மக்கள் வங்கி மீதான சீனத்தடை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

மக்கள் வங்கி மீதான சீனத்தடை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. இலங்கையும் சீனாவும் பௌத்த மதரீதியான தொடர்புகளை கொண்டிருந்த நாடுகள். சீன பௌத்த பிக்குமார் இலங்கைக்கு வந்து பௌத்த திருத்தலங்களில் தியான வாழ்க்கை மேற்கொண்டதாக தகவல்கள் உள்ளன. பாஹியான் என்ற சீன யாத்திரிகர் இங்கிரிய மலைக்குகைக்கு வந்து சென்றதும் அதனால் இன்றளவும் அம்மலை பாஹியான் மலை என அறியப்படுவதும் நாமறிந்த தகவல், இலங்கைக்கான தேயிலைக் கன்றுகள் சீனாவில் இருந்தே  கொண்டு வரப்பட்டதால் அவற்றைப் பராமரிப்பதற்காக பிரிட்டிஷ் தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சீனர்களையே இங்கே வரவழைத்தனர். தேயிலைத் தோட்டங்களில் சீனர்களையே பணியமர்த்தவே அவர்கள் எதிர்பார்த்திருந்த போதிலும் இலங்கையின் காலநிலையும், சூழலும் சீனர்களுக்கு உடன்பாடாக இருக்கவில்லை என்பதோடு சிங்கள கிராம மக்களும் அவர்களின் வித்தியாசமான தோற்றம், பழக்க வழக்கங்களை ரசிக்கவில்லை என்பதும் ஒரு காரணமாக இருந்ததாக அறிய முடிகிறது. ஒருவரை முட்டாளாக்குவது மாதிரி இன்னொருவர் பேசுவாரானால் முதல் நபர் மற்றவரிடம் ‘முட்டாளாவதற்கு நான் என்ன கொண்டை கட்டிய சீனன் என்று நினைப்பா?’ என்று கேட்கும் வழக்கம் இன்றும் சிங்கள மக்கள் வழக்கில் உள்ளது.

சுதந்திரத்தின் பின்னரும் கூட சீன – இலங்கை நட்பு தொடர்ந்து வந்திருப்பதற்கான அடையாளமாக இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தைக் கூறலாம். 1952ம் ஆண்டு உலகளவில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவியதால் அரிசியை இறக்குமதி செய்வதில் அன்றைய டட்லி சேனநாயக்க அரசு பெரும் சவாலை எதிர்நோக்கியது. அதிகவிலை கொடுத்து அமெரிக்காவில் இருந்தும் ஈக்குவடோரில் இருந்தும் இறக்குமதியான அரிசி இலங்கை மக்கள் விரும்பும் அரிசியாக இருக்கவில்லை. இதே காலப்பகுதியில் இலங்கை இறப்பர் விலை 38 சதவீதமாகவும் தேயிலை 10 சதவீதமாகவும் தேங்காய் எண்ணெய் 40 சதவீதமாகவும் வீழ்ச்சி கண்டிருந்தது, பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந் நிலையில் இலங்கை இறப்பரை வாங்க சீன அரசு முன்வந்தது. ஏனெனில் சீனாவுக்கான இறப்பர் மலேசியாவில் இருந்தே இறக்குமதியாகி வந்தது. ஐ.நா தீர்மானமொன்றின்படி மலேசியா சீனாவுக்கான இறப்பர் ஏற்றுமதியை நிறுத்தியிருந்தது.

இந்தப் பின்னணியில் சீனாவுக்கு இறப்பரை ஏற்றுமதி செய்து பதிலாக அரிசியை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அச் சமயத்தில் இந்த ஒப்பந்தம் இலங்கையில் ஏற்படவிருந்த உணவுப் பஞ்சத்தை தடுத்து நிறுத்தியது. சரியான தருணத்தில் சீனா இலங்கைக்கு கை கொடுத்ததை இலங்கை அரசியல் கட்சிகள் மறக்கவில்லை.

