நைனார் மாமா | தினகரன் வாரமஞ்சரி

நைனார் மாமா

குளிர் காலம் முடிந்து வேனிற் காலம் தொடங்கியிருந்தது; சரக்கொன்றை மரங்கள் செம்பூக்களால் நிரம்பிக் கிடந்தன; தண்ணீர் நிறுத்தி விட்டார்கள்; சிற்றோடைபோல மிச்சத் தண்ணீர் வந்து கொண்டிருந்தது; வாய்க்காலைப் பார்த்த படியே நான் நடந்து வருவேன்; முன்னே செங்காளைக் கற்கள் பரவியிருந்த பள்ளத் தெருவில் நெய்னார் மாமாவின் தேங்காய் வண்டில் அடி போட்டு ஆடி ஆடி நகரும்; எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாகவே இவர் சிறுவால் ஒன்றைத்தான் உடுத்திருக்கிறார்; என்றைக்குச் சாறன், சட்டை போட்டு வந்தார் என்று யோசித்தால் என் சுன்னத்துக் கலியாண நாளன்று முழு ஆடைகள் உடுத்திருந்தார்; என் மீது இவருக்கு மிகவும் பிரியம்; "மருமகன் மருமகன்.." என்று சொல்லிக்கிட்டே இருப்பார்; நெய்னார் மாமா எப்பொழுதும் கையில் ரேடியோ வைத்திருப்பார்; ஓயாமல் அதில் ஏதாவது ஒலித்துக் கொண்டே இருக்கும்; 'சொந்தங்கள்'னு சொல்றதுக்கு, அதிகம் யாரும் இல்லை; இந்தக் கரத்தை மாடும் இரண்டு ஆடுகளும் மட்டும்தான்...

வீட்டின் முன்னுள்ள பாதாம் மரத்தின் காய்களைத் தின்ன இரு வாரங்களுக்கு ஒரு முறையாவது குரங்குக் கூட்டம் வரும்; தெரு நாய்கள் கூடி தலை தெறிக்கக் குரைத்து எங்கள் வீட்டைச் சுற்றி ஓடினால் வானரங்கள் வந்துவிட்டதென்று அர்த்தம்; அவைகளுக்கு எட்டாத உயரத்தில் அந்த மரக்கிளையில் ஊஞ்சல் ஆடி நாய்களுக்கு எரிச்சல் ஊட்டும்; இந்த அமைதிக் குலைவின் நடுவே வாசலில் நைனார் மாமாவும் நின்றிருப்பார்; ஒரு நாளைக்குள்ளேயே இந்தக் குரங்குகளின் அழிச்சாட்டியத்தை அடக்கி விடலாம் ஆனால் பின் நாட்களிலும் தொடரவே செய்யும் என்பதை உணர்ந்து கொண்டார்...

கடற்தாளைகளும் நீர்ச் செடிகளும் மணலெங்கும் வளர்ந்திருந்தன; அதன் புதர்களுக்குக்கிடையே மிகச் சிறிய கபில நிறத் தவளைகள் எழுப்பும் மெல்லிய ஓசை விக்கல் எடுப்பது போன்று கேட்டது; தாடைபோல துருத்திக் கொண்டிருக்கும் அதன் திட்டில் உட்கார்ந்துகொண்டு தரையில் ஒரு குச்சியால் கோடு கிழித்தபடி மாமா என்னவோ யோசிப்பது புரிந்தது; தனது செம்பட்டை படிந்த தலையை அடிக்கடி அசைத்துக் கொண்டார்; உடனே ஒரு கைப்பிடியளவு மண்ணை அள்ளிக் காற்றில் பறக்கவிட்டு எதனையோ தனக்குள்ளாக முணு முணுத்தார்; பாதாம் மரத்தின் கிளைகளில் கிளம்பியடித்த குரங்குகளில் ஒன்று அசையாமல் இவரையே பார்த்தபடி இருந்தது; கொதி எழுந்தவர்போல் மரத்தில் புறம் கையால் பலம் கொண்ட மற்றும் தட்டித் தட்டி அசைத்தார்; குரங்கு அம் மரத்தைத் தழுவிக் கொண்டு கீழே விழுந்தது; அப்படியே பிடித்துத் தனது கூடாரத்துக்கு இழுத்து வந்து, மணலில் பாதி உடம்பு தெரியும் படியாக புதைத்து வைத்து அவருக்குமுன் எந்தக் குரங்காவது வந்து நிற்கும்வரை விடப் போவதில்லை என்று கொசுவைத் துரத்துவதுபோல் கைகளை ஆவேசமாக வீசிச் சத்தமிட்டுக் கத்தினார்; தலையில் தொப்பி போட்டதுபோல் மயிர் அமைந்திருப்பதால் அதன் முடிகளை வருடி நீர் பருக்கினார்; பழங்களைத் தின்னக் கொடுத்தார்; அன்றிரவு நைனார் மாமா தூங்கியிருக்கவே மாட்டார்; குரங்குகள் தரையில் உலாவும் போதெல்லாம் வாலை மேலும் கீழுமாக ஆட்டிப் பின் புறத்தை அசைத்துக் கொள்ளுமாம்; "தன்னைப் பூமி தாங்குமா என்ற தலைக் கனம்" மிகுந்த "குண்டியாட்டிக் குரங்குகள்" என்று திட்டுவார்...

