சிந்தனை சீராக இருந்தால் வாழ்வு வளமாகும்..! | தினகரன் வாரமஞ்சரி

சிந்தனை சீராக இருந்தால் வாழ்வு வளமாகும்..!

எண்ணத்தை தவிர்க்கவே முடியாது. ஒரு எண்ணம் தோன்றும்போது அது பல கோடி செல்களை இணைத்துக்கொண்டு அக்காட்சிகளை ஒளி, நிழல் என்ற அளவிலே வடிவத்தை எடுக்கிறது. ஒரு தடவை எண்ணிவிட்டோம் என்றால், நாம் நினைக்காமலே மீண்டும் மீண்டும் எழுந்து, எழுந்து அடங்கும். இவ்வாறு பல தடவை எழும்போது, அந்த எண்ணமானது ஒவ்வொரு தடவையும் வலுப்பட்டுச் செயலைச் செய்வதற்கு உடல் செல்களையும் தூண்டி விடும்.

ஆகவே, எண்ணத்திற்கும் அளவு வேண்டும். உடல் தேவைகளை முடிப்பதற்கும் மற்றுமுள்ள கடமைகளை ஆற்றுவதற்குமாக எண்ணங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். எண்ணம்தானே என்று அலட்சியமாகப் பல எண்ணங்களையும் அவற்றை ஒட்டிய ஆசைகளையும் ஏற்படுத்திக் கொண்டால், அவை நமது செல்களைத் தூண்டும் அளவிற்குக் கொண்டுவந்து விடும்.

பற்று, பாசம் இவைகளின் மூலம் அதிகமான எண்ணங்களை இரவு பகலாக நாம் எண்ணிக்கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு எண்ணத்திற்கும் சில செல்கள் இயங்க ஆரம்பிக்கும். நமக்குத் தூக்கம் வரும் நேரத்திலும் நாம் இயக்கிவிட்ட எண்ண ஓட்டம் நிற்காமல் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். இதனால் தூக்கம் வராது. அதிகமாக எண்ணி எண்ணி மூளையிலுள்ள செல்களுக்கு அதிக வேலை கொடுத்துவிட்டால் உடலுக்கு ஓர் இறுக்கம் வந்துவிடும். அதைச் சரிப்படுத்த தியானப் பயிற்சி செய்தாக வேண்டும்.

அன்பு, பண்பு, இனிமை, வாழ்த்து இவைகளெல்லாம் ஒரு மனிதனுக்கு வேண்டிய நல்ல எண்ணங்கள். கோபம், வெறுப்பு, சாபம், வஞ்சம் போன்ற எண்ணங்கள் மனதில் இருந்தால் நமது உடல் நலமும், மனநலமும் பாதிக்கப்படும். உதாரணமாக, நாம் ஒருவரை வெறுக்கிறொம் என்று வைத்துக் கொண்டால் அதன் வெறுப்புணர்ச்சி, மன நலத்திற்குப் பொருத்தமற்றதாக அமையும்.

ஒருவர் கேட வேண்டும் என்றும் நினைக்கும்போதே அந்த எண்ணத்தினால் முதலில் நாம் கெட்டுவிடுகிறோம். அது கருமையத்தில் பதிவாகிவிடுகிறது. நம் நினைவினால்தான் நாம் கெட்டுப் போகின்றோம். இந்தக் கெட்ட எண்ணம், தன்னைக் கெடுத்து வெளியிலும் பாய்கிறது. எனவேதான் எண்ணத்தைச் சீரமைத்துக்கொள்ள வேண்டும். நல்ல எண்ணங்களையே எண்ணுதல் வேண்டும். தீய எண்ணங்களைத் தவிர்க்க முயல வேண்டும்.

சோ. வினோஜ்குமார்
தொழினுட்பபீடம்

Comments