சீன ஜனாதிபதி ஜின் பிங்கின் ஆட்சிக்கால நீடிப்பும் சீனாவின் உலகளாவிய அரசியல் போக்கும் | தினகரன் வாரமஞ்சரி

சீன ஜனாதிபதி ஜின் பிங்கின் ஆட்சிக்கால நீடிப்பும் சீனாவின் உலகளாவிய அரசியல் போக்கும்

பூகோள அரசியலில் சீன மக்கள் குடியரசின் முக்கியத்துவம்அதிகரித்து வரும் காலப்பகுதியில் தற்போதைய ஜனாதிபதியான ஷி ஜின் பிங்கின் ஆட்சிக்காலம் மேலும் மூன்றாவது தடவையாக சீனக்கொம்யூனிச கட்சியின் உறுப்பினர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீன கொம்யூனிச கட்சியின் அரசியலிலும் சீன அரசியலிலும் நாற்பது வருடத்துக்கு மேலாக செல்வாக்கு செலுத்தி வரும் ஷி ஜின் பிங் மாவோ சேதுங்கிற்கு பிறகு சீன கொம்யூனிச கட்சியின் நீண்டகாலதலைவராக உறுதிப்படுத்தியுள்ளமையும் அவரது ஆளுமை குறித்து முக்கியத்துவப்படுத்தப்படுகிறது. இக்கட்டுரையும் ஷி ஜின் பிங்கின் மீள் வருகையின் முக்கியத்துவத்தைதேடுவதாக உள்ளது.

முதலாவது, சீனாவின் சுதேச கட்டமைப்பையும் அதன் பொருளாதார வளர்ச்சியையும் முதன்மைப்படுத்துவதில் ஜின் பிங்கினுடைய பங்கு முதன்மையாக இருந்தது. சீன மக்களின் பொருளாதார நெருக்கடியை வறுமை நிலையிலிருந்து மீட்டெடுக்கும் அணுகுமுறையில் அதிக மாற்றத்தை சீனாவுக்குள் ஏற்படுத்தியிருந்தார். சீன மக்களின் உழைப்பையும் அவர்களது சுறுசுறுப்பையும் ஆரோக்கியமாக்கிய ஜின் பிங் உள்நாட்டின் உறுதிப்பாட்டை பேணுவதில் அதீத கரிசனை கொண்டிருந்தார். கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் அதிகாரத்தின் அளவீட்டையும் அதனூடான விட்டுக்கொடுப்பையும் பலப்படுத்தியதோடு இரண்டாம் நிலை தலைவர்களின் முன்னிலையில் முன்னுதாரணமாகிய தலைவராக செயற்பட்டார்.  

இரண்டாவது, சீனாவின் பிரதான அங்கமாக 1962களில் இணைக்கப்பட்ட திபெத்திற்கு அவர் மேற்கொண்ட விஜயம் வரலாற்றில் முக்கிய பதிவாக காணப்படுகிறது. திபெத்தை சீனாவோடு அரசியல் ரீதியாக இணைப்பது ஆரம்பகால தலைவர்கள் பின்பற்றிய அணுகுமுறையிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையை ஜின் பிங் ஏற்படுத்தியிருந்தார். கொம்யூனிசக்கட்சியையும் அதன் அதிகார கட்டமைப்பையும் திபெத்திய ஆட்சியளார்கள் மத்தியில் பிணைப்பதில் ஜின் பிங் வெற்றிகரமான தலைவராக மதிப்பிடப்படுகிறார். திபெத்தின் மீதான சீன ஆக்கிரமிப்பின் மனோநிலையை முழுமையாக மாற்றியமைக்காவிட்டாலும், தனது மிதவாத அணுகுமுறைக்கூடாக சீனாவுடனான நட்புறவை பலப்டுத்தியுள்ளார். 

