தித்திக்கும் தீபாவளி | தினகரன் வாரமஞ்சரி

தித்திக்கும் தீபாவளி

“பட், பட், பட்டென்று பட்டாசு வெடிச்சத்தம் அந்த தோட்டத்தையே அதிரச் செய்தது. ஆண்களும் பெண்களும் சின்னஞ் சிறார்களுமாக எல்லோரும் ஒரே குதூகலமாக பட்டாசைக் கொளுத்தி மலரப்போகும் தீபாவளிப் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாட காத்திருந்தனர். என்னதான் கூலிவேலை செய்தாலும் தோட்டப்பகுதிகளில் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு குறைவே இல்லை. அனேகமாக“ தைப்பொங்கல்”, தீபாவளி என்று வந்துவிட்டால் தோட்டத்தில் சம்பளத்துக்கு பதிலாக எட்வான்ஸ், என்று கூறப்படும் முற்பணம் கொடுப்பார்கள் இந்த முற்பணத்தை பின்பு அவர்களின் சம்பளத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக பிடித்துவிடுவார்கள் அப்படியும் ஒரு சில கம்பெனிக்கார்கள் இந்த முற்பணத்தை கொடுப்பதற்கு அடாவடித்தனம் பிடிப்பார்கள். பின்பு துரைமாருக்கும் தோட்டக் கமிட்டியினருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடாத்தப்பட்டு, அப்படியும் கொடுக்கா விட்டால் பின்பு கம்பெனிக்காரர்களுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் மேலிடத்து பேச்சுவார்த்தை நடாத்தப்படும். அதுவும் சாத்தியப்படா விட்டால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்க வேண்டிவரும் என்று முடிவுக்கு வரும்போது, வேறு வழியின்றி ஒத்துக்கொள்வார்கள் என்னசெய்ய?. இந்தத் தோட்டத் தொழிலாளர்கள் தங்களது எல்லா உரிமைகளையும்,வேலைநிருத்தப் போராட்டம் நடாத்தியே பெறவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்கள் தாமாக முன்வந்து எதையுமே இவர்களுக்கு கொடுப்பதில்லை.

வழமை போல இம் முறையும் தீபாவளிக்கு முற்பணமும் வழங்கப்பட்டிருந்தது. இருந்தாலும் அந்த சொச்சத்தை வாங்கி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட முடியுமா என்ன? புத்தாடைகள் வாங்கவேண்டும். திண்பண்டங்கள் செய்ய வேண்டும். விருந்தினர் வீடுகளுக்கு போய் வரவேண்டும். இத்தனைக்கும் இந்தச் சுண்டக்காய் காற்பணம் போதுமா என்ன? இருந்தாலும் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல இவர்கள் . நகை நட்டுகளை ஈடு வைத்தாவது அல்லது வட்டிக்கு பணம் வாங்கியாவது இந்தப் பண்டிகைகளை வெகுசிறப்பாக கொண்டாடி விடுவார்கள் . “ அட.. போங்க.. இந்த வருஷம் இருக்கோம் அடுத்த வருஷம் இருப்போமா என்ன? போனாப்போகுது . எப்படியாவது கஷ்டப்பட்டு கடனை கட்டப் பார்ப்போம்என்பார்கள் சாவகாசமாக.

“ இந்தா புள்ள சரசாயி, எனக்கு ஒரு வாய்க்கு வெத்தல கொண்டுவா.. “குசினியில் ஏதோ வேலைகளில் மூழ்கிக் கிடந்த சரசாயி, இந்த மனுசனுக்கு வேறவேலையே இல்ல” என்றுதன் மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டு வெற்றிலைக் கொங்காணியைத்( வெற்றிலை இடைப் பை) தேடி ஒருவாய்க்கான வெற்றிலையை மடித்துக் கொண்டு முன் வாசலுக்குச் சென்ற தன் கணவனிடம் நீட்டினாள். அங்கே முண்டாசைக் கொண்டு கை இடுக்கில் குடையை சொறுகிக் கொண்டு நின்ற கணவனைக் கண்டு ஆச்சரியப்பட்டாள்.” என்னங்க. எங்க இப்படி கெலம் பிட்டீங்க”“ஏம்புள்ள மறந்திட்டியா டெயிலர் மாரியப்பன் வீட்டுக்கு போயிட்டுவாரேன். நம்மரெண்டு பேருக்கும் உடுப்புதைக்க கொடுத்தேன்.. என்ன பண்ணி இருக்கானோ தெரியல்ல".