இப்படி ஒரு இரவும் பகலுமாய் வைத்திருந்து; பின்னர் அதன் வழியே இறக்கி விட்டார்; சில வருடங்களுக்கு எந்த வானரமும் இங்கு வருவதில்லை; நைனார் மாமாவின் இந்தத் துணிகரச் செயலால் எந்தப் பயமும் கொல்லாமல் வீட்டின் முன் புறத்தில் பூச் செடிகளும் பின் புறம் காய் கறித் தோட்டமும் போட்டிருந்தோம்...

இங்கு எப்போதும் ஒரு பறவையின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும்; காலையில் முரசு கொட்டுவதுபோல் பும் பும் பும் என்ற செம்போத்தின் ஒலி தவழ்ந்து வரும்; முன்னிலவு நாட்களில் இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டெழும் ஆள் காட்டிக் குருவியின் குரலைக் கேட்டாலே பயத்தில் நான் தூங்கி விடுவேன்; நைனார் மாமா எங்கும் தூர இடங்களுக்குச் சென்று வந்து இரவில் விளக்குத் தூண்டுவது எங்கள் பாழ் வளவில் அழிந்து கிடக்கும் வேலி வழியே தெரியும்; மின்மினிப் பூச்சிகளின் ஒளி மின்னல்களுக்கு நடுவே ஒரு நரி போவதைக் காண முடிந்தது; மழை பெய்து ஓய்ந்த குளிரென்பதால் நரி ஊளையிடும் சத்தம் தூரக் கேட்டது; தாமரை இலைகள் போன்ற சேம்புக் கன்றுகளின் அகன்று விரிந்த இலைகள் அவர் வளவெங்கும் வியாபித்து வளர்ந்திருந்தன; காற்றில் சேம்பு வாழை இலைகள் ஒன்றோடு ஒன்று பட்டு எழுப்பும் ஓசைகள் யாரோ கையால் அடித்துத் தாளமிசைப்பதுபோன்ற ஓர் அதிர்வை உருவாக்கும்; அங்கிருந்து நாள் பட்டுப்போன சாணத்தின் வாசனை காற்றில் எந்நேரமும் தங்கியிருக்கும்...

இளவெயிலின் மிருதுவும் நுரை ததும்பும் அலைகளின் மெல்லோசையும் எவர் மனதையும் சாந்தம் கொள்ளச் செய்யும்; கடல் நண்டு ஒன்று அவசரமாக நடந்து மணலேறிச் சென்றது; முன்பு ஒருபோதும் இவ்வளவு நெருக்கமாகக் கடலை நான் அறிந்ததில்லை என்பது போலிருந்தது; கடல் எதுவோ சொல்வதுபோல் தோன்றியது; இங்குதான் பட்டு மணல் எடுப்போம்; நைனார் மாமா கோடானு கோடி மணல் துகள்கள் வார்த்த கும்பி மணலோடும் கரத்தை மாட்டோடும் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்; ஒருவாறு சில்லைக் கிறிக்கி, நேராக்கி வண்டி மணலோடு நகர்ந்தது; போகும்போது ஏறிச் சென்ற என்னால் வரும்போது மணல் குவிந்த வண்டி என்பதால் ஏற முடியாமலே போனது; ஏறு வெயிலுக்கு வண்டியில் ஏற்றிய குருத்து மண் கம்பளிப் பூச்சிகள்அப்பிக் கொண்டிருப்பதுபோல் பளபளத்தது...

இடுப்போடு சேர்ந்து சொர்ணம் நகை மாளிகை என்றுதான் அந்தப் பையில் பெயர் எழுதியிருக்கும்; உற்றுப் பார்த்தால்தான் அது தெரியும்; பையின் நிறம் நீலம்; அந்த நிறத்தில் முன்பு இருந்திருக்கலாம்; இப்போது அடர்த்தியான தவிட்டு நிறம்; வண்டி மசைக் கறை திப்பி திப்பியாய் ஒட்டியிருக்கும்; இந்தப் பைக்குள் இருக்கும் சாதனங்கள் இரண்டு; வெற்றிலை இடிக்கும் உரல், உலக்கை; மற்றொன்று துணியால் திரித்த நாடா; அதன் முனையில் சட்டை ஊசி ஒன்றைக் குத்தியிருப்பார்; ஒருவேளை சிறுவால் நாடாத் தெறித்து விட்டால் முடிந்து கொள்ள அது உபயமாக இருக்கலாம்; கல்யாணப் பரிசு படத்தில் ஏ.எம்.ராஜாவும் பி.சுசீலாவும் பாடும் இனிமையான பாடலொன்று இருக்கிறதே "ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம்" இதை நைனார் மனசுக்குள் பாடி மிகத் தாமதித்து வெளிக்காட்ட ஆரம்பிப்பார்...