இவ்வாறான நெருக்கடியான காலக்கட்டங்களில் சீனா இலங்கைக்கு உதவி வந்திருக்கிறது. எழுபதுகளை எடுத்துக் கொண்டால் அன்றைய மாவோசே டொங் அரசு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு அன்பளிப்பாக பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத் தொகுதியை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

தற்போது சீனா இலங்கையில் பல பாரிய திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலையம், கொழும்பு துறைமுக நகரம், தாமரைத் தடாகம், தாமரைக் கோபுரம் என எண்ணிக்கொண்ட போகலாம். சீனா பெருமளவு கடன்களையும் வழங்கியுள்ளது.

இவ்வளவு பிணைப்பும் நெருக்கமும் கொண்ட சீன – இலங்கை உறவில் ஒரு பசளைக் கப்பல் விவகாரம் தொய்வை ஏற்படுத்திவிடக் கூடாது. இரு நாடுகளுக்கு இடையிலான இந்த நெருக்கத்தில் இது ஒரு சிறு விவகாரம் மட்டுமே. – இலங்கை வணிக நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அரச வங்கியான மக்கள் வங்கி ஒரு கடன்பத்திரத்தின் மீதான பணக்கொடுப்பனவை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கும் விவகாரத்தில் இலங்கை சீனத் தூதரகம் அவசரப்பட்டு விட்டதாகவே கருத வேண்டியிருக்கிறது.

குவிங்டாவோ சீவிங் பயோடெக் என்ற சீன பசளை நிறுவனம் ஹிப்போஸ்பிரிட்’ என்ற கப்பலில் இலங்கைக்கு அனுப்பிய பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் காணப்படுவதாக இலங்கையில் நடத்தப்பட பகுப்பாய்வில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தே அப் பசளை இலங்கையில் இறக்குமதி செய்யப்படக்கூடாது என்ற தீர்மானத்துக்கு அரசு வந்தது. இதன் அடிப்படையிலேயே இவ் வணிகம் தொடர்பான கடன் பத்திரத்தை வெளியிட்டிருந்த மக்கள் வங்கி அதன் பேரில் கொடுப்பனவுகளை வழங்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஒரு வங்கி நீதிமன்றக் கட்டளைக்கு உடன்பட்டுத்தான் ஆக வேண்டும். மேலும் இத்தீர்மானம் தற்காலிகமானதுதான். இத்தடை அகற்றப்பட்டதும் மக்கள் வங்கியால் அக் கொடுப்பனவை செய்யக்கூடியதாக இருக்கும். வங்கியும் தன் நிலைப்பாட்டை தெளிவுபட சீனத் தூதரகத்துக்கு அறிவித்துவிட்டது.

எனினும் சீனத்தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக செயலகம் மக்கள் வங்கி தன் ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டதாகக் கூறி அவ்வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதாக அறிவித்திருப்பதோடு, இனிமேல் இலங்கையுடனான சர்வதேச கொடுக்கல் வாங்கல்களின் போது மக்கள் வங்கியால் வெளியிடப்படக் கூடிய கடன் சான்று பத்திரங்களை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறு சீன முதலீட்டாளர்களுக்கு அறிவிப்பதாகவும் கடுமையான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், மக்கள் வங்கியுடன் கொடுக்கல்வாங்கல்களை முன்னெடுக்கும் சீன முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் தன் தகவல் குறிப்பில் சீனத் தூதரகம் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும்போது, இவ்விகாரத்தில் தூதரகம் அவசரப்பட்டிருக்கக் கூடாது என்றே கருதத் தோன்றுகிறது.

சீன- இலங்கை உறவு ஒரு கப்பல் விவகாரத்தோடு முடிவடைந்துவிட முடியாது. மக்கள் வங்கி ஒரு கௌரவமான, நாட்டின் முன்னணி அரச வங்கி. அது இக்கொடுப்பனவை மேற்கொள்ள முடியாது என்று சொல்லவில்லை. நீதிமன்ற உத்தரவு அகற்றப்பட்டதும் கொடுப்பனவு செய்யப்படும் என்றே கூறியிருக்கிறது. எனவே இவ்விவகாரம் வெவ்வேறு பிரிவினரின் கைகளுக்குச் சென்று வெவ்வேறான வியாக்கியானங்களுக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்னர் சீன உயர் அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு சுமுக முடிவொன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதை தினகரன் வலியுறுத்திக் கூற விரும்புகிறது.

Comments