தோட்ட நிர்வாகத்தின் அடக்கு முறையும் அட்டூழியமும் தாங்க முடியாதவை! | தினகரன் வாரமஞ்சரி

தோட்ட நிர்வாகத்தின் அடக்கு முறையும் அட்டூழியமும் தாங்க முடியாதவை!

பெருந்தோட்ட கம்பனிகள் தற்போது தொழிலாளர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்குவதாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்தும் பெருந்தோட்ட பகுதிகளில் ஏற்படுவதால் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் எழுந்த வண்ணம் உள்ளன. சில பிரச்சினைகள் வாய்த்தர்க்கத்தில் ஆரம்பித்து கைகலப்பில் முடிந்துள்ளன. இதனால் பெருந்தோட்டங்களில் எதிர்கால தொழிலாளர்களின் பிள்ளைகள் ஒரு தொழிலாளியாக வரப்போவதில்லை. இன்று பல தேயிலை மலைகள் காடுகளாக மாறியே காட்சியளிக்கின்றன. பலர் தோட்ட வேலைகளை விட்டுவிட்டு வெளியிடங்களுக்கு வேறு தொழில் நாடிச் செல்கின்றனர். தோட்டக் கம்பனிகள் மற்றும் அதன் நிர்வாகிகளின் தொடர்ச்சியான அதிகார போக்கினாலும் அடக்குமுறையாலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு மன கஷ்டங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அண்மையில் மஸ்கெலியா பிளான்டேசன் கம்பனியின் கீழ் இயங்கும் தலவாக்கலை பெரிய கட்டுக்கலை தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட நிர்வாகத்துக்கெதிராக கொதித்தெழுந்தனர். 

மஸ்கெலியா பிளான்டேசன் கம்பனியின் கீழ் இயங்கும் தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் நிர்வாகத்துக்கெதிராக செப்டம்பர் மாதம் 29ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக 37நாட்களுக்கு மேலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செப்டம்பர் மாதம் 28ம் திகதி தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் சிலருக்கும் அத்தோட்ட உதவி அதிகாரி மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பு காரணமாக ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் தோட்டத் தொழிலாளர்கள் சிலரால் தாக்கப்பட்டதாகக் கூறி அத்தோட்ட உதவி அதிகாரி மற்றும் உதவி வெளிக்கள உத்தியோகத்தர்கள் இருவர் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தோட்ட உதவி அதிகாரி மற்றும் உதவி வெளிக்கள உத்தியோகத்தர்களால் இரு பெண் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக கூறி அவர்களும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து 29.9.2021தோட்ட உதவி அதிகாரி மீதும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக 11சந்தேக நபர்களை தலவாக்கலை பொலிஸார் கைது செய்தனர்.  

இதனையடுத்து தோட்ட நிர்வாகத்தின் அடாவடித்தனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் தாக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதி வேண்டியும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் தோட்ட அதிகாரி மற்றும் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியும் தொழிலாளர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அன்றைய தினமே அத்தோட்ட உத்தியோகத்தர்களும் தொழிலாளர்களுக்கு எதிராக போராட்டங்களில் குதித்தனர். கைது செய்யப்பட்ட 11சந்தேக நபர்களையும் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தலவாக்கலை பொலிஸார் ஆஜர்படுத்தியபோது அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். அதன் பின்னர் அடுத்த வாரங்களில் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் அத்தோட்ட உதவி அதிகாரி மற்றும் அத்தோட்ட இரு உதவி வெளிக்கள உத்தியோகத்தர்கள் இரு பெண் தொழிலாளர்களை தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் அவர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியவில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள். இருந்தபோதிலும் இன்றுவரை இந்த தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத தோட்ட நிர்வாகத்துக்கெதிராக தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் அத்தோட்ட தொழிலாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். 

