தனயனை குத்திக் கொன்ற கள்ளக்காதலன் | தினகரன் வாரமஞ்சரி

தனயனை குத்திக் கொன்ற கள்ளக்காதலன்

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பொலிஸ் பிரிவானது கடற்றொழிலாளர்கள் வசிக்கும் ஒரு பிரதேசமாகும். கடந்த 18ம் திகதி திங்கட்கிழமை 9 மணியளவில் மிரிஹானையில் அமைந்துள்ள 119 பொலிஸ் அவசர இலக்க தலைமையகத்திற்கு கிடைத்த தகவல் உடனடியாகவே முந்தல் பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. அந்த தொலைபேசி அழைப்பில், மதுரங்குளி கரிக்கட்டை பிரதேசத்தில், புத்தளம் கொழும்பு பிரதான வீதியில் 118ம் கட்டைக் முன்னால் அமைந்துள்ள வீட்டில் கத்திக் குத்துக்கு இலக்காகி பலத்த காயத்திற்குள்ளான இளைஞர் ஒருவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்துள்ளது. அதேநேரம் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் வைத்தியசாலை பொலிஸாரும் முந்தல் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

நெஞ்சுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்தினால் பலத்த காயத்திற்கு உள்ளாகி உயிரிழந்தது 28 வயதுடைய சிரிவர்தன முதலிகே சாமர றுவன் குமார ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தராகும். றுவன் குமார கரிக்கட்டை பிரதேசத்தில் குறித்த கத்திக் குத்துச் சம்பவம் இடம்பெற்ற வீட்டைச் சேர்ந்தவர் என்ற போதிலும் அந்நபர் துல்கிரிய, பராக்கிரமகம பிரதேசத்தைச் சேர்ந்த இரேஷா என்ற யுவதியைத் திருமணம் செய்து கொண்டு துல்கிரிய பிரதேசத்திலேயே வசித்து வந்தவராகும்.

றுவனின் தாய் 65 வயதுடைய விமலாவதியாகும். அவளுக்கு றுவனை விட இன்னும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அத்துடன் விமலாவதி பல திருமணங்களைச் செய்த ஒரு பெண். அவள் இறுதியாகத் திருமணம் செய்த கணவர் நான்கு மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்துள்ளார். விமலாவதி தனது வீட்டில் விடுதியொன்றை நடாத்தி சென்றிருந்ததோடு பலருக்கும் தங்குமிட வசதியை வழங்கியிருந்துள்ளார்.

பெற்றோர் எப்போதுமே தமது பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்களாகும். விசேடமாக வயது முதிர்ந்த காலத்தில் வயது போன பெற்றோர்கள் தமது பேரப்பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு பிள்ளைகளின் குடும்பத்திற்காக பாரியளவில் தியாகங்களைச் செய்து கொண்டு வாழ்கின்றனர். நாட்டில் மிகப் பெரும்பான்மையான வயோதிப பெற்றோர் இவ்வாறான மிகவும் அன்பான பெற்றோர்களாகவே வாழ்கின்றனர்.

எனினும் விமலாவதி இதற்கு முற்றிலும் மாற்றமான ஒரு பாட்டியாகும். அவளின் படு மோசமான நடவடிக்கைகளினால் அவளது வயிற்றில் பிறந்த றுவன் தனது குழந்தை மற்றும் மனைவியையும் தவிக்க விட்டு விட்டு உயிரைத் தியாகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

65 வயதைக் கடந்துவிட்டிருந்த விமலாவதி, மதுரங்குளி, கரிக்கட்டையிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஆமக்குழி பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய வர்ணகுலசூரிய மெக்ஸிமுஸ் என்பவனுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டிருந்துள்ளார். இந்த உறவானது இற்றைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமான ஒன்றாகும். அதாவது, விமலாவதியின் கணவர் உயிரிழந்து சுமார் நான்கு மாதங்களுக்குப் பின்னராகும்.

வயோதிப வயதை அடைந்துள்ள விமலாவதியின் இந்தத் தொடர்பு ஊர் முழுவதும் பரவியிருந்தது. துல்ஹிரியவில் வசித்து வந்தாலும் விமலாவதியின் மகனான றுவனுக்கு தனது தாயின் இந்த மோசமான நடவடிக்கை தொடர்பான அனேக தகவல்கள் தெரிந்திருந்தன. றுவன் தனது தாயின் இந்த வெட்கக் கேடான செயற்பாடு தொடர்பில் தனது சகோதர சகோதரிகளிடத்திலும் தெரிவித்திருந்துள்ளான். விமலாவதியின் காதலன் மெக்ஸிமுஸ், விமலாவதி நடாத்திய விடுதி அறையில் இரண்டு மாதத்திற்கு முன்னர் வந்து தங்கியிருந்துவிட்டு விமலாவதியுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்துள்ளான். என்றாலும் மீண்டும் மெக்ஸிமுஸ் விமலாவதியின் விடுதிக்கு இரவு நேரங்களில் வந்து செல்வது பகிரங்கமான இரகசியமாக இருந்துள்ளது.

தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய தாயின் நடத்தை தொடர்பில் றுவன் மிகவும் கோபமுற்றிருந்தான். இதனால் தனது தாயின் இந்தத் தொடர்பை நிறுத்திக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கடந்த திங்கட்கிழமை பகல் 11 மணியளவில் மதுரங்குளி பிரதேசத்தில் அமைந்துள்ள தாயின் வீட்டுக்கு தனது மனைவி மற்றும் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு றுவன் சென்றுள்ளதாகத் தெரிய வருகின்றது. அன்றைய தினம் மாலையில் றுவனும், அவனது நண்பனும் வீட்டினுள் அறை ஒன்றில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்துள்ளனர். இதன் போது றுவன் தனது நண்பனிடத்தில்,

“இன்று அம்மாவின் இந்த உறவு தொடர்பில் இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டும் மச்சான்.... இதனை முடித்து வைக்காவிட்டால் எம்மால் வீதியில் நடமாட முடியாமல் போகும்.... மக்களிடம் முகங்கொடுக்க வழியில்லை..... உண்மையைச் சொல்லப் போனால் தலை காட்ட முடியாதளவுக்கு வெட்கமாக இருக்கு....” எனக் கூறியுள்ளான்.

அதன் பின்னர் றுவன் அன்றிரவு 9 மணியளவில் வீட்டிற்கு வெளியே வந்து பக்கத்தில் இருக்கும் தாயின் அறைக்குச் செல்ல முயன்ற போது தாயின் அறைக் கதவு பூட்டப்பட்டிருந்தது. எனினும் அந்த அறைக்கு ஒரு ஜன்னல் இருந்தது. றுவன் அந்த ஜன்னலின் ஊடாக அறையை எட்டிப் பார்த்துள்ளான். உள்ளே அவன் கண்ட காட்சியால் அதிர்ந்து போயுள்ளான். உள்ளே றுவனின் தாய் தனது காதலனுக்கு உணவு ஊட்டிக் கொண்டு இருந்துள்ளாள். அத்தாயின் மகனான றுவனின் கோபம் தலைக்கேறியது. உடனே கதவைத் தள்ளிக் கொண்டு றுவன் அறைக்குள் நுழைந்துள்ளான். அறைக்குள் நுழைந்த றுவனுக்கும் அங்கிருந்த தாயின் காதலனான மெக்ஸிமுஸூக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன் போது அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்ளும் சத்தம் கேட்டு றுவனின் மனைவியும், மற்றொருவரும் அந்த அறைக்குள்ளே ஓடி வந்துள்ளனர்.

வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் மெக்ஸிமுஸ் திடீரென அறையில் கட்டிலின் தலையணைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியில் எடுத்துள்ளான். சற்றும் சிந்திக்காமல் தனது கையிலிருந்த கத்தியால் றுவன் சாமரவின் நெஞ்சில் கடுமையாகக் குத்தியுள்ளான். குத்தியது ஒரு தடவைதான்.

அதனைத் தொடர்ந்து றுவனும் கத்தியை உறுவி மெக்ஸிமுஸ்ஸூடன் போராடத் தொடங்கினான். அதற்கு றுவனின் நண்பனும் உதவியுள்ளான். அவர்கள் மூவரும் கட்டிப் பிடித்து நிலத்தில் வீழ்ந்துள்ளனர். அதிலிருந்து விடுபட்டு வேகமாக எழுந்த மெக்ஸிமுஸ் தனது கத்தியையும் எடுத்துக் கொண்டு அவ்விடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளான்.

கத்திக் குத்துக்கு இலக்காகி இரத்த வெள்ளத்தில் வீழ்ந்திருந்த றுவனை உடனடியாக புத்தளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதிப்பதற்கு அங்கிருந்த நண்பர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். எனினும் றுவன் வைத்தியசாலையில் வைத்து தான் உயிராக நேசித்த குழந்தை மற்றும் தனது மனைவியையும் தவிக்க விட்டுவிட்டு மிகவும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 க்கு இச்சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்ட தகவல் மற்றும் புத்தளம் வைத்தியசாலை பொலிஸாரினால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைய முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அசித லக்றுவன், பிரதேசத்திற்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகளது ஆலோசனைக்கு அமைவாக விசாரணைகளை ஆரம்பித்தார்.

அமில மலவிசூரிய
தமிழில்: எம்.எஸ்.முஸப்
பிர்
(புத்தளம் விசேட நிருபர்)

Comments