அரசு உறுதியளித்த பின்னரும் இன்னுமே முடிவுக்கு வராத விவசாயிகள் போராட்டம்! | தினகரன் வாரமஞ்சரி

அரசு உறுதியளித்த பின்னரும் இன்னுமே முடிவுக்கு வராத விவசாயிகள் போராட்டம்!

இலங்கையின் விவசாயச் செய்கையில் சுமார் அரை நூற்றாண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்ற இரசாயன உரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

கொடிய நச்சுப் பதார்த்தங்கள் கொண்ட இரசாயன உரப் பாவனை காரணமாக மக்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் அதிகரித்து வருவதனால் இரசாயன உரப் பாவனையைத் தடை செய்து இயற்கை உரப் பாவனையை ஊக்குவிக்க வேண்டுமென்பதே அரசின் திட்டமாகும். ஆனால் விவசாயிகள் இரசாயன உரத்துக்குப் பழக்கப்பட்டு விட்டதனால் இயற்கை உரப் பாவனையை ஏற்க மறுத்து போராட்டம் நடத்துகின்றனர். போராட்டங்களின் பின்னணியில் அரசுக்கு எதிரான அரசியல் சக்திகள் செயற்பட்டு வருகின்றன.

இரசாயன உரம் தடை செய்யப்பட்டதால் பெரும்போக நெற்செய்கை   பாதிக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவத்து வரும் நிலையில், “பெரும்போகத்துக்குத் தேவையான உரத்தை வழங்குகின்றோம், போராட்டங்களைக் கைவிட்டு விவசாயத்தில் ஈடுபடுங்கள்” என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இருந்தபோதும் விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. எதிரணி அரசியல்வாதிகளின் தூண்டுதலே இதற்குக் காரணமாகும். இரசாயன உரப் பயன்பாடு கடந்த பல தசாப்தங்களாக இலங்கையில் அதிகரித்துக் காணப்படுகிறது. 1970 களுக்கு முற்பட்ட காலத்தில் காணப்பட்ட சேதனப் பசளைப் பயன்பாட்டுடன் கூடிய விவசாய முறை முற்றிலுமாக மாற்றமடைந்து, இரசாயன உரத்தை முற்றுமுழுதாக நம்பியிருக்கும் நிலை விவசாயிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. இரசாயன உரப் பயன்பாடு தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் பலராலும் முன்வைக்கப்படுகின்றன.

காலவோட்டத்துக்கு அமைய விவசாயத் துறையிலும் தொழில்நுட்பங்கள் புகுந்துள்ள சூழ்நிலையில், குறுகிய காலத்துக்குள் அதாவது ஹைபிரிட் முறையில் விவசாய உற்பத்திகளை மேற்கொள்ளும் முறை உருவானது. இதற்காக குறைந்த காலத்திற்குள் அதிக விளைச்சலைத் தரக் கூடிய ஹைபிரிட் விதைகள் உருவாக்கப்பட்டன.
இவ்வாறு ஹைபிரிட் விதைகளால் விளைச்சலை அதிகம் பெறுவதற்காக இரசாயன உரங்களும் அதிகம் பயன்படுத்தப்பட்டன. தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் காலத்துக்கு ஏற்ப துறைசார் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியத்தை யாரும் மறுக்க முடியாத போதும், குறுகிய காலத்துக்குள் அதிக விளைச்சலை எதிர்பார்த்து இரசாயன உரங்களின் பயன்பாடும் விவசாயத்தில் அதிகரித்து விட்டது.

ஆதி காலம் முதல் இலங்கை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடாக இருந்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் பல்வேறு விவசாய உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றமை நாம் அனைவரும் அறிந்த விடயம். எனினும், இந்த இரசாயன உரப் பயன்பாட்டினால் அநுராதபுரம், பொலனறுவை போன்ற மாவட்டங்களின் நிலத்தடி நீர் மிகவும் மாசடைந்துள்ளது. இதனால் சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கையும் அந்தப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியிலேயே இரசாயன உரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கடந்த கால அரசாங்கங்கள் கவனம் செலுத்தத் தொடங்கின. கடந்த நல்லாட்சி காலத்தில் இதுபற்றிய கருத்தாடல்கள் இடம்பெற்றிருந்தாலும், இயற்கைப் பசளைப் பாவனையை நடைமுறைப்படுத்துவதற்கு எவ்விதமான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்ட ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற தனது கொள்கைப் பிரகடனத்தில் இரசாயன உரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி எதிர்காலத்துக்கு நிலைபேறான நாட்டை வழங்க வேண்டும் என்ற யோசனையை முன்மொழிந்திருந்தார்.

அவருடைய இந்தக் கொள்கைப் பிரகடனம் ஜனாதிபதித் தேர்தலிலும், அதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் மக்களினால் அங்கீகரிக்கப்பட்டது. இவ்வாறு மக்கள் அங்கீகாரம் பெற்ற கொள்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கே அரசாங்கம் அண்மையில் திட்டமிட்டது. இயற்கையான சேதன உரப்பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இரசாயன உரங்களின் இறக்குமதிக்கு அரசு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது.

