மெது மெதுவாக காலனித்துவ காலத்துக்குள் நகர்ந்துகொண்டிருக்கும் பெருந்தோட்டங்கள் | தினகரன் வாரமஞ்சரி

மெது மெதுவாக காலனித்துவ காலத்துக்குள் நகர்ந்துகொண்டிருக்கும் பெருந்தோட்டங்கள்

இலங்கையில் மிக நீண்டகாலமாகவே உள்ளூராட்சி நிர்வாக முறை செயற்பட்டு வந்திருக்கிறது. பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக் காலத்தில் மாநகர சபை, நகர சபை, பட்டின சபை, கிராம சபைகள் உருவாக்கப்பட்டன. அக்காலத்தில் தோட்டத்துறையில் தொழில் புரிவோருக்கு குடியிருப்புகள் அதாவது நிர்வாகிகளின் குடியிருப்பு பங்களா (Bungalow), உத்தியோகத்தர்களின் குடியிருப்பு குவாட்டர்ஸ் (Quarters), தொழிலாளர்களின் குடியிருப்பு லயன் அறை (Line Room) பல தொழிலாளர் குடும்பங்களுக்கு லயம் (Line) போன்றன நிர்மாணிக்கப்பட்டன. இக்குடியிருப்புகளின் சுற்றுப்புற சூழல்களை பராமரித்து வந்தது தோட்ட நிர்வாகமேயாகும். 

மேலும் பாதைகள், பாடசாலை, வைத்தியசாலை, வழிப்பாட்டுத் தளம், கூட்டுறவு சங்கக்கடை, கால்நடை வளர்க்குமிடங்கள், தொழிலாளர் குழந்தைகளை வைத்துக்கொள்ளும் பிள்ளைக் காம்பிரா, மரக்கறித் தோட்டம், தபால் விநியோகம், சலவை சவரம் செய்துகொள்ள வசதிகள், மயானம் போன்றவற்றுடன் குட்டிக் கிராமங்களாக அவை இருந்ததால் மக்கள் தமது அன்றாட தேவைகளுக்கு தோட்ட அதிகாரிகளிடமே செல்ல வேண்டியிருந்தது. 

1972ம் ஆண்டு காணி சீர்திருத்த சட்டத்தின் பிரகாரம் பெருந்தோட்டக் காணிகள் அரச மயமாக்கப்பட்டதால் அபிவிருத்தித் திட்டங்களுக்கு தோட்டக்காணிகள் சுவீகரிக்கப்பட்டன. பெருந்தோட்டங்கள் உள்ளூராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்வாங்கப்படாமையால் அரச அதிகாரிகள் தோட்டங்களுக்குச் செல்வதிலும் பல சிரமங்களை இன்றும் எதிர்கொள்கின்றனர். 

ஆரம்பத்தில் கிராம சபைகளில் தோட்ட மக்கள் உள்வாங்கப்படாததை ஆட்சேபித்து தொழிற்சங்கங்கள் குரல்கொடுத்தன. உள்ளூராட்சி அதிகாரத் தேர்தல் சட்டம் (அத்தியாயம் 262) தோட்டத் தொழிலாளர் கிராம சபைத் தேர்தல்களில் பங்குகொள்ள முடியாதவாறு தடை செய்திருக்கிறது. 

இச்சட்டத்தின் 6ஆவது சரத்தின் 2ஆவது உப பிரிவின்படி தோட்டத்தில் வசிக்கும் தொழிலாளியோ அல்லது கங்காணியோ எக்காலத்திலும் கிராம சபைத் தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதியற்றவர்களாவர். இந்திய வம்சாவளியினரில் பதிவுப் பிரஜைகள் மட்டுமன்றி அங்கு வாழும் சிங்களத் தொழிலாளரும் இச்சட்டத்தின் கீழ் கிராம சபை நடவடிக்கைகளிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தனர். இதனை கலாநிதி என்.எம். பெரேரா கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்:- 

ஏழை மக்களை சுரண்டி வாழும் ஐரோப்பிய தோட்ட முதலாளிமாருக்கு வாக்குரிமையளித்து ஏழை இந்தியத் தொழிலாளருக்கு வழங்காதது மாபெரும் அநீதி ஆகையால் 1970ல் முக்கூட்டு முன்னணி அரசின் அரசியல் அமைப்பு அமைச்சர் கொல்வின் ஆர்.டி. சில்வாவிடம் அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம் சமர்ப்பித்த ஆலோசனைகளில் தோட்டங்களில் வசிப்பவர்களுக்கு கிராம சபை நடவடிக்கைளில் பங்குகொள்ள சட்டத் திருத்தம் அவசியம் என்ற ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது.   