இத்தோட்டத்தில் இவ்வாறான ஒரு முறுகல் நிலை ஏற்பட காரணம் என்ன? என்பது தொடர்பில் அத்தோட்ட தொழிலாளி விஸ்வநாதன் இப்படிச் சொல்கிறார்: 

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு ஆண் தொழிலாளர்கள் வழமையாக பிற்பகல் 1மணிவரை மட்டுமே வேலை செய்வார்கள். தற்போது இந்த 1000ரூபா சம்பள அதிகரிப்புக்கு பின்னர் மாலை 5மணி வரை ஆண் தொழிலாளர்கள் வேலை செய்தால் மட்டுமே 1000ரூபா சம்பளம் வழங்குவோம் என்கிறது. தோட்ட நிர்வாகம். நாங்கள் 1மணிவரை மட்டுமே வேலை செய்தால் அன்றைய தினம் 561ரூபா மட்டுமே சம்பளம் வழங்குகின்றனர். இதனால் நாங்கள் அச்சம்பளத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இத்தோட்டத்தில் 145தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்களாக இருக்கின்றனர். இருந்தபோதிலும் வெளி இடங்களிலிருந்து தொழிலாளர்களை கொழுந்து பறிக்க அழைத்து வந்து அவர்களுக்கு ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 40ரூபா வழங்குகின்றனர். அதேநேரம் இத்தோட்டத்திலுள்ள ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 35ரூபா வழங்குகின்றனர். இது எந்த விதத்தில் நியாயம்? வெளியாட்களுக்கு வேலை வழங்குவதால் அவர்களுக்கும் எங்களுக்கும் பல்வேறு முரண்பாடுகள் தோன்றுகின்றன. அதுமட்டுமல்லாமல் 30வருடங்களுக்கு மேலாக நாங்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களை தோட்ட நிர்வாகம் பறித்து தேயிலை கன்றுகளை நாட்டியுள்ளது. அதிலிருந்த வாழை மரங்களை கூட அடியோடு வெட்டி சாய்த்தனர். முன்னாள் அமைச்சர் அமரர் சந்திரசேகரன் கட்டிக்கொடுத்த நீர்த்தாங்கியை உடைத்து சேதப்படுத்தி விட்டனர். 40வருட காலமாக இருந்த விளையாட்டு மைதானத்தில் தேயிலைச் செடிகளை நாட்டியுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து அடக்குமுறைக்கு மேல் அடக்குமுறை.  

இவ்வாறான பல்வேறு முரண்பாடுகள் காரணமாக தோட்ட நிர்வாகத்துக்கும் இங்குள்ள தொழிலாளர்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. இதன் காரணமாகவே பல்வேறு போராட்டங்கள் எழுந்தன. தோட்ட நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் முறுகல் நிலை உருவாக இதுவே காரணம். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு எங்களுக்கு வழமையாக வழங்கப்படும் தீபாவளி முற்பணம் வழங்கப்படவில்லை. எங்கள் சம்பள பணத்தில் தோட்ட நிர்வாகத்தால் சேமித்து வைத்த பணத்தை கூட ஆர்ப்பாட்டம் செய்தே பெற்றோம். அதிலும் கூட்டுறவு பணம் வழங்கப்படவில்லை. மேலும் இத்தோட்டத்தில் மருந்து தெளிக்கும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கப்படவில்லை. பாதுகாப்பு உடைகள் இன்றியே மருந்து தெளிக்க தோட்ட நிர்வாகம் தோட்ட தொழிலாளர்களுக்கு பணிக்கின்றது.   பெண் தொழிலாளி வடிவுக்கரசி தெரிவிக்கையில்: 

