அன்றைய பெருந்தோட்ட கட்டமைப்பை வெளிப்படுத்தும் தோட்டத் தொழிலாளர் வீரப்போராட்டம் | தினகரன் வாரமஞ்சரி

அன்றைய பெருந்தோட்ட கட்டமைப்பை வெளிப்படுத்தும் தோட்டத் தொழிலாளர் வீரப்போராட்டம்

சில சம்பவங்கள் - சில பொருட்கள் - சில பாடல் வரிகள் - சில புத்தகங்கள் நம்மைப் பலவாறு சிந்திக்கத் தூண்டிவிடும். இந்த சிந்தனைகள் எண்ணப்பறவைகளைப் பின்நோக்கிப் பறக்கவிடுகின்றன. இந்த பறத்தலில் தான் எத்தனை எத்தனை நினைவலைகள். 

ஆம்.! எச்.எச். விக்கிரமசிங்க  அனுப்பி உதவிய அமரர் பி.ஆர். பெரியசாமியின் 'தோட்டத்தொழிலாளர் வீரப் போராட்டம்'   என்ற நூலும் என்னுள் எத்தனையோ எண்ணங்களை எழுப்பிவிட்டது. ஒரே மூச்சில் வாசித்து முடித்த பின் சில பகுதிகளை மீண்டும் அமைதியாக ஆழமாக வாசிக்கவும் தூண்டியது. 

ஆங்கிலேய ஆட்சியாளர்களால்   தென்னிந்தியாவிலிருந்து  அழைத்துவரப்பட்ட என்ற சொல்லை விட கொண்டுவரப்பட்ட என்ற சொல்லே மிகவும் பொருந்தும் என்று நினைக்கின்றேன். இந்திய மக்கள் எத்தகைய கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதை பெரியசாமி அழகுத்தமிழில் அடுக்கு மொழியில் உணர்ச்சிகரமாக எடுத்துக்காட்டியுள்ளார் என்பதை வாசிக்க வாசிக்க நான் ஆச்சரியப்பட்டேன். இது பெரியசாமியின் உள்ளக் குமுறளாய் - தன்னினத்து மக்கள் மீது அவர் கொண்டிருந்த அளவற்ற அன்பின் பிரதிபலிப்பாய் - தொழிலாளர் வர்க்கத்தின் மீது அவர் கொண்டிருந்த ஆதங்கத்தின் வெளிப்பாடாய் அமைந்திருக்கக் கண்டேன்; வாசிப்பவர்களும் காண்பார்கள். 

தோட்டத் தொழிலாளர்களின் ஆரம்பகால வீரப்போராட்டம் தொடங்கிஇ அவர் வாழ்ந்து முடியும் காலமுடிவு வரை நடந்த வீரப் போராட்டங்களை ஒழுங்குபடுத்தி சீராகத் தந்துள்ளார்.  தற்போது இருப்பது போன்ற எந்தவொரு தொலைத் தொடர்பு சாதனங்களோஇ போக்குவரத்து வசதிகளோ இல்லாத அக்காலக்  கட்டத்தில் இத் தரவுகளைச் சேகரிக்க பெரியசாமி எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

கணனி முன்னமர்ந்து விரல் நுனியால் எல்லாத் தரவுகளையும் பெற்றுக்கொள்ளும் இன்றைய தலைமுறையினர் கட்டாயமாக பெரியசாமியின் பெருமுயற்சியை ஆழமாக உணர வேண்டும். 

இச்சிறு நூல் அன்றைய தொழிலாளர்களின் ஒட்டுமொத்த ஒற்றுமையுணர்வும்இ தியாக சிந்தையும் இழையோடுகிறது. பஞ்சமும் பட்டினியுமாக வாழ்ந்தாலும் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அவர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டங்களில் நாம் காண்பது அவர்கள் பாமரர்களாக இருந்தபோதும் தம் வர்க்கத்தின் விடுதலைக்காகவும்இ உயர்வுக்காகவும் எத்தகைய தியாகத்தையும் செய்வதற்கு அவர்கள் தயங்கவில்லை என்பதையே.  

