மக்களுக்கு நிவாரணமளிக்கும் வரவு - செலவு திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

மக்களுக்கு நிவாரணமளிக்கும் வரவு - செலவு திட்டம்

முன்னர், அறுபது, எழுபதுகளில், இலங்கை மக்கள் அனைவருமே மிகவும் எதிர்பார்த்திருக்கும் ஒரு பாராளுமன்ற நிகழ்வாக வரவு – செலவு திட்ட உரை அமைந்திருந்தது. நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பு, விலை குறைப்பு, சம்பள அதிகரிப்பு, கலால் வரி உயர்வு, அரிசி மானியத்தின் எதிர்காலம், பாண் விலை குறையுமா, கூடுமா என்பனவற்றுக்கு வருடத்துக்கு ஒரு முறை வரவு – செலவு திட்டத்தின் மூலமே தீர்வு பெற்றுத் தரப்படுவது வழமையாக இருந்ததால் வரவு செலவு திட்ட உரை சாதாரண மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பைப் பெற்றிருந்தது. ஒரு முறை வரவு செலவு திட்ட உரையில் சிகரெட் விலை அதிகரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் வர்த்தகர்கள் சிகரெட்டுகளை பதுக்க, நாட்டில் சிகரெட் பஞ்சம் ஏற்பட்டது. ஆனால் அன்றைய நிதியமைச்சர் கலாநிதி எம்.எம். பெரேரா சிகரெட் விலையை குறைக்கவே, பதுக்கியவர்கள் பெரும் நஷ்ட மடைந்தனர். சில வாரங்களில் நிதியமைச்சர் சிகரெட் விலையை உயர்த்தி உத்தரவிட்டார். இவ்வாறான ருசிகரமான நிகழ்வுகளை பதிவு செய்துள்ளது இலங்கையின் வரவு செலவு திட்ட வரலாறு.

கடந்த வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ இலங்கையின் 76ஆவது வரவு – செலவு திட்ட உரையை நிகழ்த்தினார். பொதுஜன பெரமுனையின் இரண்டாவது வரவு செலவு திட்டம் இது. முன்னரைப்போலவே, வெகு காலத்தின் பின்னர், மக்கள் எதிர்பார்த்திருந்த வரவு செலவு திட்டமாக இதை வர்ணிக்கலாம். கொரோனா பாதிப்பினால் பெரும் பாதிப்பை இந்நாடு எதிர்கொண்டிருப்பதோடு வாழ்க்கைச் செலவு உயர்வு, விவசாயிகள் பிரச்சினை, ஆசிரியர் பிரச்சினை போன்ற பல்வேறு எரியும் பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு தரப்பினரும் நிவாரணங்கள் கிட்டுமா என்ற கேள்விக்குறியுடன் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் உரையை எதிர்பார்த்திருந்தனர்.

இந்த வரவு – செலவு திட்டத்தை எதிர்த்தரப்பினர் வழக்கம் போலவே மோசமான வரவு – செலவு திட்டம் என வர்ணித்துள்ள போதிலும், முன்னொருபோதுமில்லாத அளவுக்கு சவால்களும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் இந்த வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது. இதைக் குறை கூறத்தான் எதிர்த்தரப்பினருக்கு முடியுமே தவிர இதைவிட மேலான ஒரு வரவு – செலவு திட்டத்தை உருவாக்கி இருக்க எங்களால் முடியும் என்று ஆதாரபூர்வமாக தெரிவிப்பதும் நிரூபிப்பதும் அவர்களால் சாத்தியப்படாது.

இந்த வரவு - செலவு திட்டத்தின் ஊடாக எதிர்காலத்தை சூனியமாக்கிக் கொண்டிருந்த ஆசிரியர் போராட்டத்துக்கு முடிவு காணப்பட்டுள்ளது. இதற்கான மொத்த வரவு – செலவு நிதியில் 7.5சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதை ஆசிரிய, அதிபர் சங்கங்கள் பெரு வெற்றியாகக் கருதலாம். ஆனால் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இழுபறியில் இருந்த ஒரு விவகாரத்தை இந்த அரசு முடித்து வைத்துள்ளது என்பதை ஆசிரியத் துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும். இதே சமயம் ஆசிரிய அதிபர் பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டிருப்பதை ஒரு வெற்றியாக மட்டும் கருதாமல் இரண்டாண்டுகளாக தேங்கிப்போயிருக்கும் தேசிய கல்வி நடவடிக்கைளை ஆசிரியர்கள் நேர்த்தியாகவும் அர்ப்பணிப்பு சிந்தனையுடன் முன்னெடுத்துச் சென்று கல்வியில் சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

இந்த முன்மொழிவுகளில் கொரோனா அடைப்புகளினால் பெரிதும் பாதிக்கப்பட்ட துறையினருக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருப்பது முக்கிய அம்சமாகக் கருதலாம். ஓட்டோ உரிமையாளர்கள், தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு முறையே 700மில்லியன் மற்றும் 1, 500மில்லியன் ரூபா நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது போலவே, சரியான சமுர்த்தி பயனாளர்களைத் தெரிவு செய்வதற்கு புதிய முறை ஒன்றை அறிமுகம் செய்யப்போவதாகவும், வெறுமனே அடித்தட்டு மக்களுக்கு உதவும் ஒரு திட்டமாக இல்லாமல் பொருளாதார மறுமலர்ச்சியை கிராம மட்டத்தில் உருவாக்கும், உணவு பாதுகாப்பை ஏற்படுத்தும் ஒரு கிராம அபிவிருத்திதிட்டமாக சமுர்தியை மாற்றி அமைக்கப் போவதாகவும் பஷில் ராஜபக்சவின் முன்மொழிவுகளில் உள்ளடக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

சாதாரண மக்களை பட்டினியில் இருந்து காப்பாற்றும் ஒரு திட்டமாகவே அறுபதுகளில் அரிசி கூப்பன் மற்றும் குடும்ப அட்டை முறை கொண்டுவரப்பட்டது. 1977இல் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜயவர்தன இப் பங்கீட்டு முறையை இரத்துச் செய்தார். ஜனாதிபதியாக ஆர். பிரேமதாச பதவிக்கு வந்ததும் ஜனசவிய என்ற ஏழைகளுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார். அதுவே சந்திரிகா பண்டாரநாயக்க அம்மையார் காலத்தில் சமுர்த்தியாக மாற்றம் பெற்றது. இத்திட்டம் கிராம அபிவிருத்தித் திட்டமாக மாற்றி அமைக்கப்பட வேண்டியது மிகமிக முக்கியம் என்ற வகையில் சரியான பாதையில் நிதியமைச்சர் காலடி வைத்திருப்பதாகவே தெரிகிறது.

ஜனாதிபதியின் ஓய்வூதியம் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்துக்கு தகுதிபெறும் காலம் ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டிருப்பது முன்மாதிரியானது என்பதோடு இது சாதாரண மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் என நம்பலாம். அதேபோல, பாராளுமன்ற உறுப்பினர்களின் வருடாந்த தொகுதி அபிவிருத்தி நிதி ஒன்றரை கோடியாக உயர்த்தப்பட்டிருப்பதும் வரவேற்புக்குரியது. அதேசமயம் இந் நிதி பாரபட்சமின்றியும் சாதாரண மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதாகவும் அமைகிறதா என்பது கண்காணிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

இந்த நிதியறிக்கை அரச ஊழியர்களின் ஓய்வூதிய காலத்தை 65வயதாக நிர்ணயித்திருக்கிறது. அதே சமயம் அரச சேவைக்காக வருடாந்தம் பெருமளவு நிதிவளம் செலவு செய்யப்பட்டாலும் அச்சேவை வினைத்திறன் கொண்டதாக உள்ளதா என்ற கேள்வி சதாரண மனிதனிடம் தொடர்ச்சியாக இருந்துவரும் ஒன்று. மக்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சில முன்மொழிவுகள் இந் நிதியறிக்கையில் காணப்படுவது குறிப்பிடத்தக்க அம்சம். மேலும் பெருந்தோட்ட வீடமைப்புக்கு 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதால் மலையக வீடமைப்பு திட்டங்களை விரைவுபடுத்த ஜீவன் தொண்டமான் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மண்சரிவு ஏற்பட்டிருக்கும், ஏற்படவிருக்கும் பகுதியில் உள்ளவர்களுக்கும், அரைகுறையாக நிற்கும் வீடுகளுக்கும் முன்னுரிமை தரப்பட வேண்டியதும் அவசியம்.

Comments