நெதர்லாந்தை சாதனையுடன் வெற்றி கொண்ட இலங்கை | தினகரன் வாரமஞ்சரி

நெதர்லாந்தை சாதனையுடன் வெற்றி கொண்ட இலங்கை

இலங்கை -பங்களாதேஷ் இன்று மோதல்

இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான நேற்றுமுன்தினம் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண முதல் சுற்றுக்கான போட்டியில், 08 விக்கெட்டுக்களால் இலங்கை அணி சாதனை வெற்றியினை பதிவு செய்திருக்கின்றது. இப்போட்டியின் வெற்றியோடு ரி20 உலகக் கிண்ண முதல் சுற்றின் குழு ஏ இல் மூன்று வெற்றிகளுடன் முதலிடம் பெற்றிருக்கும் இலங்கை, ரி20 உலகக் கிண்ணத் தொடரின் அடுத்த சுற்றில் தாம் விளையாடும் முதல் போட்டியில் இன்று பங்களாதேஷ் அணியினை எதிர்கொள்கின்றது.

ரி20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றின் குழு ஏ இல் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, தமது முதலிரண்டு போட்டிகளிலும் நமீபியா, அயர்லாந்து ஆகிய நாடுகளை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது.

நெதர்லாந்து அணியுடனான போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை நெதர்லாந்து அணிக்கு வழங்கியிருந்தார்.

துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த நெதர்லாந்து அணிக்கு, ஆரம்பத்திலேயே தசுன் ஷானக்க மிகச் சிறந்த ரன்அவுட் ஒன்றுடன் நெருக்கடியினை உருவாக்கினார். இதனால், நெதர்லாந்து அணியின் ஆரம்ப வீரர்களில் ஒருவரான மெக்ஸ் ஒடொவ்டின் விக்கெட் அவர் 02 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பறிபோனது. பின்னர் நெதர்லாந்து அணி சிறந்த அடித்தளம் ஒன்றினை உருவாக்க முயன்ற போதும், போட்டியின் மூன்றாவது ஓவரினை வீசிய மகீஷ் தீக்ஷன, பென் கூப்பர் (09), ஸ்டிபன் மைபர்க் (05) ஆகியோரது விக்கெட்டுக்களை அடுத்தடுத்து கைப்பற்றினார்.

பின்னர் புதிய ஓவரினை வீசிய வனிந்து ஹஸரங்க நெதர்லாந்து அணியின் இரண்டு வீரர்களினை ஓய்வறை அனுப்பினார். இதனால், நெதர்லாந்து அணி 32 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் இக்கட்டான நிலைக்குச் சென்றது.

தொடர்ந்து விக்கெட் வேட்டையில் லஹிரு குமாரவும் தனது அபார வேகத்துடன் இணைய, நெதர்லாந்து அணி தமது இறுதி 5 விக்கெட்டுக்களையும் வெறும் 12 ஓட்டங்களுக்குள் பறிகொடுத்து 10 ஓவர்களில் வெறும் 44 ஓட்டங்களைப் பெற்று சுருண்டது. நெதர்லாந்து அணி இலங்கையுடன் பெற்ற 44 ஓட்டங்கள் 20க்கு20 உலகக் கிண்ணப் போட்டிகளில் அணியொன்று பெற்ற இரண்டாவது குறைந்த ஓட்டங்களாகவும் பதிவானது.

அபார பந்துவீச்சினை வெளிப்படுத்திய இலங்கை அணி சார்பில் லஹிரு குமார மற்றும் வனிந்து ஹஸரங்க தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, மகீஷ் தீக்ஷன 2 விக்கெட்டுக்களையும், துஷ்மன்த சமீர ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 45 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி, போட்டியின் வெற்றி இலக்கினை 7.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை பறிகொடுத்து இலகுவான முறையில் அடைந்தது.

Comments