மூன்றாவது, ஷி ஜின் பிங்கின் காலத்தில் சீனாவோடு இணைக்கப்பட்ட ஹொங்கொங் தொடர்பான சர்ச்சை முக்கியம் பெற்றிருந்தது. அதிக அரசியல் போராட்டங்களையும் சர்வதேச அரசியல் நெருக்கடிகளையும் மனித உரிமை தொடர்பான கேள்விகளையும் எற்படுத்திய ஹொங்கொங் பாரிய நெருக்கடியின் பின்னால் ஜின் பிங்கின்  ஆளுமையால் சுமுகமாகி சீனாவின் ஆட்சி கட்டுப்பாட்டக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆரம்பத்திலிருந்து சீன எதிர்ப்புவாதத்தை முதன்மைப்படுத்திய உலக நாடுகள் மற்றும் அவர்களுக்கான திட்டமிடல்களையும் உபாயங்களையும் வகுத்தளித்த ஹொங்கொங் நாட்டு தாராண்மைவாதிகளும் ஆச்சரியப்படுமளவிற்கு அச்சூழலை சீன கொம்யூனிஸ்ட் கட்சியின் ஆளுமைக்கு ஜின் பிங் உட்படுத்தவதில் வெற்றி கண்டுள்ளார்.  

நான்காவது, தைவான் சீனாவோடு இணைக்கப்படுவது பற்றிய சர்ச்சையாலேயே  உலக வல்லரசுகளின் அதீத ஈடுபாட்டை ஜின் பிங் எதிர்கொண்டு வருகின்றார் இதனை முறியடிக்கும் வகையில் ஜின் பிங்கின் உத்தியும் இராணுவ ரீதியிலான நகர்வுகளும் நிகழ்ந்து வருகின்றது. தைவானைப் பொறுத்து சீனா எடுத்திருக்கும் கொள்கைக்கு அமைவாக அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளோடு போருக்கு செல்வதற்கான தயாரிப்பினைக்  கொண்டிருந்தாலும் போரை தவிர்ப்பதற்கான உத்திகளை தொடர்ச்சியாக ஜின் பிங் பின்பற்றி வருகிறார். நம்பிக்கையூட்டும் விதத்தில் சீன மக்களிடமும் பிராந்திய சர்வதேச வல்லரசுகளிடமும் தைவான் சீனாவோடு இணைக்கப்படும் என்ற செய்தியை எதுவித ஆர்ப்பாட்டமுமின்றி வெளிப்படுத்தி வருகிறார். ஜின் பிங்கின் ஆளுமையில் தனித்துவமானதாக விளங்கும்,  ஆர்ப்பாட்டமற்ற, கோபத்தை வெளிப்படுத்தாத உடல் மொழியால் அதிர்ச்சியை ஏற்படுத்தாத அரசியல் நடவடிக்கையாக விளங்குகின்றது. இதனால் தைவான் சீனாவோடு இணைக்கப்படுவது எத்தகைய சந்தேகமும் ஏற்படாத வகையிலானதான அதேநேரம் போரை இறுதியிலும் இறுதியான தெரிவாக கொண்டிருப்பதில் ஜின் பிங் ஆளுமை முக்கியமானதாக காணப்படுகிறது. 

