கோனப்பிட்டிய விராலிகலை தோட்ட மக்களின் இருண்ட வாழ்வுக்கு ஒளியூட்டுவது யார்? | தினகரன் வாரமஞ்சரி

கோனப்பிட்டிய விராலிகலை தோட்ட மக்களின் இருண்ட வாழ்வுக்கு ஒளியூட்டுவது யார்?

மலையக தோட்ட தொழிலாளர் சமூகத்தின் வாழ்வியல் முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும், நாட்டில் ஏனைய சமூகத்தினருக்கு கிடைக்கும் அந்தஸ்துடன் இவர்கள் வாழ வேண்டும் என இத் தொழிலாளர் சமூகத்தை வழிநடத்தும் அரசியல் தலைமைகள் மேடைகளிலும் பொது இடங்களிலும் கோருகின்ற வரலாறு மலையகத்தில் இன்றும் மாறுபடாமல் இருந்து வருகின்றது.

மலையக தோட்டத் தொழிலாளர் சமூகம் அபிவிருத்தி மிக்க இயல்பு வாழ்க்கைக்கு செல்ல வேண்டுமேயானால், அச் சமூகத்திற்கான வாழ்வாதாரம், வீட்டுரிமை, கல்வி, தொழில், பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி போன்ற முக்கிய விடயங்கள் சரியாக அமைதல் வேண்டும். இவ்வாறு அமைந்தால் மாத்திரமே தோட்ட தொழிலாளர் சமூகம் மேலோங்கும் என்பதற்கு மாற்றுக் கருத்தில்லை.

அந்தவகையில் இச் சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், தொழில், வீதி அபிவிருத்தி, வீட்டு வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளில் மலையக பெருந்தோட்டங்கள் பின்தங்கிய நிலையில் காணப்படுவதுடன், அவை வெளிச்சத்திற்கு வராமலும் உள்ளன.

இப்படி அடிப்படை வசதிகளில் பின் தள்ளப்பட்டுள்ள நிலையில், எமது தோட்டத்திற்கும் அபிவிருத்திகள் வந்து சேராதா என்ற கேள்வியுடனும், தாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்ற ஏக்கத்துடனும் மலையகத்தில் எதிர்பார்ப்புகளை மாத்திரம் சுமந்த வண்ணம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் தொழிலாளர்கள் சமூகம் வாழும் தோட்டங்களில் ஒன்று தான் நுவரெலியா வலப்பனை பிரதேசத்தில் காணப்படும் விராலிகல தோட்டம் என அழைக்கப்படும் கோனப்பிட்டிய அலக்கொலை தோட்டம்.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் மலையக பெருந்தோட்டங்களில் பெருந்தோட்ட பயிராக கம்பளை சிங்கம்பிட்டியவில் முதன் முதலாக கோப்பி பயிரிடப்பட்டு பின் 1800களில் ஹேவாஹட்ட லூல்கந்துர தோட்டத்தில் மார்க் டெய்லர் என்பவரால் தேயிலை பயிரிடப்பட்டது.

இதை தொடர்ந்தே ஹங்குராங்கெத்த, வலப்பனை ஆகிய பிரதேசங்களில் தேயிலை பயிரிடப்பட்ட நிலையில் கோனப்பிட்டிய, சீனாபிட்டிய, மாசா மெரிகோல்ட், அல்மா, முள்ளோயா, ஹைபொரஸ்ட் போன்ற தோட்டங்களிலும் தேயிலை அக்காலத்தில் பயிரிடப்பட்டது.

அந்த வகையில் கோனப்பிட்டிய விராலிகலை தோட்டத்திலும் தேயிலை பயிரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அக் காலப்பகுதியில் வெள்ளைக்கார துரைகள் தோட்டங்களை பராமரித்த போது விராலிகலை தோட்டத்திலும் வீதிப் போக்குவரத்துக்கு பாரிய முக்கியத்துவம் வழங்கியிருந்ததுடன், அங்குள்ள தொழிலாளர் சமூகத்தின் வாழ்வியலுக்கான அபிவிருத்திகளையும் செய்திருந்தனர், அதற்கு சான்றுகளும் உள்ளன.

