மலையக கல்வி வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமையுமா இந்தியத் தமிழர் கல்விப் பேரவை | தினகரன் வாரமஞ்சரி

மலையக கல்வி வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமையுமா இந்தியத் தமிழர் கல்விப் பேரவை

அரசியல் தலைவர்கள், மலையக தமிழ் சமூகத்தின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட குழுக்கள் மற்றும் பொதுநல அமைப்புக்களினால் இதுபற்றி அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொண்ட போதிலும் ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதுவும் இதுவரையிலும் மேற்கொள்ளப்படவில்லை என்றே கூறவேண்டும்.

17 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சம்பவம் இடம்பெற்றது. புரையோடிப்போன பிரச்சினைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் கல்விப் பிரச்சினையை சரி செய்யவும் மலையக மக்களின் கலை, கலாசார, பொருளாதார, வேலைவாய்ப்பு நிலைமைகளை பேணிப் பாதுகாக்கவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முதற்படி கல்வித்தரத்தை மேம்படுத்துவதேயாகும். இது கல்விமான்கள், புத்திஜீவிகள், உத்தியோகத்தர்கள், தொழில்முயற்சியாளர்களின் தவிர்க்கமுடியாத கடமை என மலையக கல்விமான்களால் உணரப்பட்டது.

மலையக மக்களுக்கான கல்வி அமைப்பொன்றை நிறுவும் பொருட்டு அதற்கான தினத்தை குறித்து ஏற்பாட்டுக் குழு சார்பாக சட்டத்தரணி எஸ். தாயுமானவன் கையெழுத்திட்டு சகலருக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு 2004ம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி ஹட்டன் சீடா வள நிலையத்தில் அனைவரும் ஒன்றுகூடினர்.

இந்திய தமிழர் கல்விப் பேரவை ஸ்தாபிக்கப்பட்டு காப்பாளர்களும் நிர்வாக சபையினரும் செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். காலை முதல் மாலை வரை முழுநேர பெருந்தோட்டத்துறை கல்வி அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.

பெருந்தோட்டத்துறை சமூகம் எதிர்நோக்கும் கல்விசார் பிரச்சினைகள் பாடசாலை கல்விசார் ஆளணியினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பெருந்தோட்டத்துறை கல்வி அபிவிருத்திக்கான எதிர்கால வேலைத்திட்டங்கள் ஆகிய தலைப்புக்களில் கல்விமான்கள் உரையாற்றினர். கலந்துகொண்ட பலரும் ஆக்கபூர்வமான கருத்துகளையும் முன்வைத்தனர்.

புலமைப்பரிசில் நிதியம், தகவல் நிலையத்துடன் கூடிய நூலகம், கருத்தரங்கு மண்டபம், கல்வி, சமூகம் பொருளாதார வேலைவாய்ப்பு சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபடல், ஆராய்ச்சி வேலைகளைப் பொறுப்பேற்றல், பதிப்பித்தல், மூன்றாம் நிலைக்கல்வி, பல்கலைக்கல்வி மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் தேசிய கொள்கை வகுப்போருக்கு ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் சமர்ப்பித்தல், 16 வயதிற்குட்பட்ட சகல இந்திய வம்சாவளி பிள்ளைகளையும் பொதுக்கல்வியில் ஈடுபடத் தூண்டுதல், உதவியளித்தல் பேரவையின் குறிக்கோள்களாகவும் தெரிவிக்கப்பட்டது.

பேரவையின் தலைவராக சட்டத்தரணி சக்கரவர்த்தி கருணாகரன் தெரிவுசெய்யப்பட்டு காப்பாளர்களாக பேராசிரியர் எம். சின்னத்தம்பி, அப்போதைய செயலாளர் எம். வாமதேவன், சீ. நவரட்ண, பொதுச் செயலாளர் அப்போதைய உதவிக் கல்விப் பணிப்பாளர் கே. மெய்யநாதன், நிதிச் செயலாளர் சட்டத்தரணி எஸ். தாயுமானவன், உப தலைவர் டாக்டர் ஏ. நந்தகுமார், உதவிச் செயலாளர், மக்கள் தொடர்பு எம்.எஸ்.ஆர். ஜோன் பிலிப் அப்போதைய அதிபர் உதவிச் செயலாளர் திட்டமிடல் சட்டத்தரணி ஆர். சடகோபன், பிரசார செயலாளர் பீ.ஆர். அலெக்சாந்தர், வட்டவளை த.வி செயற்குழு உறுப்பினர்களாக அப்போதைய பணிப்பாளர் தேசிய கல்வி நிறுவகம் தை. தனராஜ், அப்போதைய உதவிப் பரீட்சை ஆணையாளர் லெனின் மதிவாணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். பேரவையின் நிகழ்வுகள் யாவும் வெற்றிகரமாக இனிதே நிறைவடைய கலந்துகொண்ட அனைவரும் மிகுந்த நம்பிக்கையுடனும் மனநிறைவுடனும் விடைபெற்றுச் சென்றனர்.

