தமிழரசுக் கட்சியினரின் அமெரிக்கப் பயணம்; தேங்கிக் கிடக்கும் தமிழரின் அரசியலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் முயற்சியா? | தினகரன் வாரமஞ்சரி

தமிழரசுக் கட்சியினரின் அமெரிக்கப் பயணம்; தேங்கிக் கிடக்கும் தமிழரின் அரசியலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் முயற்சியா?

அமெரிக்காவுக்குப் புறப்பட்டிருக்கிறார்கள் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. சுமந்திரனும் சாணக்கியனும். கூடவே சேர்ந்து புறப்பட்டிருக்கிறார்கள் சட்டத்தரணி கனகேஸ்வரனும் சட்ட நிபுணர் நிர்மலா சந்திரகாசனும். பின்னைய இருவரும் கூடத் தமிழரசுக் கட்சியின் ஆட்களே.

ஆகவே ஏறக்குறைய தமிழரசுக்கட்சியின் உயர் மட்டக்குழுவின் பயணம் இது என்றே சொல்ல வேண்டும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற அடையாளத்துடன், அந்த அடிப்படையில் இந்தக் குழுவின் பயணம் அமையவில்லை. மட்டுமல்ல, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணைந்திருக்கும் ஏனைய கட்சிகளான புளொட், ரெலோ போன்றவற்றோடு இந்தப் பயணத்தைப் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் இல்லை.

இதுவேளை இந்தப் பயணத்துக்கு முன்பு சம்மந்தனைச் சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியிருக்கிறார்கள் சுமந்திரனும் கனகேஸ்வரனும். ஆனால் இதைப்பற்றி தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு எந்தளவுக்கு விவரம் தெரியும் என்று தெரியவில்லை. தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா இருந்தாலும் நடைமுறைத் தலைவராக எம். ஏ. சுமந்திரனே தொழிற்படுகிறார் என்பது பலரும் அறிந்தது. அதாவது தமிழரசுக் கட்சியில் எந்தத் தீர்மானங்களையும் துணிகரமாக  எடுப்பவராகவும் எந்தக் காரியங்களையும் செய்கின்றவராகவும்.

ஆகவே இந்த நிலையில் இந்தக் குழுவின் பயணம் பெரும்பாலும் தமிழரசுக் கட்சியின் வெளிநாட்டு உறவுகளைப் பலப்படுத்துவதாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இரண்டு வகையில் அமையக்கூடும். ஒன்று, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்தின் வழியாக பிரிட்டன் வரை இவர்கள் பயணிப்பதால் அந்தந்த நாடுகளின் அரசியல் அதிகார நிலைப்பட்ட பிரதிநிதிகளுடன் அமையலாம். இரண்டாவது, இந்தப் பயண வழியில் உள்ள நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களுடன் நிகழலாம். குறிப்பாகத் தமிழரசுக் கட்சியின் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடன்.

இதன்மூலம் தமிழசுக் கட்சியை தமிழர்களிடத்திலும் வெளியுலகிலும் பலமாக்கும் ஒரு செயற்திட்டம் நிறைவேறும். இங்கே கவனிக்க வேண்டியது, எதிர்காலத்தில் தமிழரின் அரசியலில்  தமிழரசுக் கட்சியின் முதன்மைப்பாட்டைப் பற்றியே தமிழரசுக் கட்சியினர் தொடர்ந்து சிந்தித்து வருகின்றனர். அந்த அடிப்படையிலேயே காய்கள் நகர்த்தப்படுகின்றன. காரியங்கள் நடக்கின்றன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளான புளொட்டையும் ரெலொவையும் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை மிகப் பகிரங்கமாகவே தமிழரசுக் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். பலவிதமான புறக்கணிப்புகள், அவமானப்படுத்தல்களையெல்லாம் கடந்த காலத்தில் தமிழரசுக் கட்சியினர் செய்துள்ளனர். இதைச் சகித்துக் கொண்டு புளொட்டும் ரொலோவும் சேர்ந்திருக்கின்றனவே தவிர, அவற்றுக்குப் பல சங்கதிகள் தெரிவதுமில்லை. புரிவதுமில்லை.