இருப்பினும் விராகலை தோட்ட மக்களுக்கு அமரர் ஆறுமுகன் தொண்டமானால் மின்சாரம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர அங்கு கடந்த சுமார் 25 வருடங்களுக்கு மேலாக எவரும் அந்த தோட்டத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

விராலிகலை தோட்டத்தில் வெள்ளையர்களால் பயிரிடப்பட்டிருந்த தேயிலை 1999 ஆம் ஆண்டு கடைசிக்காலத்தல் முற்றாக அழிக்கப்பட்டு கோப்பி பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு இன்றும் அங்குள்ள மக்களின் வாழ்வாதார தொழிலாக அதுவே இருந்து வருகிறது.

இருப்பினும் தேயிலையை அடியோடு அழித்து விட்டு கோப்பியை பயிரிட்டதால் கோப்பிக்காட்டுக்குள் மறைந்து விட்ட விராலிகல தோட்டம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அபிவிருத்திகளில் பின்னடைவு கண்டுள்ளதுடன் மக்களும் அவல நிலைக்கு சென்றுள்ளனர்.

விராலிகலை தோட்டத்தில் வசிக்கும் மக்கள் தாம் தினமும் அனுபவித்து வரும் அவலம் குறித்து கண்ணீர் மல்க எமக்குக் கருத்துத் தெரிவித்தனர் தமது கஷ்டங்களை நுவரெலியா மாவட்ட அரசியல்வாதிகளின் கவனத்திற்கு வெளிக்கொணர்வதை தமது முக்கிய கோரிக்கையாக முன்வைத்துள்ளனர்.

விராலிகல தோட்டம் இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டது. இந்த தோட்டம் கந்தப்பளை கோனப்பிட்டிய குரூப் தோட்டத்திற்கு உட்பட்ட அலக்கொலை டிவிசன் என்றே அழைக்கப்படுகிறது.

இத் தோட்டத்திற்கு மூன்று பிரதான வீதிகள் ஊடாக உள்நுழைய முடியும்.

அந்த வகையில் கோனக்கலை சந்தியிலிருந்தும், கோனப்பிட்டிய பிரதேச வைத்தியசாலைக்கு செல்லும் வழியூடா சீனாபிட்டி தோட்ட வழியாகவும்,மற்றும் மத்துரட்ட வழியாகவும் உள்நுழைய முடியும்.

விராலிகல தோட்டத்திற்கு கந்தப்பளை நகரில் இருந்து புரூக்சைட் சந்தி, ஹய்பொரஸ்ட் இலக்கம் 01 வழியூடாக செல்வதற்கு 27 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும்.

பிரதான பஸ் போக்குவரத்து வீதியிலிருந்து பள்ளத்தாக்காகக் காணப்படும் விராலிகல தோட்டத்திற்கு வாகனத்தின் ஊடாகவோ அல்லது நடைபாதை ஊடாகவோ பயணிக்க முடியும்.

அதேவேளை கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் போல அல்லாது தற்போது நடை பாதை வழியாக பயணிப்போர் உயிரை கையில் படித்துக் கொண்டே பயணிக்க வேண்டி உள்ளது. மக்கள் பாவனைக்கு உதவாத வகையில் காணப்படும் கரடுமுரடான தோட்டப்பாதை,கோப்பிக் காடு , அதனுடன் வளர்க்கப்பட்டுள்ள நீர் முருங்கை மரங்கள், துப்பரவு செய்யப்படாத கோப்பி மலை அதனால் ஏற்பட்டுள்ள இருள் காட்டு மிருகங்களின் நடமாட்டம் காரணமாகவே அவ்வாறு பயந்தபடி செல்லவேண்டியுள்ளது.

விராலிகல தோட்டத்தில் ஆங்காங்கே காணப்படும் ஐந்து தொடர் குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளிலும் தற்போது 97 குடும்பங்களை சேர்ந்த 300க்கு அதிகமானவர்கள் வசிக்கின்றனர்.

இத்தோட்டத்தின் ஆரம்ப காலத்தில் தேயிலை மாத்திரமே சுமார் 184 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டு தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்ததாக இத் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

அக்காலப்பகுதியில் மாடு வளர்ப்பு, பால் உற்பத்தி, விவசாயம், பழங்கள் உற்பத்தி என செல்வாக்குடன் மக்கள் சகல வளங்களுடனும் வாழ்ந்து வந்துள்ளனர்.

