாவில் இயங்கும் ITR (ஐரீஆர்) தமிழ் வானொலியில் இணைந்துள்ளார். தனது கனேடிய வானொலி பிரவேசம் குறித்து இவ்வாறு கூறுகிறார்,

'தமிழ் பேசும் மக்கள் பரந்து வாழும் நாடு கனடாவாகும். பரப்பளவில் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு இது.

பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் இங்கு வாழ்கிறார்கள். எனினும் தமிழ் பேசும் மக்கள் டொராண்டோ மாகாணத்தில் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோர் வாழ்கிறார்கள்.

வர்த்தகத்தில் தமக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட தமிழ் மக்களுக்கு இலங்கை வானொலி தந்த இனிய நினைவுகளால் இன்று கனடாவில் பல வானொலி அலைவரிசைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இலங்கையில் தமிழ் மெல்லிசைப் பாடல்களில் தனக்கென முத்திரை பதித்த சகோதரர்களில் ஒருவரான எம். பி. கோணேஸினால் 1994 ஆம் ஆண்டு கனடாவில் ITR (ஐரீஆர்) வானொலி நிலையம் நிறுவப்பட்டது. இந்த வானொலி நிலையம் பிரபல வானொலியான FRANCE ITR (பிரான்ஸ் ஐரீஆர்) உடன் இணைந்த தரமான துல்லியமான வானொலி சேவையாகும். கனடா மட்டுமன்றி பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இதன் ஒலிபரப்பினைக் கேட்க முடியும்.

ITR (ஐரீஆர்) சர்வதேச தமிழ் வானொலி கனடாவில் முதல் தர வானொலிகளில் குறிப்பிடத்தக்கதாகும். இந்த வானொலி அலைவரிசையில் 2009 ஆம் ஆண்டில் 'வளர்பிறை' என்ற பெயரில் ஒரு முஸ்லிம் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

ஒரு மணி நேர இந்த நிகழ்ச்சியை நடாத்தும் பொறுப்பு எனக்கே வழங்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு முதல் யுகம் வானொலி நிலையம் இப்தார் நிகழ்ச்சிகளுக்கென 30 நிமிடங்களை ஒதுக்கியுள்ளது.

இலங்கை வானொலியில் ரமழான் கால இப்தார் நிகழ்ச்சிகளை நினைவு படுத்தும் இந்நிகழ்ச்சிகள் நேயர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளன.

ரமழான் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து கனடாவுக்கு விஜயம் செய்யும் இஸ்லாமிய அறிஞர்களின் நேரடி சொற்பொழிவுகள் கூட இந்த வானொலி நிலையத்தில் ஒலிபரப்பாகி வருகின்றன. நூற்றுக்கணக்கான நேயர்கள் இந் நிகழ்ச்சிகளைக் கேட்டு பயன் பெறுகின்றனர்.கதம்பம் போட்டி நிகழ்ச்சி, விருந்தினர் பக்கம், முஸ்லிம் நிகழ்ச்சிகளையும் நான் தொகுத்து வழங்குகிறேன். விருந்தினர் பக்கம் நிகழ்ச்சியில் விசேடமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த பிரபல அறிவிப்பாளர்களான திருமதி புர்கான் பீ இப்திகார், மயில்வாகனம் சர்வானந்தா, வீ. என். மதியழகன், மெல்லிசைப் பாடகர் கந்தப்பு ஜெயகாந்தன், தம்பி ஐயா தேவதாஸ் மற்றும் கனடாவில் வாழும் மூத்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் பலரையும் நேர்காணல் செய்துள்ளேன்.

நான் கனடா வந்த ஒரு வருடத்தில் தமிழ் பாடசாலை ஒன்றில் சித்திரைப் புத்தாண்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவை தொகுத்தளிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அச்சமயம் இவ் விழாவில் கலந்து கொண்ட சர்வதேச தமிழ் வானொலியொன்றின் அறிவிப்பாளர் ஒருவர் என்னை அவர்களது வானொலியில் நேர்காணல் செய்தார்.

எனது இந்த நேர்காணலை செவிமடுத்த அந்த வானொலி நிலையத் தலைவர் திருமதி. கோணேஸ் தங்களது வானொலியில் அறிவிப்பாளராக வருமாறு அழைப்பு விடுத்தார்.

இதன் மூலமே எனது கனேடிய வானொலி பிரவேசம் ஆரம்பமானது.

அனைத்துலக சர்வதேச தமிழ் வானொலி டொராண்டோ, மொன்றியல் மற்றும் பிரான்ஸில் கலையகங்களை கொண்டிருந்தது.

ஆரம்பத்தில் போட்டி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க வேண்டினர். சில மாதங்களின் பின்னர் 'வளர்பிறை' என்ற பெயரில் முஸ்லிம் நிகழ்ச்சி ஒன்றை தயாரித்தளிக்க அனுமதி அளித்தனர். இந்த முஸ்லிம் நிகழ்ச்சியை தயாரித்தளிப்பதில் எனது கணவர் கலீலும் பூரண ஒத்துழைப்பு வழங்கினார்.

கலாபூஷணம்
நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்

Comments