ஏய், என்னா புள்ள போயிலையைக் காணாமே” என்றான் காத்தமுத்து கண்ணும் கருத்துமாக . “போயிலை முடிஞ்சுச்சுங்க.. முடிஞ்சா போயிலையும் சீனியும் வாங்கிட்டு வாங்க”, “சீனியும் முடிஞ்சுச்சா, அப்ப எப்படி பலகாரம் சுடப்போற”. .. சுருக்கா போயிட்டு வாங்க”... என்று கணவனை அனுப்பிவிட்டு மீண்டும் வீட்டு வேலைகளில் மூழ்கிப்போனாள் சரசாயி.

வெய்யில் கடுமையாக கணகணத்தது தடுமாறிக்கொண்டு ஆலமரத்து லயத்தை தாண்டி மேட்டுலயம் பக்கமாக மாரியப்பன் டெயிலர் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார் காத்த முத்து. காத்தமுத்துவை எல்லோரும் காத்தமுத்துக் கங்காணி என்றே செல்லமாக அழைத்தார்கள். அதே தோட்டத்திலேயே பல வருடங்களாக கங்காணியாக வேலை பார்த்தவர், இப்போது தோட்டத்தில் எது நடந்தாலும் இவருக்கு சொல்லாமல் இருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு மதிப்பும் மரியாதையும் அவருக்கு உண்டு. யாருக்காவது சுகவீனம் ஏற்பட்டால் வைத்தியமும் செய்வார். பேய், பிசாசுகள் அண்டி வந்தால் தனது தெய்வ பக்தியால் விபூதி பிடித்தும் கொடுப்பார். இப்படி பல தரப்பட்ட வல்லவர். நல்லவர். வெற்றிலையை மென்று கொண்டே ஒருவாறு மேட்டுலயத்தை அடைந்தவர், அங்கே வாசற்கோடியில் மாடசாமி கன்னத்தில் கைவைத்த வண்ணம் கவலையோடு குந்திக் கொண்டு இருப்பதைக் கண்டார். “என்னப்பா மாடசாமி, இப்படி குந்திக் கெடக்கிற, என்னாச்சி, உனக்கு?”..”கங்காணி ஐயாவா, ஒண்ணுமில்லங்க” “ஒண்ணுமில்லையின்னா ஏ இப்படி குடியேமுழுகிப் போனமாறி இருக்க” “இன்னும் முழுகிப்போக என்னங்க இருக்கு.. எல்லாத்தையும் தான் முழுங்கிட்டு போயிட்டாளே அந்தச் சிறுக்கி“ஆங்..ஓம்மகள பத்தி சொல்லுறீயா.. அது எல்லாம் சரியாவரும். நாளைக்கு தீவாளிபாரு, உம் பேரனையும் தூக்கிக் கிட்டு ஓம் மக வரப்போறாளா இல்லையான்னு பாரு” “இல்லைங்க அவ வரமாட்டா, அப்படியே அவ வந்தாலும் நான் வீட்டுக்குள்ளே எடுக்க மாட்டேனுங்க, தொலைஞ்சி போனவ, எப்படியோ போறா, அவளத் தான் மொட்டை அடிச்சி குடி முழுகிப் புட்டேனுங்களே"“அப்படி ஒதுக்கியேவச்சுப் புடாதே மாடசாமி. நாம எல்லாம் எவ்வளவு நாளைக்கு இருக்கப் போறோம் ” காத்த முத்துவின் குரல் கேட்டு மாடசாமியின் மனைவி பங்கஜமும் அங்கே வந்தாள். “நல்லாச் சொல்லுங்க கங்காணியாரே.