வெவ்வேறு தருணங்களில் மாமாவுடனான உரையாடல்கள் அந்த வயதில் எனக்கு வாசகமாகவே இருக்கும்; தும்புக்கட்டு வியாபாரம் செய்து வந்த ஓர் ஏழைத் தகப்பனின் மூன்று பிள்ளைகளின் கடைக்குட்டி; பதின் பருவத்தில் தந்தை இறந்துவிட அதே தொழிலைத் தானும் செய்தபோது பொருள் விற்பனையில் ஒரு பெண்ணுருவம் அவருக்குப் பித்தேற்றியது; அவளைத் திருமணம் செய்யும் வேட்கையில் ததும்பினார்; அவளைக் கவரும்படியான தோற்றம் அவருக்கில்லை; "மோரும் கொள்ளும் மாதிரியான காதல் என்னுடையது; ஏறத்தாழ எழுபது வயதுவரை இப்படியே கலியாணமில்லாமல் அவளையே நினைத்து வாழ்ந்துவிட்டேன்.." என்பார்; மேலும் இதனை விடுத்து விடுத்துக் கேட்டால் அவர் கழுத்தின் ஒற்றை நரம்பை இழுத்து நீட்டி ஒரு விமர்சனக் கச்சேரியை நடத்தி முடிப்பார்...

சிலவேளை, அவரைக் கடுப்பேற்ற வேண்டுமென்று நினைத்து சில்வாண்டுப் பையனாக நானும் மாறியிருக்கிறேன்; கூட்டமாகச் சென்று அவரின் குடிசைக்குள் நுழைந்தால் நிறைய இடங்கள் பொத்தல் பொத்தலாகத் தெரியும்; அதன் வழியே வெயில் கசிந்து அங்கங்கே வட்டம் போட்டிருக்கும்; அதை வைத்தே கதையைத் தொடங்குவோம்; சிறுவாலில் பின் பக்கம் வலது பாகத்தில் சரியாகச் சூத்தாம்பட்டைக்கு அருகே கிழிந்திருக்கும்; தினமும் அதே சிறுவால்தான்; அதைப்பற்றி அவர் கவலைப்படுவதே இல்லை; ஓடும் ஆயத்தத்தோடு, அந்த ஒட்டையைப் பார்த்து 'ஏ..போஸ்ட் ஒபீஸ்.." என்றானே ஒருவன்; அவ்வளவுதான்; நண்பனின் முதுகு பழுத்து விட்டது....

ஒரு சனிக்கிழமை மத்தியானம் என் பெயரை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது என்பதை பரிச்சார்த்தம் செய்வதற்கு நைனார் மாமாவின் வண்டிதான் கிடைத்தது; கரியால் என் பெயரை அந்த வட்டில் பலகையில் எழுதிப் பார்த்தபோது, சரியாக வரவில்லை; இந்தக் குமைச்சலில் ஒரு வட்டம், கண்ணு, காது, மூக்கு, குச்சிக் குச்சிக் காலு, கை வரைந்தேன்; அதற்குக் கீழே நைனார் மாமா என்று எழுதினேன்; இன்னும் கொஞ்சம் தள்ளி நீளமாக அம்புக் குறி மாதிரி ஒரு கோடு காட்டி அவர் சிறுவால் கவட்டைக்குள் நீட்டி விட்டிருந்தேன்; அவ்வளவுதான்; எனக்குப் 'படக் படக்கு' னு நெஞ்சு அடித்துக் கொண்டது; பிறகு ஒரே ஓட்டமாக வீட்டுக்குச் சென்றேன்; அங்கு நைனார் மாமா என் சித்திர ஆற்றலை மெச்சிக் கொண்டிருந்தார்; நான் வரைவதை அவர் கண்டதாகவும் அதனைத் தடுக்கக் கூடாது என்றே விட்டு விட்டதாகவும் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டு நின்றார்; நடுங்கிக் கொண்டே களிசானை உயர்த்திக் கொண்டு வராந்தாப் படி ஏறினேன்; வீட்டில் இருந்தவர்கள் எதுவும் பேசவில்லை; நைனார் மாமா மேல் கசிந்த பேரன்பு, அவருடைய ஓவிய ரசனை இந்த விநாடியிலும் சுருளவிழ்ந்து நினைவில் ஓடுகிறது.

Comments