தடுப்பூசி வழங்கும் திட்டத்தை குழப்பும் எந்த முயற்சிக்கும் நாம் அஞ்ச மாட்டோம்! | தினகரன் வாரமஞ்சரி

தடுப்பூசி வழங்கும் திட்டத்தை குழப்பும் எந்த முயற்சிக்கும் நாம் அஞ்ச மாட்டோம்!

கொவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை குழப்புவதற்கு எடுக்கப்படும்எந்தவொரு முயற்சிக்கும் அரசாங்கம் அஞ்சப் போவதில்லை என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். எமக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

கே: கொவிட்-19 தொற்றுபரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை முக்கியமான மைல்கல்லை அடைந்திருப்பதாக நீங்கள் யுனிசெப் அமைப்புக்குக் கூறியிருந்தீர்கள். இதனை விளக்க முடியுமா?

பதில்: கொவிட்-19 தொற்றுநோயை நாம் கடக்க வேண்டுமானால் சில வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும். ஆரம்ப கட்டத்தில் எங்களுக்கு சில சிக்கல்கள் இருந்தன. ஏனைய பிரச்சினைகளுக்கு மத்தியிலும் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு நாங்கள் போராடிக் கொண்டிருந்தோம். சகல சுகாதார வழிகாட்டல்களும் வழங்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சித்திரைப் புத்தாண்டு காலத்தில் மக்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது எமக்கு நினைவில் உள்ளது. அவர்கள் சுகாதார வழிகாட்டல்களை கவனத்தில் கொள்ளவில்லை. இதன் விளைவுகளை நாம் எல்லோரும் அனுபவிக்க வேண்டி ஏற்பட்டது. எனினும், தற்போதைய நிலைமை மாறுபட்டதாக உள்ளது. தடுப்பூசி ஏற்றும் எமது திட்டம் சிறப்பானதாக அமைந்திருப்பது இதற்குக் காரணமாகும். தடுப்பூசி வழங்குவதில் சிறப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளது. பெரும்பாலான மக்கள் தற்போதைய புதிய வாழ்க்கை முறைக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொண்டு கொவிட் சூழலின் நிலைமைகளை ஏற்றுக் கொண்டு வாழத் தொடங்கியுள்ளனர்.

கே: அரசாங்கத்தின் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டம் எந்தளவுக்கு வெற்றியளித்துள்ளது?

பதில்: ஜனாதிபதி இந்த விடயத்தை விசேட பொறுப்பாக எடுத்து செயற்படுகின்றார். இந்தப் பயிற்சியை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்காக அனைத்து மக்களையும் அவர் ஒன்று திரட்டியதுடன், அவரே இத்திட்டத்துக்குத் தலைமை தாங்கினார். இத்திட்டத்தை விஸ்தரித்ததன் பலனை நாம் இன்று காண முடிகிறது. இதற்கு நாம் அனைவரும் பங்களித்துள்ளோம். இந்தத் தடுப்பூசித் திட்டத்துக்கு ஜனாதிபதியின் திறன் மற்றும் தலைமைத்துவத்தை குறிப்பிடுவது எனது கடமையாகும். இது நினைவில் கொள்ளப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும், பாராட்டப்பட வேண்டும்.

கே: மீண்டுமொரு கொவிட்-19 அலைக்கு வழிவகுக்காது        பொறுப்பான விதத்தில் மக்கள் செயற்பட வேண்டும் என சுகாதாரத்துறை நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பில் உங்கள் கருத்து யாது?

பதில்: நாம் இதனையே ஆரம்பம் முதலில் கூறி வருகின்றோம். எதிர்காலத்திலும் இந்த விழிப்புணர்வை மேற்கொள்வோம். ஏனெனில் மேலும் ஒரு வருடத்துக்கு சுகாதாரப் பாதுகாப்புக் கட்டமைப்பை மதித்து நாம் நடக்க வேண்டியிருக்கும். கொவிட்-19 முகாமைத்துவத்தில் பொதுமக்களுக்குப் பாரிய பங்கு உள்ளது. இதுவே எமது நிலைப்பாடாகும்.

கே: கொவிட் தடுப்பூசிகளின் வர்த்தக நாமங்கள் பற்றிப் பிழையான தகவல்களை வழங்கி மக்களைக் குழப்ப சில குழுக்கள்                                         முயற்சிக்கின்றன. உங்கள்           நிலைப்பாடு என்ன?