அவ வீட்டவிட்டு போயி ஒரு வருசம் ஆச்சி. அவளப் பாக்கனும்னு இருக்கு.. இந்த ஆளு இப்படியேதான் சொல்லிக்கிட்டு இருப்பாரு. அவரு கெடக்குறாரு போங்க வந்தா நா ஆளாத்தி எடுத்து வீட்டுக்குள்ள கூப்பிட்டுக்கிறேனுங்க”என்றாள் பங்கஜம் வீறாப்போடு. “சரி..சரி நல்லா இருங்க, துணியெல்லாம் அள்ளிப் போட்டுக்கிட்டு இருந்தாரு, போயிபாருங்க..” அவள் சொன்னதைக் கேட்டுக் கொண்டே அவர் போய் விட்டார். ஆனால் பங்கஜத்தின் நினைவுகள் பழைய சம்வத்தை அசை போட ஆரம்பித்தது.

“மாடசாமி – பங்கஜம்” தம்பதிகளுக்கு ஒரே மகள் தான் பவானி. மிக அழகாகவும் அம்சமாகவும் துடிப்பாகவும் இருப்பாள். ஒரே பிள்ளை என்பதால் அவளுக்கு செல்லம் கொடுத்து வளர்த்தார்கள். பவானி ஆசைப்பட்டு கேட்பதெல்லாவற்றையும் வாங்கிக் கொடுப்பார்கள். அம்மாவும் அப்பாவும் அவள் மேல் உயிரையே வைத்திருந்தார்கள் என்று சொல்லலாம். ஆனால் அவளோ தோட்டப் பாடசாலையில் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே அதே தோட்டத்தில் வசித்த குமாருடன் “ஓடிப்போய்” திருமணம் செய்துகொண்டாள். குமாரும் ஓரளவுக்கு வசதியானவன் தான். திறமைசாலியும் கூட இருப்பினும் அவன் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவன். அன்போடும் ஆசையோடும் வளர்த்த தன் மகள் தன் முகத்தில் கரியை பூசி விட்டு,ஒரு தாழ்ந்த சாதிக்காரனோடு ஓடிப்போனதை மாடசாமியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் பத்து மாதம் வயிற்றில் சுமந்த பெற்றெடுத்த தாயல்லவா’ தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை” என்று அந்த தோட்டத்தார் எல்லோரும் அவளைத் தான் சாடினார்கள். “என் கண் முன்னே வந்தால் இருவரையும் கண்டதுண்டமாக வெட்டிப் போடுவேன்” என்று கங்கணம் கட்டினான் மாடசாமி. ஒரு வாரகாலமாக கவ்வாத்துக் கத்தியும் கையுமாக ஒரு பைத்தியக்காரனைப் போலவே சுற்றிச் சுற்றிவந்தான்.

மாடசாமியின் கர்ஜனைக்குப் பயந்து நடுங்கிய குமாரும் பவானியும் அந்த தோட்டத்தை விட்டு, குமாரின் உறவினர் இருக்கும் வேறோர் தோட்டத்துக்குப் போய் குடியேறினார்கள்.

இது நடந்து முடிந்து ஒரு வருடத்துக்கு மேலாகியது. இப்போது அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருப்பதாக தகவல் கிடைத்திருந்தது. அதுவும் அழகான ஆண் பிள்ளையாம் பங்கஜத்துக்கு மகளையும் பேரப்பிள்ளையையும் காணவேண்டும் என்று ஆவலாக இருந்தது. இருந்தும் என்ன பண்ண, போய்ப் பார்க்கவாமுடியும்.

