நாடெங்கும் ஆரம்பப் பாடசாலைகள் ஆரம்பம்; பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படாதிருப்பதை அனைவரும் இணைந்து உறுதி செய்வோம் | தினகரன் வாரமஞ்சரி

நாடெங்கும் ஆரம்பப் பாடசாலைகள் ஆரம்பம்; பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படாதிருப்பதை அனைவரும் இணைந்து உறுதி செய்வோம்

நீண்ட நாட்களுக்குப் பின்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. நாட்டில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் செயல்பட்டது கடந்த வருடம் மார்ச் மாத தொடக்கத்திலாகும். அதன் பின்னர் ஜூலை மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அவ்வேளையில் மேல் மாகாண பாடசாலைகள் தவிர்த்து ஏனைய மாகாண பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் பின்னர் அக்டோபர் மாதத்தில் மேல் மாகாண பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டன. மினுவாங்கொட கொரோனா கொத்தணி பரவியதால் பாடசாலைகள் மூடப்பட்டன. அதன் பின்னர் ஜனவரி மாதம் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டாலும் குறுகிய காலத்தில் மீண்டும் மூடப்பட்டது. உக்கிரமடைந்த தொற்று காரணமாக அனைத்து பாடசாலைகளும் செயலிழந்தன. ஒன்றரை வருட காலமாக பாடசாலைகள் இயங்கவில்லை. நாடுகளிடையே கொரோனா பரவல் காரணமாக நீண்ட காலமாக பாடசாலைகள் மூடப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.

உண்மையில் நம் போன்ற நாடுகள் உலகில் முன்னோக்கி செல்லவேண்டும் என்றால் அது கல்வியின் ஊடாகவே சாத்தியமாகின்றது.

எமது நாட்டில் உயர்ந்த இடத்தில் உள்ளவர்கள் மாத்திரமல்ல உலகம் பூராவும் உள்ள இலங்கை புத்திஜீவிகள் அந்த இடத்திற்கு சென்றது இலங்கையின் இலவசக் கல்வியினாலாகும். அதனால் எதிர்கால சிறுவர் பரம்பரையினருக்கு கல்வியை கற்க சுதந்திரமாக இடமளிக்க வேண்டும்.

கடந்த ஒன்றரை வருடகாலமாக எமது பிள்ளைகளுக்கு அதற்கான சந்தர்ப்பம் குறைவாகவே கிடைத்தது. ஒன்லைன் முறை மூலம் கல்வி கற்பித்தல் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

அனைவருக்கும் சமமாக அந்த வசதி கிடைக்கவில்லை. உலகளாவிய, பொருளாதாரம் மற்றும் சமூக நிலைமைக்கேற்ப ஆன்லைன் மூலம் கற்றலுக்கு ஏற்பட்ட சவால் மாறுபட்டதாக காணப்பட்டது. அதனால் இதனை தொடர்வது செயல்திறன் மிக்கதாக அமையாது. அதன் மூலம் அனைவருக்கும் சமமான இடம் கிடைக்கும் என கூற முடியாது. அதனால் செய்ய வேண்டியதெல்லாம் பாடசாலையை சரியான வழிகாட்டலுடன் மேற்கொள்வதோடு தடுப்பு ஊசி வழங்கும் நடவடிக்கையையும் இதன் கீழ் செயல்படுத்துவதாகும். இதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியது. ஆனால் தற்போது 100 நாட்களாக ஓன்லைன் முறை மூலமோ வேறு வகையிலோ கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதே அதற்கான காரணமாகும். சிலர் வேலை நிறுத்தம் சரியானது என கூறுகிறார்கள். இன்னும் சிலர் தவறு என்று கூறுகின்றார்கள். அது நாம் வேறாக கலந்துரையாட வேண்டிய விடயம். ஆனால் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மீண்டும் பாடசாலையை ஆரம்பிப்பதே முக்கியமான விடயமாகும். சரித்திரத்திலேயே இவ்வாறு பாடசாலைகள் மூடப்பட்டதை நாம் அறிந்திருக்கவில்லை. 88-, 89 கலவர காலத்தில்கூட மூன்று மாதங்களே பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன. வடக்கு யுத்தத்தின்போது கூட நீண்ட நாட்கள் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கவில்லை. ஆனால் இம்முறை அப்படியில்லை. 2020ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிள்ளை அடுத்த வருடம் மூன்றாம் தரத்துக்கே பிரவேசிக்கிறது.

அந்தப் பிள்ளையின் கல்வி ஓன்லைன் முறை மூலமே நடைபெற்றது. ஓன்லைன் முறை சாதாரண பாடசாலை கற்பித்தல் முறையளவு வெற்றிகரமானதல்ல. ஒன்லைன் முறை மூலம் புற செயல்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. அதனால் விரைவில் பாடசாலைகளை திறப்பதே நல்லது. அதற்காக அனைவரும் செயற்படுவதில் தவறில்லை.

அதனால் இன்று முக்கியத்துவம் அளிக்க வேண்டியது கல்வியை ஆரம்பிப்பது எவ்வாறு என்பதாகும். இவ்வேளையில் வெற்றியாளர் யார் எனத் தீர்மானிப்பதை விட வெற்றி பெற வேண்டியது யார் என்பதை தீர்மானிக்க வேண்டும். சேவை பிரச்சினைகள், சம்பளப் பிரச்சினைகள் உள்ளன என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது. வேண்டுகோளை நிறைவேற்றுவதற்கான காலம் மற்றும் எவ்வாறு நிறைவேற்றுவது என்பது பற்றிய பிரச்சினை உள்ளது என்றாலும் இவ் வேண்டுகோளை அரசாங்கம் நிராகரிக்கவில்லை. பிரதமருடனான கலந்துரையாடலின்போது இவ்விடயம் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இச்சூழலில் வேலை நிறுத்தத்துக்கு காரணமான விடயங்களை தீர்ப்பதற்கு அரசாங்கம் விருப்பத்தை தெரிவித்துள்ளது. ஆசிரியர் சங்கங்களும் தங்கள் வேண்டுகோளை வெற்றியடைய செய்வதற்கான நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் மீண்டும் வேலைக்கு சமூகமளிக்க முடிவு செய்துள்ளார்கள். தற்போது பிள்ளைகளுக்காக ஒப்புதல் ஏற்பட்டுள்ளது.

பி.குணவர்தன
தமிழில்: வீ.ஆர்.வயலட்

Comments