விராலிகல தோட்டத்தின் பரிணாம வளர்சியில் ஆரம்ப கல்விக்கென 1959 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாடசாலை கட்டடமும் இன்றும் காணப்படுகிறது அதுவும் இயங்காமல் பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.

இந்த ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்ற பலர் இன்று இத் தோட்டத்தில் ஆசிரியர்களாக, பொலிஸ் அதிகாரிகளாக, அதிபர்களாக, கல்வி அதிகாரிகளாக தொழிற்சங்க தலைவர்களாக,பல தொண்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளாக திகழ்கின்றனர்.

பல்வேறு கஷ்டத்திலும் கூட தற்போது தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் பெற்றோர் மாணவர்களை பாரிய போக்குவரத்து சிரமத்துக்கு மத்தியில் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

கல்வியில் சிறப்பு பெற்று ஊருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என பெற்றோர்கள் தமது பிள்ளைகளை விராலிகல தோட்டத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோனக்கலை தமிழ் வித்தியாலயத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.

அங்கிருந்து பல மாணவர்கள் ​ைஹபொரஸ்ட், இராகலை, கந்தப்பளை நுவரெலியா போன்ற பிரதான நகர் பகுதி மற்றும் தோட்டப் பாடசாலைகளை நாடிச் செல்கின்றனர்.

விராலிகல தோட்டம் இப்போது காடாக மாறி வெளி உலகத்திற்கு தெரியாத ஒரு தோட்டமாக மாற்றம் பெற்றுள்ள நிலையில் பாடசாலைகளுக்கு செல்லும் சிறுமிகள், யுவதிகள் பல்வேறு அம்சங்களும் மத்தியில் பயணிக்கும் அவல நிலையுள்ளது.

கோப்பித் தோட்டமாக மாறிய பின் தொழில் இழந்து அருகில் உள்ள கோனப்பிட்டிய, கோனக்கலை போன்ற தோட்டங்களுக்கு நீண்ட தூரம் கரடுமுரடான பாதையில் பயணித்து தொழில் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால் பலர் தொழில் இழக்க நேரிட்டுள்ளதோடு பலர் வறுமை நிலையில் வாழ்கின்றனர்.

கோப்பி பயிரிடப்பட்டுள்ள மலைகளில் விலைமதிப்புமிக்க மரங்களை வெட்டி விற்பனை செய்துவரும் நிர்வாகம் அங்கு முருங்கை மரவகைகளை உருவாக்கியுள்ளது.

இதனால் பலத்த மழைக்காலங்களில் மண்சரிவு ஏற்படுவதுடன் பாரிய கற்பாறைகள் சரிந்து ஆபத்தை விளைவிக்கும் அச்சமும் ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீதிகள் தொடர்பில் பலமுறை தோட்ட நிர்வாகத்திடம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு எதுவித நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்ற முறைப்பாடும் உள்ளது.

இத்தோட்டத்துக்கான கிராம சேவை அதிகாரியும் மத்துரட்ட பிரதேசத்திலிருந்துதான் வரவேண்டும் ,ஆனால் பயண சிரமம் காரணமாக இவ்வதிகாரியும் வாரத்தில் ஒரு நாள் மாத்திரமே தோட்டத்துக்கு வருகிறார்.

இந்த நிலையில் செய்வதறியாது திகைப்பதாக தெரிவித்த மக்கள் விராலிகல தோட்டத்திற்கு உள்நுழையும் வீதிகளை செப்பனிட்டு முதலில் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்தனர்.

மேலும் கோப்பிப் பயிரை அகற்றியோ அல்லது அதை ஒரு பகுதியாக செய்து கொண்டோ பிரதானமாக தேயிலையை பயிரிட்டு காடுகளை அழித்து தொழில் வசதியை ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

மூடிக்கிடக்கும் ஆரம்ப பாடசாலை கட்டடத்தில் முன்பள்ளி,மற்றும் தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரையோனும் பாடசாலை ஆரம்பிக்கப்படுவதுடன் எஞ்சிய கட்டடத்தில் பால் சேகரிப்பு நிலையம்,விவசாயப் பொருட்கள் கொள்வனவு செய்ய நிலையம்,சுயத்தொழில் நிலையம் என ஆரம்பித்து மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுள்ளனர்.

இதற்கான நடவடிக்கைகளை நுவரெலியா மாவட்ட அரசியல் தலைமைகள் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆறுமுகம் ரமேஸ்

Comments