திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை பார்த்து ஒழிக்க முடியாது | தினகரன் வாரமஞ்சரி

திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை பார்த்து ஒழிக்க முடியாது

'களவும் கற்று மற' எல்லாக் கலைகளையும் கற்கும் கடமையுள்ள அரசர்களுக்கு விதிக்கப்பட்ட நெறி முறைகளில் ஒன்றுதான். களவும் கற்று மற.

அதுவும் ஒரு தொழில்தான் என்பதல்ல ஆனால் அத் தொழிலை செய்பவர்களுடைய சிந்தனை செயற்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பஞ்சமா பாதகங்களுள் இரண்டாவதாக கூறப்படுவது களவு.

களவு எல்லா இடத்திலும் தீதல்ல. களவு என்பதே ஒற்றர்களுக்கான காப்பு. உளவு வேலைகளில் ஈடுபடுபவர்கள் களவை நன்கு கற்றுத் தேறியிருக்க வேண்டும். ஆனால் இதற்கான பழமொழி என்னவோ உளவில்லாமல் களவு போகாது என்பதாகத்தான் இருக்கிறது. களவுக்கும் சரி உளவுக்கும் சரி மிக திறமையானவர்களே நியமிக்கப்படுகிறார்கள். தாம் கற்கும் கல்வியிருந்து மட்டுமல்லாமல் சுயமாகவும் தந்திரங்களை அவர்கள் கொண்டிருக்க வேண்டும்.

நாட்டார் கதைகளில் இந்த கள்வர்கள் பற்றிய சுவாரஸியமான கதைகள் உண்டு. ஒரு திருடன் தன் மகனுக்கு திறமையாக திருட வரவில்லையே என்று கவலைப்பட்டான். அவனைக் கூப்பிட்டு இதைச் சொல்லி ஆதங்கப்பட்டான். ' மகனே எமது குலத் தொழிலை நீ பழகாதவரை எனக்கு நிம்மதியே கிடையாதுப்பா. எப்படியாவது நீ திருடக்கற்றுக்கொள். நீ ஒரு சாமர்த்தியமுள்ள திருடனாகினால் மட்டுமே நான் நிம்மதியாக கண்ணை மூட முடியும் என்றான். ஒரு போதும் தந்தையுடன் கூட திருடப் போகாதவன் அன்றிரவு ஒரு வீட்டுக்கு திருடப்போனான். அதுவும் தனியாளாக, தந்தை நோயில் படுத்திருந்தான். மகன் தொழிலுக்குப் புறப்பட்டதானது அவனுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

மகனோ ஒரு வீட்டிற்குள் நுழைந்தான். அந்த வீட்டுக்காரர் எல்லாப் பொருட்களையும் பத்திரப் படுத்திவிட்டார். ஒரு அம்மி மட்டும் வெளியே கிடந்தது. அதற்கான குழவியை வீட்டுக்காரன் ஒழித்து வைத்தான் குழவி இல்லாமல் அம்மியை யாரும் எடுக்க மாட்டார்கள் என அவன் நினைத்தான். வந்த திருடனோ அம்மியை தூக்கினான். ஆனால் குழவியைக் காணவில்லை. அவன் சுற்று முற்றும் தேடிப்பார்த்தான். எப்படி தேடியும் கிடைக்கவில்லை. கொஞ்சமும் தாமதிக்காமல் அவன் பூட்டியிருந்த கவைத்தட்டினான். ' வீட்டுக்காரர். வீட்டுக்காரர். என்ன இது அம்மி வைக்கிற இடத்தில் குழவியை வைக்க மாட்டீர்களா? நான் எங்கெல்லாம் தேடுவது' என்று சத்தமிட்டான். வந்திருப்பது திருடன்தான் என அறிந்ததும் வீட்டிலுள்ளவர்கள் எழுந்து கூச்சல்' போட்டு அவனை அடித்து விரட்டி விட்டார்கள்.