இலங்கையில் இரசாயன உரப் பயன்பாட்டை எடுத்துக் கொண்டால் 2018 ஆம் ஆண்டில் 6 இலட்சத்து 32 ஆயிரம் மெற்றிக் தொன் இரசாயன உரம் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் 12 இலட்சம் மெற்றிக் தொன் இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இரசாயன உரத்துக்கான கேள்வி அதிகரிக்கப்பட்டிருந்தாலும், அதனால் ஏற்படும் விளைச்சலில் எந்தளவு பாரிய மாற்றமும் தென்படவில்லையென்றே கூற வேண்டும். இரசாயன உரப் பயன்பாடு தொடர்பில் அரசாங்கம் கொள்கை ரீதியில் எடுத்த தீர்மானம் படிப்படியாகவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கான இரசாயன உர விநியோகம் படிப்படியாகக் குறைப்பட்டு வந்தே இவ்வருடம் அந்த உரத்தின் இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அரசாங்கத்தின் இந்தத் திட்டமானது குறுகிய காலத்தில் ஒரு சில தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தாலும், நீண்ட காலத்துக்கும், நாட்டின் நிலைப்புத் தன்மைக்கும் நிச்சயம் பாரியதொரு பங்களிப்பை வழங்குவதாகவே அமையும்.

அதேநேரம், இரசாயன உரப் பயன்பாட்டை மட்டுப்படுத்தி சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிக்க அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அது மாத்திரமன்றி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நிலத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத சேதனப் பசளைகளை இறக்குமதி செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.இதன் ஒரு அங்கமாகவோ அயல்நாடான இந்தியாவிடமிருந்து நனோ திரவ உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விமர்சனங்கள் பல தரப்பினராலும் முன்வைக்கப்படுகின்றன. இந்தியாவிலேயே பரீட்சார்த்த மட்டத்தில் இருக்கும் உரத்தை இலங்கை மீது பலவந்தமாகத் திணித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்களை அரச எதிர்ப்பாளர்கள் முன்வைத்திருந்தாலும் இவை இரு தரப்பினாலும் மறுக்கப்பட்டுள்ளன.உண்மையில் பார்க்கும் போது இந்த நனோ உரத் தொழில்நுட்பம் இலங்கையிலேயே கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதென்பதே உண்மை.

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சராக இருந்த காலகட்டத்தில் இலங்கை நனோதொழில்நுட்ப நிலையத்தின் ஆராய்ச்சியின் ஊடாக நனோ உரம் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பை பாரியளவில் உற்பத்தி செய்வதற்கு எந்த நிறுவனங்களும் முன்வராத பட்சத்திலேயே இந்திய நிறுவனமொன்றுக்கு இதனை உற்பத்தி செய்வதற்கான உரிமம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நனோ உரம் ஏற்கனவே இலங்கையில் பரிசீலிக்கப்பட்டு நெல் உற்பத்தியில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாகவே துறைசார் நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

மறுபக்கத்தில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யத் திட்டமிட்டிருந்த உரத்தில் பக்டீரியாக்களின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது என்ற பரிசோதனை முடிவுகளால், சீன உரக் கப்பலிலிருந்து உரத்தை இறக்குவதற்கு தற்காலிக தடைகள் ஏற்பட்டுள்ளன. குறித்த கப்பலில் உள்ள உரத்தின் மாதிரியை மூன்றாவது தரப்பு பரிசோதனைக் கூடத்தில் ஆய்வு செய்து உறுதி செய்வதற்கான முயற்சிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால் இரு தடவை ஆய்வு செய்து அந்த உரம் தரமற்றதென்று கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மென்மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லையென துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர். எமது நாட்டுக்கு சீனாவின் பசளை பொருத்தமற்றதென்பதே இறுதி முடிவாக உள்ளது.

அதேநேரம் இலங்கையும் இந்தியாவும் விவசாயத்தைப் பொறுத்தவரை ஒரேவிதமான காலநிலை கொண்ட நாடுகளாக உள்ளன. எனவே இந்தியாவின் உரம் இலங்கைக்குப் பொருத்தமாக இருக்குமென்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இவ்விடயத்தில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்விடயத்தை இரு நாட்டு உறவுகளுடன் தொடர்புபடுத்தியும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

இவ்வாறான பின்னணியில் இரசாயன உரத்தை வழங்குமாறு கோரி விவசாயிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறான போராட்டங்களின் பின்னணியில் அரசியல் சக்திகள் செயற்படுவது தெளிவாகியுள்ளது. அரசியல் சக்திகள் மாத்திரமன்றி நாட்டுக்கு இரசாயன உரத்தை இறக்குமதி செய்யும் பெருநிறுவனங்கள் (கோப்ரேட்ஸ்) பலவும் விவசாயிகளைத் தூண்டி விட்டு போராட்டங்களுக்கு வித்திடும் முயற்சிகளும் புலப்பட்டுள்ளன.

இரசாயன உரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் நடைமுறை ரீதியில் விவசாயிகளுக்கு உடனடியாக சில சிக்கல்களை ஏற்படுத்தினாலும் எதிர்கால சந்ததியும், அவர்களுக்கு நஞ்சற்ற நிலமும் மீதமாகும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உணவு உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் மாற்றுத் திட்டங்களுடன் இந்த இரசாயன உரப் பயன்பாட்டுக்கான கட்டுப்பாட்டு நடைமுறைகள் செயற்படுத்தப்படுவதே சிறந்ததாகும்.

மறுபக்கத்தில் விவசாயிகளுக்கு உடனடியாக ஏற்படக் கூடிய தாக்கங்களுக்குத் தீர்வுகளை வழங்கும் அதேநேரம், கொள்கை ரீதியாக எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இதன் மூலம் நோயற்ற, உடல் ஆரோக்கியம் மிக்க சந்ததியை உருவாக்குவதுடன், நாட்டுக்கு ஏற்படும் மருத்துவ செலவீனங்களையும் குறைப்பதற்கு வழியேற்படுமென்பதே உண்மை.

சம்யுக்தன்

Comments