எனவே இந்த நிலையில் தமிழரசுக் கட்சி தன்னைப் பல வழிகளிலும் பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறது. எதிர்காலத்தில் தனித்து நிற்கக் கூடியதாகத் தன்னைக் கட்டியெழுப்பி வருகிறது. அதிலும் அடுத்து வரும் சந்தர்ப்பத்தில் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை சுமந்திரனே எடுத்துக் கொள்வதற்கான முன்னாயத்தங்களை அவர் மிகச் சிறப்பாகச் செய்து வருகிறார். மற்றவர்களுக்கு இந்தத் தலைமைப்பதவியில் ஆசையிருந்தாலும் அவர்கள் எவரையும் முந்திக் கடந்து விடக் கூடிய ஆற்றலுடன்  - வல்லமையுடன் சுமந்திரனே காணப்படுகிறார். இதனால்தான் சிறிதரன், சரவணபவன் போன்றவர்கள் தொடக்கத்தில் சுமந்திரனை எதிர்த்தாலும் பின்னாளில் – இப்பொழுது – அந்த எதிர்ப்பைக் கைவிட்டு சரணடைந்து இணக்கத்துக்குச் சென்றுள்ளனர். ஆகவே சுமந்திரன் தலைமை எடுத்துச் செயற்படுத்தும் இந்த நிகழ்ச்சி நிரலானது தமிழரசுக் கட்சிக்கான அனுகூலங்களை உருவாக்கிக் கொள்வதுடன் சுமந்திரனின் அரசியல் தலைமைப்பொறுப்பை வலுப்படுத்திக் கொள்வதற்குமாக நிகழும் என்று தெரிகிறது. ஆனால் இந்தப் பயணத்தை தமிழரசுக் கட்சிக்கும் சுமந்திரனுக்கும் நெருக்கமான வட்டாரங்கள் வேறு விதமாகச் சித்திரிக்கின்றன.

முக்கியமாக சுமந்திரனுக்கு இணக்கமாகச்செயற்படும் சில ஊடகங்களில் இந்தப் பயணத்துக்கு வேறு வண்ணங்கள் பூசப்படுகின்றது. “இது தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வை நோக்கிய அரசியல் விவகாரங்களுக்கான ஒரு தொடக்கப் பயணம். அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலமே இந்தப் பயணத்துக்கான ஏற்பாட்டைச் செய்துள்ளது. இந்தத் தொடக்கத்தில் நிகழப்போகும் அரசியலாட்டத்தை இலங்கை அரசு முகம் கொடுத்தே ஆக வேண்டும். தப்பிவிட முடியாது” என்ற விதமாக இதை அவை வியாக்கியானப்படுத்தி வருகின்றன.

அதாவது, மறுபடியும் தமிழ்ச்சனங்களின் காதில் துளையிட்டுப் பூவைச் சொருக முயற்சிக்கின்றன. அப்படி இந்தப் பயணம் உண்மையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசியல் தீர்வை நோக்கிய விவகாரங்களுக்கானது என்றால் அது குறைந்த பட்சம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடனும் இணைந்து கலந்தாலோசித்து மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். குறைந்தது அந்தக் கட்சிகளிலிருந்து ஒவ்வொரு பிரதிநிதிகளேனும் கலந்து கொண்டிருக்க வேண்டும்.

இதில் புளொட்டின் தலைவர் சித்தார்த்தனுக்கு அரசியல் பேச்சுகளில் ஏற்கனவே ஈடுபட்ட அனுபவங்களும் நீண்டகால அரசியல் புரிதலும் உண்டு. இந்திய அரசு மத்தியஸ்தம் வகித்த இலங்கை அரசுடனான பேச்சுகளில் 1986, 87களில் நேரடியாகக் கலந்து கொண்டவர் சித்தார்த்தன். இதில்லாது விட்டாலும் இந்தக் கட்சிகளுடன் பேசி உடன்பட்ட குழுவாக – தெரிவு செய்யப்பட்ட அணியாக இந்தக் குழு பயணித்துள்ளது என்றாலாவது இதை ஓரளவுக்கு நம்பலாம்.

அப்படி எதுவுமே நடக்கவில்லை. ஆக தனியான ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயார் செய்து அதன் அடிப்படையில் சுமந்திரன் அணி  புறப்பட்டிருக்கிறது - செயற்படுகிறது. இதனால் அது யாருக்கும் எதற்கும் பொறுப்புச்சொல்ல வேண்டியதில்லை. இது தொடர்பாக கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளோ ஏனைய உறுப்பினர்களோ கேள்வி எழுப்பினாலும் அதற்குச் சுமந்திரனின் பதில் சட்டத்தரணியின் பாணியிலேயே இருக்கும். அப்படித்தான் இருக்கப்போகிறது.

இதையெல்லாம் தெரியாமலே அல்லது தெரிந்து கொண்டும் தெரியாமல் நடப்பதைப்போலவே மறுபடியும் தமிழர் அரசியலில் பரபரப்பூட்டக் கூடிய செய்திகளும் தகவற் பரிமாற்றங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது மக்களை மயக்கும் வேலையே தவிர வேறொன்றுமில்லை.