மகன் மிகவும் சோகமாக இருந்தான். தந்தை அவனுக்கு அறிவுரை சொன்னான். நாம் எந்த வகையிலும் வீட்டுக்காரர்களின் உறக்கத்தை கெடுத்து விடக்கூடாது. அவர்களுடைய உறக்கம் கலைந்தால் இப்படித்தான் நடக்கும் என்று. மறுநாள் திருடப்போன திருடனின் மகன் என்ன செய்தான் தெரியுமா? கடலை வறுத்துக் கொண்டிருந்த பாட்டி தூக்கம் வரவே எல்லாவற்றையும் குறையில் இழுத்து மூடிவிட்டு படுத்து நித்திரையாகி விட்டாள். திருடனின் மகன் சந்தடி செய்யாமல் அந்தப்பாட்டி வறுத்த மீதிக்கடலையை வறுத்தான். எல்லாம் வறுத்தானதும். தான் சரியாக வறுத்திருக்கிறேனா என்ற சந்தேகம் அவனுக்கு. ஆனால் பாட்டியை எழுப்பி விடவும் கூடாது. எனவே அவன் சூட்டோடு கடலையை கிழவியின் வாயில் போட்டு பாட்டீ நீ தூங்கு இந்த கடலை வறுத்தது போதுமா என்று மட்டும் கூறு என்றான். என்ன நடந்திருக்கும். இப்படியாக திருடனின் மகன் தன்னால் தனது குலத் தொழிலை செய்ய முடியாது என நிரூபித்தான்.

இந்தக்காலத்தில் யாருக்கும் குலத் தொழில் என்பது கிடையாது அவரவர் தகுதிக்கேற்ப கிடைத்த வேலையில் நாட்டம் செலுத்துகிறார்கள். என்றாலும் எல்லோருக்கும் அவர்கள் செய்கின்ற தொழில் பிடித்தமான தொழிலல்ல.ஆயிரத்தில் ஓருவருக்கே பிடித்த வேலை அமைகிறது. மீதமுள்ளோர் வாழ்க்கையை நடாத்த வேலை செய்கிறார்கள். எல்லோருக்கும் நிரந்தரமான வேலை கிடையாது. அப்படி இருக்க வேலை தேடியும் செல்ல முடியாமல் அடிக்கடி லொக்டவுண். அது இதென்று பல தடைகள். அவரவர்களுக்கு குடும்பம் குழந்தைகுட்டி என்று பொறுப்புகள் உண்டு சாப்பாடு. உடை உறைவிடம் என எத்தனை தேவைகள் அதற்கும் மேலாக கல்வி மருத்துவம் விருந்து என எத்தனை செலவுகள் உள்ளவன் ஆடம்பரமாக போகும்போது இல்லாதவன் மேலும் தாழ்ந்து போகிறான். தேவைக்கு அதிகமான பொருளை சேகரிப்பவர் திருட்டுக்கான காரணத்தை வைத்திருக்கிறார்.

அண்மைக்காலமாக நாட்டில் திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. . கால்நடைகள் மேயப்போன இடத்திலிருந்து காணாமல் போகின்றன. கழுத்தில் போட்டுக் கொண்டு போகும் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வருபவன் அறுத்துக் கொண்டு போகிறான். வயோதிபத் தம்பதி தனியாக இருக்கிறார்கள் அவர்களிட மிருந்து பெருந்தொகை பணமும் தங்கநகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அவர்களால் பாதுகாக்க முடியாத அளவு செல்வம். அங்கேதான் இருக்கிறது என்பதற்கு பலநாட்கள் உளவு பார்த்து நட்புக்கொண்டு வீட்டில் நடமாடி, துல்லியமாக திருடிவிட்டு மறுநாளும் வழமைபோல அங்கே வந்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறித் தேடியிருக்கிறார்கள்.