“மாமி.. மாமி”.. யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு சுயநினைவுக்கு வந்தவள், “யாரு” என்று கேட்டாள். மாமி.... செங்கமலம், எங்கம்மா முறுக்குத் தட்டையும் பெரிய கரண்டியையும் வாங்கிட்டு வரச்சொன்னுச்சு, நீங்கதான் பலகாரம் சுடமாட்டீங்களாமே.” செங்கமலம் சொல்ல,“இரு புள்ள, எடுத்துக்கிட்டுவாறேன்”, என்றவாறு சமயலறைக்குள் சென்றாள்.. எல்லோர் வீடுகளிலும் ஒரே அமர்க்களம் இவள் வீடுமட்டும் இருள் மயம்.

மறுநாள் தீபாவளி. திக்கெட்டும் தீப ஒளி வீச மங்களரமாய் பொழுது புலர்ந்திருந்தது. தோட்டக் கோயிலில் நாதஸ்வர ஓசை நயமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. அடுத்த வீட்டு வானொலியில் “வருஷத்தில ஒரு நாளு தீபாவளி“ என்ற பாடலும் ஒலித்துக் கொண்டிருந்தது. “மாமி..மாமி..” செங்கமலத்தின் குரல் கேட்டு வெளியில் வந்த பங்கஜம் ,“என்னபுள்ள.. பலகாரம் கொண்டு வந்தியா? என்று ஆவலோடு கேட்க, “இல்ல மாமி.. அங்கபாருங்க பவானி அக்காவருது..”பங்கஜம் ஒருகணம் திகைத்தே போனாள். மகளும் மருமகனும் பேரப்பிள்ளையையும் தூக்கிக் கொண்டு வந்து கொண்டு இருந்தார்கள். அதற்கிடையில் எப்படியோ விடயத்தை தெரிந்து கொண்ட மாடசாமி கவ்வாத்துக் கத்தியை தூக்கிக் கொண்டு, “எங்க வந்தீங்க, வாசற்படி தாண்டினா கண்டந்துண்டமா வெட்டிப் போட்டிருவேன்.. “என்று வீரா வேசத்துடன் நின்று கொண்டிருந்தான். நல்ல நாளும் அதுவுமா இந்த நன்னாளில் ஏதாவது விபரீதம் நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் அக்கம் பக்கத்தார் எல்லோரும் கூடினார்கள். குமாரும் பவானியும் அதிர்ந்து போய் அப்படியே சிலையைப்போல நின்றார்கள். குழந்தை வீறிட்டு அலறியது.

“நல்ல நாளும் பெரிய நாளுமா வீட்டுக்கு வந்தபுள்ளங்கள இப்படியா செய்யிறது.. கத்திய வீசிட்டு பேரப்புள்ளைய தூக்கிட்டு வீட்டுக்குள்ள அழைச்சுட்டுப்போ மாடசாமி”... என்று யாரோ ஒரு பெரியவர் சொல்ல. “ஆமா, மாடசாமி அதுதான் சரி. .வா. .வா... அவுங்கள வீட்டுக்குள்ள கூப்புடு பாவம் புள்ளங்க... பயந்து நடுங்கிப்போய் நிக்குதுங்க...” என்று இன்னுமொருவர் கூற மாடாமியையும் முந்திக்கொண்டு பங்கஜம் பேரனை தூக்கி உச்சி மோர்ந்த வண்ணமாய் வீட்டுக்குள் நுழைந்தாள்.

மகளும் மருமகனும் “எங்கள மன்னிச்சுடுங்க”... என்று அவனின் காலில் விழ புள்ளங்கள ஆசிர்வாதம் பண்ணி உள்ளுக்கு கூட்டிக்கிட்டுப் போப்பா.. இந்த வருஷம் உங்களுக்குத் தான் தீபாவளி..” யாரோ ஒருவர் இப்படிச் சொல்ல மாட சாமிக்கு மனம் இரங்கியது.

பசறையூர்
ஏ.எஸ். பாலச்சந்திரன்  
 

Comments