1987ம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தோட்டப் புறங்களில் குடியிருப்பவர்கள் உள்ளூராட்சி சபை தேர்தலில் வாக்களிக்கவும் போட்டியிடவும் அருகதை உள்ளவர்களாவர். ஆனால், மேற்குறிப்பட்ட பிரதேச சபை சட்டத்தின் 33ஆவது சரத்தில் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:- 

பிரதேச சபையானது அதன் எல்லைக்குள் அமைந்துள்ள ஒரு தோட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட தோட்டங்கள் அல்லது கைத்தொழிற் பொறுப்பு முயற்சிகள் எவற்றினதும் சொந்தக்காரின் அல்லது சொந்தக்காரர்களின் வேண்டுகோளின் பேரில், அத்தகையதொரு இடப்பகுதியில் வீதியொன்றை நிர்மாணித்தல் அல்லது பேணுதல் பொதுமக்களின் நலனை வேறு வகையில் நியாயமானதாக்காதென பிரதேச சபை அபிப்பிராயப்படும் ஏதேனும் விடயத்தில், பிரதேச சபையால் அங்கீகரிக்கப்படக் கூடியவாறாக அத்தகையை நிர்மாணத்தின் அல்லது பேணுகையின் செலவுகள் தொடர்பான அத்தகைய உதவித்தொகையைக் கொடுப்பனவு செய்வதற்கு அமைவாகவும் தோதான ஒரு சாசனத்தின் மூலம் அத்தகைய வீதி பகிரங்க வீதியொன்றாக அமைக்கப்பட்டுப் பிரதேச சபைக்கு உரித்தாக்கப்படும் என்ற நிபந்தனைக்கமைவாகவும், கேள்விக்குட்பட்ட தோட்டத்தின் அல்லது தோட்டங்களின் அல்லது தொழிற்பொறுப்பு முயற்சியின் அல்லது முயற்சிகளின் சேவைக்காக வீதியொன்றை நிர்மாணிப்பதற்காக அல்லது பேணுவதற்காக, அத்தகைய சொந்தக்காரருடன் அல்லது சொந்தகாரர்களுடன் ஒப்பந்தத்தைச் செய்யலாம். அத்துடன் உடன்பட்டுக் கொள்ளப்பட்ட அத்தகைய உதவுத்தொகைகள் யாவும் நன்மையடையும் காணிகளின் மீது சுமத்தப்படும் விசேட வீதவரிகளாகக் கருதப்படல் வேண்டும் என்பதுடன், இச்சட்டத்தின் கீழ் சுமத்தப்படும் வீதவரியொன்றைப் போன்று அதே முறையில் அறவிடப்படற்பாலதாதலும் வேண்டும்: அத்துடன் வீதவரிகள் தொடர்பிலான இச்சட்டத்தின் ஏற்பாடுகள் யாவும் அது தொடர்பில் ஏற்புடையனவாதல் வேண்டும். 

மேற்படிச் சரத்தின் பிரகாரம் தோட்டங்களில் வாழும் மக்களுக்கு அபிவிருத்திகள் செய்வதில் தோட்ட அதிகாரி அல்லது உரிமையாளரின் அனுமதி அவசியமாகும். இதனால் மக்கள் வெறும் வாக்களிக்கும் இயந்திரங்களாகவே இருந்தனர். ஆகையால், இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 

பெருந்தோட்டப் பிராந்தியங்கள் விடயத்தில், பிரதேச சபைகள் விசேட தீர்மானமொன்றை சேர்த்துக்கொண்டதன்மேல் அத்துடன் இயையான தோட்டத்தின் நிருவாக அதிகாரிகளுடனான உடன்பாட்டுடன், அந்தந்த பிராந்தியங்களில் வதிவோரின் சேமநலனுக்காக அவசியமான வீதிகள், கிணறுகள் மற்றும் பொது வசதிகளை வசதியளிப்பதற்கு பிரதேச சபை நிதியத்தை பயன்படுத்தலாம். இப்பிரிவின் நோக்கத்திற்காக, பெருந்தோட்டப் பிராந்தியங்கள் என்பது தேயிலை, இறப்பர், தென்னை மற்றும் எண்ணெய் மரம் ஆகியன பயிர்செய்யப்படும் தோட்டங்களில் தொழிலாளர்கள் வாழும் மத்திய, ஊவா, சப்ரகமுவ, தெற்கு, மேற்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களின் மாவட்டங்களில் கீழ்வரும் இடப்பரப்புகள் எனப்பொருள்படும். 