வீட்டுக்குள் அல்லாமல் கோழிக்கூட்டுக்குள் புகுந்து கோழியை அபகரித்து செல்கின்றனர். திருடுவது இதைத்தான் என்பதில் எந்த வரையறையும் கிடையாது. நாங்கள் எல்லைக்கிராமத்தில் குடியிருந்தோம். எமது அயல் கிராமம் பெரும்பான்மையின மக்கள். திடீர் திடீரென வீடுகளுக்குள் நுழையும் திருடர்கள், உப்புச்சட்டியைத் தவிர மற்றெல்லாவற்றையும் அள்ளி செல்வார்கள். மறுநாளே அவர்களது கிராமத்து அல்லது சிறு நகரத்து தெருக்களில் இந்தப் பொருட்கள் மிக மிக மலிவாக விற்பனையாகிக் கொண்டிருக்கும்.. எதுவும் செய்ய முடியாது. இந்த கொள்ளையைத்தான் மண்கொள்ளை என்பார்கள். இப்போது மண்கொள்ளை யைத்தான் மணல் கொள்ளை என்கிறார்கள். .வவுனியா மன்னார் கிளிநொச்சி போன்ற இடங்களில் இவ்வாறான திருட்டுகள் எராளமாக நடக்கின்றன. என்றாலும் இவற்றில் எதையாவுது பொலீசில் கண்டுபிடித்து கொடுத்திருக்கிறார்களா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எம் மக்களிடம் இருக்கிறது. திருடர்களை கண்டு பிடிப்பதுதான் எமது வேலை. அப்பால் அவர்கள் திருடிய பொருட்களை பெரும்பாலும் அவர்கள் செலவிட்டு விடுவார்கள்( நம்புங்கள்) அதை நாம் என்ன செய்ய முடியும் என்பது அவர்களுடைய பதில்.

இதுபற்றி நான் ஒரு முதியவரிடம் உரையாடிய போது அவர் சொன்னார் எங்களுடைய காலத்தில் நாம் பொருட்களை புதைத்து வைத்தோம். ஆனால் இப்போது தேவையான அளவில் பாதுகாப்பாக வங்கிகள் இருக்கின்றன. பொருட்களை பணத்தை ஏன் வீட்டில் வைக்கிறீர்கள். கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு வேண்டுமானால் பாதுகாப்பு குறைவுதான். உங்களுக்கு தெரியுமா பெருமளவு மாடுகள் அதுவும் உழவுமாடுகள் விதைப்புக்காலத்தில் திருடர்களால் கடத்திச் செல்லப்பட்டன. காலையிலேயே கப்பம் கேட்டு ஆளனுப்புவார்கள். பெருந்தொகை பணம். விதைப்பு நேரம். மாட்டை இழக்க முடியாது. எனவே தாலியை வித்தும் கப்பம் கட்டி மாட்டை மீட்போம். தவறினால் அல்லது பொலிசுக்கு போனால் மாடு மேசைக்கு உணவாகப் போய்விடும்.

பெரும் உறுதியான மரங்களில் துளை போட்டு அதுவழியே பெரிய சங்கிலியை மாட்டி மாடுகளின் கழுத்தில் போட்டு பூட்டி வைத்த காலம் இருந்தது. துணிகரமாக சில கிராமத்தவர்கள் உளவு பார்த்து திட்டம் போட்டு திருடர்களை விரட்டி ஒருவனை கொல்லும் வரை இந்த நிலை நீடித்தது. விரட்டிச்சென்றவர்களிலும் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டு இறந்தான். திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதல்ல. பொருட்களை கைகளில் வைத்திருப்பதும் ஆடம்பரமாக அதைக்காட்டி மற்றவர்களை உசுப்பி விடுவுதும் திருட்டுக்கான காரணிதான். வறுமை தொழிலின்மை பசி எல்லாவற்றுக்கும் துணையாகிவிடுகிறது.

Comments