ஐந்தாவது, சர்வதேச அரசியலில் அதிகம் முக்கியத்துவப்படுத்தும் கொள்கைகளை பிரதிபலிக்கும் சீனா ஜின் பிங் தலைமையில் அமெரிக்காவை எதிர்கொள்வதற்கு  இலகுவான அணுகுமுறைகளை கடைப்பிடித்து வருகின்றது. அமெரிக்க -சீன வர்த்தகப்போர் உலக அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருந்த போதும் சீனா அதனை சாதாரணமான விடயமாகவும் அமெரிக்காவுடனான வர்த்தகத்துக்கு மாற்றீடுகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறது. இதனால் சீனா பொருளாதாரத்துக்கு ஏற்படும் நெருக்கடியோடு ஒப்பிடும் போது அமெரிக்கா அதிக பாதிப்புக்களை சந்தித்து வருகிறது. வர்த்தகத்தில் அமெரிக்காவோடு பகைமை கொண்ட சீனா மேற்கு ஐரோப்பிய நாடுகளோடும் ஐரோப்பிய யூனியனுடனும் பலமானதொரு பொருளாதார உறவினையும் அதனூடான அரசியல் நட்பையும் பலப்படுத்தி வருகிறது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் உலகத்தை ஆளுகை செய்யும் பலத்தை அமெரிக்கா முன்னெடுக்கின்ற போது மேற்கு ஐரோப்பாவே அமெரிக்காவிற்கு உறுதுணையாக காணப்பட்டது. அதனை சீனா தனதாக்குவதற்கு பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி போன்ற நாடுகளோடு பலமான பொருளாதார ஒத்துழைப்பு உறவை கட்டமைத்து வருகிறது. இதனூடாகவொரு அரசியல் பலத்தையும் சீனா ஏற்படுத்த முயலுகிறது.  

ஆறாவது, சீனாவின் பிராந்தியமாகவும் வலயமாகவும் விளங்கும் பசுபிக்கை ஆசியாவோடு ஒன்றிணைப்பது அதன் பொருளாதார திட்டமிடல்களிலும்  உத்திகளிலும் ஆரோக்கியமானதாகவும் ஜின் பிங்கின் தலைமையில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இவ்அலகுகளை மையப்படுத்தி ஆசிய-, பசுபிக் பொருளதார வலயங்கiளையும் மற்றும் ஆசியான் அமைப்பையும் ஆசியாவுக்கான உட்கட்டமைப்பை விருத்தி செய்யும் வங்கி அமைப்பையும் ஆசிய, ஆபிரிக்க, இலத்தின் அமெரிக்க நாடுகளை ஒன்றிணைக்கும் பிரிக்ஸ் அமைப்பை கட்டமைத்ததோடு சங்காய்-05என்ற அமைப்பை படிப்படியாக விருத்தி செய்து பொருளாதார கூட்டிலிருந்து இராணுவ கூட்டுக்கான பரிணாமத்தை எட்டுவதில் ஜின் பிங்கின் தலைமைத்துவம் சீனாவுக்கு அதிக வலுவை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. 

ஏழாவது, சீனா உலக அரசியலை எதிர்கொள்வதற்கு ரஷ்யாவையும் அதன் தலைமைத்துவத்தையும் ஒரு ஆரோக்கியமானதாக இருப்புக்குள் நகர்த்துவதிலும் ஜின் பிங் வெற்றி பெற்று வருகின்றார். மேற்கு எதிர்ப்புவாதத்தை கொண்ட ரஷ்யாவையும் அதன் தலைமையையும் உள்ளடக்கியுள்ள சீனா, வடகொரியா, ஈரான், சிரியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய அரசியல் பொருளாதார இராணுவ நகர்வுகளை வெற்றிகரமாக ஒன்றிணைத்து வருவதில் ஜின் பிங்கின் தலைமை பலமானதாக விளங்குகின்றது.  

எட்டாவது, இராணுவக் கூட்டுக்களையும் ஒத்துழைப்புக்களையும் தென்பூகோள நாடுகளில் ஏற்படுத்தவதோடு ஆயுத தளபாடங்களை உற்பத்தி செய்ததுடன் நவீன ஆயுதங்களை இராணுவத்தில் இணைப்பதிலும் அண்டவெளி தொழில்நுட்பத்தை பலப்படுத்துவதிலும், சீனாவினை பவலமாக மாற்றுவதோடு பட்டி மற்றும் சாலை முன்முயற்சியை நடைமுறைப்படுத்துவதில் ஐரோப்பா முதல் ஆசிய ஆபிரிக்க இலத்தின் அமெரிக்க நாடுகளில் வெற்றிகரமாக நகர்த்துவதில் ஜின் பிங்கின் தலைமைத்துவம் தனித்துவமானதாக விளங்குகின்றது.  