பதில்: நாம் பிரச்சினைகளை மறைக்கவில்லை. ஏனெனில், தடுப்பூசிகள் குறித்த தவறான நம்பிக்கைகள் மற்றும் வதந்திகளைப் பரப்புவதில் முனைப்புக் காட்டும் தரப்பினர் உலகில் காணப்படுகின்றனர். இந்த செயற்பாடுகள் குறித்து நாம் அச்சமடையவில்லை. தடுப்பூசியினால் பெறக் கூடிய நன்மைகள் குறித்த பிரசாரங்களை முன்னெடுத்து மக்களை அதற்காக ஊக்குவித்து வருகின்றோம். கொவிட்-19 தொடர்பான இறப்புகளின் புள்ளிவிவரங்களை எடுத்துக் கொண்டால், மரணமடைந்தவர்களில் கிட்டத்தட்ட 75 சதவீதம் பேர் தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட பெற்றுக் கொள்ளாதவர்களாவர். இரு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 அல்லது 7 வீதமாகும்.

கே: இலங்கையின் தடுப்பூசி         சான்றிதழை ஐக்கிய இராச்சியம் இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை, ரஷ்யாவின்          ஸ்புட்னிக் வீ தடுப்பூசியை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை என்ற சர்வதேச அறிக்கைகளில் உண்மை உள்ளதா?

பதில்: உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல்களையும் சில நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் வேறொன்றைக் கூறுகிறது. ஐக்கிய இராச்சியம் வேறான்றைக் கூறுகிறது. இது தொடர்பில் எமக்குப் பிரச்சினைகள் உள்ளன. உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களே உலகளாவிய ரீதியில் பின்பற்றப்படுகின்றன. ஐக்கிய இராச்சியத்தைப் பொறுத்த வரையில் எமது பக்கத்திலும் சில தவறுகள் உள்ளன. இவற்றை சீர் செய்வதற்கு நாம் முயற்சிக்கின்றோம். தொழில்நுட்பப் பகுதி வெளிநாட்டு நிறுவனம் ஒன்றினால் கையாளப்படுகிறது. இதனை எதிர்வரும் சில நாட்களில் சீர் செய்வதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். சான்றிதழை வைத்திருப்பவர்களின் பிறந்த நாள் எமது கியூ.ஆர் கோர்டில் குறிப்பிடப்படவில்லை. இதனை எதிர்வரும் நாட்களில் சரி செய்ய முடியும் என நினைக்கின்றோம்.

கே: சில வெளிநாடுகளுக்குச் செல்வதாயின் சினோபோர்ம், அஸ்ட்ராசெனிகா மற்றும் ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதில் இளைஞர்கள் மத்தியில் அச்சம் இருப்பதை அவதானிக்க முடிகிறது. இது பற்றி உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்: உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளைக் கவனத்தில் கொள்ளாது சில நாடுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. எனினும், படிப்படியாக நாடுகள் ஒரு நிலைப்பாட்டுக்கு வருகின்றன. உலக சுகாதார ஸ்தாபனம் தடுப்பூசிகளை ஏற்றுக் கொண்டால் அனைத்து நாடுகளும் அவற்றை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வர வேண்டியிருக்கும். இருந்தபோதும் இந்தப் பிரச்சினையை எமது பக்கத்தில் தீர்ப்பதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுப்போம்.

கே: சீனத் தயாரிப்புத் தடுப்பூசிகளுக்குப் பதிலாக பைசர் தடுப்பூசியை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் அல்லவா?

பதில்: இது தொடர்பில் அவர்கள் கலந்துரையாடல்களையும் நடத்தியிருந்தனர். எனினும், 12-_15 மற்றும் 15-_19 வயதிற்குட்பட்டவர்களுக்கு நோய்த் தொற்றுகள் இருப்பதைத் தவிர வேறு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இதனை ஏற்று நாம் தடுப்பூசிகளை வழங்கி வருகிறோம்.

கே: கொவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்குவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதா?

பதில்: ஆம், இந்த நோக்கத்திற்காக நாம் 14.4 மில்லியன் தடுப்பூசிகளுக்கான கட்டளையை வழங்கியுள்ளோம்.

அர்ஜூன்

Comments