இதனையடுத்து பேரவையின் பெருந்தோட்டத்துறை கல்விக் கருத்தரங்கு பதுளையில் நடைபெற்றது. கல்விமான்கள் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டு உரையாற்றியதுடன் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. சபரகமுவ மாகாணத்துக்கான கருத்தரங்கு அதே ஆண்டு ஜுலை 2 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்ட கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் பேரவையின் தலைவர் சட்டத்தரணி சீ. கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

அப்போதைய செயலாளர் எம். வாமதேவன் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் தொகுப்புரையை பேராசிரியர் எம். சின்னத்தம்பி வழங்கினார். இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள், அப்போதைய கல்வி அதிகாரிகளான ஐ. பாண்டுரெங்கநாதன், என். செல்வராஜ் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

களுத்துறை மாவட்டத்துக்கான கருத்தரங்கு 2004.9.11ல் மத்துகம பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தை. தனராஜ், பேராசிரியர் சோ. சந்திரசேகரன், சீ. நவரட்ண, எம். வாமதேவன், சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். சந்திரபோஸ், கே.பீ. சண்முகநாதன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். பேரவையின் செயல்திட்டங்களையும் நோக்கத்தையும் எடுத்துக்காட்டு முகமாக பேரவையின் செய்தி மடலாக உதயம் வெளியிடப்பட்டது. பேரவையின் தீர்மானத்தின்படி 2005ம் ஆண்டு பொதுச்சபை கூட்டம் கூடி அந்த ஆண்டுக்கான நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன் தலைவராக மீண்டும் சட்டத்தரணி சீ. கருணாகரனும் காப்பாளர்களாக பேராசிரியர்களான சோ. சந்திரசேகரன், எம். சின்னத்தம்பி, எம். வாமதேவன், சீ. நவரட்ண, தை. தனராஜ் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

அதன் பின்னர் பேரவைக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. இலங்கைவாழ் இந்திய தமிழர் கல்விப் பேரவை மூலம் மலையகக் கல்வி அபிவிருத்தியில் முன்னேற்றமும் மாற்றங்களும் ஏற்படும் என எதிர்பார்த்திருந்த அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றமாகி விட்டது.

பேரவையில் இருந்தவர்களில் சிலர் இன்று நம் மத்தியில் இல்லையென்பதும் வருந்தத்தக்கதாகும். உயிருடன் வாழ்ந்துகொண்டிருக்கும் பலர் தம்மால் ஆரம்பிக்கப்பட்ட பணியை முன்னெடுத்துச் சென்று முடிவுகாண முடியாமற் பொய்விட்டதே. என்பதை நினைத்து வருந்தலாம்.

மலையகத்தில் கல்வி பணிகளை முன்னெடுக்கும் வகையில் பெருந்தோட்ட சமூக கல்வி அபிவிருத்தி நிதியம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கு அப்போதைய சமுதாய அபிவிருத்தி சமூக அநீதி ஒழிப்பு அமைச்சர் (காலஞ்சென்ற) பெ. சந்திரசேகரன் அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்த கோரிக்கையை நிதித் திட்டமிடல் அமைச்சரின் அவதானிப்புடன் பரிசீலனை செய்யப்பட்டு பெருந்தோட்ட சமூகத்தின் கல்வியின் தரத்தை உயர்த்தும் பொருட்டு சிறப்புப் பணி குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

பெருந்தோட்ட அபிவிருத்தி நிதியம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் ஆராய்ந்து சட்ட நகல் ஒன்றை உருவாக்கும் பொருட்டு கல்வியாளர்களான அமைச்சின் செயலாளர் யூ.ஏ. செனவிரட்ன, ஆலோசகர் டி. தீனதயாளு, பணிப்பாளர் எஸ். விஜேசந்திரன், திருமதி எம். சபாரஞ்சன், பேராசிரியர்களான எஸ். விஜேசந்திரன், எம். சின்னத்தம்பி, எம். வாமதேவன், தை. தனராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அப்போதைய அமைச்சராக இருந்த பி. சந்திரசேகரன் தெரிவித்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக மேற்குறிப்பிடப்பட்டவர்களில் ஒருவருடன் தொடர்புகொண்டு கேட்டபோது அது அமுல்படுத்தப்படவில்லையெனத் தெரிவித்தார்.

ஏனைய சமூகத்தினருடன் ஒப்பிடுகையில் பெருந்தோட்ட மாணவர்களின் கல்வித்தரம் மிகவும் குறைவான நிலையிலேயே உள்ளது. கல்வி தொடர்பான மிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் தேசிய ரீதியில் வெற்றியடைய வேண்டுமாயின் மலையகப் பெருந்தோட்ட மாணவர்களின் கல்வித் தரத்தை முன்னுரிமை அடிப்படையில் மேம்படுத்துதல் கட்டாயமாகும்.

இங்கிரிய மூர்த்தி

Comments