ஒன்பதாவது, பொருளாதாரத்தில் செழிப்படைந்த சீனாவுக்கு மென் அதிகாரம் மூலம் அத்தகைய அடைவை எட்டியதில் ஹூ ஜின்டாவோ, டெங் சியாவோ பிங்கோடு இணைந்து பணியாற்றிய ஜின் பிங் இராணுவ ரீதியிலான விஸ்தரிப்பு நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் அதிக கரிசனை  கொண்டவராக காணப்படுப்படுகிறார். குறிப்பாக அணுவாயுத பரிசோதனை, ஹைப்பர்சொனிக் ஆயுதங்களின் விருத்தி மற்றும் சைபர் தாக்குதலுக்கான நடவடிக்கைகள் போன்றவற்றை முதன்மைப்படுத்தியதோடு சமகாலத்தில் பாகிஷ்தானோடு மேற்கொள்ளப்பட்ட இராணுவ உடன்படிக்கையின் பிரகாரம் நவீன போர்க்கப்பல்கள் கையளித்ததனூடாக ஒரு புதிய அத்தியாயத்தை சீனா ஆரம்பித்துள்ளது.

ஏற்கனவே ஜி பூட்டியில் சீனா அமைத்துள்ள கடற்படைத்தளம் ஏடன் துறைமுகம் முதல் ஹைனன் தீவு வரை இந்து சமுத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை துறைமுகங்களை கடற்படை தளங்களாக மாற்றுவதற்கு குவாடரை முன்முயற்சியாக ஆரம்பித்துள்ளமை ஜின் பிங்கினுடைய தலைமைத்துவம் முக்கியம் பெற்றதொன்றாக விளங்குகின்றது.

பத்தாவது, ஜின் பிங் இந்தியாவை எதிர்கொள்வதில் வெற்றிகரமான அணுகுமுறையை பின்பற்றி வருகிறார். மூலோபாய ரீதியிலும் தந்திரோபாய ரீதியிலும் இந்தியாவை அணுகுவதில் ஏனைய சீன தலைவர்களை விட ஜின் பிங் வெற்றிகரமான தலைவராக காணப்படுகிறார். சீனாவிற்கு நிகரான அதேநேரம் பின்தங்கிய இந்தியாவை அமெரிக்கா உட்பட்ட மேற்கு சீனாவிற்கு எதிராக திசைதிருப்ப முயலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதனை கையாள்வதில் ஜின் பிங் சிறப்பான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறார்.

எனவே, ஜின் பிங்கின் தலைமைத்துவத்தின் கீழ் சீனா ஆரோக்கியமான அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச மட்டத்திலும் பிராந்திய தளத்திலும் நேர்க்கணியமான அதிகார போட்டியை வெற்றி கொள்வதோடு அதனூடாக மேற்கு உலகத்தின் அரசியல் பலத்தினை முறியடிப்பதிலும் சீனா முதன்மை பெற்று வருகிறது. மேற்கையும் பிராந்தியத்தையும் கையாள்வது போல் இந்தியாவையும் அதன் எல்லை நெருக்கடியையும் தந்திரோபாய ரீதியாகவும் இராஜதந்திர அணுகுமுறையூடாகவும் வெற்றிகரமாக கையாண்டு சீனாவின் எழுச்சியை நிறுவுவதில் வெற்றி கண்டு வருகிறது. எதுஎவ்வாறிருப்பினும் ஜனநாயகவாதிகள் கூறுவது போல் ஜின் பிங் சர்வதிகாரியாக மாறுவதற்கான அடிப்படைகளை அவரது ஆட்சிக்காலப்பகுதி நீடிப்பு ஏற்படுத்திவிடுமா என்ற சந்தேகமும் நிலவுகிறது.

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments