உயிர்வாழ ஒக்சிஜன் தேவைப்படுவது ஏன்? | தினகரன் வாரமஞ்சரி

உயிர்வாழ ஒக்சிஜன் தேவைப்படுவது ஏன்?

எல்லா உயிரினங்களுக்கும் ஒக்சிஜன் தேவைப்படுகிறது. அது இல்லாமல் அவை உயிர்வாழ முடியாது. அதனாலேயே இதைப் பிராணவாயு என்றும் கூறுவார்கள். எல்லா உயிர்களுமே செல்களால் ஆனவை. எரிபொருளை ஆற்றலாக மாற்றும் செய்முறைக்கு ஒவ்வொரு செல்லுக்கும் ஒக்சிஜன் தேவைப்படுகிறது. இச்செய்முறையின்போது செல்களில் உண்டாகும் கார்பன் டை ஒக்சைட்டும் வெளியேற்றப்படலாம்.

குருதியிலுள்ள சிவப்பு அணுக்கள் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒக்சிஜனை எடுத்துச் சென்று வழங்கிவிட்டு அங்குள்ள கரியமிலவாயுவைப் பெற்றுக்கொண்டு திரும்புகின்றன. சுவாசிப்பதன் மூலம், உடலுக்கு வேண்டிய ஒக்சிஜன் கிடைக்கிறது. கார்பன் டை ஒக்சைட் வெளியேறுகிறது.

முதன் முரலில் உயிர் என்ற ஒன்று தோன்றியது, நீரில்தான். அந்த விட்டகுறை இன்னும் நம்மிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. கருவில் குழந்தை திரவத்துக்குள்தான் வளர்கிறது. அப்போது தேவைப்படும் ஒக்சிஜனைத் தாய் மூலம் பெறுகிறது. மனித உடலில் கூடப் பெரும்பகுதி நீர்தான்.

செவுள்களுக்குப் பதிலாக நுரையீரல்கள் உருவாகி இருப்பதாலேயே நம்மால் நிலத்தில் வாழமுடிகிறது. வளி மண்டலத்திலுள்ள காற்றில் சுமார் 20சதவீதம் ஒக்சிஜன் உள்ளது. ஒருவர் சுவாசிக்கும் வெகமும் அளவும் உடலில் எவ்வளவு விரைவாக ஒக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தது. அமைதியான வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது நிமிடத்துக்கு 15முறை மூச்சை உள்ளிழுத்து விடலாம். கடுமையாக வேலை செய்யும்போது இது இருமடங்கு ஆகலாம்.

நுரையீரல்கள் சாதாரணமாக இரண்டரை லீட்டர் காற்று கொள்ளக்கூடியவை. ஒக்சிஜன் இருந்தால்தான் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படமுடியும். எனவே எல்லா உயிர்களுக்கும் இது இன்றியமையாததாகும். உடலுக்கு களைப்பு ஏற்படும்போது அதிக ஒக்சிஜனைப் பெறுவதற்காகவே கொட்டாவி வருகிறது. அப்போது சுவாசத்தின் மூலம் அதிகக் காற்று உள்ளே போகிறது. அதனால் கூடுதலான ஒக்சிஜன் கிடைக்கிறது. களைப்படைந்திருக்கும் போதும் கவலைப்படும் போதும் ஒரே இடத்தில் நீண்டநேரம் உட்கார்ந்து கொண்டிருக்கும் போதும் சுவாசம், நிதானமாக நடைபெறுவதால் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்படலாம். அதை ஈடு செய்யவே கொட்டாவி வருகிறது.

சுஜானி திருஆலன்,
வவுனியா.

Comments