இந்த ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் இப்படித்தான் கடந்த காலங்களிலும் ஏராளம் புருடாக்களையும் புளுகு மூட்டைகளையும் அவிழ்த்து விட்டனர். இதை அவர்கள் மறந்தாலும் சிந்திக்கக் கூடியவர்கள் எவரும் மறக்கவில்லை. “இந்தா அரசு சிக்கி விட்டது. முழந்தாளில் மடங்கி விட்டது. தமிழர்களின் கொடி பட்டொளி வீசிப் பறக்கப் போகிறது” என்றெல்லாம் விட்ட கதைகள் கொஞ்சமல்ல. இதைத்தான் இப்பொழுது மறுபடியும் இவையும் இவர்களும் செய்ய முனைவதைக் காணலாம்.

இதற்குக் காரணமும் உண்டு. தமிழரின் அரசியல் தேங்கிக் கிடக்கிறது. அதை எப்படி அடுத்த கட்டத்துக்கு முன்னெடுப்பது என்று இவர்களுக்குத் தெரியவேயில்லை. தெரிந்தாலும் அந்தக் கடினமான – புதிய வழிகளைத் தேர்வு செய்வதற்கும் இவர்கள் தயாரில்லை. ஆகவே இந்தத் தேக்கத்தையிட்டு மக்களிடம் ஏற்பட்டுள்ள சலிப்புணர்வைச் சமாளித்துக் கொள்ளவும் எழுகின்ற கேள்விகளைத் திசை திருப்பி விடவுமே இந்தப் புதிய புருடாக்கள். இரண்டாவது, தமிழ்த்தேசியக் கட்சிகள் அனைத்தும் கடந்த காலத்தில் தாமே பிரகடனம் செய்து கொண்ட போர்க்குற்ற விசாரணை, குற்றங்களை இழைத்தோருக்கான தண்டனை - பொறுப்புக்கூற வைத்தல், காணாமற்போனோர் விவகாரம், நில மீட்பு, நிலப்பாதுகாப்பு, படை விலக்கம், பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வு, அரசியற் கைதிகளின் விடுதலை போன்ற எதையுமே நிறைவேற்றியதுமில்லை. தமக்கிசைவான பிராந்திய–சர்வதேச சக்திகளைக்கொண்டு செய்வித்ததுமில்லை.

இதைப்பற்றி இந்த ஊடகங்களும் சரி, ஊடகவியலாளர்களும் சரி ஒரு போதுமே கேள்வி எழுப்பியதோ சுட்டிக்காட்டியதோ கிடையாது. யுத்தம் முடிந்த 12ஆண்டுகள் கடந்த பின்னும் இந்த ஒரு விசயத்திற் கூட 10வீத முன்னேற்றத்தைக் கூட இந்தக் கட்சிகள் காட்டவில்லை. அப்படியென்றால் மக்கள் வழங்கிய ஆணைக்குப் பதில் என்ன?

நீங்கள் தமிழ்த்தரப்பைத்தான் குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறீர்கள். அரச தரப்பின் தவறுகள், பொறுப்புக் கடத்தல்கள், பொறுப்பின்மைகள் பற்றியெல்லாம் ஏன் பேசுவதில்லை என்று யாரும் இந்த இடத்தில் கேள்வி எழுப்பலாம். அரசு தன்னை மிகப் பகிரங்கரமாவே வெளிப்படுத்தியுள்ளது.

அந்த அடிப்படையில்தான் செயற்பட்டும் வருகிறது. அது இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கரிசனையை மிகத் தளர்த்தியுள்ளது. மட்டுமல்ல, அதன் பிரதான அக்கறைகளாக வேறு விடயங்களே இப்போதுள்ளன. இலங்கையை ஒரே சட்டத்தின் கீழ், ஒரே தேசியத்தின் கீழ் கொண்டு வரும் சிந்தனையோடு. இது மிகச் சிக்கலான  ஒன்று என்பதை வரலாறு சுட்டும். ஏனென்றால் பல்லின தேசங்களின் யதார்த்தத்தை நாம் அவதானிக்கும்போது இலங்கை பயணிக்க வேண்டிய எல்லை நீண்டது.

ஆகவே அதனைப் பற்றி நமக்குத் தெளிவாகவே தெரியும். அது எப்படிச்செயற்படுகிறது என. எதிர்த்தரப்பில் இருப்போர் இதற்கு எப்படி வினையாற்ற வேண்டும் என்பதே நமது அக்கறை. விளையாட்டுகளை எல்லாம் வேடிக்கை பார்க்கலாமே தவிர, அவை பெரும் விளைச்சலைத்தரக் கூடிய அறுவடைகள் என்று நம்ப முடியாது.

கருணாகரன்

Comments