20கிலோ கொழுந்து பறித்தால் மட்டுமே 1000ரூபா சம்பளம் வழங்குகின்றனர். 18கிலோ தேயிலை கொழுந்து பறித்தால் 40ரூபா படியே சம்பளம் வழங்குகின்றனர். அதுமட்டுமல்லாமல் நாங்கள் பறிக்கும் கொழுந்தின் நிறையில் ஒரு நாளைக்கு மூன்று வேளை 15தலா 5கிலோ வீதம் 15கிலோ அறவிடுகின்றனர். ஒரு பெண் தொழிலாளி ஒரு நாளைக்கு குறைந்தது 35கிலோ எடுத்தால் மட்டுமே 20கிலோ வரும் அன்றைய தினம் சம்பளத்திற்கு. அதுமட்டுமல்லாமல் வெளியாட்களை இங்கு வேலைக்கு அமர்த்துவதால் தேயிலை மலைகள் வீணாகின்றன. இதனால் எங்களுக்கு அம்மலைகளில் தேயிலை கொழுந்து பறிக்க முடியாமல் போகின்றது. தேயிலை மரங்களை முறையாக பராமரிக்க முடியவில்லை. இங்குள்ள பிள்ளை பராமரிப்பு மடுவம் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளது. எங்களுடைய பிள்ளைகளை எங்கு விட்டுவிட்டு வேலைக்கு செல்வது? தோட்ட அதிகாரியிடம் எத்தனையோ தடவைகள் கூறியும் இதுவரை பிள்ளை பராமரிப்பு மடுவம் இன்னும் திறக்கப்படவில்லை. 750ரூபா சம்பளம் வாங்கும்போது நிம்மதியாக வேலை செய்து சந்தோஷமாக பிழைப்பு நடத்தி வந்தோம். இந்த 1000ரூபா சம்பளம் என்று அறிவிக்கப்பட்டதோ அன்றிலிருந்து நிம்மதியே இல்லை என்றார். 

இம்முறை தீபாவளியை கறுப்பு தீபாவளியாகவே கொண்டாடினோம்.

தீபாவளிக்கு முதல் நாள் எங்கள் சம்பள பணத்தில் பிடித்து வைத்த ஒரு தொகை பணத்தை தோட்ட நிர்வாகம் வழங்கியது. இந்த பணத்தை வாங்குவதற்கு தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக 1.11.2021ஆர்ப்பாட்டம் செய்தமையாலேயே இதுவும் கிடைத்தது. தீபாவளிக்கு முதல் நாள் இந்த பணத்தை பெற்று எப்படி தீபாவளி கொணடாடுவது? தேவையானவற்றை எப்படி வாங்குவது? எங்கள் பிள்ளைகளுக்கு புதிய ஆடைகள் ஒன்றையாவது சரி வாங்க முடியுமா? தொடர்ச்சியாக 37நாட்களுக்கு மேல் வேலைக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். நாங்கள் வாய்விட்டு சொல்ல முடியாத அளவிற்கு பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ளோம். மிகவும் கஸ்டப்படுகின்றோம். எங்களுடைய கோரிக்கைகளை தோட்ட நிர்வாகம் உடனடியாக நிறைவேற்றும் பட்சத்தில் நாங்கள் மீண்டும் பணிக்கு செல்லத் தயாராக இருக்கின்றோம். தோட்ட நிர்வாகத்தால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள 11தொழிலாளர்களுக்கும் மறுபடியும் தோட்ட நிர்வாகம் வேலை வழங்க வேண்டும் அவ்வளவுதான்.   அப்படி அவர்களுக்கு மாத்திரம் வேலை நிறுத்தம் செய்திருப்பது முற்றிலும் தவறு. அப்படி என்றால் தோட்ட உதவி அதிகாரிக்கும் உதவி வெளிக்கள உத்தியோகத்தர்கள் இருவருக்கும் வேலை வழங்கக்கூடாது. இத்தோட்டத்தில் வெளியாட்களுக்கு வேலை வழங்குவதை தோட்ட நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும். எங்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தோட்ட நிர்வாகம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்கிறார் இவர்.  

இத்தோட்டத்தில் அதிகமான தொழிலாளர்கள் தொழிலாளர் தேசிய சங்கத்திலும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்திலும் அங்கம் வகிக்கின்றனர். இருந்தபோதிலும் இப்பிரச்சினை தொடர்பாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் மாத்திரம் குரல் எழுப்பியதாகவும் நுவரெலியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் 5பாராளுமன்ற உறுப்பினர்களும் கண்டுக்கொள்ளவே இல்லையெனவும் அத்தோட்ட தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தொழில் திணைக்களம் தோட்ட தொழிலாளர்களுக்கு சார்பாக செயற்படாமல் தோட்ட நிர்வாகங்களுக்கு ஆதரவாக செயற்படுவதாக இத்தோட்ட தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.   

தலவாக்கலை பி. கேதீஸ்

Comments