மாநாடுகள் நடந்தபோதெல்லாம் ஆயிரக்கணக்கானோர் - பல்லாயிரக் கணக்கானோர் ஒன்றுகூடியமையை அமரர் பெரியசாமி ஆவணப்படுத்தியுள்ளார். எத்தனை எத்தனையோ வசதிகளும் வாய்ப்புக்களும் உள்ள இன்றைய நாளில் இப்படிக் கூடுவார்களா? எந்தச் சுயநலமும் இல்லாமல் ஒன்று சேருவார்களா என்றதொரு பெருங்கேள்வியும் என்னுள் எழுகிறது. அரைப் போத்தலுக்கும் சாப்பாட்டுப் பார்சலுக்கும் சில சில்லறைகளுக்குமல்லவா இன்று மக்கள் கூடுகின்றனர்! 

தோட்டத் தொழிலாளர்களின் வீரப் போராட்டங்களில் பங்குபற்றி உழைத்த அமரர் ஏ. அஸீஸ் அவர்களின் வீரதீர செயல்களையும் இந்நாளில் நான் கண்டு வியந்தேன்.

அமரர் அஸீஸோடு மிகப்பிந்திய காலத்தில் எனது பதின்ம வயதில் ஒன்றாக பணியாற்றக் கிடைத்த இறையருளையும் இப்போதுதான் நான் உணர்கின்றேன். ஓர் உயர்ந்த உன்னதமான இலட்சிய புருஷரோடு சில காலமாவது பணிபுரிய இறைவன் அருளினான் என்பதால் ஒரு சிறிய பூரிப்பும் என்னுள் உருவாகிறது.  

மலையகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அவரோடு சென்று பணியாற்றியமையை இப்போது பெரும் பேறாகவே கருதவைத்தது பெரியசாமியின் இந்நூல். 

இன்றைய இளந் தலைமுறையினருக்கு இப்படியான வீரவரலாறுகளைக் கட்டாயமாக அறியவைக்க வேண்டும். மலையகத்தில் தற்போது சிறிது சிறிதாக பல்துறை மறுமலர்ச்சி ஏற்பட்டு வருவது உண்மையே. இந்த நூலிலுள்ள வரலாறுகள் போன்றவற்றை அவர்கள் உளப்பூர்வமாக அறிந்துகொள்ள வழிவகுக்க வேண்டியது மூத்த தலைமுறையினரின் தலையாய கடமையாகும்.

அப்போது தான் நம் வேர் எங்கே இருக்கிறது - அது எப்படி உருவானது என்ற உள்ளார்ந்த உளப்பதிவுகளும் உளப்பூர்வமான சமூக ஈடுபாடும் ஏற்படும்.

நாம் யார்? முன்னோர் எப்படி வாழ்ந்தார்கள்? அவர்கள் தாண்டி வந்த மேடு பள்ளங்கள் எத்தகையவை? இன்று நாம் அனுபவிக்கும் சில சிறிய - உரிமைகளைப் பெற்றுக்கொள்ள அவர்கள் எவ்வளவு பாடுபட்டனர்? எத்தனை தியாகங்களைக் கைமாறு கருதாது செய்தனர்இ என்பதையெல்லாம் இளைய தலைமுறையினர் உணர இத்தகைய நூல்கள் மிக உதவும். 

வாசிப்பை நேசிக்காத இன்றைய தலைமுறையினருக்கு இத்தகைய நூல்களை அறிமுகப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு ஆசிரியர்களையே சார்ந்துள்ளது என்பதையும் நான் விநயமாகக் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன். இறுதியாக- தோட்டத் தொழிலாளர் வீரப் போராட்டம் எனது மனதில் சிந்தனை   போராட்டத்தையே ஏற்படுத்தி விட்டது.  

நயீமா சித்திக்

Comments