பெருந்தோட்டத்துறை என்பது வெறும் தொழிலாளர்களை மாத்திரம் உள்வாங்கப்பட்டதாக இல்லை. அங்கு தொழிலாளர்கள், வயோதிபர், சிறுவர்கள், உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் உட்பட அரச ஊழியர்கள், ஆலய பூசகர், சிறு வியாபாரிகள், கால்நடை வளர்ப்பவர்கள், மரக்கறி விவசாயிகள், உடை தயாரிப்பாளர்கள், சிறு உற்பத்தியாளர்கள், வாகன சாரதிகள் மற்றும் திருத்துனர்கள், நிர்மாணத்துறைத் தொழிலாளர்கள் போன்றோரை உள்ளடக்கியது. ஆரம்ப காலங்களில் வைத்தியசாலைகளில் மருந்து எடுப்பது அல்லது தங்கியிருந்து வைத்தியம் செய்வது மற்றும் பொலிஸில் முறைப்பாடு செய்வது போன்ற விடயங்களுக்கும் தோட்ட அதிகாரியின் கடிதம் அவசியமாக இருந்தன. இந்த முறையை தொழிற்சங்க தலையீட்டில் ஒழிக்கப்பட்டுள்ளன. 

2019ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்ட அபேட்சகர்களின் தேர்தல் பிரசார காரியாலயங்களை அவர்களின் வீடுகளில் அமைத்துக்கொள்ள கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலாளர், பொலிஸ், உதவித் தேர்தல் ஆணையாளர் ஆகியோர் அனுமதி வழங்கியும்தோட்ட அதிகாரிகளால் மறுக்கப்பட்டுள்ளன. இதனால் அபேட்சகர்கள் தங்களது தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.   தொழிலாளர் குடியிருப்புகளில் அன்றாடம் சேரும் குப்பைக் கூளங்களை அப்புறப்படுத்துவதற்கோ அல்லது குப்பைக் குழிகளில் கொட்டுவதற்கோ எவ்வித ஏற்பாடுகளும் தோட்டங்கள் கம்பனிமயமான பின் செய்யப்படுவதில்லை. இதனால் பெரும் தொல்லைகளுக்கும் அசெளகரியங்களுக்கும் மக்கள் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. 

அட்டாம்பிட்டி தோட்டக் குடியிருப்புகளில் சேரும் கழிவு குப்பைகளை நிர்வாகம் அகற்றாததினால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்திற்கு முறைப்பாடு செய்ததால், இது சம்பந்தமாக ஹாலி எல பிரதேச சபையால் அட்டாம்பிட்டி நகர கழிவுகளை எடுத்துச்செல்லும் வாகனத்தின் மூலம் இத்தோட்டக் குடியிருப்புகளில் சேரும் குப்பைக் கூளங்களையும் அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டது. 

இவ்விடயங்கள் சம்பந்தமாக மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள், ஏன் தலைவர்களும் உப தலைவர்களும் பிரதேச சபைகளில் உள்ளதால் இதுபோன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு அந்தந்த சபைகள் மூலமாக தீர்வுகாண்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். வீடுகளில் தினந்தோறும் சேரும் குப்பைக் கூளங்களை அகற்றி அதை நவீன விஞ்ஞான முறையில் சோதன பசளையாக மாற்ற முடியுமாதலால் பிரதேச சபைகள் கலந்தாலோசிக்க வேண்டும். 

தோட்டக் குடியிருப்புகளும் அதனோடு தொடர்புள்ளவைகளையும் நாட்டின் பொது நீதியின் பிரகாரம் உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தில் கொண்டு வருவதாக தேர்தல் விஞ்ஞாபனங்களில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரால் உறுதியளிக்கப்பட்டன. எனினும் தோட்டப்புற முறையை முற்றாக மாற்ற அரசாங்கங்களும் தோட்ட நிருவாகங்களும் முன்வருவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில், இந்த மக்களின் உழைப்பை ஆகக்குறைந்த ஊதியத்திற்கு சுரண்டுவதற்கும் கொத்தடிமைகளாக வைத்துக்கொள்வதற்கும் தோட்ட நிருவாகங்களின் கீழ் இருப்பதன் மூலமே இலகுவானதாக இருக்கும் என்பதாலாகும். 

1992ல் அரச தோட்டங்கள் தனியார் கம்பனிகள் குத்தகைக்கு எடுத்தபோது ஏற்றுக்கொண்ட மக்கள் வசதி வாய்ப்புகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டு தற்போது பூஜ்ஜிய நிலைக்கு வந்துவிட்டன. தோட்டத் தொழிலோடு சம்பந்தமற்ற விடயங்களில் தொழிலாளர்களை தண்டிக்கும் நிர்வாக அராஜக முறையிலிருந்து விடுபடவும் காலனித்துவ ஆட்சிகால விதி முறைகளிலிருந்தும் முழுமையாக விடுபடவும் பொது நீதியின் கீழ் வாழ அவர்களின் குடியிருப்புகளும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளும் உள்ளூராட்சி சபை நிர்வாகத்தின் கீழ் வருவதன் மூலம் அவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைந்து வாழும் மக்களாவர். இதற்கு அரசியல் தலைமைகள் இராஜதந்திர முறையில் அணுகி செயற்படும் முறையிலேயே தங்கியுள்ளன. 

ஆ. முத்துலிங்கம்
பொதுச் செயலாளர், 
ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம்.  
   

Comments